பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறோம். அதற்கும் ஒரு படி மேலே போய் நடுத்தெருவில் விட்டுச் செல்லும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். நீங்கள் தினசரிகளில் படித்திருப்பீர்கள். அதன் விளைவுதான் இந்தக் கதை
IN AND OUT CHENNAI JUNE 01 - 15, 2012 இதழில் வெளி வந்த என் சிறுகதை இதோ உங்களுக்காக
“உமா, ரொம்ப வருஷமா சொல்லிண்டிருந்தயே,
மதுரைக்குப் போகணும்ன்னு. இங்க பார். என்
கூட எம் பி ஏ படிச்ச துரையோட பொண்ணுக்கு அடுத்த மாசம் மதுரையில கல்யாணமாம். அழைப்பிதழோட தனியா
கடிதமும் எழுதி அனுப்பி இருக்கான். போன
மாசம் இங்கேந்து மதுரைக்குப் போயிருந்தபோது மீனாட்சி அம்மன் கோவில்ல பார்த்தேன்னு
எங்க ஆபீஸ் குமார் சொன்னானே அதே துரையோட பொண்ணுக்கு தான் கல்யாணம். நீ துரையை பார்த்திருக்க வாய்ப்பில்ல. ஏன்,
குமாரைத் தவிர என் கூடப் படிச்ச நண்பர்கள் யாரையுமே நீ பார்த்திருக்க வாய்ப்பில்ல.
சென்னையில ஹாஸ்டல்ல தங்கி படிச்சோம். படிப்பு முடிஞ்சதும் அவங்கவங்க ஊருக்குப்
போயிட்டோம். அப்பறம் எல்லாரும் வேலை,
குடும்பம்ன்னு ஒவ்வொரு மூலைக்குப் போயிட்டோம். அத்தோட திடீர்ன்னு நிச்சயம் ஆனதால
யாரையும் நம்ப கல்யாணத்துக்கும் கூப்பிட முடியல.
துரை பாவம், சின்ன வயசிலேயே
பெற்றோரை இழந்து யார் யார் தயவிலோ படித்து, நல்ல நிலைக்கு வந்திருக்கான். அப்புறம் உமா, இங்க அகமதாபாத்ல எங்க கூட படிச்ச
ஒரு 6, 7 நண்பர்கள் இருக்காங்கன்னு இப்பதான் குமாருக்குத் தெரிஞ்சுதாம். அவங்க
எல்லாருக்கும்கூட துரை பத்திரிகை அனுப்பி இருக்கானாம். அவங்க எல்லாரும் மதுரைக்கு
வரேன்னும் சொல்லிட்டாங்களாம். குமாரே எல்லாருக்கும் ஒண்ணா டிக்கெட் எடுத்துடறேன்னு
சொல்லிட்டான். நம்ப ரெண்டு பேருக்கும்
சேர்த்து எடுக்க சொல்லிடட்டுமா? பழைய நண்பர்கள் எல்லாரையும் சந்திக்கற வாய்ப்பு
கிடைக்கும். அப்படியே கொடைக்கானல், பழநி
எல்லாம் போகலாம்ன்னு சொன்னான் குமார்.
வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கற உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும். நீ என்ன
சொல்ற உமா?” என்றான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த சோமு என்கிற சோம சேகர்.
“சரிங்க. நமக்கும் டிக்கெட் எடுக்கச் சொல்லிடுங்க. முடிஞ்சா அப்படியே ஒருநாள் நம்ப குல தெய்வக்
கோவிலுக்கும் போயிட்டு வந்துடலாங்க. நாம்ப அங்க போய் ரொம்ப வருஷம் ஆயிருக்கும்
இல்லயா? ம். இப்ப நான் போய் உங்களுக்கு
காபி கொண்டு வரேன்” என்று
சொல்லிவிட்டுப் போகும் உமாவைப் பார்த்து பெருமூச்சு விட்டான் சோமு. ‘ம். கல்யாணத்தின் போது எப்படி இருந்தவ இப்ப
இப்படி ஆயிட்டா. என்ன நிறம். என்ன
அழகு. கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் பெயர் பொருத்தம், ஜோடிப் பொருத்தம் எல்லாம் எப்படி இவ்வளவு கச்சிதமா
அமைஞ்சிருக்குன்னு ஆச்சரியப்பட்டாங்களே. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கூட நன்னாதானே
இருந்தா. அமெரிக்காவுக்குப் போன கௌதம்
இப்படி செய்வான்னு யார் கண்டா? உனக்கு
மட்டும் எப்படிடா எல்லாம் அவ்வளவு அழகா, கச்சிதமா,
சரியா வெச்சதை எடுத்தாப்பல நடக்கறதுன்னு எல்லாரும் சொல்வாங்களே, யார் கண்ணு
பட்டுதோ, இல்லை ஒருவேளை எல்லாம் நன்னா இருக்குன்னு கர்வப்பட்டுட்டேனோ? அதுக்கு
கிடைச்ச அடியோ? என்றெல்லாம் பலவாறு யோசித்தான் சோமு.”
தவமிருந்து
பெத்து, ஏழு வயசில பூணல் போட்டு ஒரே பிள்ளைன்னு பார்த்துப் பார்த்து வளர்த்து, சேமிப்பை
எல்லாம் செலவழிச்சு படிக்க வெச்சு, வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டு, இங்கு ஆயிரம்
கனவுகளை மனசுல தேக்கி வைத்துக் காத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்குத்
தெரியாமல் உடன் பணி புரியும் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு
குழந்தையையும் பெற்றுக் கொண்டு பிறகு பெற்றோருக்குத் தெரிவிப்பது என்றால் எந்தப்
பெற்றோருக்குத்தான் தாங்கும். அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றுக் கொண்டு அங்கேயே
தங்கி விட்டான் கௌதம். சோமுவாவது
அலுவலகத்துக்குச் சென்று விடுகிறான்.
ஆனால் உமா. நத்தை தன் உடலை கூட்டுக்குள்
சுருட்டிக் கொள்வது போல் நாலு சுவர்களுக்குள்ளேயே இருந்து உள்ளுக்குள்ளேயே முடங்கி
அழுது கொண்டிருக்கிறாள். என்ன செய்ய.
எல்லாம் அவரவர் விதிப் பயன்.
***
மதுரை செல்லும்
நாளும் வந்தது. அவரவர் மூட்டை, முடிச்சுகளுடன் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர். அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு கிட்டத்தட்ட
48, 50 மணி நேர பயணம். நல்லவேளை, குமார் குளிர்சாதன
வசதியுள்ள பெட்டிகளில் டிக்கெட் புக் செய்திருந்தான். இல்லாவிட்டால்
இந்த கோடை காலத்தில் கிட்டத்தட்ட ரெண்டு நாள் பயணம்ன்னா என்ன ஆகறது. மாலை 340க்கு
ரயில் கிளம்பியது. இரவுக்குள்ளேயே எல்லா குடும்பத்தினரும்
ஒருவருக்கொருவர் அறிமுகமாகி அவரவர் கொண்டு வந்த சாப்பாட்டு வகையறாக்களைப்
பகிர்ந்து உண்டு ஐக்கியமாகி விட்டனர். ஒரு வழியாக, உண்டு, உறங்கி, சீட்டு விளையாடி, நண்பர்கள்
கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டு, அரட்டை அடித்து இரண்டு நாட்களை ரயிலில் கழித்துக் களைத்து மூன்றாம் நாள் மாலை நான்கு
மணிக்கு மதுரை வந்து சேர்ந்தனர்.
சோமுவுக்கு உமாவின் முகம் சற்றுத் தெளிந்து இருப்பதாகத் தோன்றியது.
ரயிலடிக்கு வந்து,
ரொம்ப வருடங்கள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் அனைவரையும் வரவேற்று அவர்கள் தங்க
ஏற்பாடாகி இருந்த இடத்திற்கு ஒரு வேனில் அழைத்துச் சென்றான் துரை. “எல்லாரும் ஒரு மணி
நேரத்தில் தயாராக இருங்க. மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போக ஏற்பாடு செய்திருக்கேன். இந்த வேன் உங்களுக்காகவே தனியா ஏற்பாடு
செய்திருக்கேன். இன்னும் திருமணத்துக்கு
ரெண்டு நாள் இருக்கு. அதுவரைக்கும் நீங்க எல்லாரும் ஊரை சுத்திப்பாருங்க. நீங்க எல்லாரும்
ஊருக்குத் திரும்பற வரைக்கும் இந்த வேன் உங்களுக்காக மட்டுமே. அத்தோட இவன் ராமு, என்னுடைய தூரத்து உறவு. இவன் உங்களுக்கு ஊரை சுத்திக் காமிக்கறதோட,
உங்களை மறுபடி ரயில் ஏத்தி விடறவரை உங்க கூடவே இருப்பான். எனக்கும் உங்க கூட வர ஆசைதான். நான் உங்க கூட வராததுக்கு மன்னிச்சுக்கணும்” என்றான் துரை.
“அதனால என்ன
துரை. கல்யாண வேலைகளுக்கு நடுவுல எங்களுக்காக
நீ இவ்வளவு ஏற்பாடு செய்து வெச்சிருக்கியே.
அதுக்கு ரொம்ப நன்றிப்பா. நீ
கல்யாண வேலை எல்லாம் கவனி. நாங்களும்
ஏதாவது உதவி செய்யணும்ன்னா சொல்லு.” என்றான் சோமு.
“ம்ஹூம். எல்லா
ஏற்பாடும் செஞ்சாச்சு. நீங்க எல்லாரும்
நல்லா ஊரை சுத்திப்பாத்துட்டு திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்துடுங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றான் துரை.
***
அலுக்க, சலிக்க
ஊர் சுற்றிவிட்டு சந்தோஷமாக திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர் நண்பர்கள்
அனைவரும் குடும்ப சகிதமாக. வாசலிலேயே அவர்களை
வரவேற்ற துரை, “உங்க எல்லாருக்கும் ரெண்டாவது மாடில தனித்தனியா ரூம்
போட்டிருக்கேன். லிப்டும் இருக்கு. டிபனை
சாப்டுட்டு எல்லாரும் மாடிக்குப் போகலாம்.
அதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒருத்தரை அறிமுகப் படுத்தப் போறேன்.” என்று சொல்லிவிட்டு, “இவர்தான் என் அப்பா விஸ்வநாதன். எனக்கு ஏது அப்பான்னு யோசிக்கறீங்களா? இவர் நான் தத்து எடுத்துக்கிட்ட அப்பா. அரசுப்
பணியில இருந்து ஓய்வு பெற்றவர். இவர் என் அப்பாவானது ஒரு பெரிய கதை. நேரம் கிடைச்சா சொல்லறேன்.” என்று சொன்னான். இதற்குள் துரையின்
மகள் வந்து “தாத்தா, நீங்க வாங்கிக் கொடுத்த நெக்லசை போட்டுக்கிட்டிருக்கேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.” என்றாள். ”உன் அப்பா, அம்மா குணத்துக்கு நீ ரொம்ப நல்லா இருப்பம்மா” என்றார் விஸ்வநாதன். தன் மனைவியையும்,
மகளையும் அனைவருக்கும்
அறிமுகப்படுத்தினான் துரை. இதற்குள்
மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கவே, தன் மனைவி மற்றும் விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு
அவர்களை வரவேற்கச் சென்றான் துரை.
***
இரண்டு நாட்கள்
திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்து அனைவரும் ஓய்வு எடுத்துக்
கொண்டிருந்தனர். மறு நாள் காலை
சத்திரத்தை காலி செய்து விட்டுக் கிளம்ப வேண்டும். விஸ்வநாதன் ஒவ்வொரு அறையாக ஏதாவது பாத்திரம், பண்டங்கள்
விட்டுப்போயிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வந்தவர், சோமுவும் உமாவும் இருந்த
அறைக்கு வந்தார். வாசலிலேயே தயங்கி நின்றார்.
பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவர் போல் உள்ளே சென்றார். “வாங்கப்பா, என்றான்
சோமு”.
“சோமு நானே உன்
கிட்ட தனியா பேசணும்ன்னு நினைச்சுண்டிருந்தேன்.
இப்ப நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.
சோமு, நீ என்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துல விட்டுட்டு கொஞ்ச நேரத்துல
வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனதும் அங்கயே ரொம்ப நாழி காத்துண்டிருந்தேன். அப்புறம் பயத்தோடயும், கலக்கத்தோடயும் அன்றைய
இரவை அங்கேயே கழிச்சேன். கார்த்தால
எழுந்து முதல்ல பேப்பர் வாங்கி பார்த்தேன்.
ஒரு வேளை ஏதாவது விபத்து நடந்து ஒனக்கு ஏதாவது ஆகி இருக்குமோன்னு. ஏன், ஒரு ரெண்டு நாள் ஜி. ஹெச், ராயப்பேட்டை
ஆஸ்பத்திரிக்கெல்லாம்கூட போய் தேடிப்பார்த்தேன்.
மார்ச்சுவரிக்குக் கூட போய் பார்த்தேன். உன் அலுவலகத்துக்குப்போய் உன்னோட பேரை
கெடுக்க நான் விரும்பல. என்னை அடையாளம்
காட்டிக்காம போனில் தொடர்பு கொண்ட போது உனக்கு வடக்கே மாத்தலாயிடுத்துன்னும், நீ
குடும்பத்தோட கிளம்பிப் போயிட்டன்னும் தெரிஞ்சுண்டேன்.
கொஞ்சம் லேசா உண்மை புரிய ஆரம்பிச்சுது. ரொம்ப
ஒடிஞ்சு போயிட்டேன். தற்கொலை
பண்ணிக்கலாமான்னு கூட தோணித்து. அந்த
மாதிரி யோசிச்சுண்டே வரும்போதுதான் துரையோட மனைவியும், மகளும், இல்ல இல்ல என்னோட
மருமகளும், பேத்தியும் வந்த ஆட்டோ விபத்துக்குள்ளாகி குழந்தைக்கு தலையில நல்ல
அடி. என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சு நின்னவங்களை
ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போய், வெளியூர் போயிருந்த என் மகன் துரை வர வரைக்கும் அவங்க
கூடவே இருந்தேன். என் பையில என்னோட பேங்க்
பாஸ் புக் இருந்ததால அவங்களுக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்ய முடிஞ்சுது. நல்ல வேளையா என்னுடைய ரத்தமும், அந்தக்
குழந்தையோட ரத்தமும் ஒரே பிரிவா இருந்ததால ரத்தமும் கொடுத்தேன். துரை
வந்ததும் நன்றி சொன்னான், என்னைப்பத்தி கேட்டான்.
எனக்கு உறவுன்னு யாரும் கிடையாது.
மனைவி இறந்துட்டா, குழந்தைகள் கிடையாதுன்னு சொன்னேன். அவன் உடனே என்னை அப்பாவா தத்து
எடுத்துண்டுட்டான். அவங்க கூடயே என்னையும்
அழைச்சுண்டு வந்துட்டான். ஆனா சோமு, இன்னி வரைக்கும் அவன் என்னோட
பென்ஷன்லேந்து ஒரு பைசா கூட வாங்கிண்டது இல்ல.
என்னை சொந்த அப்பாவா நினைச்சுண்டிருக்கான். என்னால முடிஞ்ச சரீர ஒத்தாசைகளை அவங்களுக்கு செஞ்சுண்டிருக்கேன். துரையும், என் மருமகளும் என்னை தெய்வமா
மதிக்கறாங்க. அசைவம் சாப்பிட்டுண்டு இருந்த அவங்க எனக்காக முழு சைவமா மாறிட்டாங்க.
இந்த அருமையான சொந்தத்தை நான் இழக்க விரும்பல. அதே மாதிரி அவன் உன் மேலயும் நல்ல மதிப்பு
வெச்சிருக்கான். அதையும் நான் கெடுக்க விருமபல.
நீ என்னை தாராளமா துரையோட மத்த நண்பர்கள் மாதிரி அப்பான்னு
கூப்பிடலாம். அவ்வளவுதான். எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் கோவமோ,
வருத்தமோ கொஞ்சம் கூட கிடையாது. உங்க
கிட்ட ஒரே ஒரு வேண்டுகோள் தான். நான் உன்
தந்தைன்னோ, நீ என்னோட மகன்னோ தயவு செய்து யாருக்கும், முக்கியமா துரைக்குத் தெரிய
வேண்டாம்.” என்று சொல்லிவிட்டு மனதிலிருந்த நெடுநாள் பாரம் குறையவே கம்பீரமாக நடந்து
சென்றார். மன பாரத்தைக் குறைக்க வந்த
சோமுவும், உமாவும் மேலும் பாரத்தை ஏற்றிக் கொண்டு தலை குனிந்து நின்றனர்.
மனம் கனத்த கதை...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_20.html) சென்று பார்க்கவும்...
நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…
திரு திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteமிக்க நன்றி. என் மற்ற கதைகளையும், பதிவுகளையும் படித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
கண்டிப்பாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.
மனதை கலங்கச்செய்யும் கதையாக உள்ளது. அழகாகக்கொண்டு வந்து சரியாக முடித்துள்ளீர்கள்.
ReplyDeleteஎவ்வளவோ பிள்ளைகள் தன் தாய் தந்தையை பாரமாகவே தான் நினைக்கின்றனர்.
சிலர் சுத்தமாகக் கண்டு கொள்ளாமலேயே இதுபோல அவர்களை அனாதையாக எங்கேயேனும் ஏமாற்றி விட்டு விடுகின்றனர்.
சிலர் முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு ஏதோ அதற்கான தொகையையும் அளிக்கின்றனர்.
சிலர் வெளிநாடுகளுக்குச்சென்று அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். அவ்வப்போது பணம் ம்ட்டும் வரும். ஒரு ஆதரவோ பாசமோ இருக்காது.
எவ்வளவோ முதியோர் நிலை அவர்கள் இறந்த பின்பும் வெளிநாட்டில் உள்ள தன் ஒரே மகன் வருவானோ மாட்டானோ என்பதாகவே உள்ளது.
இவை ஒவ்வொன்றையும் காதால் கேட்கவும், கண்ணால் பார்க்கவும் மனதுக்கு மிகவும் கஷ்டமாகவே உள்ளது.
உங்களின் இந்தக்கதையில் யாரோ ஒரு நல்லவர் அந்தப்பெரியவரை தந்தையாகத் தத்து எடுத்துக்கொண்டுள்ளார். அவர் மனிதருள் மாணிக்கம் என்றே சொல்ல வேண்டும். இப்படியும் சில நல்ல மனிதர்கள் ஆங்காங்கே இருப்பது மனதுக்கு இதமாக உள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பிரியமுள்ள கோபு.
பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.
Deleteஒரு நாள் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது ஒரு பெண் வந்து “நீங்க ஜெயந்தி தானே. என்னை நினைவு இருக்கா” என்று கேட்டார். நான் கொஞ்சம் முழித்தேன். நான் நேர் முக உதவியாளராக இருப்பதால் நிறைய பேர் என்னை வந்து பார்ப்பார்கள். அந்தப் பெண்ணின் வலது கையில் மாவுக்கட்டு போட்டிருந்தது. என்ன ஆச்சு என்று கேட்டதுதான் தாமதம். படபடவென்று மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி விட்டார். திருமணமான அவரது இரண்டு பெண்களும் வெளி நாட்டில். கணவர் இறந்து விட்டார். அந்த மற்ற கையுடனேயே 3 மாதங்களாக சமாளித்து வருவதாகச் சொன்னார். சின்ன வயதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நிறைய மார்க் வாங்க வேண்டும், நல்ல வேலை கிடைத்து, வெளி நாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
என்ன செய்ய உள்ளூரிலேயே பெற்றோரை தனியாக விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போகும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
எனக்கென்ன வந்தது என்று பிள்ளைகளை தாங்களே தனிக்குடித்தனம் வைக்கும் பெற்றோர்களும் உண்டு.
எல்லாம் அவரவர் விதிப் பயன்.
//ஒரு நாள் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது ஒரு பெண் வந்து “நீங்க ஜெயந்தி தானே. என்னை நினைவு இருக்கா” என்று கேட்டார். நான் கொஞ்சம் முழித்தேன். நான் நேர் முக உதவியாளராக இருப்பதால் நிறைய பேர் என்னை வந்து பார்ப்பார்கள்.//
DeleteV V I P க்கள் என்றாலே அப்படித்தான். அந்த VVIP க்களை சமுதாயத்தில் மற்றவர்களால் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
ஆனால் VVIP க்களுக்கு மற்றவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை தான்.
VVIP க்கு வாழ்த்துகள். பிரியமுள்ள கோபு