அறுசுவை.காமில் வந்த என் சிறுகதை
http://www.arusuvai.com/tamil/node/16490
வசந்தம் - ஜெ மாமி
“அப்பா! உங்களுக்குதான் இந்தாங்க பேசுங்க” என்று தொலைபேசியை தந்தையிடம் கொடுத்து விட்டுச் சென்றான் ராகவன்.
“ஹலோ, சேதுராமன் பேசறேன்”
“டேய் சேதுராமா,. நாந்தாண்டா பாலன் பேசறேன். கால்பந்து குழுத் தலைவனா இருந்தேனே. உன்னோட விளம்பரத்தைப் பார்த்துட்டு பேசறேன்”
“சொல்லு, சொல்லு பாலா, எப்படி இருக்க, எங்க இருக்க, உனக்கு எத்தனை
குழந்தைகள், பேரன் பேத்திகள். என்ன செய்யறாங்க? ...................”
***
ஒரு வாரமாக சேதுராமன் வீட்டிலே இதே போல் ஓயாத தொலைபேசி அழைப்புகள். விசாரிப்புகள்.
அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருந்த சேதுராமனுக்கு திடீரென்று ஒரு ஆசை
வந்தது. அவரது மகன்கள் இருவரும் ஏற்பாடு செய்திருந்தபடி திருக்கடையூரில்
தன்னுடைய அறுபதாம் கல்யாணம் முடிந்த கையோடு சென்னையில் தன் வீட்டில்
தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களை அழைத்து ஒரு விருந்து
கொடுக்கவேண்டும் என்று. தன்னுடைய இரண்டு மகன்களையும் கலந்தாலோசித்துவிட்டு
செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்திருந்தார். அவரும் அவர் மனைவி கமலாவும்
ஒரே கல்லூரியில் வேறு படித்திருந்தனர், இரண்டு வருட இடைவெளியில்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு தங்களுடன் கல்லூரியில் படித்தவர்களைச்
சந்திக்க ஆசைப்பட்டு விளம்பரம் கொடுத்திருந்தார். அதன் எதிரொலிதான் இந்தத்
தொலைபேசி அழைப்புகள்.
சேதுராமனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. விளம்பரம் வந்த ஒரே வாரத்தில் 15,
20 பேர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு விட்டனர். அனைவரிடமும் பேசிப்பேசி
பிறகு கணவனும், மனைவியும் தொலை பேசியில் பேசியவற்றை அசை
போட்டுக்கொண்டிருந்தனர்.
அத்துடன் தொலைபேசியில் பேசியதுடன் பாலன் நேரிலும் அவர்கள் வீட்டிற்கு
வந்து பேசி விட்டுச் சென்றதும் சேதுராமனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
***
சேதுராமன் மத்திய அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியில் சேர்ந்து 35
ஆண்டுகள் பணி புரிந்து கணக்கு அதிகாரியாக ஓய்வு பெற்றிருந்தார். திருமணம்
ஆன முதல் வருடத்திலேயே இரட்டைக் குழந்தைகளாக ராகவனும், ரகுராமனும் பிறந்து
விட்டதால் கமலமும் வேலைக்குச் செல்லவில்லை. கூட்டுக்குடும்பமாக
வாழ்ந்ததாலும், தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பும்
இருந்ததாலும் மகன்களை பட்டப்படிப்பு மட்டுமே படிக்க வைக்க முடிந்தது
சேதுராமனால்.
கேட்டரிங் துறை துளிர் விட ஆரம்பித்த நேரத்தில் ராகவன், ரகுராமன்
இருவரும் சேர்ந்து வீட்டில் சிறிய அளவில் பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா
ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் பாட்டியின் பெயரில் “செல்லம்
கேட்டரிங்” என்று ஆரம்பித்து 10 வருடங்களாக கேட்டரிங் துறையில் கொடி
கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். பல பெரிய மனிதர்களின், முக்கியப்
புள்ளிகளின் வீட்டு விழாக்களில் இவர்களது நளபாகம்தான்.
சமையல் துறை என்றாலும் அவர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. நகரின் மையப்
பகுதியில் ஒரு பெரிய பங்களா, வீட்டு உபயோகத்திற்குத் தனி கார்,
கேட்டரிங்கிற்காக ஒரு மினி வேன், ஒரு ஜீப் என்று எல்லாவற்றையும் சொந்தமாக
வாங்கும் அளவிற்கு உயர்ந்திருந்தார்கள் குறுகிய காலத்திலேயே. ‘தரம்,
நிரந்தரம்’ என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால் மேன் மேலும் சிறப்பாக
வளர்ந்து கொண்டே போனார்கள் பிள்ளைகள் இருவரும். அவர்கள் மனைவியர்
இருவரும் ஒன்று விட்ட அக்கா தங்கைகளாகி விட்டதால் அந்த விதத்திலும்
குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை.
***
இரவு தூங்கச் செல்லும் முன் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த
மகன்களிடம் சேதுராமன், “ராகவா, ரகுராமா, உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான்
கொஞ்சம் பேசணும்” என்றார்.
“என்னப்பா, திருக்கடையூர்ல, சென்னையில ரெண்டு இடத்துலயும் எல்லா
ஏற்பாடுகளும் செஞ்சுட்டோம்ப்பா. நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம்”
என்றான் ராகவன்.
“அதில்லப்பா” என்றார் சேதுராமன்.
“ஊருக்குப்போயிருக்கற உங்க மாட்டுப்பொண்ணுங்க, குழந்தைங்க எல்லாரும் இந்த வாரக் கடைசிலே வந்துடறாங்கப்பா” என்றான் ரகுராமன்.
”அதெல்லாம் இல்லப்பா. நீங்க ரெண்டும் பேரும் கொஞ்சம் இப்படி வந்து உக்காருங்க” என்றார்.
“என்னப்பா, பீடிகை பலமா இருக்கு’”
கமலாவும் கணவர் என்ன பேசப்போகிறார் என்று முகத்தில் கேள்விக்குறியுடன்
அமர்ந்திருந்தாள். தன்னிடம் எதுவும் கூறவில்லையே என்று யோசித்தாள்.
அப்பாவின் முகத்தில் தெரிந்த கவலை ரேகைகள் பிள்ளைகளுக்கு அச்சத்தைக்
கொடுத்தன.
சேதுராமன் இரண்டு மகன்களையும் இருபுறமும் அமர்த்தி வைத்துக்கொண்டு,
“ரகு, ராகவா நான் உங்க ரெண்டு பேருக்கும் துரோகம் செஞ்சுட்டேனோன்னு
நினைக்கிறேன்.” என்றார்
“என்னப்பா என்ன ஆச்சு உங்களுக்கு. திடீர்ன்னு ஏன் இப்டி சொல்றேள்” என்றான் ரகு.
“அது வந்து, அனேகமா எங்ககூட படிச்சவா எல்லாரோட குழந்தைகளும்
வெளிநாட்டில வேலை செய்யறா. நான் உங்களை வெளியில எங்கயும் அனுப்பாம இங்கயே
இருக்க சொன்னது தப்போன்னு தோணறது. இன்னும் நல்லா படிக்க
வெச்சிருக்கலாமோன்னும் தோணறது. ” என்றார்.
“அட போங்கப்பா, இவ்வளவுதானா? நாங்க என்னமோ ஏதோன்னு பயந்தே போயிட்டோம்.” என்று இருவரும் ஒன்றாகச் சொன்னார்கள்.
பெரியவன் ராகவன், “இதோ பாருங்கப்பா, எங்களுக்கு என்ன குறைச்சல். நாங்க
இன்னிக்கு இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கோம்ன்னா அதுக்கு நீங்கதான்
காரணம். வீட்டுப் பொறுப்பை நீங்களும் அம்மாவும் முழுக்க பார்த்துக்கறதால
நாங்க நிம்மதியா எங்க தொழில கவனிக்க முடியறது. சிறப்பா செயல்படவும்
முடியறது.
அதோட தாத்தாவும், பாட்டியும் எங்களுக்கு சின்ன வயசில இருந்தே நம்ம
நாட்டைப் பத்தி சொல்லி சொல்லி வளர்த்ததால எங்களுக்கு வெளிநாட்டுக்குப் போய்
வேலை பார்க்க இஷ்டமே இல்லை. வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிச்சா தானா?
பணம் மட்டுமே வாழ்க்கையா அப்பா? அப்படியே பார்த்தாலும் நமக்கு இங்க என்ன
குறைச்சல். உங்க பராமரிப்புல எங்க குழந்தைகளும் எங்கள மாதிரி நல்லபடி
வளர்ந்துண்டிருக்கா. இந்தக் காலத்தில எந்தக் குழந்தைகளுக்கு தாத்தா,
பாட்டி, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டியோட இருக்கற பாக்கியம்
கிடைச்சிருக்கு.
நீங்க தானே அப்பா சொல்லிக்கொடுத்தீங்க. செய்யும் தொழிலே தெய்வம்ன்னு
அதையும் எங்க செஞ்சா என்னப்பா? வேண்டாத விஷயத்தையெல்லாம் மனசில போட்டு
குழப்பிக்காதீங்க. தினமும் தொலைக்காட்சியிலயும், செய்தித் தாள்களிலேயும்
வெளிநாடு போனவங்களைப் பத்தியும், அவங்க படற கஷ்டங்களைப் பத்தியும் எவ்வளவோ
பார்க்கறோம். படிக்கறோம். இன்னிக்கு நாங்க நிம்மதியா இருக்கோம்.
கிடைச்சதைக் கொண்டு திருப்தி படணும், இப்படி எவ்வளவு நல்ல விஷயங்களை
நீங்கதானே எங்களுக்கு சொல்லி கொடுத்தீங்க. அதுவும் எங்களுக்கு எல்லாமே
சிறந்ததாதானே அப்பா கிடைச்சிருக்கு. நிம்மதியா படுத்து தூங்குங்க அப்பா”
என்று சொல்லிவிட்டு அருகில் வந்து அப்பாவை கட்டிப் பிடித்து விட்டுச்
சென்றான். இளையவன் ரகுராமன் வேகமாக வந்து தன் பங்குக்கு அம்மாவைக் கட்டிப்
பிடித்து முத்தம் கொடுத்து விட்டுச் சென்றான். ‘பார் நம் செல்வங்களை”
என்பது போல் மனைவியைப் பார்த்து ஒரு அர்த்தமுள்ள பார்வையை வீசிவிட்டு
கண்ணில் துளித்த ஆனந்தக் கண்ணீரை மேல் துண்டால் துடைத்துக் கொண்டார்
சேதுராமன். இருந்தாலும் பிள்ளைகளின் பதிலால் அவர் முழுத் திருப்தி
அடையவில்லையோ என்று தோன்றியது கமலாவுக்கு.
***
திருக்கடையூரில் உறவினர் புடை சூழ அறுபதாம் கல்யாணம் சிறப்பாக நடைபெற்று முடிந்து சென்னையில் விழா ஏற்பாடு செய்திருந்த நாள்
விசாலமான மொட்டை மாடியில் அடைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள்.
வந்திருப்பவர்கள் அனைவரும் சேதுராமன் தம்பதியினரைச் சுற்றி அமர்ந்து
பேசுவதற்கு ஏதுவாக அழகாக ஏற்பாடு செய்திருந்தனர் பிள்ளைகள் இருவரும்.
தம்பதியாகவும், தனியாகவும் வந்திருந்த அனைவரின் முகத்திலும் ஏதோ
காணாததைக் கண்டு விட்டதைப்போல ஒரு மகிழ்ச்சி. அங்கங்கு உட்கார்ந்து
பேசிப் பேசித் தீரவில்லை அவர்களுக்கு. மலரும் நினைவுகளுக்குப் போய்
விட்டனர் அனைவரும்.
ரகுவும், ராகவனும் ஏற்பாடு செய்திருந்த அருமையான விருந்தை ஒரு பிடி
பிடித்துவிட்டுவந்து அமர்ந்து அனைவரும் மறுபடி பேசத் தொடங்கி விட்டனர்.
ஒலி பெருக்கி இல்லாமலே கணீரென்ற குரலில் பேசத் தொடங்கினார் பாலன்.
“நான் உங்க எல்லாரோடையும் சில விஷயங்களை பகிர்ந்துக்கணும்ன்னு ஆசைப்
படறேன்” என்று ஆரம்பித்ததும் அனைவரும் பாலனைப் பார்த்து அமர்ந்து அவர்
பேச்சைக் கேட்கத் தொடங்கினர்.
“இந்த மாதிரி ஒரு விழாவை ஏற்பாடு செய்ததுக்கு முதல்ல சேதுராமனுக்கு நம்ப
எல்லார் சார்பிலயும் நன்றியை சமர்ப்பிச்சுக்கறேன். இன்றைய கால
கட்டத்துல, பெத்தவங்களை முதியோர் இல்லத்தில சேர்க்கற இந்த காலத்தில, நம்ப
நாட்டுக்கே உரிய கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்த இந்த காலத்தில நம்ப
சேதுராமனோட குடும்பத்தைப் பார்த்து நான் ரொம்ப பெருமை படறேன். இன்றைய
நாளிலிருந்து இந்தக் குடும்பம் ஷேமமா இருக்கணும்ங்கறது என்னுடைய தினசரி
பிரார்த்தனையில முதலிடத்தில இருக்கும்.
இங்க வந்திருக்கறவங்கள்ள முக்காவாசி பேரோட குழந்தைகள் வெளிநாட்டில
இருக்காங்க. என்னுடைய குழந்தைகளும்தான். ஏன் இன்னிக்கு இந்தியாவிலேயே
வயதான தம்பதிகள் நிறைய பேர் குழந்தைகள் வெளிநாட்டில இருக்கறதால ‘நீயும்
நானுமடி எதிரும் புதிருமடி’ன்னு இருக்காங்க. இந்த இடத்தில
சொல்லக்கூடாதுதான். இருந்தாலும் சொல்லறேன். என் மனைவி இறந்தபோது கூட என்
மகனும், மகளும் வர முடியல. நான் தான் என் மனைவிக்குக் கொள்ளி வைத்தேன்.
ஆனா நாம எல்லாரும் ரொம்ப பெருமையா என் மகன் அமெரிக்கால இருக்கான், என் மகள்
ஆஸ்திரேலியால இருக்கா, லண்டன்ல இருக்கா அங்க இருக்கா இங்க இருக்கான்னு
பெருமையா சொல்லிக்கறோம். ஆனா உண்மையான பெருமை எது?
நம்ப வாழ்க்கையில எல்லாம் ரெண்டு வருஷத்துக்கோ, மூணு வருஷத்துக்கோ ஒரு
தடவைதான் வசந்தம் வரும், நம்ப பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் நம்ப
வீட்டுக்கு வரும்போது. சில பேருக்கு அதுவும் இல்லை. ஆனா நம்ப சேதுராமன்
வாழ்க்கையில தினமும் வசந்தம் வீசறது. இந்த வசந்தம் அவன் வாழ்க்கையில
என்றுமே தென்றலா வீசணும்ன்னு வாழ்த்தறேன்.”ன்னு சொல்லிட்டு சேதுராமனை வந்து
கட்டி அணைத்துக் கொண்டார்.
ரகுவும், ராகவனும், பாலனின் பேச்சைக்கேட்டு அப்பாவின் முகம் ஆயிரம்
வாட்ஸ் பல்ப் எறிவதைப் போல் பிரகாசமானதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு
விட்டனர்.
***
நல்லா இருக்குங்க... நன்றி...
ReplyDeleteநன்றிக்கு நன்றி தனபாலன் சார்
Deleteநாடும் நடப்பும் நீங்கள் சொல்லியது போல இருப்பது மெய்தான்.
ReplyDeleteஇருந்தாலும்,
தன்னை வயதான காலத்திலே பார்த்துக்கொள்வதற்கு ஒருவர்
வேண்டும், அதுவும் தமது மகன்,அல்லது மகள் இருக்கவேண்டும்
என்று நினைப்பது அவர்களது எதிர்கால நலனுக்கு உகந்ததாக
இருக்குமா எனத்தெரியவில்லை.
இந்தியாவிலே தகுதிக்கேற்ற வேலையோ ஊதியமோ கிடைக்காத நேரத்தில்
பெற்ற குழந்தைகள் வெளி நாடு செல்வது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.
இன்றைய கால கட்டத்தில் அமெரிக்கா விலிருந்து இந்தியாவுக்கு 20 மணி நேரத்திலே
வர முடியும். ஆனால், விமான தளமில்லாத வட இந்தியாவின் ஒரு ஊரில் இருந்து , சென்னை வருவதற்கு
ஒரு நாளைக்கு மேல் ஆகிறது.
இது ஒரு புறம் இருக்கட்டும். நம்ம இந்த ப்ளானட்டை வெகேட் பண்ணும்போது, கூட பையன் இருப்பானா
மகள் இருப்பாளா என்பதெல்லாம் ஒருவகை அஃஞானம் என்றே தோன்றுகிறது. பூர்வ வினைப்படி, ஒருவன்
கடைசி காலத்தில் பக்கத்தில் மகன் இருப்பானா இருக்க இயலுமா என்பதெல்லாம் அவர்களது வேலையைப்
பொருத்து இல்லை.
பெற்றவரின் வினைப்பயனைப்பொருத்தது என்றே நினைக்கிறேன்.
ஹாவிங் செட் தட்,
உங்கள் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. அதை சொல்லும் பாணியும் திறனுடையதாகத்திகழ்கிறது.
ஆசிகள். வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
http://pureaanmeekam.blogspot.com
சுப்பு தாத்தா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
ReplyDeleteஉங்கள் ஆசிக்கும், வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
//பெற்றவரின் வினைப்பயனைப்பொருத்தது என்றே நினைக்கிறேன்.//
உண்மைதான்.
மிக்க நன்றி
கதையும் கருவும் மிக அருமைங்க! இந்த மாதிரி பிள்ளைகள் எத்தனை அப்பா அம்மாவுக்கு இன்னைக்குக் கிடைக்குது? ஹும், கெடச்சா அவங்க பாக்கியசாலி!
ReplyDeleteநன்றி சுடர்விழி.
DeleteLovely story. Thanks for sharing with us
ReplyDeleteநன்றி அப்பாவி தங்கமணி.
Deleteசேதுராமன் வாழ்க்கையில தினமும் வசந்தம் வீசறது. இந்த வசந்தம் அவன் வாழ்க்கையில என்றுமே தென்றலா வீசணும்ன்னு வாழ்த்தறேன்.”
ReplyDeleteதென்றலாய் இதமான கதை ..!
//இந்த இடத்தில சொல்லக்கூடாதுதான். இருந்தாலும் சொல்லறேன். என் மனைவி இறந்தபோது கூட என் மகனும், மகளும் வர முடியல. நான் தான் என் மனைவிக்குக் கொள்ளி வைத்தேன். ஆனா நாம எல்லாரும் ரொம்ப பெருமையா என் மகன் அமெரிக்கால இருக்கான், என் மகள் ஆஸ்திரேலியால இருக்கா, லண்டன்ல இருக்கா அங்க இருக்கா இங்க இருக்கான்னு பெருமையா சொல்லிக்கறோம். ஆனா உண்மையான பெருமை எது? //
ReplyDeleteஇன்றைய நாட்டு நடப்பையும் ஒவ்வொரு வீட்டோட நடப்பையும் புட்டுப்புட்டுச் சொல்லிட்டீங்க.
//ஆனா நம்ப சேதுராமன் வாழ்க்கையில தினமும் வசந்தம் வீசறது. இந்த வசந்தம் அவன் வாழ்க்கையில என்றுமே தென்றலா வீசணும்ன்னு வாழ்த்தறேன்//
சூப்பரான வஸந்த வரிகள்.
>>>>>>>>>
//அதோட தாத்தாவும், பாட்டியும் எங்களுக்கு சின்ன வயசில இருந்தே நம்ம நாட்டைப் பத்தி சொல்லி சொல்லி வளர்த்ததால எங்களுக்கு வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்க்க இஷ்டமே இல்லை. வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிச்சா தானா? பணம் மட்டுமே வாழ்க்கையா அப்பா? அப்படியே பார்த்தாலும் நமக்கு இங்க என்ன குறைச்சல். உங்க பராமரிப்புல எங்க குழந்தைகளும் எங்கள மாதிரி நல்லபடி வளர்ந்துண்டிருக்கா. //
ReplyDeleteஅருமை அருமை.
இந்தக் காலத்தில எந்தக் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டியோட இருக்கற பாக்கியம் கிடைச்சிருக்கு.//
அற்புதமான வரிகள்.
>>>>>>>>
// அறுசுவை.காமில் வந்த என் சிறுகதை
ReplyDeletehttp://www.arusuvai.com/tamil/node/16490
வசந்தம் - ஜெ மாமி //
ஜெ மாமியின் வசந்தம் .... அறுசுவை காமில் ... காண்பிக்கப்பட்டுள்ளதில் .... ஜெ மாமிக்கு ஜே ஜே
என்று நான் சொல்லலாமா?
நன்றாக எழுதியுள்ளீர்கள். சற்றே சுருக்கி மெருகூட்டியிருக்கலாமோ என எனக்குத் தோன்றுகிறது. எனினும் நல்லா இருக்கு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இன்னும் உங்களின் மொத்தப்பதிவுகளில் ஒரு 15 மட்டும் நான் பார்க்க வேண்டியது உள்ளது. அடுத்த வாரத்திற்குள் படித்து முடித்து கருத்தும் கூறிடுவேன்.
பிரியமுள்ள VGK
மிகவும் அருமையாக, கோர்வையாக... எதார்த்தமா கதை சொல்லியமைக்கு மிக்க நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆயிரம் தான் இருந்தாலும்..வயதான காலத்தில் மகனோ, மகளோ அருகாமையில் இருக்கும் சுகம் இருக்கே அது ஒரு வகையான சந்தோசம் தான்.....
அன்புடன் இளங்கோவன்