Wednesday 19 September 2012

மாற்றம்

IN AND OUT CHENNAI SEPTEMBER 16 - 30, 2012 இதழில் வெளிவந்த என் சிறுகதை மாற்றம் இதோ உங்களுக்காக

“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” இதுதான் இந்த சிறுகதைக்குக் கரு.


                                                                             -oOo-



“பவானி, நாளைக்கு ரமேசு வாரானாம்  இப்பதான் போன் போட்டு சொன்னான்.  நான் சந்தைக்குப் போயிட்டு வரேன்.  உரம் வாங்கணும். அப்படியே நல்ல வெடக்கோழியா வாங்கிட்டு வரேன். தம்பிக்கு கோழிக் கொழம்புன்னா உசிர் இல்ல

“ஏங்க, ரமேசு வாரானா.  லீவுக்கு வரமாட்டேன்.  மேல்படிப்புக்கு தயார் செய்யணும்ன்னு சொன்னானே

“அது என்னமோ நாளைக்கு நேர வந்து சொல்றேன்னு சொல்லிட்டான்.  நான் ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பறேன்.  இப்பவே கிளம்பினாதான் சீக்கிரம் திரும்பி வர முடியும்.  வேற ஏதாவது வாங்கிட்டு வரணும்ன்னா சொல்லு.  அப்புறம் அது இல்ல, இது இல்லன்னு சொல்லாத

* * *

ஏம்மா பவானி. என் பேரன் வாரானா?”

“ஆமாம் அத்தை, ரமேசு நாளைக்கு வாரானாம்.

“அது என்ன ரமேசு.  அவனுக்கு அழகா ‘சின்ராசுன்னு அவங்க தாத்தன் பேர வெச்சிருக்கு.  அப்புறம் என்னா ரமேசு.  அவர் உசுரோட இருந்தாலாவது பேரச் சொல்லிக் கூப்பிட சங்கடமா இருக்கும்.  அந்த மனுசன் தான் போய் சேந்துட்டாரே”.

“அப்பத்தா, அண்ணனுக்கு ஸ்கூல்ல அதான பேர்.  அதான் அம்மா அப்டி சொல்றாங்க

“ஸ்கூல்ல எப்டி வேணா கூப்டட்டும்.  வீட்ல சின்ராசுன்னுதான் சொல்லணும்.     ஏடி கற்பகம், உங்கண்ணனுக்கு இன்னும் எத்தனை வருசம் படிப்பு இருக்கு?”.

“அதுவா அப்பத்தா.  அண்ணன் இப்ப +2 பரீட்சை எழுதி இருக்கு.  அப்புறம் காலேஜ் நாலு வருஷம்.  அதுக்கும் அப்புறம் அண்ணன் மேல் படிப்பு படிச்சா அது ஒரு ரெண்டு வருஷம்.  ஆனா படிப்பெல்லாம் முடிஞ்சதும் அண்ணனுக்கு இந்தியாவில வேலை கிடைக்குமோ இல்ல வெளி நாட்டுல கிடைக்குமோ தெரியாது”.

“ஆங்.  அப்படீன்னா என் பேரன் இன்னும் ஆறு வருசத்துக்கு லீவுக்கு லீவுதான் இங்க வருவானா?  பவானி, ராமசாமியை நல்ல சுறாமீனா வாங்கிட்டு வரச் சொல்லு.  நாளைக்கு நீ சோறாக்கு.  கோழிக்குழம்பும், சுறாபுட்டும் நான் செய்யறேன்.  சின்ராசுக்கு அவன் தாத்தனாட்டம் கோழிக்குழம்பும், சுறாபுட்டும் உசுர்.   சட்டிக் குழம்பையும் மிச்சம் வெக்காம தின்னுப்புடுவான்.  ஆள்தான் தாத்தன் மாதிரின்னா திங்கறதுலயும் அப்படியே அவரேதான்.  போன தடவை லீவுக்கு வந்த போது அந்த ஐயர் வீட்டு புள்ளைய கூட்டிட்டு வந்ததால நம்ம வீட்டு புள்ளைக்கு முட்டை கூட செய்து கொடுக்க முடியல

“ஐயோ அப்பத்தா. அந்த அண்ணன் ஐயர் இல்ல.  ஆனா சைவம்”.

“அது என்னமோ.  எனக்கு தெரிஞ்சு கவுச்சி சாப்பிடாதவங்க எல்லாம் ஐயமாருங்கதான்.  ஏடீ கற்பகம் உங்கப்பன சின்ராசுக்கு போன் போட்டு அந்த மாதிரி யாரையும் அழைச்சுக்கிட்டு வர வேண்டாம்ன்னு சொல்லச் சொல்லு

“என்ன அப்பத்தா. அப்டியெல்லாம் சொல்றது நல்லா இருக்குமா?  ஏன் அப்பத்தா.  நானும் படிக்க வெளியூருக்குப் போயிட்டு லீவுல வந்தா எனக்கும் இப்டியெல்லாம் செஞ்சு தருவீங்கள?

“உனக்கா.  இப்பவே செய்து தரேன்.  ஏன்னா உன்னை யாரு கண்ணு வெளியூருக்கு அனுப்பப் போறாங்க.  பன்னண்டாப்பு முடிச்சதும் கல்யாணம்தான்

“அப்பத்தா…………” ‘அண்ணன் வந்ததும் அண்ணன்கிட்ட சொல்லி மேல் படிப்புக்கு வழி செய்துக்கணும்.

“என்ன கண்ணு முணுமுணுக்கற

“ஒண்ணும் இல்ல அப்பத்தா.  நாளைக்கு சுறாபுட்டை ஒரு வெட்டு வெட்டணும்ன்னு சொல்லிக்கிட்டேன்.  சரி அப்பத்தா, நான் போய் படிக்கிறேன்”.

* * *

மகன் வாங்கி வந்த கோழிகளைத் தூக்கிப் பார்த்து திருப்தியடைந்த சங்கரி அம்மாள் கோழிகளை மூங்கில் கூடைக்குள் வைத்து மூடினாள்.  சுறா மீனை கல் உப்பு சேர்த்து பக்குவமாக மூடி வைத்துவிட்டு ஒரு குட்டிப் பகல் தூக்கம் போடச் சென்றாள்.

* * *

ஏங்க, சின்ராசு இன்னும் நாலு வருஷம் படிக்கணுமாமே.  அதுக்கு மேலயும் ரெண்டு வருஷம் மேல் படிப்பு இருக்காமே.  நம்ம கற்பகம் சொல்லிச்சு.  ஏங்க, தம்பி படிப்புக்கு ரொம்ப செலவாகுமோ? என்ன செய்யப் போறீங்க?

“என்ன செய்ய பவானி. நம்ம புள்ள சின்ன வயசுல இருந்தே இஞ்சினீயரு ஆகணும்ன்னு ஆசைப்பட்டான்.  புள்ள நல்ல மார்க வாங்கினா செலவு கம்மியாகுமாம்.  இல்லன்னா என்ன செய்ய. காடு, கழனி எதையாவது வித்துத்தான் சமாளிக்கணும்”.

“என்ன? காடு கழனி எதாவது விக்கணுமா?  ஏங்க, இதெல்லாம் தலைமுறை தலைமுறையா வந்த சொத்து. இதை பெருக்காட்டாலும் அழிக்காம இருக்கணும்ன்னு நீங்க தானங்க சொல்லுவீங்க.  அத்தை ஒத்துக்குவாங்களா? அதோட நமக்கு ஒரு பொண்ணும் இருக்குங்க.  அதுக்கும் ஒரு நல்லது, கெட்டது செய்யணுங்க. அதை மறந்துடாதீங்க.
மரம் வெச்சவன் தண்ணி ஊத்தாமலா போயிடுவான்.  இந்தா இந்த குத்தகை பணத்தை பத்திரமா பீரோவில எடுத்து வை.  சின்ராசு ஏதோ க்ளாஸ் சேரணும்ன்னு சொல்லியிருந்தானே.  அதுக்கு குடுத்துட்டு மீதி இருந்தா என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்”.

* * *

காலையில் வெள்ளி முளைக்கும் முன்பே எழுந்து குளித்து சமையலறைக்குள் நுழைந்தாள் சங்கரி அம்மாள்.  இரண்டு வருடங்களாக சமையலறை பக்கம் எட்டிக் கூடப் பார்க்காத மாமியார் கருக்கலிலேயே எழுந்து வந்ததைப் பார்த்த பவானிக்கு ஆச்சரியம்.  பேரப் பிள்ளைகளுக்கு செய்வதென்றால் இந்தப் பாட்டிகளுக்கு எங்கிருந்துதான் இப்படி சுறுசுறுப்பு வருமோ என்று மலைத்து நின்ற பவானியை அதை எடு, இதை எடு, மசாலா அரைத்துக்கொடு என்று பக்கத்திலேயே இருந்து வேலை வாங்கி, தன் கையாலேயே கோழிக் குழம்பும், சுறா புட்டும் தயார் செய்து, பேத்தியைக் கூப்பிட்டு ருசி பார்க்கச் சொல்லி, அவள் “சூப்பர் அப்பத்தா” என்று சொன்னதைக் கேட்டு மகிழ்ந்து, வாசல் திண்ணையில் அமர்ந்து பேரனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள் சங்கரி அம்மாள்.

ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை திண்ணையை விட்டு இறங்கி உள்ளே வந்து, “ஏம்மா பவானி, சின்ராசு எத்தனை மணிக்கு வாரானாம்என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.  பவானியும் சலிக்காமல், “உங்க மகன் காலையிலேயே கிளம்பி பஸ் ஸ்டாண்டுக்கு போயிட்டார் அத்தை.  இதோ வந்துடுவாங்கஎன்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“அப்பத்தா, அம்மா, அண்ணன் வந்தாச்சுஎன்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள் கற்பகம்.

“சின்ராசுஎன்று கூப்பிட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வாசலுக்கு வந்த சங்கரி அம்மாள் பேரன் தன்னுடன் நண்பர்கள் யாரையும் அழைத்து வராதது கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “என்ன கண்ணு, துரும்பா எளைச்சுட்டஎன்றாள்.

“இல்ல அப்பத்தா.  உங்க கண்ணுக்கு அப்படி தெரியுது.  நான் நல்லா எடைகூடித்தான் இருக்கேன் அப்பத்தா”.

அண்ணே, அண்ணே, அப்பத்தா ஒனக்காக காலையிலயே எழுந்து கோழிக்குழம்பும், சுறா புட்டும் செய்து வெச்சிருக்காங்க:

“அப்பத்தா காலையில ஹாஸ்டல்ல டிபன் கட்டிக்கொடுத்தாங்க.  சாப்பிட்டுட்டேன். மதியம் சாப்பிடறேன்.  அப்பா, எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.  அம்மா, அப்பத்தா நீங்களும் இருங்க

“இப்பதான தம்பி வந்திருக்க.  கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கப்பா.  அப்புறமா பேசிக்கலாம்”.

“பரவாயில்லப்பா.  இந்தாங்கப்பா

“ஏது தம்பி இவ்வளவு பணம்

“அப்பா, எங்க ஹாஸ்டல்ல ஒரு தோட்டமும், ஒரு கோழிப் பண்ணையும் இருக்கு.  நாலு மாடுங்க கூட இருக்குப்பா.  இதையெல்லாம் பராமரிக்கற பொறுப்பை எனக்கும், என் கூட படிச்ச இன்னும் நாலு பேருக்கும் குடுத்திருந்தாங்க.   தோட்டத்துல நல்ல விளைச்சல்.  ஹாஸ்டலுக்கு உபயோகப்படுத்தினது போக மீதி கறிகாயெல்லாம் கூட்டுறவு சங்கத்துக்கு வித்துடுவாங்க.  அதுல கிடைச்ச லாபத்துல என்னோட பங்கு தாம்பா இது. 
அப்பா, இன்னும் ஒரு விஷயம்.  நான் இஞ்சினீயரிங் படிக்கப் போறதில்ல.  கோயம்புத்தூர்ல இருக்கற விவசாயக் கல்லூரியில சேர்ந்து படிக்கப் போறேன்.  அதுலயே மேல் படிப்பும் படிச்சு நம்ப நிலத்துல புதிய முறையில விவசாயம் செய்யப் போறேன்.  அதுக்கு எனக்கு உங்களோட அனுமதி வேணும்ப்பா

“.......................................

“அப்பா, என்னப்பா ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க”.

“ஒண்ணும் இல்ல தம்பி.  நீ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாயிட்டேன். உனக்கு உண்மையில இஞ்சினீயரிங் படிக்க ஆசை இருந்தா தாராளமா படிப்பா.  அப்பா கிட்ட அவ்வளவு பணம் இருக்குமான்னு சந்தேகத்துலதான இஞ்சினீயரிங் வேண்டாம்ன்னு சொல்லற.  அதெல்லாம் பத்தி கவலைப்படாம நீ படி. நான் உன்னை எப்படியும் படிக்க வெக்கறேன்.

அப்படி எல்லாம் இல்லப்பா. உண்மையாவே எனக்கு இஞ்சினீயரிங் படிக்க இஷ்டம் இல்லப்பா. இந்த ரெண்டு வருஷத்துல ஹாஸ்டல் தோட்டத்துல வேலை செய்ததுல எனக்கு விவசாயம்தாம்பா பிடிச்சிருக்கு.

“உன் இஷ்டம் எதுவோ அப்படியே செய்யப்பா.  இருந்தாலும்  பின்னாடி இஞ்சினீயரிங் படிக்கலையேன்னு நீ வருத்தப்படக்கூடாதுப்பா.

“கண்டிப்பா வருத்தப்பட மாட்டேன் அப்பா.  இது நானே எடுத்த முடிவு தாம்பா”.

அப்பத்தா. நான் ஒண்ணு சொன்னா நீங்க கோவிக்கக்கூடாது.  

பண்ணையில இருக்கற கோழி, மாடெல்லாம் எங்க 5 பேரைத் தவிர யார் வந்து தீனி போட்டாலும் சாப்பிடாதுங்க.   ஒரு நாள் எங்கள்ள யாராவது இல்லாட்டாலும் ஏங்கிப் போயிடுங்க.  இப்ப கூட எங்க ஜூனியர்ஸ் 5 பேரை 2, 3 மாசமா அதுங்க கூட பழக வெச்சுட்டுதான் வந்திருக்கோம்.  இந்த கோழி, மாடுங்களோட ரெண்டு வருஷம் பழகினதுல எனக்கு இதுங்கள கொன்னு சாப்பிட விருப்பம் இல்ல அப்பத்தா.  தயவு செய்து என்ன கட்டாயப் படுத்தாதீங்க

தான் சமைத்து வைத்ததை சாப்பிடாவிட்டாலும் பேரன் தன் அருகில்தான் இருப்பான்.  படித்து முடித்ததும் வெளிநாடெல்லாம் போக மாட்டான் என்ற மகிழ்ச்சியில் சங்கரி அம்மாள் வேகமாக தலையாட்டினாள்.

2 comments:

  1. ”மாற்றம்”
    IN AND OUT CHENNAI SEPTEMBER 16 - 30, 2012 இதழில் வெளிவந்த என் சிறுகதை ”மாற்றம்” இதோ உங்களுக்காக.//

    இதழில் வெளிவந்தது பாராட்டுக்குரியது.

    இருப்பினும் உங்கள் எழுத்துக்களில் ஏற்பட்டுள்ள, தேவையில்லாத இந்த திடீர் ”மாற்றம்” எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      //இருப்பினும் உங்கள் எழுத்துக்களில் ஏற்பட்டுள்ள, தேவையில்லாத இந்த திடீர் ”மாற்றம்” எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.
      புரியவில்லை.//

      நீங்கள் சுனாமி மாதிரி பின்னூட்டம் போட்டு விடுகிறீர்கள். என்னால் குழாயில் வரும் சொட்டுத்தண்ணீர் போல கூட பதிவும் போட முடியல. பின்னூட்டமும் போட முடியல. கொஞ்சம் நேரம் கொடுங்க. இப்ப ஆத்துக்காரர் கார் துடைக்க கீழே.போய் இருக்கார். 2 மணிக்கு வெளியே கிளம்பணும். வந்தா டோஸ்தான் விழும். அதனால அப்புறம் வரேன்.
      ஜெயந்தி ரமணி

      Delete