Tuesday, 6 November 2012

எதிர்பார்ப்பு



வா ரமா. வா வா.. சௌக்கியமா இருக்கியா? இப்பதான் உன் பையன் சாவியக் குடுத்துட்டு விளையாடப் போனான். சாப்பிட்டானோ என்னமோ தெரியல.”

எதிர் வீட்டு ரமாவை முகமலர்ந்து வரவேற்றாள் வித்யாவின் பாட்டி விசாலம்.

“நான் நல்லா இருக்கேன் பாட்டி. நீங்க எப்ப வந்தீங்க, எப்படி இருக்கீங்க” என்று கேட்டாள் ரமா.

“ம். என்னமோ இருக்கேன் போ. காடு வா வாங்குது. வீடு போ போங்குது. ஆமாம் நான் வந்து ரெண்டு நாளாச்சு. கண்ணுலயே படலயே நீ. உனக்கு ஏது நேரம். சரி சரி. ஆபீஸ்லேந்து களைச்சுப்போய் வந்திருக்க. இரு. ஒருவாய் காபி போட்டுத்தரேன். குடிச்சுட்டு சாவியை வாங்கிண்டு போகலாம்.”

“பரவாயில்ல பாட்டி. இந்த வயசான காலத்தில எதுக்கு உங்களுக்கு சிரமம். நான் கிளம்பறேன் பாட்டி.” என்றாள் ரமா.

“இரு ரமா. இதுல என்ன சிரமம். உனக்கும் யார் இருக்கா. நீயே போட்டுத்தானே குடிக்கணும். நான் என்ன உனக்குன்னு தனியாவா காபி போடப்போறேன்? உள்ள வித்யா படிச்சுண்டிருக்கா. அவளுக்கு காபி போடப்போறேன். அப்படியே உனக்கும் போட்டுண்டு வரேன். சித்த உக்காரு” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் விசாலம். பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்தாள் வித்யா. இதற்குள் இரண்டு டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து ரமாவிடமும், வித்யாவிடமும் கொடுத்தாள்.

“என்ன வித்யா எப்படி படிச்சிண்டிருக்க” என்று ரமா கேட்க, தலையை ஆட்டினாள் வித்யா. “காபி ஏ ஒன் பாட்டி. என்ன வித்யா காபியைக் குடிக்காம என்ன யோசனை. ம். நீங்கள்ளாம் ரொம்பக் குடுத்து வெச்சிருக்கீங்க. சாவியைக் குடு. நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் ரமா.
* * * 

’கேட் திறந்திருக்கு போலிருக்கே. அத்தையாத்துக்குப் போறேன்னு சொன்னாளே பாட்டி கிளம்பலையோ? ஒரு வேளை வித்யா பள்ளிக்கூடத்தில இருந்து வந்துட்டாளோ? ஸ்பெஷல் க்ளாஸ் இல்லயோ? எப்படியும் அம்மாவோ, அப்பாவோ இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது’ என்று பலவாறு யோசித்துக்கொண்டே வந்த விஜயா கதவைத் தட்டினாள். கதவு தானாகவே திறந்து கொண்டது. யூனிபார்மைக்கூட மாற்றாமல் மேஜையில் தலைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் விஜயாவின் தங்கை வித்யா.
“வித்யா! என்ன இது பட்டப்பகல்ல கதவைத் திறந்து போட்டுண்டு தூங்கற. எழுந்திரு. எழுந்திரு. டிபன் பாக்ஸ் அப்படியே இருக்கு. சாப்பிடவே இல்லையா?” என்று தூங்கிக் கொண்டிருந்த தங்கையைத் தட்டி எழுப்பினாள் விஜயா.

சோம்பல் முறித்தபடி எழுந்து உட்கார்ந்தாள் வித்யா. “என்ன வித்யா டல்லா இருக்க. பாட்டி அத்தையாத்துக்குக் கிளம்பிப் போயிட்டான்னு வருத்தமா?” என்று கேட்டாள் விஜயா.

“ம்க்கும். இருந்தா மட்டும் அப்படியே நம்பள ரொம்ப கவனிச்சுண்டுவாளாக்கும்”.

“பெரியவாளை அப்படி எல்லாம் சொல்லக்கூடாது வித்யா” என்றாள் விஜயா.
வித்யாவுக்கும், விஜயாவுக்கும் எட்டு வயது வித்தியாசம். அவர்கள் சின்னக் குழந்தைகளாக இருந்தபோது பாட்டி இவர்கள் வீட்டிற்கு எப்போதோ ஒரு முறைதான் வருவாள். பெரும்பாலும் தன் பெண் வீட்டிலேயே இருந்து விடுவாள் விசாலம். வித்யா, விஜயா இருவருமே க்ரீச்சில்தான் வளர்ந்தார்கள். அதனால்தானோ என்னவோ இருவருக்குமே பாட்டியிடம் ஒட்டுதலே இல்லை. பாட்டியும் இவர்களைக் கண்டு கொள்ள மாட்டாள். ஆனால் விளையாட ஒரு துணையில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த விஜயாவுக்கோ வித்யாவின் வருகை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அதனாலேயே தங்கை வித்யா அவளுக்கு ரொம்பச் செல்லம். வித்யாவும் எந்த ஒரு விஷயமானாலும் அக்காவிடம்தான் சொல்வாள். ஏன் பாட்டியோ, அப்பாவோ ஏதாவது சொல்லி அதனால் அவள் அம்மா புலம்பினால் கூட விஜயாதான் “அம்மா இதெல்லாம் காதுல போட்டுண்டு உன் உடம்பையும் மனதையும் கெடுத்துக்காதே” என்று உற்ற தோழியைப் போல் ஆறுதல் சொல்வாள்.

‘பாவம் தான் வித்யா. நான் படிக்கும் போதாவது அம்மாவுக்கு சனி, ஞாயிறு ரெண்டு நாள் லீவு இருந்தது. ஆனா இப்ப ஞாயிறு மட்டும்தான் லீவு. பிரமோஷனும் வந்தப்பறம் அம்மாவால் வித்யாவ சரியா கவனிக்க முடியல. லீவும் போட முடியல. வீட்டுக்கும் லேட்டாத்தான் வரா. அப்பா கேக்கவே வேண்டாம். என்னமோ கம்பெனியே இவர் தலையிலதான் ஓடற மாதிரி இழுத்துப்போட்டுண்டு வேலை செய்வார். வீட்டைப் பொறுத்த வரைக்கும் சம்பளக் கவரை அப்படியே அம்மா கிட்ட குடுக்கறதோட தன்னோட கடமை முடிஞ்சுடறதா நினைச்சுண்டிருக்கார். இந்தப் பொண்ணு வித்யாதான் பாவம் வீட்டில தனியா இருக்க வேண்டி இருக்கு.’.

“அக்கா!” விஜயாவின் எண்ண ஓட்டத்தைத் தடை செய்தது வித்யாவின் அழைப்பு. “என்னக்கா, நீ இன்னிக்கு அதிசயமா ஆபீஸ்லேந்து சீக்கிரமா வந்துட்ட” என்று கேட்டாள் வித்யா.

“அதுவா. எங்க பாஸ் யாரையோ பார்க்க ஏர்போர்ட் போறார். போற வழியில தானே உன் வீடு. உன்னை இறக்கி விட்டுட்டுப் போறேன்னு அதிசயமா சொன்னார். அதான் நானும் அதிசயமா சீக்கிரம் வந்துட்டேன்” என்று சொல்லி விட்டுத் தங்கையின் மூக்கைச் செல்லமாகத் திருகினாள் விஜயா.

“அக்கா. நீயாவது வேலையை விட்டுட்டு வீட்டிலயே இருக்கக் கூடாதா?” என்று அழ மாட்டாக்குறையாய் கேட்டாள் வித்யா.

’ஓ, இந்தப் பெண்ணை தனிமைதான் காயப்படுத்தி இருக்கு. காயத்துக்கு மருந்து போடணுமே’.

“வித்தும்மா. முதல்ல நான் ஏதாவது டிபன் பண்ணறேன். நாம ரெண்டு பேரும் அதை சாப்டுட்டு கோவிலுக்குப் போயிட்டு அப்டியே மார்க்கெட்டுக்குப் போயிட்டு வரலாம். கார்த்தாலயே அம்மா ஒரு காயும் இல்லன்னு அப்பளாத்தைப் போட்டு வத்தக்குழம்பு தானே பண்ணினா. அம்மா வரதுக்குள்ள ராத்திரி சமையலையும் முடிச்சு அம்மாவுக்கு ஒரு ஸர்ப்ரைஸ் கொடுக்கலாம்” என்றாள் வித்யா.

* * * 

கோவிலைச் சுற்றி விட்டு வெளிப் பிரகாரத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்தார்கள் விஜயாவும், வித்யாவும்.

வித்யா, “அக்கா எனக்கு ஒரு விஷயம் புரியல. பாட்டி நமக்கு ஒரு நாளும் எதுவும் செஞ்சதில்ல. ஆனா நேத்திக்கு ரமா ஆன்ட்டி வந்த போது என்னமோ எனக்காக காபி போடறதா சொல்லி அவங்களை ரொம்ப உபசாரம் பண்ணினா. அவங்க பையன் சாவி குடுக்க வந்த போது அவன் வேண்டாம், வேண்டாம்ன்னு சொல்லச் சொல்ல அவன் கையில கேக்கையும், பிஸ்கெட்டையும் திணிச்சா. அம்மா என்னடான்னா ரமா ஆன்ட்டியோட மாமியார் நம்பாத்துக்கு வந்தப்போ உங்களுக்கு பி.பி. இருக்கு. உடம்பைப் பார்த்துக்கோங்கன்னு ரொம்ப அக்கறையா சொன்னா. காபி வேண்டாம்ன்னு ஹார்லிக்ஸ் போட்டுக்குடுத்தா. ரமா ஆன்ட்டி நீங்கள்ளாம் குடுத்து வெச்சிருக்கீங்க அப்டீங்கறாங்க. அவங்க மாமியார் என்னடான்னா நம்ப அம்மாவுக்கு நல்ல மருமகள்ன்னு சர்டிபிகேட் குடுக்கறாங்க. ஆனா இந்த மாதிரி அம்மா பாட்டி கிட்டயும், பாட்டி அம்மா கிட்டயும் நடந்துண்டா எவ்வளோ நன்னாயிருக்கும்” மூச்சு விடாமல் படபடவென்று தன் மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தாள் வித்யா.

‘இதென்ன இது. இந்தப் பெண் தேவையில்லாத விஷயங்களைப்போட்டு குழப்பிண்டிருக்கே. குழந்தையும் இல்லாத, குமரியும் இல்லாத இவளுக்கு எப்படி புரிய வைக்கறது?’

“வித்யா, பாட்டி என்னிக்கோ ஒரு நாளைக்கு காபி போட்டுக் குடுத்தாலே ரமா ஆன்டிக்கு சந்தோஷம். அதே மாதிரிதான் அவங்க மாமியாருக்கும். அம்மா ஒரு நாள் உபசாரம் பண்ணினதுலேயே திருப்தியாயிட்டா. ஆனா இவங்க விஷயம் அப்படியில்ல. அம்மா தன்னை தினமும் கவனிக்கணும்ன்னு பாட்டியும், பாட்டி நமக்கு தினமும் ஏதாவது செய்யணும்ன்னு அம்மாவும் எதிர்பார்க்கறா. எல்லா மாட்டுப்பெண்களுக்கும் தன் மாமியாரைத் தவிர மத்த எல்லா மாமியார்களும் நல்லவாளா தெரியறா. அதே மாதிரிதான் மாமியார்களுக்கும்.

இதெல்லாம் இப்ப உனக்குப் புரியாது. தேவையும் இல்ல. வித்யா நீ இப்ப பத்தாவது படிக்கற. இன்னும் ஆறு, ஏழு வருஷங்களுக்கு நீ படிப்பைத் தவிர வேற எந்த விஷயத்திலயும் கவனம் செலுத்தக்கூடாது. என்னாலதான் டிகிரிக்கு மேல படிக்க முடியல. நீயாவது நிறைய படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். அதனால இதையெல்லாம் கவனிக்காம படிப்பை மட்டும் கவனி. எனக்கு நேரம் கிடைக்கறப்ப எல்லாம் நம்ப ரெண்டு பேரும் இந்த மாதிரி எங்கயாவது இந்த மாதிரி வரலாம். ஆனா அது கூட உன் படிப்பை பாதிக்காமதான். சரியா?” என்றாள் விஜயா.

தன் அக்கா சொல்வது எதுவும் தன்னுடைய நல்லதிற்குத்தான் என்ற நம்பிக்கையுடன் தலையாட்டினாள் வித்யா.

தங்கையின் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் விஜயா. இருவரும் கை கோர்த்துக்கொண்டு மார்க்கெட்டுக்குப் புறப்பட்டனர்.


1 comment:

  1. //எல்லா மாட்டுப்பெண்களுக்கும் தன் மாமியாரைத் தவிர மத்த எல்லா மாமியார்களும் நல்லவாளா தெரியறா. அதே மாதிரிதான் மாமியார்களுக்கும்.//

    வீட்டுக்கு வீடு வாசப்படி. குழந்தைகள் பாடு தான் கஷ்டம். விஜயா நன்கு பக்குவப்பட்டவளாக இருப்பது வித்யாவுக்கு நல்லதாப்போச்சு.

    அருமையான பகிர்வு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்

    அன்புடன்
    VGK

    ReplyDelete