Wednesday, 19 September 2012

அம்மா


இதுவும் அறுசுவையில் வெளிவந்த என் சிறுகதை

அம்மா
“மணி ஓடாதேடா” என்று கத்திக்கொண்டே நாய்க்குட்டியின் பின்னால் ஓடி வந்த சங்கரி அப்பாவின் குரல் கேட்டு நின்றாள். “அம்மா, இந்த அழைப்பிதழை பாரம்மா. எப்படி இருக்குன்னு சொல்லு’ என்று அச்சகத்திலிருந்து அப்பொழுதுதான் வந்திருந்த அவளது ‘மஞ்சள் நீராட்டு விழா’ அழைப்பிதழை நீட்டினார் சங்கரியின் தந்தை ராமசாமி. வாங்கிய வேகத்தில் அழைப்பிதழை திருப்பிக்கொடுத்துவிட்டு, “ம் நல்லா இருக்குங்கப்பா” என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்க மணியைத் தேடி தோட்டத்திற்கு ஓடினாள் சங்கரி.
* * *
நகரத்து நாகரீகம் இன்னும் முழுமையாக எட்டாத நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத ஊர் சின்னூர். ராமசாமி அந்த ஊரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மிகவும் நேர்மையானவர், நாணயமானவர் என்பதால் ஊரில் இருந்த முக்கிய புள்ளிகள், பெரிய மனிதர்கள் அனைவரும் அவரது நிரந்தர வாடிக்கையாளர்கள். மேலும், எந்த தீய பழக்கமும் இல்லாதவர் என்பதால், ஊர் மக்களின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார். ராமசாமி தன் குல தெய்வம் சங்கரி அம்மனின் பெயரை மகளுக்கு வைத்திருந்ததால் மகளைக்கூட பெயர் சொல்லி அழைக்காமல் ‘அம்மா’ என்றுதான் அழைப்பார்.
சங்கரியைப் பெற்று கணவனின் கையில் கொடுத்துவிட்டு நிரந்தரமாக இந்த உலகை விட்டுச் சென்று விட்டாள் அவர் மனைவி உமா. வேறு திருமணம் செய்து கொள்ளவும் அவருக்கு விருப்பமில்லை. ராமசாமி, உமா இருவருமே அவரவர் பெற்றோருக்கு ஒரே வாரிசு என்பதால் சங்கரிக்கு மாமா, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா என்று எந்த உறவும் இருக்க வாய்ப்பில்லாமல் போயிற்று. ஏன், இரண்டு பக்கத்து பாட்டி, தாத்தாக்களின் காலமும் ஆகிவிட்டிருந்தபடியால் அந்த சொந்தங்களும் இல்லை.
ராமசாமியின் தாத்தா அந்தக்காலத்தில் கட்டிய பெரிய வீடு அவர்களுக்கு அதிகம்தான் என்றாலும் பரம்பரை சொத்து என்பதால் அங்கேயே வசித்தார். வீட்டை ஒட்டிப் பெரிய தோட்டம். அவர் வீட்டில் எதற்கும் பஞ்சமில்லை. ஆனால் ஆண்டு அனுபவிக்கத்தான் ஒரு மகராசி இல்லை. வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வம் சங்கரி அம்மனுக்கு பூஜை செய்ய சொந்த ஊருக்கு மகளை அழைத்துக்கொண்டு செல்வார் ராமசாமி. மற்றபடி தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்.
சங்கரிக்குத் தெரிந்ததெல்லாம் அழகான அவர்கள் வீட்டுத்தோட்டம், அவளது பள்ளிக்கூடம், சமையற்காரப் பெண்மணி கண்ணாத்தா, மற்றும் அவளது செல்லப்பிராணிகளான கன்றுக்குட்டி, நாய்க்குட்டி இதெல்லாம்தான்.
அறியாத வயதிலேயே திருமணமாகி, வாழ்க்கை என்றால் என்னவென்று உணரும் முன்பே விதவையாகிவிட்டவள் கண்ணாத்தா. ராமசாமிக்கு தூரத்துச் சொந்தம். அக்காள் முறை. ஆனால் அவரது தோற்றத்தை வைத்து சங்கரி அழைப்பது என்னவோ பாட்டி என்றுதான். ராமசாமியின் திருமணத்திற்கு முன்பே அவர்கள் வீட்டில் தஞ்சமடைந்தவள். சமையலறையே அவளது உலகம். சங்கரியைக் கண்ணாத்தாதான் வளர்த்தாள்.
என்ன வேலை இருந்தாலும் மகளைத் தினமும் காலையில் வண்டியில் பள்ளிக்குக் கொண்டு விடுவதையும், மாலையில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதையும் ராமசாமி வழக்கமாகக் கொண்டிருந்ததால் பள்ளியிலும் சங்கரிக்கு நெருங்கிய தோழி என்று யாரும் இல்லை. அதுபோல், தினமும் இரவு சிறிது நேரமாவது மகளுடன் உட்கார்ந்து பேசி விட்டுத்தான் படுக்கப்போவார். கடைக்கு சரக்கு வாங்கப்போகும் போதெல்லாம் மகளுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொண்டு வந்து தருவார்.
சங்கரிக்குப் பிடிக்காத நாட்கள் பள்ளி விடுமுறை நாட்கள். அதையும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகள், நாய்க்குட்டி, கன்றுக்குட்டி இவற்றுடன் கழித்து விடுவாள். தோட்டத்துச் செடிகளில் உள்ள பூக்களை ரசிப்பாள், அவற்றுடன் பேசக்கூட செய்வாள்.
* * *
சொந்தம் என்று யாரும் இல்லாததால் மகளுக்கு மாமன் செய்ய வேண்டிய சீரிலிருந்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்கினார். மேளம் முதல் மாலை வரை விழாவிற்குத் தேவையான ஒவ்வொன்றையும் அவரே ஏற்பாடு செய்திருந்தார். விழாவன்று ஐயனார் கோவிலில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார்.
மஞ்சள் நீராட்டு விழாவன்று கண்ணாத்தா சங்கரியை எழுப்பி தலை குளிக்க வைத்தாள். வீட்டிற்குள் யார், யாரோ புது வரவுகளைப்பார்த்து மிரண்டுதான் போயிருந்தாள் சங்கரி. வாசலை அடைத்துப் பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். வாசல் பக்கம் வந்த சங்கரி அங்கு உட்கார்ந்திருந்த புதியவர்களைப் பார்த்துத் திரும்ப வீட்டிற்குள் சென்றாள். அப்பாவும் அவள் கண்ணில் படவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் விழித்தாள். சமையலறைக்குச் சென்றாள். அங்கே வேலையாட்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த கண்ணாத்தா சங்கரியைப் பார்த்ததும், “கண்ணு உன் அறையிலே போய் இருந்துக்கம்மா. சாயங்காலம் உனக்கு நலங்கு வெப்பாங்க. இப்ப போய் ஓய்வு எடுத்துக்கம்மா” என்றாள். கண்ணாத்தாவின் குரல் கேட்டு அங்கிருந்த வேலைக்காரர்களின் பார்வை சங்கரியின் மேல் விழுந்ததும் சங்கடத்துடன் நகர்ந்தாள். அது வரை பட்டாம்பூச்சிபோல் சுற்றித்திரிந்து கொண்டிருந்த சங்கரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. திடீரென்று தான் தனிமை படுத்தப்பட்டது போல் உணர்ந்தாள். அன்று ஒரு நாள் மட்டும் தோட்டத்துப்பக்கம் போக வேண்டாம் என்று வேறு சொல்லியிருந்தாள் கண்ணாத்தா. தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த மணி வேறு தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது. சொந்த வீடே அன்னியமானது போல் தோன்றியது சங்கரிக்கு.
மாலையில் விழாவிற்கு வந்திருந்த பெண்கள் சங்கரியை அலங்கரித்து அழைத்து வந்து பந்தலில் போடப்பட்டிருந்த பெரிய நாற்காலியில் உட்கார வைத்தனர். பட்டுப்புடவை, நகைகள், மாலை எல்லாம் சேர்ந்து சங்கரிக்கு சோர்வையே உண்டாக்கியது.
வந்திருந்தவர்களில் வயதான பெண்மணி சடங்கைத் தொடங்கி வைத்தார். ஒவ்வொருவராக சங்கரிக்கு சந்தனம் பூசி, குங்குமம் இட்டனர். சங்கரிக்குக் கூச்சமாக இருந்தது. யார் யாரோ வந்து அவள் கையில் பரிசுப்பொருட்களையும், மொய்ப்பணத்தையும் கொடுத்தனர். சங்கரிக்கு எப்படா இதெல்லாம் முடியும் என்றிருந்தது. ஒருவழியாக ஆலம் சுற்றி முடிந்ததும் வந்திருந்தவர்களெல்லாம் விருந்துண்ணச் சென்றனர். விருந்து நடந்த இடத்திலிருந்து “வாங்க, வாங்க இங்க உட்காருங்க, திருப்தியா சாப்பிடுங்க. கேட்டு வாங்கி சாப்பிடுங்க” என்று அவள் அப்பா உபசரிப்பது கேட்டது. மெதுவாக சமையலறைப் பக்கம் சென்றாள். கண்ணாத்தா சங்கரியைப் பார்த்து கண்கலங்கி, ”கண்ணு அப்படியே உங்கம்மா கல்யாணம் ஆகி வந்த போது இருந்த மாதிரியே இருக்க. ம். அந்த மவராசிக்குத்தான் குடுத்து வெக்கல” என்று சொல்லிவிட்டு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். சங்கரியின் வாடிய முகத்தைப் பார்த்து, “ஐயோ! நான் ஒருத்தி.. என்னென்னவோ புலம்பிக்கிட்டு. வா. கண்ணு சாப்புடு” என்று இலையைப்போட்டு பரிமாறி பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட வைத்தாள்..
ஒரு வழியாக வந்தவர்கள் எல்லாம் விடை பெற்றுச் சென்றபின் கணக்கு வழக்கெல்லாம் பார்த்துவிட்டு மகளின் ‘மஞ்சள் நீராட்டு விழா’ இனிதே நடைபெற்ற மகிழ்ச்சியில் ராமசாமி ஊஞ்சலிலேயே படுத்துக்கொண்டு குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.
சாப்பிட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு வந்த சங்கரி, அப்பா குறட்டை விட்டுத் தூங்குவதைப் பார்த்ததும் மறுபடி கண்ணாத்தாவைத் தேடிச் சென்றாள். பாவம், வேலை அதிகமானதால் களைப்புற்றிருந்த கண்ணாத்தாவும் தூங்கி விட்டிருந்தாள்.
தன் அறைக்குச் சென்று கதவைத் தாழ் போட்டுக்கொண்ட சங்கரி அன்றுதான் முதன் முதலாகத் தன் தாயின் பிரிவை உணர்ந்தவள் போல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

2 comments:

 1. ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற நேரத்திலும், பிரஸவ நேரத்திலும் தன் சொந்தத் தாய் என்பவளின் தேவை எவ்வளவு ஒரு முக்கியமானதாக இருக்கும்!

  அந்தப்பருவப்பெண் சங்கரியை நினைத்தால் மிகவும் பாவமாகத்தான் உள்ளது. நேற்று வரை ஓடியாடிய குழந்தைக்கு இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் என்பது மிகவும் கஷ்டமல்லவா!

  ஒரு வயதுக்கு வந்த பெண்ணின் உண்மையான தேவைகளை உரிமையுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய தாய் என்பவள் இல்லாமல்போன சோக உணர்வுகளை மிக நன்றாகவே எழுதி உணர வைத்துள்ளீர்கள்.

  மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. இனி இந்தப்பொல்லாத உலகில் தன்னை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ளவும் அவள் கற்றுக்கொள்ள வேண்டும்.

  எதையும் பகிர்ந்து கொள்ளவும், நல்லது கெட்டதுகளை நயம்படச் சொல்லித்தந்து உதவவும் என்ன இருந்தாலும் தன் சொந்தத் தாய் போல வருமா, சங்கரிக்கு.

  ஆண்டவன் சில பெண் குழந்தைகளை இதுபோல அநியாயமாக சோதித்து விடுகிறான். ;( மிகவும் சங்கடம் தான்.

  ReplyDelete