Thursday 29 November 2012

ஈழம் மலரும்

 IN AND OUT CHENNAI NOVEMBER 16 - 30 இதழில் வெளி வந்த என் கவிதை ‘ஈழம் மலரும்.  மீண்டும் இங்கு பதிவு செய்திருக்கிறேன்,  உங்களுக்காக.
ஈழம் மலரும்

மாலையிட்ட மணாளா உன்னை
மறு திங்கள் இழந்திட்டேன்
நெஞ்சில் பாய்ந்த குண்டு 
உன் உயிரைப் பறித்தாலும்
உதட்டுச் சிரிப்பைத்தான்
பறிக்க முடியவில்லையே.
உயிர் பிரியும் நேரத்தில்
என்னதான் நினைத்தாயோ?
என்னைத் தான் நினைத்தாயோ? நம்
மண்ணைத்தான் நினைத்தாயோ?

மங்கை என் முகம் உன் மனதில் பதியும் முன்னே
மண்ணைவிட்டு விண்ணை அடைய
என்னதான் தவறு செய்தாய்?
பொய், புனை சுருட்டு, கொலை, களவு
இல்லை, இல்லை, இல்லவே இல்லை
செய்ததொரு குற்றம் என்ன?
செய்த ஒரே ஒரு குற்றம்தான் என்ன?
மண்ணில் பிறந்ததுதானோ – இந்த
மண்ணில் பிறந்ததுதானோ?

நீ இல்லா உலகை விட்டுச் செல்ல
எனக்கு உரிமையும் இல்லை,
மனமும் இல்லை.
நினைவை சுமந்து நிற்கிறேன் – உன்
நினைவை சுமந்து நிற்கிறேன்.

மறு திங்கள் புரிந்தது
உன் நினைவை மட்டும் சுமக்கவில்லை
என் மணி வயிற்றில் நீ விட்டுச் சென்ற
கருவையும் சுமக்கிறேன் என்று
மகனோ மகளோ எதாக இருந்தாலும்
நம் மண்ணிற்குக் கிடைக்கப் போவது
ஒரு போராளி

ஐயிரண்டு திங்கள் சுமந்து
பெற்றெடுத்த உன் அருமை மகள்,
அன்பு மகள், ஆசை மகள், அழகு மகள்
கை வீசி, தளிர் நடை நடந்து,
மழலை மொழி பேசி,
பூப்பெய்தி உன் வழியில்
களம் சென்று நலம் துறந்து
பகைவர் உயிர் பறித்து
தன்னுயிர் நீத்தாள்.
உன்னுடன் இணைந்தாள்.

அன்று பத்துத் தலை அரக்கனை
அழிக்க ஒரு இராமன் வந்தான்

இன்று ஒத்தைத் தலை அரக்கர்களை
அழிக்க யார் வருவார்?

சுற்றமும், நட்பும் சூழ
குஞ்சும், குளுவானும்,
முதுமக்களும்
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கிறோம்,
செத்ததுபோக
மத்தவருக்காவது ஒருநாள்
ஈழம் மலரும் என்று –தமிழ்
ஈழம் மலரும் என்று

4 comments:

  1. அழகான கவிதை. அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி லட்சுமி அம்மா

      Delete
  2. //வழி மேல் விழி வைத்து
    காத்திருக்கிறோம்,
    செத்ததுபோக
    மத்தவருக்காவது ஒருநாள்
    ஈழம் மலரும் என்று –தமிழ்
    ஈழம் மலரும் என்று//

    அழகான கருத்துள்ள கவிதை. உணர்வுகளை ஆங்காங்கே அழகாகக் கொப்பளித்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். VGK

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோபால கிருஷ்ணன் சார். எனக்கு எப்பொழுது எந்த கஷ்டம் வந்தாலும் இலங்கை மக்களைத்தான் நினைத்துக் கொள்வேன். அவர்கள் படாத கஷ்டத்தையா நாம் பெரிசாகப் பட்டுவிட்டோம் என்று.

      Delete