Wednesday, 19 September 2012

குட்டிக் கதைகள்


அட்சய திருதி
அட்சய திருதி அன்று விடியற்காலை எழுந்து தினசரி கடமைகளை முடித்துவிட்டு, தன் வீட்டிற்கு சமைக்கும்போது கூடவே 15 பேர்களுக்கும் சேர்த்து தன் கையாலேயே சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரித்து, அத்துடன் தண்ணீர் பாக்கெட், ஊறுகாய், சிப்ஸ் எல்லாவற்றையும் 15 உறைகளில் போட்டு எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் பிச்சை எடுப்போர் மற்றும் செருப்புகளை பார்த்துக்கொள்ளும் கிழவி கண்ணம்மா, எல்லோருக்கும் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் வீடு திரும்பினாள் வனிதா
***
”பாட்டி, என்ன இன்னிக்கு இவ்ளோ சாப்பாடு கொண்டு வந்திருக்கீங்க, ஏ அப்பா வித விதமா இருக்கே” என்று கேட்டான் கண்ணம்மாவின் பேரன்.
“அதுவா இன்னிக்கு என்னமோ விசேஷமாம். நிறைய பேருங்க சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாங்க. ம். இதுக்கு பதிலா காசோ, இல்ல வெச்சு நாளைக்கு சாப்பிடற மாதிரி ரொட்டி, பிஸ்கெட் கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்”.
“அதனால என்ன பாட்டி.. நமக்கு போக மீதியை அக்கம் பக்கத்து குடிசையிலே இருக்கறவங்களுக்கு குடுத்துடலாமே” என்றான் பேரன்.
திருப்தி
”என்ன வித்யா. இந்த தீபாவளிக்கு பட்டுப்புடைவையா?”
“ம்க்கும். அதை ஏன் கேக்கற? எங்க வீட்டுக்காரர் இந்த முறை கண்டிப்பா அவரோட ரெண்டு தங்கைக்கும் தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுக்கணும்ன்னு சொல்லிட்டார். அதனால சில்க் கோட்டாதான் வாங்கிண்டேன். ரெண்டு சாதா காட்டன் புடைவையும் எடுத்துண்டேன்.”
இது அலுவலகத்திலிருந்து ரயிலில் வீடு வந்து கொண்டிருந்த இரண்டு தோழிகளுக்கு இடையே நடந்த பேச்சு.
அப்பொழுது ஒரு பெண் அழுக்குத்துணி உடுத்தி குளித்துத் தோய்த்து பலநாட்கள் ஆனது போல் இருந்தவள் லாலலா என்று பாடிக்கொண்டே ஏறினாள். ”பார்த்து நில்லம்மா.. வெளியிலே விழுந்துடப்போற” என்றாள் வித்யா. அந்தப்பெண் “ஏம்மா ஒரு கணக்கு சொல்லு. வீட்டில 5 பொம்பளைங்க இருக்கோம். 5 பேருக்கும் தீபாவளிக்கு வளையல் வாங்கலாம்ன்னு இருக்கேன். ஒரு சோடி 5 ரூபான்னா 5 எவ்வளோ?” என்றாள். வித்யா “25 ரூபாய் என்றாள்”. ”அம்மாடியோ அவ்ளோவா?” என்றாள் அந்தப்பெண்.
2000 ரூபாய்க்கு தனக்கு துணிமணி வாங்கிகொண்ட வித்யாவுக்கு யாரோ மண்டையில ணங்கென்று கொட்டியதுபோல் இருந்தது.
வைராக்கியம்
இரவு மணி ஏழு
”அப்பா, அம்மா வேலைக்குப்போயிட்டு வந்ததுலே இருந்து அழுதுகிட்டிருக்காங்க” வீட்டிற்குள் நுழைந்த ரமேஷிடம் இரண்டு குழந்தைகளும் கோரஸாக சொன்னார்கள்.
“விமலா, என்ன ஆச்சு? ஆபிசில் ஏதாவது தகராறா? நீ இப்படி அழுதுகிட்டிருக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. சொல்லும்மா” என்றார் ரமேஷ்.
விமலா, “அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. பேருந்தில் வரும்போது ஒரு பெண்மணி 15 வயது மதிக்கத்தக்க மகனை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அந்தப்பையனுக்கு மனநிலை சரியில்லை. அரை மணி நேரம் பேருந்தில் அவர்களுடன் வந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. அவங்க ரெண்டு பேர் முகத்தையும் மறக்க முடியலை. ஒரே அழுகையா வருதுங்க. கடவுள் நமக்கு எல்லாம் கொடுத்திருக்கார். நல்ல நிலையில் இருக்கோம். அப்பக்கூட இதையெல்லாம் நம்ப உணரலையே. சாரிங்க. நானும் உங்க கிட்ட அப்பப்ப சண்டை போட்டுடறேன்“
“நீ சொல்றது ரொம்ப சரி விமலா. கடவுளுக்கு ஒவ்வொரு கணமும் நன்றி சொல்ற நிலையில தான் நாம்ப இருக்கோம். நீ இப்ப எதுவும் சமைக்க வேண்டாம். வா நாலு பேரும் வெளியில போய் சாப்பிட்டுட்டு வந்துடலாம். நாளையிலேயிருந்து பார் நான் எப்படி நடந்துக்கறேன்னு“
காலை எட்டு மணி
”நேத்து இங்க வெச்ச என்னோட ஆபீஸ் பைல் எங்க, இந்த வீட்டிலே ஒண்ணு கூட ஒழுங்கா இருக்காது..” உச்சஸ்தாயியில் கத்தத்தொடங்கினான் ரமேஷ்
“ஏங்க நான் என்ன வீட்டிலேயா உக்காந்துண்டிருக்கேன். உங்க பொருளை நீங்கதான் ஒழுங்கா எடுத்து வெச்சுக்கணும்..” விமலா
புண்ணியம்
அறுபதாம் கல்யாணம் முடிந்து பணி ஓய்வும் பெற்ற ராமநாதன் மனைவி விஜயாவிடம் “விஜயா, இதுநாள் வரை நம் குடும்பம், நம் பிள்ளைகள் என்று இருந்து விட்டோம். “குடும்ப விளக்கில்” பாரதிதாசன் சொன்னதுபோல் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். நாளையிலிருந்து நானே காலையில் போய் பால் வாங்கி வருகிறேன். பூ வாங்குவதையும் நிறுத்திவிடு. தினமும் மாலையில் சந்தைக்குப்போய் கறிகாய், பூ எல்லாம் வாங்கி வந்து விடுகிறேன். சந்தையில் மலிவாக இருக்கும் அல்லவா? கொஞ்சம் சிக்கனமாக இருப்போம். என் நண்பன் ஒரு அமைப்பை ஆரம்பித்திருக்கிறான். ஏழைக்குழந்தைகளுக்கு உதவ. அதற்கு மாதா மாதம் பணம் அனுப்புவோம். போற வழிக்கு புண்ணியம் சேர்ப்போம்” என்று சொன்னார்.
* * *
மறுநாள் மதியம் பூக்காரி பொன்னாம்மா மாடி ஏறி வந்தாள். “இன்னாம்மா! வெள்ளிக்கெழமையும் அதுவுமா பூ வாணான்னுட்டியாமே. பால் கூட போடவேணாம்ன்னுட்டியாமே. நான் பெத்தது ஒண்ணு. அதுவும் தறுதல. மருமக இன்னடான்னா மூணு பொட்டப்புள்ளங்களை பெத்து கொடுத்துட்டு கண்ணை மூடிட்டா. நாலு வூட்டுக்கு பால் கவர் போட்டு, பூ வித்து, வூட்டு வேலை செஞ்சுதானமா அதுங்களுக்கு கஞ்சி ஊத்தறேன். படிக்க வெக்கறேன்.” என்றாள்.
”இல்ல பொன்னம்மா. நான் ஒருநாளைக்கு வேண்டாம்ன்னு சொல்ல நினைச்சதை தப்பா சொல்லிட்டேன். நாளையிலே இருந்து பாலும் போடு, பூவும் கொண்டு வந்து கொடு. இரு நல்ல வெய்யில் நேரம்.. மோர் தரேன். குடிச்சுட்டுப்போ” என்று சொல்லிவிட்டு ஈசி சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த கணவனை அர்த்த புஷ்டியுடன் பார்த்தாள்.

6 comments:

 1. குட்டிக்கதைகள் அருமை ஜெ மாமி.

  ReplyDelete
 2. அர்த்த புஷ்டியுடன் அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 3. //“அதனால என்ன பாட்டி.. நமக்கு போக மீதியை அக்கம் பக்கத்து குடிசையிலே இருக்கறவங்களுக்கு குடுத்துடலாமே” என்றான் பேரன்.//

  குட்டிக்கதை-1 அக்ஷயதிருதியையில்
  பாட்டி பெற்றது அன்னதானம்;
  பேரன் செய்யச்சொல்வதும் அன்ன தானம்
  குழந்தைக்கு ஓர் ந்ல்ல எண்ணம் ... சபாஷ்

  >>>>>>>

  ReplyDelete
 4. திருப்தி கதையில் ஓர் திருப்தி உள்ளது.

  //காலை எட்டு மணி

  ”நேத்து இங்க வெச்ச என்னோட ஆபீஸ் பைல் எங்க, இந்த வீட்டிலே ஒண்ணு கூட ஒழுங்கா இருக்காது..” உச்சஸ்தாயியில் கத்தத்தொடங்கினான் ரமேஷ்

  “ஏங்க நான் என்ன வீட்டிலேயா உக்காந்துண்டிருக்கேன். உங்க பொருளை நீங்கதான் ஒழுங்கா எடுத்து வெச்சுக்கணும்..” விமலா//

  வைராக்யம் பிரஸவ வைராக்யம் அல்லது ஸ்மஸான வைராக்யம் போலத்தானா? ;)

  >>>>>>>>

  ReplyDelete
 5. //”இல்ல பொன்னம்மா. நான் ஒருநாளைக்கு வேண்டாம்ன்னு சொல்ல நினைச்சதை தப்பா சொல்லிட்டேன். நாளையிலே இருந்து பாலும் போடு, பூவும் கொண்டு வந்து கொடு. இரு நல்ல வெய்யில் நேரம்.. மோர் தரேன். குடிச்சுட்டுப்போ” என்று சொல்லிவிட்டு ஈசி சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த கணவனை அர்த்த புஷ்டியுடன் பார்த்தாள்.
  //

  இதுவல்லவோ புண்ணியம். அர்த்த புஷ்டியுடன் கூடிய அருமையான கதை தான். பாராட்டுக்கள், வாழ்த்துகள். நன்றிகள். அன்புடன் VGK

  ReplyDelete