Sunday 2 December 2012

பார்வை

IN AND OUT CHENNAI FORTNIGHTLY DEC 1 - 15, 2012 இதழில் வெளியான என் சிறுகதை - பார்வை.  இங்கு மீண்டும் உங்களுக்காக பதிகிறேன்.

விதேஷ், ஒனக்கு எவ்வளவு தடவை படிச்சுப் படிச்சு சொன்னேன், உங்கம்மாவுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் குடுக்காதன்னு.  சொன்னா கேட்டியா? ‘நான் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப மிஸ் பண்ணறேன்.  பல ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கேன்.  ஸ்கைப்லயாவது உங்க ரெண்டு பேரையும் பார்த்து பேசுவேன்’  அப்டி, இப்டின்னு சொன்ன. போறாத்துக்கு பேஸ்புக், சாட், அது, இதுன்னு உங்கம்மாவுக்கு சொல்லிக்குடுத்துட்டு போயிட்ட. இப்ப என்ன ஆச்சு?  எப்பப்பாரு இண்டர்நெட், பேஸ்புக்.  என்னமோ கதை எழுதறேன், கவிதை எழுதறேன்னு கூத்தடிக்கறா.  என்னமோ இந்த சமுதாயத்தை இவ ஒருத்தியாவே திருத்திடற மாதிரி கட்டுரையா எழுதித் தள்ளிண்டிருக்கா.  எங்க ஆபீஸ்ல எல்லாரும் கிண்டலடிக்கறா.  என்ன சார், மேடம் எப்பவும் ஆன்லயன்லயே இருக்காங்களேன்னு.  எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கல.  இன்னி தேதிக்கு பேப்பர்ல SOCIAL NETWORK களப் பத்தி எவ்வளவோ போடறான்.  உலகத்துல என்னென்னமோ நடக்குது.   சொல்லவே நா கூசறது.  உங்கம்மா நல்லவளா இருக்கலாம்.  ஆனா மத்தவாள்ளாம் நல்லவாளா இருப்பான்னு சொல்ல முடியாது.  எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ? ஒண்ணு மட்டும் சொல்றேன்.  நாளைக்கு அந்த மாதிரி ஏதாவது பிரச்னைன்னு வந்ததுன்னு வெச்சுக்கோ நான் வந்து நிக்கவும் மாட்டேன்.  காப்பாத்தவும் மாட்டேன்.  இப்பவே சொல்லிட்டேன்.  நீயாச்சு, உங்கம்மாவாச்சு. கோடை மழை போல பட, படவென்று பேசிவிட்டு போனை வைத்தார் விதேஷின் அப்பா.

     ஒன்றுமே புரியவில்லை விதேஷுக்கு.  அப்பா என்ன பேசினார் என்பது புரியவே அவனுக்கு ஐந்து நிமிடம் ஆயிற்று.   “58 வயசுல அம்மாவுக்கு என்ன பிரச்னை வரும்.   அப்பதான் பளபளவென்று தேய்த்து சந்தனம், குங்குமம் வைத்து ஏற்றி வைத்த குத்து விளக்கு போல் பளிச்சென்று இருப்பாள் அம்மா.  அம்மா உடை உடுத்தும் விதத்தில் கூட ஒரு கண்ணியம்தான் தெரியும். எப்போதும் பார்த்தவர்கள் கையெடுத்துக் கும்பிடுவது போல்தான் இருப்பாள்.  அவளைப் பார்த்து தப்பான எண்ணம் கூட யாருக்காவது வருமா?  30 வருட தாம்பத்தியத்துக்குப்பிறகு எப்டி இப்டி எல்லாம் எண்ணத் தோணறது அப்பாவுக்கு. என்ன மனுஷன் இவர்.  என்ன கொடுமை இது?  அவர் குணம் அவ்வளவுதான்னு இந்த விஷயத்துல பேசாம இருக்கக்கூட முடியலயே. அம்மா ஒரு அன்னப்பறவை மாதிரி.  வாழ்க்கையில் எல்லாவற்றையும் அம்மா பாசிடிவாகவே எடுத்துக் கொள்வாள்.  நான் அம்மாவைப் புரிந்து கொண்டது கூட இவர் புரிந்து கொள்ளவில்லையா? என்ன கொடுமை இது!  ஆத்திரமும், கோபமும் முட்டிக்கொண்டு வந்தது விதேஷுக்கு.

     பெரிய குடும்பத்துல மூத்த மாட்டுப்பெண்ணா வாக்கப்பட்டு அப்பா சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி, ஏன் நல்ல கவர்மெண்ட் வேலையைக்கூட விட்டுட்டு வீடே கதின்னு கிடந்தா அம்மா. சித்தப்பா, அத்தைக்கெல்லாம் கல்யாணம் ஆகி, தாத்தா, பாட்டி காலமும் ஆகி, இப்பதான் 2,3 வருஷமா அம்மா கொஞ்சம் ப்ரீயா இருக்கா.  இவ்வளவு வருஷம் கழிச்சு இப்பதான் தனக்காகவும் கொஞ்சம் வாழ்ணும்கற எண்ணம் அம்மாவுக்கு வந்திருக்கு.  அது தப்பா?  
     ரெண்டு மூணு தடவை அப்பாவோட ஆபீஸ்ல நடந்த போட்டிகள்ல கலந்துண்டு அம்மா நிறைய பரிசா வாங்கிக் குமிச்சா.  அதுகூட பொறுக்க முடியாம அதுக்கப்பறம் அம்மாவை தன் ஆபீஸ் பக்கம் அழைச்சுண்டு போறதயே நிறுத்திட்டார் அப்பா.  அம்மா ரொம்ப நன்னா பாடுவா.  ஆனா அப்பா வீட்ல எல்லாரும் அம்மாவோட வாய மூடறதுலதான் குறியா இருந்தா.  அம்மாவுக்கு பல மொழிகள் தெரியும்.  அப்பா வீட்ல யாருக்கும் தமிழைத் தவிர எந்த மொழியும் தெரியாததால, அம்மாவை வேற எந்த நிகழ்ச்சியையும் தொலைக்காட்சியில பாக்க விடமாட்டாங்க.

     அம்மா, கோலம் போட்டா இன்னிக்கெல்லாம் பாத்துண்டிருக்கலாம்.  சின்ன வயசுல இருந்தே விதேஷ் தன் தாயின் செயல்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரசித்து, வியந்து வளர்ந்திருக்கான்.   விவரம் தெரிந்த வயதில் தான் விதேஷுக்குப் புரிந்தது, அம்மா தன்னுடைய எத்தனை ஆசைகளையும், ஆற்றல்களையும் ஆழக்குழி தோண்டி அழுந்தப் புதைத்திருக்கிறாள் என்று. ஆனால் என்ன கஷ்டம் வந்தாலும் அதை சிரித்தபடி சமாளிக்கும் அம்மாதான் அவனுக்கு முன் மாதிரி. 
* * *

     வேலைப் பளுவால் இதையெல்லாம் விதேஷ் மறந்திருந்த போது அவன் அம்மாவிடமிருந்து அவனுக்கு போன் வந்தது.  “விதேஷ், அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு.   அப்பாவுக்கு நாலு, அஞ்சு ப்ளாக் இருக்காம்.  கண்டிப்பா ஆபரேஷன்  செய்யணுமாம்.  இன்னும் 10 நாளில் ஆபரேஷன். அது வரைக்கும் மருந்தெல்லாம் குடுத்திருக்கா. உன்னால முடிஞ்சா வா. இல்லைன்னா நான் பார்த்துக்கறேன்”.

     இதுதான் அம்மா. எதையும், எல்லாத்தையும் சமாளிப்பா.  “இல்லம்மா, ஏற்கனவே நானே அங்க வர ப்ளான் பண்ணி இருந்தேன்.  சர்ப்ரைசா இருக்கட்டும்.  கிளம்பறச்சே சொல்லலாம்ன்னு நினைச்சேன்.  ஆபரேஷனுக்கு முன்னாடி கண்டிப்பா வந்துடுவேன்மா

             ”சரி விதேஷ்.  நான் மறுபடியும் போன் செய்யறேன்.
* * *
     இன்னும் ஒரு 4, 5 மணி நேரத்தில ஊருக்குப் போய் சேர்ந்துடலாம்.   சே.  என்ன ஒரு மனுஷன் நான்.  அப்பாவோட ப்ளட் க்ரூப் ரொம்ப அபூர்வமானதாச்சே. ஆபரேஷனுக்கு ப்ளட் ஏதாவது ஏற்பாடு பண்ணணுமா என்ன ஏதுன்னு அம்மாகிட்ட கேக்கவே இல்லையே.  ஏர்போர்ட்ல இறங்கினதும் முதல்ல அம்மாக்கு போன் செய்யணும்”.
* * *
     டேய் தினேஷ், நீ எங்கடா வந்த

     நேத்து தாண்டா எங்க ஆபீஸ் ப்ரெண்ட்ஸெல்லாம் சொன்னாங்க. ஒரு ஆபரேஷனுக்கு இரத்தம் வேணும்ன்னு.  இங்க வந்து பாத்தா உங்க அப்பாவுக்கு ஆபரேஷன்.  நீயும் இன்னிக்கு வந்துடுவேன்னு அம்மா சொன்னாங்க.   நான் காலையிலயே வந்துட்டேன். நான் ஒரு வாரம் லீவு எடுத்திருக்கேன்.  உன் கூடவே இருக்கேண்டா.  இப்ப என் கூட எங்க ஆபீஸ்ல வேலை செய்யறவங்க எல்லாம் வந்துடுவாங்க.   அப்பாவோட இரத்தம் அபூர்வமா இருந்தாலும் எங்க ஆபீஸ்ல இருக்கற 2,3 பேருக்கு அதே க்ரூப்தான்.  ரொம்ப ஆச்சரியமான விஷயம்.  விதேஷ், இதுல ஒரு ஜோக் என்னன்னா என் நண்பர்கள் எல்லாம் அம்மாவோட பேஸ்புக் நண்பர்களாம்.  இதோ வந்துட்டாங்க.  வா, உனக்கு அறிமுகப் படுத்தறேன்.

          வேகமாக வந்த திலீப் என்ற பையன் வடநாட்டு பாணியில் அம்மாவின் காலைத் தொட்டு ஒற்றிக் கொண்டான்.   மற்றவர்கள் எல்லாம், அம்மா, அம்மா என்று ஏதோ ரொம்ப காலம் பழகியவர்கள் போல் அம்மாவிடம் பேசினார்கள்.  அத்துடன் அப்பாவையும் அருகில் வந்து, ‘அப்பா, எப்படி இருக்கிறீர்கள்என்று உரிமையுடன் விசாரித்தார்கள்.   சொல்லி வைத்தது போல் அனைவரும் ‘கவலையே படாதீங்க அம்மா.  நாங்க எல்லாரும் இருக்கோம்என்றார்கள்.

     சட்டென்று தலையைத் திருப்பி அப்பாவைப் பார்த்தான் விதேஷ்.  குறு குறுவென்று பார்த்த மகனின் பார்வையின் தீட்சண்யம் தாங்காமல் தந்தை தலை குனிந்தார் விதேஷின் அப்பா.
      

11 comments:

  1. ஜெயந்தி மாமி ரொம்ப அருமையா இருக்கு உங்க கதை... ரொம்ப நல்லா எழுதறீங்க..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி Priya ram

      Delete
    2. //அப்பாவோட இரத்தம் அபூர்வமா இருந்தாலும் எங்க ஆபீஸ்ல இருக்கற 2,3 பேருக்கு அதே க்ரூப்தான். ரொம்ப ஆச்சரியமான விஷயம். விதேஷ், இதுல ஒரு ஜோக் என்னன்னா என் நண்பர்கள் எல்லாம் அம்மாவோட பேஸ்புக் நண்பர்களாம். இதோ வந்துட்டாங்க. வா, உனக்கு அறிமுகப் படுத்தறேன்.”//

      இன்றைய நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் ஏற்படும் நன்மை தீமைகளை நயம்பட எடுத்துச்சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

      புதிய பதிவுகள் வெளியிடும்போது மெயில் மூலம் தகவல் அளித்தால், எனக்கு நேரமும் மற்ற சூழ்நிலைகளும் ஒத்து வந்தால் கண்டிப்பாக வருகை தந்து கருத்து அளிப்பேன்.

      அன்புடன் VGK
      e-mail ID : valambal@gmail.com

      Delete
  2. //அம்மா, கோலம் போட்டா இன்னிக்கெல்லாம் பாத்துண்டிருக்கலாம்.’ சின்ன வயசுல இருந்தே விதேஷ் தன் தாயின் செயல்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரசித்து, வியந்து வளர்ந்திருக்கான். விவரம் தெரிந்த வயதில் தான் விதேஷுக்குப் புரிந்தது, அம்மா தன்னுடைய எத்தனை ஆசைகளையும், ஆற்றல்களையும் ஆழக்குழி தோண்டி அழுந்தப் புதைத்திருக்கிறாள் என்று. //

    அருமையான வரிகள். ஒரு கதாபாத்திரத்தின் பலம்+பலகீனம் நன்கு இந்த வரிகளில் விளக்கப்பட்டுள்ளன.

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. கோபால கிருஷ்ணன் சார். இன்று காலைதான் நினைத்தேன்.
      FACEBOOK இலும் இந்தக் கதையை பதிந்திருந்தேன். எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் ”தெரிந்த வயதில் தான் விதேஷுக்குப் புரிந்தது, அம்மா தன்னுடைய எத்தனை ஆசைகளையும், ஆற்றல்களையும் ஆழக்குழி தோண்டி அழுந்தப் புதைத்திருக்கிறாள் என்று”. ஏன்னா நம்ம வீடுகளில் எத்தனையோ அம்மாக்கள், பாட்டிகள், அத்தைகள், சித்திகள், அக்காக்கள், தங்கைகள் இது போல் தங்கள் ஆசைகளையும், ஆற்றல்களையும் குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள். இந்த வரிகளை யாரும் ரசிக்கவில்லையே என்று. உங்கள் பதிவைப் பார்த்ததும், இதுஉங்கள் பதிவு ஒன்றே போதும் என்று தோன்றி விட்டது.
      மனமார்ந்த நன்றிகள் சார்.

      Delete
  3. //அப்பாவோட இரத்தம் அபூர்வமா இருந்தாலும் எங்க ஆபீஸ்ல இருக்கற 2,3 பேருக்கு அதே க்ரூப்தான். ரொம்ப ஆச்சரியமான விஷயம். விதேஷ், இதுல ஒரு ஜோக் என்னன்னா என் நண்பர்கள் எல்லாம் அம்மாவோட பேஸ்புக் நண்பர்களாம். இதோ வந்துட்டாங்க. வா, உனக்கு அறிமுகப் படுத்தறேன்.”//

    இன்றைய நவீன தொழில்நுட்பங்களில் + தகவல் தொடர்பு சாதனங்களில் உள்ள நன்மை தீமைகளை வெகு அழகாக விளக்கியுள்ளீர்கள், இந்தப்படைப்பில்.

    எதையுமே நாம் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் தான் நன்மையோ தீமையோ நம்மை வந்தடைகிறது.

    மிகச்சிறந்த படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    தங்களின் புதிய பதிவுகள் வெளியிடும்போது எனக்கு மெயில் மூலம் லிங்க் அனுப்பினீர்களானால் நல்லது. எனக்கு நேரமும், உடல்நிலையும், மன நிலையும் மகிழ்ச்சியாக இருந்து, மின்சாரமும் கணினியும் ஒத்துழைத்தால் நிச்சயமாக வருகை தந்து கருத்தளிப்பேன்.

    என் மெயில் விலாசம்: valambal@gmail.com

    கட்டாயம் இல்லை. விரும்பினால் அனுப்புங்கோ. இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மேடம்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. //கட்டாயம் இல்லை. விரும்பினால் அனுப்புங்கோ. இல்லாவிட்டாலும் பரவாயில்லை, மேடம்.//

      கண்டிப்பாக அனுப்புகிறேன் சார். உங்களின் அனுபவமும், விமர்சனமும் எங்களைப் போன்றவர்களுக்குக் கண்டிப்பாக தேவை.

      Delete
  4. என்ன சார், மேடம் எப்பவும் ஆன்லயன்லயே இருக்காங்களேன்னு. //

    நம்ம வீடுகளில் எத்தனையோ அம்மாக்கள், பாட்டிகள், அத்தைகள், சித்திகள், அக்காக்கள், தங்கைகள் இது போல் தங்கள் ஆசைகளையும், ஆற்றல்களையும் குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள்..//

    நிதர்சனமான கதை ,,அருமையான படைப்பாற்றலுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ராஜி

      Delete
  5. http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
    வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.

    ReplyDelete
  6. positive approach superb

    ReplyDelete