Monday 17 December 2012

அன்னை நான் அழலாமா?


IN AND OUT CHENNAI DEC 16 - 31 இதழில் வெளிவந்த என் கவிதை.  இங்கு உங்களுக்காக மீண்டும் பதிந்துள்ளேன்.

ஏர் கொண்டு உழுதாய்
விதை விதைத்தாய்
களை எடுத்தாய்
கதிர் அறுத்தாய்
போரடித்தாய்
வலிபல பொறுத்தேன்
வையத்து மக்கள்
பசி பிணி போக்கத்தானே,
வாய் வாழ்த்தாவிட்டாலும்
வயிறு வாழ்த்துமே என்று
வாளாதிருந்தேன்.

என்னை வெட்டிக் குழைத்து
மண்பாண்டம் செய்தாய்
பாவம் பிழைக்கத்தானே என்று
பேசாதிருந்தேன்
சோறு சமைக்கத்தானே என்று
சோகத்தை மறைத்திருந்தேன்
அகல் விளக்காக்கி அகமகிழ்ந்தாய்
இருள் நீக்கி ஒளியேற்றத்தானே
என்று அமைதியாய் இருந்தேன்
பலப்பல கனிமங்களை உனக்கு
வாரி வழங்கி உன் வாழ்க்கையை
வளமாக்கினேன்.

ஏரிகளையும், நீர் நிலைகளை தூர்த்தும்
வயல்வெளிகளை அழித்தும்
மாட மாளிகைகளையும்,
கூட கோபுரங்களையும் கட்டி
என் மேல் பாரத்தை ஏற்றினாய்.
என்னை அழகாக்கி
நீயும் மகிழ்கிறாய் என்று
பகல் கனவு கண்டிருந்தேன்.


ஆனால்
என் தோல் சுருங்கும் அளவுக்கு,
என் முகம் வாடும் அளவுக்கு
என் மனம் நோகும் அளவுக்கு
என் உடல் நாறும் அளவுக்கு,
குப்பை, கூளங்களைப் போட்டு,
நீர் வளங்களை சாக்கடையாக்கி
என்னை நிரந்தர
நோயாளி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!
என் கண்ணீரை வற்றாத
ஜீவநதி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!

அன்னை நான் அழலாமா?
என்னை நீ அழ விடலாமா?

19 comments:

  1. இந்தத்தங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    தங்கள் கற்பனை அபாரம்.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    சற்று நேரம் கழித்து மீண்டும் மீண்டும் வருவேன்.

    >>>>>>>>>

    ReplyDelete
  2. //வாய் வாழ்த்தாவிட்டாலும்
    வயிறு வாழ்த்துமே என்று
    வாளாதிருந்தேன்.//

    அற்புதமான அழகான சொல்லாடல் ! ;)))))

    சூப்பர் !

    >>>>>>

    ReplyDelete
  3. //என்னை வெட்டிக் குழைத்து
    மண்பாண்டம் செய்தாய்
    பாவம் பிழைக்கத்தானே என்று
    பேசாதிருந்தேன்

    சோறு சமைக்கத்தானே என்று
    சோகத்தை மறைத்திருந்தேன்

    அகல் விளக்காக்கி அகமகிழ்ந்தாய்
    இருள் நீக்கி ஒளியேற்றத்தானே
    என்று அமைதியாய் இருந்தேன்

    பலப்பல கனிமங்களை உனக்கு
    வாரி வழங்கி உன் வாழ்க்கையை
    வளமாக்கினேன்.//

    நிலத்தின் பேச்சில் தான் எவ்வளவு நியாயங்கள்!

    ஒவ்வொன்றையும் யோசித்து எழித்தோவியம் ஆக்கியுள்ள தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாராட்ட வார்த்தைகள் தேடுகிறேன். ஆனாலும் கிடைக்கவில்லை.

    >>>>>>>

    ReplyDelete
  4. //ஏரிகளையும், நீர் நிலைகளை தூர்த்தும்
    வயல்வெளிகளை அழித்தும்
    மாட மாளிகைகளையும்,
    கூட கோபுரங்களையும் கட்டி
    என் மேல் பாரத்தை ஏற்றினாய்.//

    ஆஹா இந்தச்செயலைத்தான் நிலமாகிய தாங்கள் கண்டிக்கப்போகிறீர்களோ என நினைத்தேன். ஆனால் .......

    //என்னை அழகாக்கி
    நீயும் மகிழ்கிறாய் என்று
    பகல் கனவு கண்டிருந்தேன்.//

    அதையும் கூட அழகுக்கு அழகு சேர்ப்பதாக நினைத்து மன்னித்து விட்டீர்களே!

    சபாஷ்!!

    >>>>>>>

    ReplyDelete
  5. //ஆனால்
    என் தோல் சுருங்கும் அளவுக்கு,
    என் முகம் வாடும் அளவுக்கு
    என் மனம் நோகும் அளவுக்கு
    என் உடல் நாறும் அளவுக்கு,
    குப்பை, கூளங்களைப் போட்டு,
    நீர் வளங்களை சாக்கடையாக்கி
    என்னை நிரந்தர
    நோயாளி ஆக்கிவிடுவாய்
    போலிருக்கிறதே!
    என் கண்ணீரை வற்றாத
    ஜீவநதி ஆக்கிவிடுவாய்
    போலிருக்கிறதே!

    அன்னை நான் அழலாமா?
    என்னை நீ அழ விடலாமா?//

    அச்சா! பஹூத் அச்சா!!

    படிக்கும் நமக்கே கண்கலங்குகிறது.

    மனித சமுதாயத்தை சிந்திக்க வைக்கும் அற்புதமான வரிகளில் அழகாக ஓர் கவிதை படைத்துள்ள தங்களின் தனித்திறமையை மனதார மானஸீகமாக வணங்கி மகிழ்கிறேன்.

    >>>>>>

    ReplyDelete
  6. பொதுவாக பிறர் எழுதும் 75% கவிதைகள் எனக்குப் புரிவதே இல்லை. பிடிப்பதும் இல்லை. அதனால் நான் அவற்றிற்கு கருத்து ஏதும் சொல்வதும் இல்லை. நானும் ஒருசில கவிதைகள் மட்டும் எழுதியுள்ளேன். வெளியிட்டும் உள்ளேன்.

    ஏனோ எனக்கு கவிதைகளில் அதிக நாட்டம் இல்லை. இந்தத்தங்கள் கவிதையைப்படித்ததும் என் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற்போல இருந்ததால் எனக்கு மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.

    IN AND OUT CHENNAI DEC 16 - 31 இதழில் வெளிவந்த உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. கோபாலகிருஷ்ணன் சார், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏதோ வானத்தில் பறப்பது போல் இருக்கிறது. சும்மா நல்லா இருக்குன்னு சொல்லாம, என் கவிதையை அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சு விமர்சனம் பண்ணிட்டீங்க.

      ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.

      உங்கள் விமர்சனம் என்னை மீண்டும், மீண்டும் எழுதத் தூண்டுகிறது.

      உங்கள் விமர்சனத்திற்கு தலை வணங்குகிறேன்.

      மிக்க நன்றி.

      Delete
    2. மிக மிக அருமையான கவிதை
      பூமித்தாயின் கூற்றாகச் சொல்லிப் போனது
      மிக மிக அருமை
      மனம் கவர்ந்த பதிவு
      தொடர வாழ்த்துக்கள்

      Delete
    3. அன்புள்ள மேடம். உங்களின் இந்தப்பதிவு திருமதி உஷா அன்பரசு அவர்களால் 25.12.2012 அன்று வலைச்சரத்தில் புகழ்ந்து பேசப்பட்டுள்ள்து. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      தாங்கள் தயவுசெய்து கீழ்க்கண்ட இணைப்புக்குச் சென்று அங்கு ஏற்கனவே நான் எழுதியுள்ள பின்னூட்டங்களைப் படித்து விட்டு தங்கள் கருத்துக்களைக்கூறவும்.

      http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_7102.html

      அன்புடன்
      VGK

      Delete
  7. கவிதை பிரமாதம். கடைசி வரிகள் ரொம்ப டச்சிங்.அறிமுகப் படுத்திய உஷா அன்பரசுவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. திரு முரளிதரன் அவர்களுக்கு வணக்கம்.
      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
      உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது என் மற்ற கதை, கவிதைகளையும் படித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பதியுங்கள்.
      நன்றி

      Delete
  8. ''..அன்னை நான் அழலாமா?
    என்னை நீ அழ விடலாமா?..''

    நல்ல கருத்துகள் சகோதரி.
    இனிய வாழ்த்து.
    வலைச்சர மூலம் வந்தேன்.
    வேதா. இலங்காதிலகம்..

    ReplyDelete
  9. கோவைக்கவி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
    கீழே கொடுத்துள்ள இணைப்பில் ‘ஈழம் மலரும்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளேன். படித்து கருத்து சொல்லுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது என் மற்ற கதை, கவிதைகளையும் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். என்னை செதுக்க உதவும் உங்கள் கருத்துக்கள்.
    http://manammanamviisum.blogspot.in/2012/11/blog-post_29.html

    ReplyDelete
  10. அன்னை நான் அழலாமா?
    என்னை நீ அழ விடலாமா?

    அன்னையை -பூமித்தாயை - உருக்குலைக்கும் மனிதர்களின் செயல் வருத்ததை பகிர்ந்த விழிப்புணர்வு கவிதை அருமை ..!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி ராஜி.

      Delete
  11. அருமையான கவிநயம், தங்கள் தளத்தை அறிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சிகள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி. தளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. என் படைப்புகளைப் படித்து உங்கள் மேலான கருத்துக்களை பதியுங்கள்

      Delete
  12. கவிதை மிகவும் அருமை! வலைச்சரம் மூலம் வந்தேன். உங்கள் பதிவை பின் தொடர்கிறேன். ஒய்வு கிடைக்கும்போது மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கவி பிரியன். நானும் நேரம் கிடைக்கும்போது உங்கள் வலைத்தளத்திற்கு வருகை தருகிறேன்.

      Delete