IN AND OUT CHENNAI JAN 16-31 ல் வெளி வந்த என் கவிதை ‘வீடு’. உங்களுக்காக மீண்டும் இங்கு பதிகிறேன்
வீடு
வாசலிலே நிதம் பூத்து
இதமான மணம் பரப்பும்
நித்ய மல்லிக்கொடி,
வீட்டைச் சுற்றி மணம் நிறைந்த
நிறம் மிகுந்த மலர்ச் செடிகள்,
விசாலமான அறைகள்,
வீடு நிறைய மனிதர்கள்,
தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா,
சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று,
கருவண்டு கண்கள் சுழற்றி
நொடிக்கொரு சேட்டை செய்யும்
குஞ்சு குளுவான்கள்,
புது மனிதர் வருகையை
கட்டியம் கூறும்
பைரவர் வாசலிலே,
கொல்லையிலே கல்கண்டுத் தண்ணீருடன்
எப்போதும் வற்றாத கிணறு,
மா, பலா, வாழை மரங்கள்,
தினத் தேவை பூர்த்தி செய்யும்
காய்கறிச் செடிகள்,
இப்படி என் பிறந்த வீடு போலவே
புகுந்த வீடும் இருக்கும்
என்ற கனவுகளுடன்
கை பிடித்த மணாளனுடன்
மகிழுந்திலிருந்து வலது கால் எடுத்து
நிலம் பதித்து புது வீடு
வந்து சேர்ந்தேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல
எண்ணிலா புறாக்கூண்டுகள்
விருந்தினர் வருகையை
சூசகமாகத் தடுப்பது போல்
ஒற்றைப் படுக்கையறை,
பக்கத்து வீட்டில் இருப்பது
யார் என்று தெரியவே
பல நாட்களாயிற்று.
வாசலில் வந்து பார்த்தாலும்,
சாளரத்தின் வழியே பார்த்தாலும்
கண்ணில் பட்டது சாத்திய கதவுகளே!
காய்கறி வண்டிக்காரன்,
விற்பனையாளன்,
அறிமுகம் இல்லாதவர்
அனைவருமே நிறுத்தப்பட்டனர்
வெளி வாசலிலேயே
பாதுகாப்பான இடம்
தண்ணீர் வசதி
எப்பொழுதும் மின்சாரம்
அன்பான கணவன்
இல்லை என்ற சொல்லுக்கே
இடமில்லாத ஒரு வாழ்க்கை
ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
‘அடியே! நீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளி’ என்று.
அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கக்கூட்டுக்கிளி என்றதும் என் பதிவு இரண்டு எனக்கு நினைவுக்கு வந்தது.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2011/04/blog-post.html
”அந்த நாளும் வந்திடாதோ [கவிதை]”
http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_19.html
மலரே குறிஞ்சி மலரே பகுதி 1 / 3
பிரியமுள்ள
கோபு
தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.
Deleteஉங்கள் படைப்புகளைப் படித்து பின்னூட்டம் கொடுத்து, அதற்கு நீங்கள் பதிலும் கொடுத்து ஒரு வாரம் ஆயிடுத்து.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.
சிறப்பான கவிதை! கிராமத்து வசதிகள் நகரத்தில் கிடைக்காது! உண்மைதான்!
ReplyDeleteமிக்க நன்றி திரு சுரேஷ்
Deleteபாதுகாப்பான இடம்
ReplyDeleteதண்ணீர் வசதி
எப்பொழுதும் மின்சாரம்
அன்பான கணவன்
இல்லை என்ற சொல்லுக்கே
இடமில்லாத ஒரு வாழ்க்கை
ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
‘அடியே! நீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளி’ என்று.//
அசத்தலான கவிதை
தங்கள் பிறந்த வீடு போன்ற எனது வீடு விடுத்து
மதிப்பில் கோடி ரூபாய் பெருமானமுள்ள
என் தங்கையின் வீட்டில்
அனைத்து வசதியுடன் கூடிய தனி ரூமில்
தனிமையில் இருந்து
இந்தக் கவிதையைப் படிக்கையில்
இந்தக் கவிதையின் அர்த்தம் இன்னும்
ஆழமாகப் புரிகிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி திரு ரமணி
Deleteஉங்களை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.
பழைய நினைவுகளை அசை போடுவது சுகமான அனுபவம்.
கவிதை அழகு!வாழ்த்துக்கள் மாமி.
ReplyDeleteமிக்க நன்றி சாதிகா
Deleteதங்கக் கூண்டுக்கிளி’-அருமையான ஒப்பீடு ...
ReplyDeleteமிக்க நன்றி இராஜ இராஜேஸ்வரி
Delete