Saturday, 12 January 2013

குல தெய்வம்


என்னடா இவ, குலதெய்வம்ன்னு தலைப்பை போட்டுட்டு  TYPEWRITER படத்தை போட்டு இருக்காளேன்னு யோசிக்கிறீங்களா?  முழுக்க படியுங்க.  படிச்சுட்டு சொல்லுங்க.


24.12.2012 அன்னிக்கு கார்த்தால 0715 மணிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சேன்னு நன்மங்கலம் நீல வர்ணப் பெருமாளை தரிசனம் பண்ண நன்மங்கலம் ரோட்டில் திரும்பி ஒரு பத்தடிதான் நடந்திருப்பேன்.  இளையராஜா / ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை மாதிரி என் காதுல டைப் அடிக்கற ஓசை கேட்டுது.  நிமிர்ந்து பார்த்தா ‘VINOD TECHNICAL INSTITUTE’.  ஆஹா, இந்த இன்னிசையைக் கேட்டு எவ்வளவு நாள், ஏன் வருஷமே ஆச்சு.  ஆமாம் இப்ப COMPUTERல தான டைப் அடிக்கறோம். சத்தமே கேக்காதே, FEATHER TOUCH.  
செய்தித்தாள்களில் 2011ஆம் ஆண்டு வந்த இந்த செய்தியைப் படித்தபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர்
மும்பை : உலகின் கடைசி டைப்ரைட்டிங் நிறுவனமான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ், மும்பையில் உள்ள தனது உற்பத்தி யூனிட்டை மூடியுள்ளது. உலகம் முழுவதும் ஒருகாலத்தில், அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் வருகையால் கணிசமாக குறைந்தது. மேற்கத்திய நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன்பே, தட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நி‌லையில், சமீபகாலமாக, டைப்ரைட்டிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தட்டச்சு பயன்பாடு குறைந்து, கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டன. ஆனாலும், கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம், டைப்ரைட்டிங் மிசின்களை தயாரித்து வந்தது. உலகின் கடைசி டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ‌கோத்ரெஜ் அண்ட் போய்ஸ் நிறுவனம், அதனை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுகுறித்து, இதன் உயர் அதிகாரி மிலிந்த் துக்லே கூறியதாவது, கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், இதன் பயன்பாடு குறைந்து விட்டது. பயன்பாடு குறைந்ததால், தங்களுக்கு வரும் ஆர்டர்களும் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போது, தங்களிடம் 200 டைப்ரைட்டிங் மெசின்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இவையும் அரபுமொழி டைப்ரைட்டிங் மெசின்களே ஆகும் என்றும், இதனையடுத்து வேறவழியின்றி உற்பத்தி யூனிட்டை மூடிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கோத்ரெஜ் கம்பெனியின் டைப்ரைட்டர் பிரிவு 1955ல் (நான் அவதரித்த ஆண்டாக்கும்) தொடங்கப்பட்டது இந்தியாவின் சுதந்திரத்துக்கும் தொழில்மயத்துக்கும் டைப்ரைட்டர் ஓர் அடையாளம் என்று பிரதமர் நேரு புகழாரம் சூட்டினார்.ஆனால் சத்திரத்துத் திண்ணையில் படுத்திருந்த நாயை விரட்டி விட்டு மனிதன் ஆக்ரமித்துக் கொள்வது போல் டைப்ரைட்டரை விரட்டி விட்டு அலுவலகம், வீடு, தொழிற்சாலைகள் என்று எல்லா இடங்களையும் கம்ப்யூட்டர் ஆக்கிரமித்துக் கொண்டது.  போர்ட்டபிள் டைப்ரைட்டர்களின் இடத்தை லேப்டாப் பிடிங்கிக் கொண்டது. 


பிரதமர் நேரு சொன்ன அடையாளத்தை அடையாளமே இல்லாமல் அழிக்கத் தொடங்கியது கம்ப்யூட்டர்.நாங்க படிச்ச காலத்துல எல்லாம் SSLC முடிச்சதும், ஏன் பத்தாவது முடிஞ்ச லீவுலயே TYPEWRITING CLASS சேர்த்துடுவாங்க.  விருப்பம் இருந்தால் அப்படியே சுருக்கெழுத்தும்.  எத்தனையோ குடும்பங்கள்ள விளக்கேத்தி வெச்சிருக்கு இந்த TYPEWRITING & SHORTHAND இரண்டும்.நான் GOVERNMENT POLYTECHNIC FOR WOMENல் (தற்போதைய பெயர் DHARMAMBAL POLYTECHNIC) மூன்று வருட DIPLOMA IN COMMERCIAL PRACTICE COURSE 1970 – 1973 படித்தேன்.  அதில் B.COM SUBJECTS மற்றும் ENGLISH TYPEWRITING, SHORTHAND HIGHER.  


அதே நேரத்தில் என் COUSIN கோவையில் இதே COURSE  இரண்டு ஆண்டுகள் படித்து கோவை SUGARCANE BREEDING INSTITUTE ல் பணியில் சேர்ந்திருந்தார்.  அதனால்தான் என் அம்மா நீயும் இதே DIPLOMA படி, கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.  முதல் வருடம் காலேஜ் போகவில்லையே என்று வருத்தம் கொஞ்சம் இருந்தது.  இரண்டாம் வருடம் வருத்தத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.  3 வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த உடனே நல்ல அரசாங்க வேலை.  ஆயிற்று 39 வருடங்கள் 3 மாதங்கள் பணியாற்றிவிட்டாகிவிட்டது.  இன்னும் பாக்கி இருப்பது 1 வருடம் 5 மாதம்.

இதே குலதெய்வம் தான் சமூக அந்தஸ்தைக் கொடுத்தது, பலரின் பாராட்டையும் பெற்று கொடுத்தது. இப்பதானே கம்ப்யூட்டர் ஜாலம் எல்லாம்.

டைப்ரைட்டரில் ஒரு W, அதுக்கு மேல ஒரு &,  அந்த & மேல ஒரு /, ஒரு SOLDIER மாதிரி வரும். 

அப்புறம் ஒரு தேர் மாதிரி டிசைன் செய்தது.   சின்னச் சின்ன விஷயங்கள்.  எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அந்தக் காலத்துல என் அப்பா ஒரு கடிதத்தை சிவலிங்கம் மாதிரி அடித்திருப்பார். 


 ஆனா ஒண்ணுங்க. இந்த செய்தியையும் கேளுங்க.
ரொம்ப அலட்டிக்காத கம்ப்யூட்டரே.

மிசோரம் மாநிலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுவதால், அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு, டைப்ரைட்டிங் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.யார் கண்டது, மீண்டும் பழைய டைப்ரைட்டர்களுக்கு பூரண கும்ப வரவேற்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். என்னை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற ‘VINOD TECHNICAL INSTITUTE’க்கு நன்றி.
 இப்ப சொல்லுங்க, எனக்கு, என் குடும்பத்துக்கு, ஏன் எத்தனையோ குடும்பங்களுக்கு இந்த TYPEWRITER (அதோட மவுசு குறைந்தாலும்) குலதெய்வம் தானே.

25 comments:

 1. ஆமாம் மேடம். எனக்கும் அதுவே குலதெய்வம் தான்.

  என் அனுபவங்களையும் சற்றே விரிவாக சுவையாக தெரிவிக்க எண்ணுகிறேன்.

  >>>>> நாளை தொடர்வேன் >>>>>

  ReplyDelete
 2. அருமை அம்மா! உண்மையில் தட்டச்சு இயந்திரம் பல பேருக்கு குலதெய்வம்தான்,
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. Yes Madam.
  There is no denying this fact or there can not be any second opinion regarding this. Typewriting only paved our way to BSNL and still we are using the Computers, based on our elementary and basic typing skills only. It has uplifted many a families and we are proud to be one in this group. Rgds
  Uppili

  ReplyDelete
 4. The type writer takes me to my nostalgic memories of the yester years when I joined typewriting class while doing my PUC. Still that basic knowledge only helps us to handle computers easily. Surely typewriters have given us our livelihood and we our existence to the typewriters only. It has given the livelihood to innumerable people.

  ReplyDelete
 5. மணம் (மனம்) வீசும் அருமையான மலரும் நினைவுகள்..

  இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. நான் தட்டச்சு கற்க ஆரம்பித்தது 1966 ஜூன் மாதம்.

  அப்போது எனக்கு வயது 15-16 மட்டுமே,.

  திருச்சியில் வீட்டருகே இருந்த ஸ்ரீராம் இன்ஸ்டிடூயிட் ஆஃப் காமேர்ஸ் என்ற இடத்தில் தான்.

  முதல் நாள் பேப்பரை எப்படி மெஷினில் சொருக வேண்டும், பிறகு அதை எப்படி நழுவாமல் செட்-அப் செய்ய வேண்டும் என கற்றுக்கொடுத்தார்கள்.

  அதன் பிறகு a s d f g f ; l k j h j என்ற எழுத்துக்களை மட்டும், கீ போர்டை பார்த்துப்பார்த்து அடிக்கச்சொன்னார்கள். ஒரு பக்கம் முழுவதும் திரும்பத்திருமப இதையே அடிக்கணும்.

  விரல்களுக்கு சரியான வேலையும் வலியும் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் மட்டுமே க்ளாஸ். அதுவும் விடியற்காலமே போக வேண்டும்.

  FEES Monthly Rs. 5 [மாதம் ஐந்து ரூபாய் மட்டுமே] அது இன்றைய ஐநூறு ரூபாய்க்குச் சமம்.

  >>>>>>>>>

  ReplyDelete
 7. மறுநாள் அன்று, கீ போர்டை பார்க்காமல் நேற்று அடித்ததையே மீண்டும் அடிக்கச்செய்து, போர் அடித்தார்கள்.

  கீ போர்டைப்பார்த்து அடித்தால் போச்சு. முதுகுப்பக்கம் நின்று கவனித்து வரும் மிகவும் குண்டான சுப்ரமணியம் என்ற வாத்யார், என் முதுகில் கும்மாங்குத்து குத்துவார்

  >>>>>>>>>

  ReplyDelete
 8. இங்க்லிஷ் டைப்ரைடிங் லோயர் மட்டும் இந்த இன்ஸ்டிடூட்டில் நான் பாஸ் செய்தேன்

  மறுவருடம் 1967 இல், அந்த குண்டு சுப்ரமணியம் வாத்யார் தனியே பிரிந்து போய் வாஸன் இன்ஸ்டிடூட் ஆஃப் காமேர்ஸ் என்று புதியதாகத் தொடங்கியதில் என்னையும் வந்து சேரச்சொல்லி விட்டார். மாதம் 10 ரூபாய் கட்டணம் + பேப்பர் வாங்குவதும் நம் செலவு தனியாக.

  அங்கு நான் போய்ச் சேர்ந்து இங்க்லீஷ் ஹயர் + ஹை ஸ்பீட் இரண்டும் பாஸ் செய்தேன்.

  >>>>>>>>>>

  ReplyDelete
 9. இங்க்லீஷ் டைப்ரைடிங் லோயர் பாஸ் செய்வது ஓரளவு சுலபம் தான்.

  ஹையர் கொஞ்சம் கஷ்டமானது. டபுள் பேலன்ஸ் ஷீட் என்று ஒன்று அதில் வரும் A3 பேப்பரில் அடிக்க வேண்டிய மேட்டரை இரண்டு A4 பேப்பர்களில் தனித்தனியாக அடித்து இரண்டையும் இணைத்தால் இம்மி பிசகு இல்லாமல் அவை மேட்ச் ஆக வேண்டும்.

  மேலும் ஹையர் பாஸ் செய்து சர்டிபிகேட் கிடைக்க டைப்ரைடிங் மெகானிஸம் என்ற ஒரு ப்ராக்டிகல் ப்ராஜக்ட் செய்து அதிலும் தேர்ச்சி அடைந்தாலே சான்றிதழ் தருவார்கள். இதெல்லாம் அந்த நாட்களில் இருந்து வந்த கொடுமைகள்.

  ஹை ஸ்பீடு பாஸ் செய்ய எல்லோராலும் முடியாது... அது அதை விட கஷ்டம். இருப்பினும் நான் பாஸ் செய்துள்ளேன்.

  >>>>>>>>>

  ReplyDelete
 10. இதில் என் அனுபவங்கள் மிகவும் அதிகம்.

  தனிப்பதிவாகவே 4-5 பகுதிகள் கூட என்னால் தர முடியும்.

  ஆனால் அதற்கெல்லாம் எனக்கு இப்போ நேரமோ, பொறுமையோ, சந்தர்ப்ப சூழ்நிலைகளோ சாதகமாக இல்லை.

  அதனால் நான் மீண்டும் மீண்டும் வந்து இங்கு ஒருசில சுவையான கருத்துக்களாக அளிக்க நினைக்கிறேன்.

  இன்று எனக்கு அதற்கும் நேரமில்லை.

  ஆனால் அவ்வபோது தினமும் கொஞ்சமாகத் தருவேன், தந்து கொண்டே இருப்பேன்.

  ஜாக்கிரதை! ;)))))

  [இதற்கான லிங்க்கை எனக்கு மெயில் மூலம் அனுப்பி இருந்த தங்களுக்கு என் நன்றிகள். - பிரியமுள்ள கோபு]

  >>>>>>>>

  ReplyDelete
 11. Great ..A different point of view..about an OBJECT; in a soooo,subjective analysis. I just can not avoid, thinking about my late father,who till his last days (82 years) kept his Remington Type-writer,which he was using in Rangoon..A real,heart-felt tribute to KULADEIVAM!

  ReplyDelete
 12. நான் கோத்ரேஜ், ஹால்டா, ரிமிங்டன் ராண்ட் போன்ற பல மெஷினகளில் டைப் அடிக்கும் வாய்ப்பு கிட்டியவன்.

  ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான மெஷின் என்றால் அது ரிமிங்டன் ராண்ட் மட்டுமே.

  அதுவும் வெகு நாட்கள் [1976 முதல் 1981 வரை] என்னிடம் ஒரு ஸ்பெஷல் ரிமிங்டன் ராண்ட் பெரிய சிலிண்டர் மெஷின் இருந்தது. சூப்பராக அடிக்கும்.

  எழுத்துக்களும் அழகாக ஸ்டைலாக குண்டுகுண்டாக [மோத முழங்க ;))))) ] இருக்கும்.

  அதனை நான் என் காதலி போல நினைத்து மிகவும் நேசித்த நாட்கள் பல உண்டு.

  வேறு யாரையும் அந்த மெஷினைத்தொடவே விட மாட்டேன்.

  >>>>>>>>>

  ReplyDelete
 13. நான் வேலை பார்த்தது மிகப்பெரிய நிறுவனம். பராமரிப்புக்கும் பஞ்சம் இல்லை. எல்லா டைப்ரைட்டர் கம்பெனி மெக்கானிக்குகளும் மாதாமாதம் வருகை தந்து, மெஷின்களை துடைத்து, பழுது பார்த்துச் செல்வர்கள்.

  மொத்தம் 17500 பேர்கள் வேலை பார்த்த மிகப்பெரிய நிறுவனம். சுமார் 1000 க்கும் மேற்பட்ட டைப்ரைட்டர்கள் இருந்த, பல்வேறு அலுவலகக் கட்டடங்கள். பல துறைகள். பல பிரிவுகள். எல்லாமே ஜே ஜே தான்.

  மிகப்பெரிய கம்பெனி என்பதால் அங்கு நிர்வாகத்தால் ஒருசில உறுப்படாத கொள்கை முடிவுகளும் அவ்வப்போது எடுக்கப்படும் தானே!

  அதன்படி 5 வருடங்கள் உழைத்து பழசான அனைத்து டைப்ரைட்டர்களையும் DISPOSE செய்து ஏலத்தில் விட்டு விட்டு, விற்று விட்டு, புதிய மெஷின்கள் வரவழைத்துக் கொடுத்தனர்.

  இதனால், நான் அன்று என் காதலியை [என்னிடம் மிகப்பிரியமாக ஒத்துழைத்த ரிமைங்டன் ராண்டு ஸ்பெஷல் மெஷினை] இழக்க நேர்ந்தது.

  மனதுக்குள் அழுது புலம்பினேன். வேறு எதுவும் என்னால் செய்யமுடியாத நிலை. நான் அப்போது அதிகாரி அல்ல. மிகவும் சாதாரண [UDC] UPPER DIVISION CLERK மட்டுமே.

  இருப்பினும் அவளின் பிரிவினை என்னால் இன்று வரை தாங்கவே முடியவில்லை.

  >>>>>>>>

  ReplyDelete
 14. பிறகு வந்த புதிய காதலிகள் எல்லாம் [மெஷின்கள் எல்லாம்] எனக்கு அவள் அளவு இன்பம் தரவே இல்லை. அவைகள் அனுபவித்ததில் எனக்கு திருப்தியாகவும் இல்லை.

  எல்லாமே ”ஆள் அழகா துப்பட்டிக்காரா” கேஸ்கள் தான்.

  இதையே வேறு விதமாக

  ”சீவி முடிச்சு சிங்காரிச்சு, கொண்டையெல்லாம் பெரிசா அழகாகத்தான் போட்டிருக்கிறாள்; அவிழ்த்துப் பார்த்தால் தான் தெரியும், சவுரியின் நீளமும், தலையில் உள்ள ஈரும் பேனும்”

  என்று கூட சொல்லுவார்கள்.

  பழமொழிகளுக்கு என்னிடம் பஞ்சமில்லை. மிகச் சரளமாகவே வரும். ஆனால் எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்? ;))))).

  அதனால் இத்துடன் பழமொழிக்கு முற்றுப்புள்ளி -

  ஆனால் பின்னூட்டங்கள் தொடருமாக்கும். மீண்டும் ஜாக்கிரதை.

  >>>>>>>>

  ReplyDelete
 15. நான்கு எஞ்சினியர்களும் [அதிகாரிகளும்] நாற்பதுக்கும் மேற்பட்ட சூப்பர்வைஸர்களும், நிறைந்த ஒரு மிகப்பெரிய 50 பேர்கள் வேலை பார்க்கும் செக்‌ஷனுக்கு நான் ஒருவனே CLERICAL STAFF ஆக இருந்து வந்தேன், இந்த 1975 முதல் 1980 வரை.

  ஓயாமல் டைப்பிங் வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். நான் நன்றாகக் கசக்கிப்பிழியப்பட்டேன். 25-30க்குள் இளம் வயதானவன் அல்லவா.

  அதனால் என்னால் என் திறமைகள், தனித்திறமைகள் எல்லாமே காட்ட முடிந்தது.

  நான் டைப் செய்தால் அதில் ஒரு தவறு கூட அதாவது ஓவர் டைப்பிங் என்பதே இருக்காது.

  இருந்தால் அவ்வாறு ஏற்பட்டால் அது எனக்கே கூட பிடிக்காது. இது விஷயத்தில் பலரின் பாராட்டுக்களைப் பலமுறை பெற்றவன் நான்.

  >>>>>>>

  ReplyDelete
 16. மேலும் எஞ்சினியரிங்கில் பிஸ்தாவாக இருப்பினும் பல அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் எப்படி தவறேதும் இல்லாமல் DRAFT போட வேண்டும் என்பதே தெரியாது.

  அவர்களுக்கெல்லாம் நானே ஆபத்பாந்தவனாக இருந்து வந்தேன் என்று சொன்னால் மிகையாகாது.

  என்னிடம் விஷயத்தை மட்டும் விளக்கிச்சொல்லி விடுவார்கள்.

  இந்த விஷயம், இந்த ஸ்டேட்மெண்ட் மேலிடமான GENERAL MANAGER, EXECUTIVE DIRECTOR, CHAIRMAN & MANAGING DIRECTOR போன்ற மிக உயர்ந்த அதிகாரிகள் வரை போகப்போகிறது.

  அதனால் சூப்பராக இருக்க வேண்டும் என்று என்னைத்தட்டி விட்டு உற்சாகப்படுத்தி, விஷயத்தை மட்டும் சொல்லி விடுவார்கள்.

  இது போதாதா எனக்கு? பிச்சு உதற்விட மாட்டேனா என்ன?

  இது போலெல்லாம் பிச்சு உதறித் தானே, 1970 இல் LOWER DIVISION CLERK ஆக WORKER ஆகச் சேர்ந்த நான், என் கடும் உழைப்பால் 1990 இல் SUPERVISOR ஆக ஆகி, அதன்பிறகு 2005 இல் பலத்த போட்டா போட்டிக்கு இடையே அதிகாரியும் ஆகி, சாதனை புரிய முடிந்தது.

  இதோ இப்போதும் சென்ற மாதம் நான் செய்த, என் சாதனை எனக்கே மிகவும் வியப்பளிக்கிறது..

  V I P ஒருவரின் ஒரு மணி நேர ஆங்கிலப் பேச்சினை தமிழாக்கம் செய்து கொடுக்கச் சொல்லி வற்புருத்தினார்கள் ஓர் இயக்கத்தினர்.

  அதுவும் ஒரே நாளில் செய்து தர வேண்டும் என்ற அன்புக்கட்டளை இட்டு விட்டனர்.

  நானும் அதை மனமுவந்து ஓர் சவாலாகவே ஏற்று, செய்து கொடுத்து புண்ணியம் தேடிக்கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும்..

  அதை அப்படியே எந்தவொரு சிறிய மாற்றமும் இல்லாமல் அவர்களின் WEB PAGE இல் வெளியிட்டுள்ளார்கள். மிகவும் பயனுள்ளதோர் விஷய்ம் அது.

  அதனால் தயவுசெய்து போய் படித்துப்பாருங்கோ.

  இணைப்பு இதோ:

  http://wisdomfromsrisriravishankartamil.blogspot.in/2012/12/blog-post_5.html

  தலைப்பு:

  நம் பாரதத்தை மேம்படுத்த சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வத் தொண்டர்களே, முன்வாருங்கள்!

  >>>>>>>

  ReplyDelete
 17. 1981 க்குப்பிறகு எனக்கு டைப் அடிக்கும் வேலையே சுத்தமாக இல்லாமல் பணி மாற்றம் நிகழ்ந்து விட்டது.

  அப்போது நான் CASH SECTION னுக்கு மாற்றப்பட்டு விட்டேன். ரூபாய் தாள்களை எண்ணும் மெஷின்கள் [CURRENCY COUNTING MACHINES] வராத காலக்கட்டம் அது.

  அதுபோல கள்ள நோட்டுக்களை பிரித்துத்தரும் SCANNER என்பது வராத காலம்.

  கீரைக்கட்டுபோல பல லட்சம் ரூபாய்களை என் டேபிள் பூராவும் போட்டு ஸ்பாஞ்ச்சில் நீர் ஊற்றி, தொட்டுத்தொட்டு எண்ணிய நாட்களை நானும் இப்போது எண்ணிப்பார்க்கிறேன். மிகவும் வேதனையாகவே உள்ளது.

  காலம் மாற மாற காட்சிகளும் மாறுகின்றன.

  >>>>>

  ReplyDelete
 18. நடுவில் டைப்ரைட்டர்களில் எலெக்ட்ரானிக்ஸ் டைப் ரைட்டர் என்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. நாம் லைட் டச் கொடுத்தாலே அது பல கார்பன் காப்பிகளிலும், பளிச்சென்று விழக்கூடியதாக இருந்தது.

  நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  >>>>>>>

  ReplyDelete
 19. 1968 வரை வீட்டுக்கு வீடெல்லாம் தொலைபேசி இணைப்பு கிடையாது. தெருவுக்கு ஒன்று வீதம் இருந்தாலே பெரிய விஷயம்.

  அப்போதும் திருச்சி போன்ற பெரிய நகரங்களில் ஆட்டோமேடிக் டயலிங் சிஸ்டம் கிடையாது. எக்ஸ்சேஞ்ச்சில் உள்ளவர்கள் மூலம் தான் தொடர்பு கிடைக்கும். STD, ISD தொடர்புகள் வேண்டும் என்றால் பல மணி நேரங்கள் காத்துக்கிடக்கணும். தவமாய்த் தவம் கிடக்கணும்.

  1970 முதல் தான் நாமே டயலிங் செய்யும் வசதிகள் உள்ள
  தொலைபேசி இணைப்புகள் கிடைத்தது.

  1980 வரை எங்கள் பணியிடத்தில் எலெக்ட்ரானிக்ஸ் கால்குலேட்டர்ஸ் கிடையாது.

  1980 வரை ஜிராக்ஸ் மெஷினும் கிடையாது. எவ்வளவு பிரதிகள் வேண்டுமோ அவற்றை மீண்டும் மீண்டும் டைப் செய்யத்தான் வேண்டும்.

  >>>>>

  ReplyDelete
 20. 1970 முதல் 1980 வரை கணினிகள் இயக்கப்பட்டாலும், அது மிகப்பெரிய அளவில் [திருச்சி மலைக்கோட்டை போல இடத்தை அடைத்துக் கொண்டு] பெரிய அளவில் சம்பள்ப்பட்டியல்கள் போன்றவை போட மட்டுமே, ஒவ்வொரு கம்பெனிகளிலும் ஒன்று மட்டுமே, எங்கோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருந்து வந்தது.

  அதை DPC [Data Processing Centre] என்று அழைத்து வந்தனர்.

  ஒவ்வொரு தகவல்களையும் ஒரு போஸ்ட் கார்டு போன்ற ஒன்றில் ஓட்டை போட்டு பதிவு செய்வார்கள்.

  அதற்கு Punch Card Operators என்று ஏராளமானவர்கள் டொக்கு டொக்கு என்று எப்போதும் எதையாவது தகவல்களை பஞ்ச் செய்து கொண்டே இருப்பார்கள்.

  அன்றைக்கு அவ்வாறு செய்தவை எல்லாமே வெட்டி வேலைகள் என்பது இப்போது நிரூபணம் ஆகியுள்ளது.

  >>>>>

  ReplyDelete
 21. எலெக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர்ஸ் கண்டுபிடிப்புக்குப்பின் தான் [எங்கள் கம்பெனியில் 1990 க்குபிறகு தான்] எல்லா வேலைகளுமே வியக்கத்தக்க வகையில் சுலபமாகியுள்ளது.

  இன்றும் அதில் நாளுக்கு நாள் மேலும் மேலும் புதிய கண்டுபிடிப்புகளின் வருகை வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.

  உதாரணமாக அலைபேசிகள், லாப்டாப், டாப்லெட், ஐ பேட், எலெக்ட்ரானிக்ஸ் வாட்ச், டிஜிடல் கேமரா போன்ற எவ்வளவோ பொருட்களைச் சொல்லலாம்.

  >>>>>

  ReplyDelete
 22. அதுபோல நாம் சினிமாவைப்பார்க்க வீட்டை விட்டுச் சென்ற காலம் 1985 வரை இருந்து வந்தது.

  பிறகு அதுவே Black & White T.V. என்ற ரூபத்தில் மிகப்பெரிய ஆண்டனாவுடன் நம் வீட்டுக்குள் ஆமை போலப் புகுந்தது 1985 வாக்கில்.

  வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் போனால் போகிறது என்று ”ஒளியும் ஒலியும்” என்ற அரை மணி நேர நிகழ்ச்சி தமிழில்... சினிமா பாடல்கள் போடுவார்கள்.

  கொடைக்கானலிலிருந்து ஒளிபரப்பப்படும். ஞாயிறு தோறும் அதுபோல ஏதாவது ‘சக்குபாய்’ போன்ற மிகப்பழைய பாடாவதிப் படங்கள் ஒளிபரப்புவார்கள்.

  பிறகு கலர் டீ.வி கள், கேபிள் கனெக்‌ஷன், நிறைய சேனல்கள், 24 மணி நேர தமிழ் ஒளிபரப்பு என என்னெவெல்லாமோ வந்து இன்று எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கிப்போட்டுள்ளது.

  >>>>>

  ReplyDelete
 23. நானும் நீங்களும் ஓர் 4 அல்லது 5 வருட இடைவெளியில் பிறந்திருப்பவர்களாக இருப்பதால், நம்மால் இதுபோன்ற சில பழைய விஷயங்களைக் குலதெய்வமாக நினைத்துக் கொண்டாடவும் முடிகிறது. சிலவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும் நம்மால் முடிகிறது.

  இவ்வாறு பழைமையையும் புதுமையையும் நினைத்து ஒப்பிட்டுப்பார்க்கும் வாய்ப்புகள் இனி வரும் புதிய தலைமுறைக்குக் கிட்டவே கிட்டாது என்பதே உண்மை.

  நம்மால் நம் வயது உள்ளவர்களால் மட்டுமே இவற்றையெல்லாம் சிந்தித்து மகிழ முடியும்.

  நாம் மட்டுமே இரண்டிலும் ஊறிடும் வாய்ப்பினைப் பெற்ற அதிர்ஷ்ட அல்லது துரதிஷ்ட சாலிகள்.

  உதாரணமாக:

  டைப்ரைட்டர் + கணினி மட்டுமல்ல
  அம்மி + மிக்ஸி
  ஆட்டுக்கல் + கிரைண்டர்
  துணி தோய்க்கும் கல் + வாஷிங் மெஷின்
  தபால் கடிதங்கள் + மின்னஞ்சல்
  தந்தி + அலைபேசி

  முதலியன.


  >>>>>>

  ReplyDelete
 24. என்னதான் சொன்னாலும் இந்த அபார விஞ்ஞான வளர்ச்சிகளை நாம் மனதார வரவேற்கவே வேண்டியுள்ளது.

  இல்லாவிட்டால் எங்கோ இருக்கும் நானும் நீங்களும் இதுபோல மிகச்சுலபமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள முடியுமா?

  எப்போதும் ஒருவருக்கொருவர் தொடர்பு எல்லைக்குள் இருக்கத்தான் முடியுமா? ;)))))

  >>>>>>

  ReplyDelete
 25. ஒவ்வொன்றையும் பற்றி பேச ஆரம்பித்தால் இதுபோல நிறைய பேசிக்கொண்டே போகலாம் தான். இருந்தாலும் நான் இத்துடன் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். கோச்சுக்காதீங்கோ. ;)))))

  நல்லதொரு பதிவினை வெளியிட்டு, என் நினைவலைகளை மிகவும் தான் கிளறித்தான் விட்டு விட்டீர்கள்.

  ”குல தெய்வம்” என்று தலைப்பும் கொடுத்துட்டீங்கோ.

  ”குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன்”

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பிரியமுள்ள
  கோபு

  -oOo-

  [ நிறைய உருக்கின நெய் ஊற்றி, மூக்கைத்துளைக்கும் முந்திரி + ஏலக்காய் போட்டு, சுடச்சுட ருசியா உங்கள் கையால் எனக்கு சர்க்கரைப் பொங்கல் ஒரு பெரிய தூக்கில் போட்டு அனுப்புங்கோ ... ப்ளீஸ்.

  திகட்டாமல் இருக்க அப்படியே கொஞ்சம் இன்னொரு தூக்கில் வெண்பொங்கலும் அனுப்புங்கோ.

  நீங்களே கொண்டு வந்து கொடுத்து விட்டு, உடப்பிறந்தானின் கணுவுக்கான சீர் பணத்தையும் வாங்கிண்டு போயிடுங்கோ .... ப்ளீஸ் ]

  ReplyDelete