Tuesday 18 September 2012

”ஆதலினால் தோழியரே”





www.arusuvai.com     இணைய தளத்தில் வெளிவந்த என் சிறுகதை.  என் மகனுக்குப் பெண் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மற்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், கொஞ்சம் கற்பனை எல்லாம் கலந்ததுதான் இந்தக் கதை.  

”ஆதலினால் தோழியரே”


 முகம் தெரியாத தோழியருக்கு அறிமுகம் இல்லாத தோழியின் கடிதம்.
Short story
ஓ! யார் இவள், முன்பின் தெரியாத எனக்கு ஏன் கடிதம் எழுதியிருக்கிறாள் என்றுதானே யோசிக்கிறீர்கள். உங்களுக்கு நான் அறிமுகமாகி இருக்காவிட்டாலும் உங்கள் குடும்பத்திற்கு ஒரு 10, 12 வருடங்களுக்கு முன்பே அறிமுகமாகி இருப்பேன். ‘மணமகன் தேவை’ விளம்பரம் மூலமாக. உங்கள் மாமா, சித்தப்பா, ஒன்று விட்ட அண்ணா என்று யாருக்காவது வரன் தேடிக்கொண்டிருந்தபோது உங்கள் கண்களில் நான் பட்டிருக்கலாம்.
ம். போன ஞாயிற்றுக்கிழமை கூட ‘இந்து’ நாளிதழில் விளம்பரம் வந்திருந்ததே. அதற்கென்ன என்கிறீர்களா?
12 வருடங்களுக்கு முன்பு வந்த விளம்பரம்
"24 வயது, சிவந்த நிறமுடைய, அழகிய, பி.ஈ படித்த இளம்பெண்ணிற்கு, பி.ஈ / எம்.எஸ் / எம்.பி.ஏ படித்து, வெளிநாட்டில் வேலை பார்க்கும் மணமகன் தேவை“
இது சென்ற ஞாயிற்றுக்கிழமை வந்த விளம்பரம்..
”36 வயது, பி.ஈ படித்து, நல்ல வேலையில் உள்ள, சொந்த வீடு, கார் உள்ள பெண்ணிற்கு வரன் தேவை. குழந்தை இல்லாத, மனைவியை இழந்தவராக இருந்தாலும் பரவாயில்லை”
காலம் எப்படி மாறி விட்டது பார்த்தீர்களா? சரி. இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாள் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இந்தக் கடிதத்தை படிக்கப் படிக்கப் புரியும்.
நான் அப்பா, அம்மாவிற்கு ஒரே பெண், அதுவும் அப்பா செல்லம். எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தபோது, பாரின் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று, வந்த வரன்கள் அனைத்தையும் அது சரியில்லை, இது சரியில்லை என்று ஆயிரம் குற்றம் சொல்லி ஒதுக்கியவள் நான்.
அம்மாதான் அடித்துக்கொள்வாள். உன் ஜாதகத்துக்கு பாரின் போகும் வாய்ப்பே இல்லையாம். அதோட உனக்கு ரெண்டில் சனி. கண்டிப்பா உனக்கு லேட் மாரேஜ்தான் என்றாள். அப்பாவுடன் சேர்ந்து அம்மாவுக்கு ‘ஜோதிட ரத்னா’ என்று பட்டம் கொடுத்து கைதட்டி சிரித்தேன். இளமைத்திமிரும், பணத்திமிரும் சேர்ந்து, வந்த நல்ல வரன்களையெல்லாம் தட்டிக்கழித்தேன். ஒவ்வொரு வரன் பார்க்கும் போதும் அம்மா ஐந்துக்கு மூன்று பழுதில்லைன்னு ஒத்துக்கோடி என்பாள். அம்மாவுக்கு இப்போது ‘பழமொழி திலகம்’ பட்டம் கொடுத்தேன். அப்பா வேறு என் கட்சி என்பதால் அம்மாவின் பேச்சு காதில் நுழைந்ததில்லை.
அம்மா, “பக்கத்துத் தெரு ஜானகி மாமியை இருபது வருஷமா பாத்துண்டிருக்கோம். மாமி பையன் பாலா ஜாதகம் உனக்கு பொருந்தியிருக்கு” ன்னு சொன்னதும், “நான் பி.ஈ, அவன் பி.காம். அவனை எப்படி கல்யாணம் பண்ணிக்கறது. என்னைக் கேக்காம ஏன் என்னோட ஜாதகத்தை அவங்களுக்குக் கொடுத்தே” ன்னு சண்டை போட்டேன். அம்மாவும் விடாம “அவன் எம்.பி.ஏ படிச்சிருக்காண்டி. நல்ல வேலை. மாமியும் நல்ல மாதிரி. குடும்பமே நல்ல குடும்பம். நீ போய் அங்க சம்பாதிச்சு குடுக்க வேண்டாம். பாலா சொந்தமா கார் கூட வாங்கிட்டான்” என்றாள்.
”எம்.பி.ஏன்னாலும் அதுக்கு முன்னாடி பிகாம் தானே படிச்சிருக்கான். அம்மா நான் உன்னோட பாஷையிலேயே தெளிவா சொல்லிடறேன். குண்டுச்சட்டில குதிரை ஓட்ட எனக்கு இஷ்டமில்ல. எனக்கு பி.ஈ. படிச்ச பாரின் மாப்பிள்ளைதான் வேணும்”னு அழுத்தம் திருத்தமா சொன்னேன்.
அம்மா மட்டும் பாலாவுக்குக் கல்யாணம் ஆகற வரைக்கும் நல்ல வரனை கோட்டை விட்டுட்டோமேன்னு புலம்பிண்டிருந்தா. இப்ப பாலாவோட பையனும், பொண்ணும் பள்ளிக்கூடம்கூட போக ஆரம்பிச்சுட்டா.
வயது 29 ஐ நெருங்கியபோது அப்பாவுக்கும், எனக்கும் யதார்த்தம் கொஞ்ச, கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. அதற்குள் அநேகமாக ஓரிருவரைத் தவிர என் தோழிகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தவறு செய்துவிட்டோமோ என்று உள்ளுக்குள்ளேயே மருக ஆரம்பித்துவிட்டார் அப்பா. நானும் அம்மா சொன்னதைக் கேட்டிருக்கலாமோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆச்சு 2 வருஷத்துக்கு முன்னாடி இதே கவலையில் ஸ்ட்ரோக் வந்து ஒரு வருஷம் படுத்த படுக்கையாய் இருந்து அப்பாவும் போய் சேர்ந்துட்டார். அம்மாதான் இன்னும் விடாமல் கோவில் கோவிலாக சுற்றிக்கொண்டிருக்கிறாள். இன்று ஞாயிற்றுக் கிழமை. இதோ இன்னும் அரை மணி நேரத்தில் ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றக் கிளம்பிவிடுவாள். அம்மாவின் பையில் என் ஜாதக நகல் எப்போதும் இருக்கும். முன்பாக இருந்தால் ‘என்ன சுண்டல் போல் விநியோக்கிக்கவா?’ என்று கேட்டிருப்பேன். ஆனா இப்ப அம்மாவைப் பார்க்கும் போது பாவமா இருக்கு. அவளுக்காக என் கட்டளைகளை எல்லாம் தளர்த்திக்கொண்டேன். என்ன பிரயோசனம். சின்ன வயதில் வந்த வரன்களை நான் தட்டிக்கழித்தேன். இன்று என்னைத் தட்டிக்கழிக்கிறார்கள்.
ஆதலினால் தோழியரே, என்னைப்போல் எங்கிருந்தோ ஒரு ராஜகுமாரன் வருவான் என்று கோட்டை கட்டாமல், தேவையில்லாத கட்டளைகளைப் போட்டு உங்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்ளாமல், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு தோழி.

2 comments:

  1. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் நல்லாவே எழுதியிருக்கீங்கோ.

    எவ்வளவோ பெண்கள் இது போலவே பல்வேறு காரணங்களைச் சொல்லி நல்ல வரன்களைத் தட்டிக் கழித்து, நாளடைவில் முதிர்க்கன்னியானதும் உண்டு தான்.

    ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறி விட்டது. நல்ல பையன்களாகவே இருப்பினும் நல்ல பெண்ணாக சீக்கரம் அமையவில்லையே என பிள்ளையைப் பெற்றவர்கள் புலம்பத்தொடங்கி விட்டனர்.

    அதுபோல வெளிநாட்டு மாப்பிள்ளை என்ற மோகமெல்லாம் இப்போது மிகவும் குறைந்து விட்டது.

    Professionally Qualified + 6 Digit Monthly Salary என்ற ஒரே கண்டிஷன் தான், பெண் வீட்டினர் இப்போது Demand செய்வது.

    பகிர்வுக்கு நன்றிகள். பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete