“என்ன மகேஷ், அம்மா இப்பதான் அலுவலகத்தில இருந்து உள்ள நுழையறாங்க. இப்பவே ஆரம்பிச்சுட்டயா?” என்று எதிர் கேள்வி கேட்டாள் வித்யா.
“போக்கா” என்றான் மகேஷ்.
“சரி சரி இதுக்காக ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க. நாளைக்கு சாயங்காலமா கண்டிப்பா எங்கயாவது போலாம்” என்றாள் விமலா.
“ஆனா ஒண்ணும்மா யார் வீட்டுக்கும் போக வேண்டாம்மா. வேற எங்கயாவது போலாம்மா” என்றாள் வித்யா. “ஆமாமாம் யார் வீட்டுக்கும் வேண்டாம்மா” என்றுஒத்து ஊதினான் மகேஷ் என்னவோ தெரிஞ்சமாதிரி.
”நீங்க ரெண்டு பேரும் வீட்டுப்பாடம் எல்லாம் எழுதி முடியுங்க. நான் போய் ராத்திரி சமையல முடிக்கறேன். நாளைக்கு எங்க போகலாம்ங்கறதை நீங்க ரெண்டு பேருமே முடிவு பண்ணுங்க. சரியா?” என்று சொல்லிவிட்டு புடவையை இழுத்து சொருகிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் விமலா. காலை அவசரத்தில் அப்படியே விட்டுச் சென்ற சமையலறையை நேர் செய்து வேலைக்காரி தேய்த்து பெரிய டப்பில் வைத்து விட்டுச் சென்றிருந்த பாத்திரங்களை எடுத்து அதனதன் இடத்தில் கவிழ்த்தாள்.
அப்படியே மனதில் நாளை செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியலிட்டாள். ”முதல்ல கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கணும். நாளை சனிக்கிழமை. இவர் மதியத்திற்கு சாப்பாடு கொண்டு போக மாட்டார். அதனால் காலை சிற்றுண்டி மட்டும்தானே. இவரை அலுவலகத்திற்குக் கிளப்பி விட்டுட்டு குழந்தைகளுக்கு எண்ணை தேச்சுவிட்டு, நானும் தேச்சுக்கணும். அப்புறம் குழந்தைகளுக்குப் பிடித்த சமையல் செய்யணும். மிளகாய்ப் பொடி, அரிசி மாவு அரைக்க மிஷினுக்குப் போகணும். ஆ, மறந்துட்டேனே. பசங்களுக்கு கஞ்சி மாவு தயார் பண்ணணும். போன தடவை வாங்கின கேழ்வரகுல ஒரே கல். இந்த தடவை பாத்து வாங்கணும். வனஜா ஏதோ ஒரு பிராண்ட் பேர் சொன்னாளே. ஒரு பாக்கெட்ல கோதுமை, கேழ்வரகு, புட்டரிசி இன்னும் கஞ்சிக்கு தேவையானது எல்லாம் இருக்கும்,சுத்தமா இருக்கும்ன்னு அதைப்பாத்து வாங்கணும். வாங்கி வறுத்து கஞ்சி மாவு அரைக்கணும். கோடை ஆரம்பிச்சாச்சு, பருத்தி சேலைக்கெல்லாம் கஞ்சி போட்டு தேய்க்கக் கொடுக்கணும்” யோசிக்க யோசிக்க விமலாவின் பட்டியல் அனுமார்வால் போல் நீண்டு கொண்டே போனது.
மடமடவென்று ஒரு சாதம், ரசம், கூட்டு வைத்து அப்பளம் பொரித்து இரவு சமையலை முடித்து சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைத்துவிட்டு, அடுப்படியைத் துடைத்து சுத்தம் செய்து, குளித்துமுடித்து விமலா வரவும் ராகவன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.
நான்கு பேரும் சாப்பிட்டதும் மகேஷ் தூங்கி விட வித்யா ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். விமலா படுக்கை அறைக்குள் வந்ததும் ராகவன், “விமலா, நாளைக்கு ரெண்டாவது சனிக்கிழமை. லீவு தானே. அம்மாவைப் பாத்துட்டு வரியா?” என்றான். விமலா காதில் விழாதது போல் பாவனை செய்துகொண்டு குழந்தைகள் மாடியிலிருந்து கொண்டுவந்து போட்டிருந்த காய்ந்த துணிகளை மடிக்கத் தொடங்கினாள்.
ராகவன், “விமலா உன்னைத்தான் கேக்கறேன். நாளைக்கு அம்மாவைப் பாத்துட்டு வரியா?” என்றான். வழக்கம் போல் சண்டை ஏதாவது வந்து விடுமோ என்று பயந்து இருவரையும் நிமிர்ந்து பார்த்த வித்யா மறுபடி எழுத ஆரம்பித்தாள்.
விமலா கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு மெல்லிய குரலில் “இல்லீங்க, நிறைய வேலை இருக்கு. இன்னொரு நாள் போறேன்” என்றாள்.
ராகவன், “உன்னால மாசத்துக்கு ஒரு தடவை கூட மாமியாரைப் பாத்துட்டு வர முடியாதா? இதே உங்கம்மா உள்ளூர்ல இருந்தா போகாம இருப்பியா?” என்றான்.
விமலா, “இங்க பாருங்க எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. இப்ப பேசக்கூட தெம்பு இல்ல. படுத்தா தேவலாம் போல இருக்கு. நாளைக்கு கார்த்தால பேசிக்கலாம். தயவு செய்து கொஞ்சம் புரிஞ்சுக்கங்க” என்றாள், வித்யா எதிரில் பேச வேண்டாமே என்ற அர்த்தத்தில். புரிந்து கொள்பவனாக இருந்தால்தான் தேவலாமே.
மறுபடியும் ராகவன், “எனக்கு பதிலை சொல்லிவிட்டு நீ என்ன வேணா செய் என்றான்”
விமலா “ஏங்க. என்னங்க நியாயம் இது? நமக்கு கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆகுது. இது வரைக்கும் ஒரே ஒரு வாரம் உங்கம்மா நம்ப வீட்ல வந்து இருந்து நம்ப குழந்தைகளுக்கு ஏதாவது செஞ்சிருக்காங்கன்னு சொல்லுங்க. நம்ப கஷ்டத்துக்கு எப்பவாவது வந்திருக்காங்களா? கேட்டா நீ பாட்டுக்கு பையைத்தூக்கிண்டு வேலைக்குப் போயிடுவ நான் என்ன உன் வீட்டுக்கு காவலான்னு கேக்கறாங்க. ஏதோ இன்னொரு பையன் இருந்து அவங்க வீட்டில இருந்தாலும் பரவாயில்லை. எப்பவும் பொண்ணு வீட்டிலேயே இருக்காங்க. இத்தனைக்கும் உங்க தங்கச்சி வேலைக்குக் கூட போகல. நீங்க என்னடான்னா எதையும் புரிஞ்சுக்காம பேசறீங்க. எனக்கும் மனசுக்குள்ள எவ்வளவோ இருக்குங்க. நாம்ப என்ன திருட்டுக்கல்யாணமா செஞ்சுட்டு வந்தோம். இவங்க பாத்து வெச்சதுதானே. கல்யாணம் ஆகி வந்தநாள்லேந்து அரிசின்னு அள்ளவும் ஆள் இல்ல உமின்னு ஊதவும் ஆள் இல்லங்கற மாதிரி இருக்கோம்” என்றாள்.
ராகவன் “அதெல்லாம் பத்தி நீ பேச வேண்டாம். போக முடியுமா முடியாதா அதை மட்டும் சொல்லு” என்று கோபமாகக் கேட்டான்.
விமலா ”இங்க பாருங்க என் வேலையெல்லாம் முடிச்சுட்டு நேரம் இருந்தா போறேன். என் பக்கத்து நியாயத்தையும் கொஞ்சம் கேளுங்க. போன மாசம் இரண்டாவது சனிக்கிழமை அன்னிக்கு நீங்க எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லே போய்ப்பாருன்னு சொன்னதால ரெண்டு குழந்தைகளையும் இழுத்துண்டு ரெண்டு பஸ் ஏறி இறங்கிப் போனா உங்கம்மா மாப்பிள்ளைக்குப் புடிக்கும்னு வடாம் போட்டிட்டிருந்தாங்க. மாவடு, ஆவக்கா எல்லாம் போட்டிட்டிருந்தாங்க. இதைப் பாத்து எனக்கு பிபி ஏறினதுதான் மிச்சம். குழந்தைங்களுக்கு சாப்பிடக்கூட ஒண்ணும் கொடுக்கல அவங்க. அப்புறம் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப்போனேன் நான். இதைப்பாருங்க, இனிமே உங்க அம்மாவை பாக்கணும்ன்னா நீங்க அழைச்சிட்டுப்போங்க. உங்க கூட வரேன். நான் இனிமே தனியா எல்லாம் போய் அவங்கள் பாக்கறதா இல்ல. நம்ப குழந்தைகளுக்கு வேண்டியதை லீவு நாள்லயாவது நான் செய்து கொடுக்க வேண்டாமா?” என்று சொல்லிவிட்டு மடித்த துணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
பதில் பேச முடியாமல் ராகவன் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தான்.
வித்யா அம்மாவின் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டு மெதுவாக, “ஏம்மா அப்பா இப்படி இருக்கார். எப்பப்பாரு உன்னை ஏதாவது சொல்லிண்டிருக்காரே”
விமலா ராகவன் தூங்கி விட்டான் என்று நினைத்துக் கொண்டு “அதுவா. அது ஒண்ணும் இல்ல வித்து. அப்பாவும் பாவம்தான். வெளியில போகும்போது உங்க அத்தை வீட்டுக்குப் போய் பாட்டிய பாத்திருப்பாரு. அவங்க என்னடா ஒம் பொண்டாட்டிக்கு என்னை வந்து பாக்கக்கூட முடியாதா, மரியாதை இல்லயா அப்படி இப்டின்னு ஏதாவது சொல்லி இருப்பாங்க. பாவம் அவர் என்ன பண்ணுவார். அங்க வாங்கி இங்க குடுக்கறார். நீ இதெல்லாம் காதில போட்டுக்காத. இந்த வருஷம் பொதுத் தேர்வில நல்ல மதிப் பெண் எடுக்கணும். அடுத்த வருஷம் நல்ல காலேஜ்ல சேரணும் இல்லயா?” என்றாள்.
விமலாவின் பேச்சில் உள்ள உண்மை ஒரு பக்கம் ராகவனை சுட்டாலும், “நல்ல வேளை மனைவியாவது நம்மைப் புரிந்து கொண்டிருக்கிறாளே” என்ற திருப்தியுடன் தூங்க ஆரம்பித்தான்.
"நீ இதெல்லாம் காதில போட்டுக்காத. இந்த வருஷம் பொதுத் தேர்வில நல்ல மதிப் பெண் எடுக்கணும். அடுத்த வருஷம் நல்ல காலேஜ்ல சேரணும் இல்லயா?” என்றாள்."....படிப்பே பிராதானம் என்ற கருத்து அருமை.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteமனம் கனிந்த தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த நன்னாளில் தங்கள் இல்லத்தில் தீபங்களின் ஒளிபோல்
மகிழ்ச்சி நிலவட்டும்.
சரவெடிபோல் இன்பம் பல்கிப் பெறுகட்டும்.
மத்தாப்புபோல் குதூகலம் வீடு முழுவதும் நிறையட்டும்.-- அன்புடன் பத்மாசூரி
Atlast I am following your BLOG!
ReplyDeleteமிக்க நன்றி.
Delete//புடவையை இழுத்து சொருகிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் விமலா. காலை அவசரத்தில் அப்படியே விட்டுச் சென்ற சமையலறையை நேர் செய்து வேலைக்காரி தேய்த்து பெரிய டப்பில் வைத்து விட்டுச் சென்றிருந்த பாத்திரங்களை எடுத்து அதனதன் இடத்தில் கவிழ்த்தாள். //
ReplyDeleteஅன்றாட மிகச் சாதாரணதோர் நிகழ்வு தான். அதைத் தாங்கள் சொன்னவிதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அருமை.
>>>>>>
//உங்கம்மா மாப்பிள்ளைக்குப் புடிக்கும்னு வடாம் போட்டிட்டிருந்தாங்க. மாவடு, ஆவக்கா எல்லாம் போட்டிட்டிருந்தாங்க. இதைப் பாத்து எனக்கு பிபி ஏறினதுதான் மிச்சம்.
ReplyDeleteகுழந்தைங்களுக்கு சாப்பிடக்கூட ஒண்ணும் கொடுக்கல அவங்க.
அப்புறம் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப்போனேன் நான்.
இதைப்பாருங்க, இனிமே உங்க அம்மாவை பாக்கணும்ன்னா நீங்க அழைச்சிட்டுப்போங்க. உங்க கூட வரேன். நான் இனிமே தனியா எல்லாம் போய் அவங்கள் பாக்கறதா இல்ல. //
மிகவும் நியாயமான பேச்சு.
//விமலாவின் பேச்சில் உள்ள உண்மை ஒரு பக்கம் ராகவனை சுட்டாலும், “நல்ல வேளை மனைவியாவது நம்மைப் புரிந்து கொண்டிருக்கிறாளே” என்ற திருப்தியுடன் தூங்க ஆரம்பித்தான்.//
ReplyDeleteமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ! ;)))))
மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். மனதுக்கு நிறைவாக உள்ளது.
அன்புடன்
VGK
மிக்க நன்றி கோபால கிருஷ்ணன் சார். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் அனுபவம் சேர்ந்ததுதான் இந்தக் கதை.
Delete