Wednesday, 30 May 2012

மறக்க முடியாத பிறந்த நாள்
இந்த பிறந்த நாள் (29.05.2012) என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத பிறந்த நாள்.  ஏன் என்றால், இதுபோல் இதுவரை எந்த ஒரு வருடமும் கொண்டாடியதில்லை.

             முதலில் என்னுடைய இந்தப் புகைப்படத்தைப் பற்றி சொல்லி விடுகிறேன்.  இந்தப் புகைப்படம் 1983ம் ஆண்டு மயிலையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் எடுத்தது. மாப்பிள்ளை வீட்டுக்குக் கொடுக்கத்தான் எடுத்தது.  அப்புறம், இந்தப் புகைப் படத்தில் நான் கட்டியிருக்கும் இந்தப் புடவை 1982ம் ஆண்டு பிறந்த நாளுக்காக என் சகோதரி திருமதி கீதா ஸ்ரீனிவாசன் எடுத்துக் கொடுத்த புடவை.  இது நல்ல நீல நிறப் புடவைஇதில் உள்ள சின்னச்சின்ன கட்டங்கள் வெள்ளை நிறம்.  பெரிய வட்டங்கள் உள்ளனவே அவை, சிகப்பு, ராமர் நீல நிறம், கிளிப்பச்சை ஆகியவை.   இந்தப் புடவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

     சரி. இந்த வருடப் பிறந்த நாளில் என்ன சிறப்பு?

     இந்த வருடம் நான் பிறந்த தேதியும், என் நட்சத்திரமும் ஒரே நாளில் வந்தது.

            28.05.2012 இரவு சரியாக 1200 மணிக்கு என்னை எழுப்பி வாழ்த்து சொன்னாள் என் மகள்.  அவள் வாழ்த்துதான் முதல் வாழ்த்து.  அடுத்து என் கணவர் வாழ்த்தினார். (முதல் நாளே என் கணவர் 2 புடவைகளைப் பரிசளித்து விட்டார்)

     காலையில் எழுந்ததும் எங்கள் சம்பந்தி வாழ்த்தினார். பிறகு குளித்து கோவிலுக்குச் சென்றால் குருக்கள் மாமா வாழ்த்தினார்.  (இது என்மகளின் ஏற்பாடு என்று பிறகு தான் தெரிய வந்தது).  பிறகு அதிகாலையிலேயே அலுவலகத்திற்குச் சென்று விட்ட என் மருமகள் தொலை பேசியில் வாழ்த்தினாள்.   (மகனும், மருமகளும் 2 நாட்களுக்கு முன்பே ஒரு புடவையை பரிசளித்து விட்டனர்).

     அலுவலகத்துக்குச் செல்ல வீட்டிலிருந்து கிளம்பிய போது என் நாத்தனார் எனக்கு திருமண நாளுக்கு (01.05.2012) பரிசளித்த i-Pod ஐ என் மகள் கொடுத்தாள்.  அதில் ராம் படத்திலிருந்து

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

முதல் பாடலாகப் பதிந்து கொடுத்தாள்.  அத்துடன் அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த, விநாயகர் அகவல்.

          பரங்கிமலை ரயில் நிலையத்திற்குச் சென்ற போது ராகவ் (எங்கள் குடும்ப நண்பர் திரு வெங்கட்ராமனின் மகன்) ஒரு பாக்கெட்டை பூக்காரம்மா மூலமாகக் கொடுத்து வாழ்த்தினார். அந்தப் பொட்டலத்தில் ஒரு முருகர் விக்கிரக கீ செயின், ஒரு பாக்கெட் மதுரை தாழம்பூ குங்குமம், ஒரு முழம் மல்லிப்பூ, ஒரு காட்பரீஸ் சாக்லேட் இருந்தது.

     ப்ளாட்பாரத்தில் நுழைந்த போது என்னுடன் பணி புரியும் ஒரு தோழி ஒரு பாக்கெட்டைக் கொடுத்து வாழ்த்தினாள். அது ஒரு TIMEX WATCH அதுவும் என் மகளின் பரிசு தான். இது எல்லாம் என் மகளின் ஏற்பாடுதான் என்று பிறகு தெரிய வந்தது.

     அலுவலகத்திற்குள் நுழைந்து என் இடத்திற்கு வந்து அமர்ந்ததும் என் தோழி பூங்குழலி ஒரு அழகான படகு வீடு புகைப் படம் பரிசளித்தாள்.  அது பூங்குழலியின் மகன் எடுத்த படம். லாமினேட் செய்து கொடுத்திருந்தார்.  ரொம்ப அழகாக இருந்தது.

     இத்துடன் தொலைபேசியில் என் நாத்தனார், ஓரகத்தி இருவரும் வாழ்த்தினார்கள்.

     முகப் புத்தகத்தில் நுழைந்தால் கிட்டத் தட்ட 100 பேருக்கு மேல் வாழ்த்தி இருக்கிறார்கள்.  வாழ்த்து மழையில் நனைந்து திக்கு முக்காடிப் போனேன். 

      மாலையில் வீட்டுக்குள் வந்ததும் கோவையிலிருந்து அம்மா, அப்பா, தம்பி, தம்பி மனைவி, தம்பி மகன் எல்லாரும் வாழ்த்தினார்கள். 

           இரவு படுக்கப் போகும் முன் என்மகள் ஒரு கவரை என் கையில் கொடுத்தாள்.  அதில் 2 குட்டி விசிறிகளும், 2 குட்டி திண்டுகளும் இருந்தன.  விசிறிகளை பிள்ளையாரின் பின்னும், குட்டி திண்டுகளை குட்டிக் கிருஷ்ணனின் இரண்டு பக்கங்களிலும் வைத்து விட்டேன். 

     இப்படியாக பரிசு மழையிலும், வாழ்த்து மழையிலும் நனைந்து மனநிறைவுடன் தூங்கச் சென்றேன்.

     அத்துடன் அன்று இரவே என் ப்ளாகைத் தொடங்கினேன்.

Tuesday, 29 May 2012

பைந்தமிழ்ப் பாடல்கள்


முதல் பதிவு முழு முதற் கடவுள் பிள்ளையாரைப் பத்தி இருந்தால் நல்லா இருக்கும்ன்னு நினைத்தேன். 

என் மகள் இந்தப் படத்தை போட்டோ ஷாப்பில்  டிஜிட்டல் ஆர்ட் செய்து, ப்ளாஷில் அனிமேட் செய்து கொடுத்தாள்.

தொப்பையப்பனை கிண்டல் செய்ய அல்ல இராம கவிராயரின் இந்த அழகான பழந்தமிழ்ப் பாடலில் மயங்கி, (என்ன கற்பனை பாருங்கள் கவிஞருக்கு) இந்தப் பதிவைப் போடுகிறேன்.


தம்பியோ பெண் திருடி தாயாருடன் பிறந்த
வம்பனோ வெண்ணை திருடி மாயனாம் - அம்புவியில்
மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே
கோத்திரத்தி லுள்ள குணம்

ஒரு புலவர் உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குச் செல்லும் போது அவர் தன் வேட்டியில் முடிந்து வைத்திருந்த பணம் திருடு போய் விட்டதாம்.  பணம் போன வருத்தத்தில் புலவர் பிள்ளையாரைச் சாடுகிறார்.

உன் தம்பி முருகன் பெண் திருடி, உன் மாமன் மாயக் கண்ணன் வெண்ணை திருடி, அதே கோத்திரத்தில் வந்த நீ தான் என் வேட்டியில் இருந்து முடிச்சவிழ்த்து பணத்தை எடுத்துக் கொண்டாய் என்கிறார்.

உண்மையில் தந்தையின் கோத்திரத்தில்தான் பிள்ளைகள் வருவார்கள். பிள்ளையாரும், முருகனும், தந்தையின் (சிவனின்) கோத்திரமாகத் தானே இருக்க முடியும். பணம் பறி போன கோபத்திலும், துக்கத்திலும், புலவர் வெண்ணை திருடி என்று கண்ணனையும் ஒரே கோத்திரம் என்று திட்டுகிறார் பாருங்கள்.

எது எப்படி இருந்தால் என்ன? புலவரின் தமிழ்ப் புலமையை ரசிப்போம், தமிழை வளர்ப்போம்.