Tuesday, 6 November 2012

கோடைத் திருவிழா


ராமுவின் கையில் மளிகை சாமான் பட்டியலைத் திணித்த வனஜா, ”நீங்க அலுவலகத்துக்குப் போகற வழியில இத மளிகைக் கடையில குடுத்துட்டு இன்னிக்கே சாமானை கொண்டு வந்து போட்டுடச் சொல்லிடுங்கோ, ஏன்னா மாசி மாசம் முடியறதுக்குள்ளயே வடாம் போட்டு முடிச்சாதான் சரியா இருக்கும்” என்றாள்.

அந்தப் பட்டியலைப் பார்த்த ராமு கிண்டலா, ”என்ன வனஜா, ஜவ்வரிசி 10 கிலோன்னு போட்டிருக்கியே? ஏதாவது மகளிர் சுய உதவிக்குழுவில சேர்ந்து வடாம், வத்தல் போட்டு வியாபாரம் பண்ணப்போறியா?” என்று கேட்டான்.

"நன்னாயிருக்கு. ஒரு வருஷத்துக்குக் காணறா மாதிரி வடாம், வத்தல், ஊறுகாய் எல்லாம் போட்டு வெச்சுக்க வேண்டாமா? உங்க அக்கா, தங்கைகள் நாலு பேருக்கும் குடுக்க வேண்டாமா? மிளகாய், பெருங்காயம்ன்னு ஒண்ணொண்ணா எதுக்குன்னு கேக்காதீங்கோ” என்று நொடித்தாள் வனஜா.

ராமுவுக்குத் தெரிந்து வனஜா ஒவ்வொரு வருடமும் நாத்தனார்களுக்கு சின்ன கவரில் வடாமும், ஸ்பூன் கூட உள்ளே போகாத சின்ன பாட்டிலில் மாவடுவும் போட்டு, “நான் கொஞ்சம்தான் வடாமும், மாவடுவும் போட்டேன். வீட்டுப்பொண்கள் சந்தோஷமா இருந்தாதான் வீட்டுக்கு வந்த பொண்களும் சந்தோஷமா இருப்பான்னு எங்கம்மா சொல்லுவா. ஏதோ பொன் வைக்கற இடத்தில பூ வைக்கிற மாதிரிதான்”னு சொல்லித்தான் கேட்டிருக்கான்.
ஆனா பிறந்த வீட்டுக்கு மட்டும் பெரிய பை நிறைய போட்டுக்கொடுப்பாள். அதற்கு வக்கணையா விளக்கமும் கொடுப்பாள். “எங்கம்மா பாவம். என்னோட ரெண்டு தம்பி பொண்டாட்டிகளும் வேலைக்குப் போயிடறா. அவா குழந்தேள கட்டி மேய்க்கணும். வயசான காலத்துல நாலு வால் குழந்தைகளை சமாளிச்சுண்டு வடாம் எல்லாம் போட முடியுமா? அதனாலதான் எங்கம்மாவுக்குக் கொஞ்சம் கூட கொடுத்தேன்”னு சொல்வாள்.

"அது சரி வனஜா. அது என்ன லெமன் சால்ட்” என்று கேட்டான் ராமு.

"அதுவா நாம என்ன ஹார்ட் ஆப் தி சிடிலயா வீடு கட்டியிருக்கோம்.
ஊர்க்கோடியில வீட்டைக் கட்டிட்டு ஒரு அந்த அவசரத்துக்குக் கூட தேவையானதை வாங்க முடியறதில்ல. போன தடவை இருபது எலுமிச்சம்பழம் வாங்கிப்போட்டு கூட உங்க அக்கா ‘என்ன வனஜா வடாத்துக்கு எலுமிச்சம்பழமே புழிய மாட்டியா’ ன்னு கேட்டா. எலுமிச்சம்பழத்துக்குப் பதிலாதான் லெமன் சால்ட். இது வெல கம்மி. உங்களுக்கு பணத்தை மிச்சம் பண்ணித்தான் குடுத்திருக்கேன்.” என்றாள் வனஜா.

எந்தப் பேச்சையுமே உங்கக்கா, உங்கம்மா என்றுதான் முடிப்பாள் வனஜா. ஒரு நாளைக்கு பத்து தடவையாவது ஊர்க்கோடியில வீட்டைக்கட்டியிருக்கேளேன்னு ராமுவை இடிச்சுக்காட்டுவா. அப்படி வீட்டைக்கட்டினதுக்கு வனஜா சந்தோஷப் படற ஒரே விஷயம் மாமியார் கமலத்தை கூட வெச்சுக்க முடியாததுக்குத்தான். நிரந்தர சர்க்கரை நோயாளியான கமலம் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்ததால் கோடம்பாக்கத்தில் இருக்கும் தன் மூத்த பெண் வீட்டிலேயே தங்கி விட்டாள். நல்லவேளையாக கமலம் தன் ஒரே தம்பிக்கே தன் மூத்த பெண்ணைக்கொடுத்திருந்ததால் ராமுவுக்கு அந்த விதத்தில் எந்த பிரச்னையும் இல்லை.

மாமா மிகவும் நல்லவர். ’நீ கவலைப்படாதேடா ராமு, எங்கக்காவை நான் பாத்துக்கறேன்’ என்பார். கமலமும் எதையும் பாராட்ட மாட்டாள். ஆனால் ராமுவுக்குத்தான் ஒரே மகனாக இருந்தும் அம்மாவைத் தன் கூட வைத்துக்கொள்ள முடிவில்லையே என்று வருத்தம். அதையும், வனஜா அழகாக மாமியாரிடம், ’அம்மா நீங்க ரொம்ப குடுத்து வெச்சிருக்கேள். இன்னும் பிறந்தாத்திலேயே இருக்கேளே’ என்பாள்.

இதற்குள் ராமுவின் பெண் வித்யா வந்து, “ஏம்மா, போன வருஷம் போட்ட வடாமே டப்பால நிறைய மிச்சம் இருக்கே. அப்புறம் ஏம்மா திரும்பியும் போடற. அப்பறம் கைவலி, கால் வலின்னு புலம்புவ” என்றாள். அவள் கவலை அவளுக்கு.

வனஜா மொட்டை மாடியில் போய் உட்கார்ந்துகொண்டு ‘வித்யா தண்ணி கொண்டுவா, ஒரு கரண்டி கொண்டுவா, அதைக்கொண்டுவா, இதைக்கொண்டுவா’ன்னு நச்சரிப்பா. போறாத்துக்கு வடாத்தை காக்கா கொத்தாம காவல் வேற இருக்கணும். இவ செய்யற அலம்பல் தாங்காம ராமுவின் பையன் சுரேஷ் நண்பர்களுடன் படிக்கப்போகிறேன் என்று கம்பி நீட்டி விடுவான்.

“மிச்சம் இருந்ததெல்லாம் தூள் வடாம்தான். கொஞ்சூண்டுதான் இருந்துது. கார்த்தால நம்ப கண்ணம்மாவுக்குக் குடுத்துட்டேன். அவளுக்கும்தான் பாவம் யார் வடாம் போட்டுக்குடுக்கப்போறா?” என்றாள் வனஜா.
"கொஞ்சூண்டா. கார்த்தால தோட்டத்துல செடிக்கு தண்ணி ஊத்திண்டிருந்தப்ப இதென்ன வேலைக்காரி கண்ணம்மா கையில இவ்வளவு பெரிய பை. பையில என்னதான் இருக்கும்னு யோசிச்சேனே. வடாம்தானா? அது சரி. இதுக்கு எண்ணெய் வாங்க கண்ணம்மாக்கு நீ குடுக்கற சம்பளம் போதாதே’ன்னு மனசுக்குள்ள நினைத்தான் ராமு. பின்ன வெளியே சொல்ல முடியுமா? இல்ல வனஜாவை கேக்கத்தான் முடியுமா?

ஒரு வாரம் வடாம் போடற வரைக்கும் வீடே அல்லோல கல்லோலப்பட்டுப் போயிடுத்து. தினமும் கார்த்தால ரசம், ராத்திரி மோர் சாதம். கேட்டா எப்பவும் போல ‘நான் என்ன பண்ணறது? ஒண்டியா எல்லா வேலையும் நானே செய்ய வேண்டி இருக்கு. ஒரு ஒருவாரம் பொறுத்துக்க முடியாதா? எப்பவும் தினுசு தினுசா சாப்டுண்டுதானே இருக்கோம்’ன்னு நீட்டி முழக்குவா. தேவையா இதெல்லாம். ராமு வாயே திறக்காம போட்டதை சாப்பிட்டுப் போயிண்டிருந்தான் எப்பவும் போல.

ஒரு வழியா வடாமெல்லாம் போட்டு முடிச்சு பத்துபடி டின்னுல பத்திரப்படுத்தி வெச்சா வனஜா. இன்னிக்காவது நல்ல சாப்பாடு கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் ராமு.

வனஜா யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். “ஆமாமாம். அதெல்லாம் ரொம்ப சுலபம்தான். 10 கிலோ ஜவ்வரிசி வாங்கினேன். வடாம் போட்ட சிரமமே தெரியல. நிமிஷமா போட்டுட்டேன். ஆவக்கா, மாவடு எல்லாம் கூட போட்டுட்டேன். இதெல்லாம் கடையில வாங்கினா கட்டுப்படியாகுமா? அதோட எங்க வீட்டு நாக்கு நீண்ட தேவதைகளுக்கு கடையில வாங்கினா புடிக்காதே. அடுத்த வருஷம் இன்னும் நிறைய போடலாம்ன்னு இருக்கேன்” கணவன் வந்ததைக்கூட கவனிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.

"ஆஹா என்னமோ தினமும் இவ பஞ்சபட்ச பரமான்னம் செஞ்சு போட்டு நாங்க வரிஞ்சு கட்டிண்டு சாப்பிடற மாதிரிதான் பேச்செல்லாம்’. இது ராமுவின் எண்ண ஓட்டம்.

"சரி நாழியாயிடுத்து. எங்காத்துக்காரர் வந்துடுவார். அப்புறமா பேசறேன் உமா. நானே போன் பண்ணறேன். உங்கிட்ட மட்டும்தான் பேசி இருக்கேன். இன்னும் ரமா, ராதா, பாமா எல்லார்கிட்டயும் பேசணும். ”

ஆஹா இப்படி இவ பேசிண்டே போனா இந்த மாசம் தொலைபேசிக்கட்டணம் எவ்வளவு வருமோ? என்று நினைக்கும்போதே அடுத்த வருடம் வனஜா நீட்டப்போகும் மளிகை சாமான் பட்டியல் கண் முன்னே வந்து மிரட்ட பொத்தென்று சரிந்து சோபாவில் விழுந்தான் ராமு.

4 comments:

 1. //எந்தப் பேச்சையுமே உங்கக்கா, உங்கம்மா என்றுதான் முடிப்பாள் வனஜா. ஒரு நாளைக்கு பத்து தடவையாவது ஊர்க்கோடியில வீட்டைக்கட்டியிருக்கேளேன்னு ராமுவை இடிச்சுக்காட்டுவா. அப்படி வீட்டைக்கட்டினதுக்கு வனஜா சந்தோஷப் படற ஒரே விஷயம் மாமியார் கமலத்தை கூட வெச்சுக்க முடியாததுக்குத்தான்.//

  சிரித்தேன்... சிரித்தேன்.... சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

  >>>>>>

  ReplyDelete
 2. //வனஜா அழகாக மாமியாரிடம், ’அம்மா நீங்க ரொம்ப குடுத்து வெச்சிருக்கேள். இன்னும் பிறந்தாத்திலேயே இருக்கேளே’ என்பாள்.//

  சூப்பர்!

  >>>>>>

  ReplyDelete
 3. //ஒரு வாரம் வடாம் போடற வரைக்கும் வீடே அல்லோல கல்லோலப்பட்டுப் போயிடுத்து. //

  அதானே ! அமக்களம் ஜமக்காளம் தான். போங்கோ!

  //அதோட எங்க வீட்டு நாக்கு நீண்ட தேவதைகளுக்கு கடையில வாங்கினா புடிக்காதே. அடுத்த வருஷம் இன்னும் நிறைய போடலாம்ன்னு இருக்கேன்” கணவன் வந்ததைக்கூட கவனிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.//

  ஹ ஹா ஹி ஹீ ஹு ஹூ ஹெ ஹே ஹை
  ஹொ ஹோ ! ;))))) ஒரே சிரிப்பு தான்.

  //"சரி நாழியாயிடுத்து. எங்காத்துக்காரர் வந்துடுவார். அப்புறமா பேசறேன் உமா. நானே போன் பண்ணறேன். உங்கிட்ட மட்டும்தான் பேசி இருக்கேன். இன்னும் ரமா, ராதா, பாமா எல்லார்கிட்டயும் பேசணும். ”//

  அடடா, சரியான அல்டி தான்.

  //ஆஹா இப்படி இவ பேசிண்டே போனா இந்த மாசம் தொலைபேசிக்கட்டணம் எவ்வளவு வருமோ? என்று நினைக்கும்போதே அடுத்த வருடம் வனஜா நீட்டப்போகும் மளிகை சாமான் பட்டியல் கண் முன்னே வந்து மிரட்ட பொத்தென்று சரிந்து சோபாவில் விழுந்தான் ராமு.//

  பாவம் அந்த ராமு [என்னைப்போலவே ஒருவன்]

  >>>>>>>>

  ReplyDelete
 4. இதே போன்ற ஓர் கணவன் மனைவியை என் சிறுகதை ஒன்றில் காட்டியுள்ளேன்.

  தலைப்பு: ப வ ழ ம்

  இணைப்பு:
  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_445.html


  நேரமிருந்தால் படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கோ, ப்ளீஸ்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete