Thursday, 20 September 2012

பயணக் கட்டுரைகள்

பயணம் செய்வது (அதாங்க ஊர் சுத்தறது - அதைத்தான் அப்படி ஸ்டைலா சொன்னேன்) எனக்கு ரொம்ப பிடிக்கும்.  அதே போல்  பயணக் கட்டுரைகளைப் படிப்பதும்  ரொம்ப பிடிக்கும். சின்ன வயசில் பரணீதரனின் இமயமலை யாத்திரை பற்றி ஒரு புத்தகம் எங்கள் வீட்டில் இருந்தது.  அதை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது.  அதே போல் பிலோ இருதயநாத் அவர்களின் எழுத்துக்களையும் படித்திருக்கிறேன். 
இப்ப நானும் பயணக் கட்டுரை எழுத ஆரம்பிச்சுட்டேன்.
என் முதல் பயணக் கட்டுரையைப் படிச்சுதான் பாருங்களேன்.

$ $ $ என் மகன் காரில் கொஞ்சம் LONG RUN போக வேண்டும் என்று சொன்னதால் பொங்கலன்று அதாவது (15.01.2011) அன்று தென்னாங்கூர் செல்ல முடிவு செய்தோம்.

காலையில் சீக்கிரமே எழுந்து பொங்கல் வைத்து, பூஜை முடித்து, பொங்கல், கூட்டு, சாதம், தயிர் சாதம், வடாம் எல்லாவற்றையும் டப்பர்வேர் டப்பாக்களில் எடுத்துக்கொண்டு காலை 9 மணிக்கு மேல் கிளம்பி பூந்தமல்லி சாலை வழியே, காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சென்றோம்.  சாலையின் வலது பக்கத்தில் பார்த்துக்கொண்டு வந்தால் ஒரிசாவில் உள்ள பூரி ஜகந்நாதர் கோவில் கோபுரம் போல் கோபுரம் தெரியும் என்று சொல்லி இருந்தார்கள். 1210 மணிக்கு தென்னாங்கூர் போய் சேர்ந்தோம்.  முதல்நாள் தொலை பேசியில் கேட்டபோது 12 மணிக்கே கோவிலை மூடி விடுவதாகச் சொல்லி இருந்தார்கள்.  நல்ல வேளை, எங்கள் அதிர்ஷ்டமோ இல்லை விசேஷ தினம் என்பதாலோ கோவில் திறந்திருந்தது.   மேலும் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலுக்குச் சென்றுவிட்டு நிறைய பேருந்துகளில் பக்தர்கள் வந்திருந்தனர்.

ஆங்கிலத்தில் SPIC AND SPAN என்று சொல்வார்களே அது போல் இருந்தது கோவில்.  சுத்தமோ சுத்தம். அன்று சனிக்கிழமை என்பதால் பாண்டுரங்கனுக்கும் ருக்மிணிக்கும், வெங்கடாசலபதி, பத்மாவதி தாயாராக அலங்காரம் செய்திருந்தார்கள்.  சன்னிதியில் வெகு தூரத்தில் நின்றால் கூட பாண்டுரங்கன், ருக்மிணியின் கம்பீரமான சிலைகள் தெரிகின்றன.  கண்ணனின் லீலைகள் எல்லாவற்றையும் வெளிப் பிரகார சுற்றுச் சுவர்களிலும், கூரையிலும் ஓவியங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு ஓவியமும் கண்ணுக்கு விருந்தாக இருந்தது.  மேலும் ஒவ்வொரு நாளும் செய்யும் அலங்காரங்களைப் புகைப் படங்களாக எடுத்து மாட்டி இருந்தார்கள்.

சற்று அருகே சென்றதும் ஆரத்தி பார்க்க விரும்புபவர்கள் ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.  உச்சி கால தீபாராதனை பார்த்து விட்டு செல்லலாம் என்று அர்ச்சகர் சொன்னார்.  மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் எல்லோரையும் சமமாக நடத்தியது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.  அனைவரும் சம்மணமிட்டு அமர்ந்தோம்.   தீபாராதனை முடிந்ததும் அர்ச்சகர் “அனைவரும் சந்நிதியின் வாசலில் துளசி, சந்தனம் பிரசாதங்கள் வாங்கிக் கொள்ளுங்கள், தயவு செய்து வரிசையில் நின்று வாங்குங்கள்.என்று வினயமாகச் சொன்னார்.    வெளியே வந்ததும், துளசி, சந்தனத்துடன் ஒரு கவளம் சுடச்சுட சாம்பார் சாதம்.  ஆஹா என்ன சுவை.  அது என்னமோ கோவிலில் கொடுக்கும் பிரசாதத்துக்கு ஒரு தனி சுவை வந்து விடுகிறது.  ஒருவேளை அந்தப் பரந்தாமன் தன் பங்குக்கு தன்னுடைய அருளையும், அன்பையும் அதில் கலந்திருப்பானோ? அதில் என்ன சந்தேகம். இது MIND VOICE.

தென்னாங்கூர் கோவிலைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.

தென்னாங்கூரிலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் பம்ப் செட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.  அங்கேயே காரை நிறுத்தி விட்டு மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டோம்.    

வழியில் எவ்வளவு கிராமங்கள்.  வீட்டு வாசல்களில் அழகழகான பெரிய, பெரிய கோலங்கள். வண்ண, வண்ணக் கோலங்கள். கிராமத்திற்குச் சென்று பொங்கல் கொண்டாடிய  EFFECT  கொஞ்சம் வந்து விட்டது.

இப்படி சின்னச் சின்ன கிராமங்களைக் கடந்து போகும்போது நான் நினைப்பதுண்டு.  அந்த மாதிரி இடங்களில் பிறந்து, வளர்ந்து  அங்கேயே வாக்கப்பட்டு வாழ்க்கை நடத்தும்படியான சூழ்நிலை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று.

ஆனால் ஒன்று மட்டும் சங்கடப்படுத்தியது.  வழியில் ஒரே பைக்கில் 4 பேர், அதுவும் பெரியவர்கள் சர்வ சாதாரணமாகப் பயணிப்பதைப் பார்த்தோம்.  அவரவர் உயிர் பற்றிய அக்கறை அவர்களுக்கே இல்லாவிட்டால் என்ன செய்வது?

மேல் மருவத்தூர் வழியாக வண்டலூர் வந்து மிருகக் காட்சி சாலைக்குச் செல்லலாம் (இது மருமகளின் விருப்பம்.  இது வரை பார்த்ததில்லையாம்) என்று பார்த்தால் அங்கு பயங்கர கூட்டம்.

அதனால் அப்படியே காரைத் திருப்பி கேளம்பாக்கம் வழியாக கோவளம் கடற்கரைக்குச் சென்றோம்.  அம்மாடி ஒரே பட்டை, பட்டையாக மீன்களுக்கு மசாலா ஆடை அணிவித்து வரிசையாக வைத்து இருந்தார்கள்.  நல்லவேளை, நாங்கள் திரும்பி வரும் வரை மீன்களைப் பொரிக்க ஆரம்பிக்கவில்லை.  தப்பித்தோம். மீன் வாடை வராத இடமாகத் தேடிச் சென்றோம். 

கடற்கரைக்குச் சென்று விட்டு அலையில் நிற்காமலா?  நம்ப ஊரில் தானே இப்படி அலை அடிக்கிறது.   என்னைப் பொறுத்தவரை தெவிட்டாத விஷயங்களில் கடல் அலையும் ஒன்று. காலையில் கோவிலுக்குச் செல்வதால் மூவரும் பட்டுப் புடவை உடுத்தி இருந்தோம்.  அலையைப் பார்த்ததும் பட்டுப் புடவையாவது ஒன்றாவது.   சுமார் ஒரு மணி நேரம் அலையில் நின்றிருந்தோம்.  எங்கள் வீட்டில் என் கணவர் மட்டும் அலை பக்கமே வர மாட்டார்.  நாங்கள் எல்லாம் அலையை விட்டு வெளியே வர மாட்டோம்.

மீண்டும், மீண்டும் பார்க்கத்தூண்டும் பாண்டுரங்கனின் தரிசனம், மகனின் கார் ஓட்டும் நேர்த்தி, அலையில் நின்ற மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து நிரம்பிய நிறைவான மனதுடன் இரவு வீடு வந்து சேர்ந்தோம்.

9 comments:

 1. மிகவும் அருமையான பயணக் கட்டுரை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  என் தளத்திற்கு இன்று, முதன் முதலாக வருகை தந்து பின்னூட்டம் கொடுத்திருந்தீர்கள், அதற்கு என் நன்றிகள்.

  நான் இன்று உங்களின் தளத்தில் Follower ஆகியுள்ளேன்.

  All the Best....
  vgk

  ReplyDelete
 2. மிக்க நன்றி திரு கோபாலகிருஷ்ணன் சார்

  ReplyDelete
 3. "இப்படி சின்னச் சின்ன கிராமங்களைக் கடந்து போகும்போது நான் நினைப்பதுண்டு. அந்த மாதிரி இடங்களில் பிறந்து, வளர்ந்து அங்கேயே வாக்கப்பட்டு வாழ்க்கை நடத்தும்படியான சூழ்நிலை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று."

  கிராமத்திலேயே அருமையாக தாயம் ஆடிக்கொண்டு பொழுது கழிந்திருக்கும், இப்படி முகநூல், வலைப்பூ போன்ற தொல்லைகள் இருந்திருக்காது..

  ReplyDelete
 4. முகவரி காட்ட மறுப்பவருக்கு நன்றி.
  ஆனால் முகநூலும், வலைப்பூவும் நல்ல நட்புக்களைத் தேடித் தருகிறது. எத்தனையோ தெரியாத விஷயங்களை தருகிறது.
  தொல்லை கண்டிப்பாக அல்ல.

  ReplyDelete
 5. koopikka veendaam methuvaaka varukiReen

  ReplyDelete
 6. கோபிக்கறதா, உங்களையா, எனக்கு இங்க முன்னோடியே நீங்க எல்லாம்தான். மெதுவா வாங்க.
  நன்றி ஜலீலா

  ReplyDelete
 7. பயணக் கட்டுரை சிறப்பாக இருந்தது மேடம்.... என் மனைவி ஒரு பாண்டுரங்க பக்தை... உங்கள் கட்டுரையைப் படித்ததும் நிச்சயமாக அவளை அழைத்துச் செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.. நன்றி..
  பத்ரிநாத்

  ReplyDelete
  Replies
  1. நன்றி பத்ரிநாத். கண்டிப்பாக உங்கள் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்.

   Delete
 8. பாண்டுரங்கனுக்கும் ருக்மிணிக்கும், வெங்கடாசலபதி, பத்மாவதி தாயாராக அலங்காரம் செய்திருந்தார்கள்.

  நிறைவான பயணப்பகிர்வுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete