Monday 15 October 2012

தவிப்பு - ஜெ மாமி

 அறுசுவையில் வெளிவந்த என்னுடைய மற்றொரு கதை.
உங்களுக்காக இங்கு மீண்டும் பகிர்கிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/21416

தவிப்பு - ஜெ மாமி
வழக்கம் போல் பள்ளிக்கூட வாசலில் இறக்கிவிட்ட கணவர் காந்திநாதனிடம், “ஏங்க எவ்வளவு சொல்லியும் கேக்காம இப்படி செய்துட்டீங்களே! ஒரு வெள்ளிக்கிழமை இரவு சொல்லி இருந்தா கூட சனி, ஞாயிறு அவ கூட இருந்து அவள சமாதானப் படுத்தி இருப்பேனே! நாம ரெண்டு பேருமே விடுப்பு எடுக்க முடியாத இந்த நேரத்தில் சொல்லிட்டீங்களே! நீங்க சொன்னதைக் கேட்டதும் நம்ப மகள் யாழினியின் முகம் போன போக்கு, அந்தப் பரிதாபமான முகம், எனக்கு இப்பவும் வயிற்றைப் பிசையுதுங்க..... குழந்தை என்ன செய்வாளோ? ராத்திரி முழுக்க அவ தூங்கவே இல்லைன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி ஒரு நாள் கூட காலையில 9 மணி வரைக்கும் அவ தூங்கி நாம பார்த்ததே இல்லையே. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க!” என்று பொரிந்து கொட்டினாள் அமுதா.

“இங்க பார் அமுதா, எனக்கு நம்ப மக மேல முழு நம்பிக்கை இருக்கு. நாம என்ன அவளை கோழையாவா வளர்த்திருக்கோம். அப்புறம் என்ன பயம். சரி நான் கிளம்பறேன், சாயங்காலம் நீ பேருந்தில வீட்டுக்குப் போயிடு. எனக்கு பள்ளியில் மாலை ஒரு கூட்டம் இருக்கு. நான் வர கொஞ்சம் நேரமாகலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் காந்திநாதன்.

கணவரின் பேச்சு ஓரளவு சமாதானப் படுத்தினாலும் இவரால் எப்படி இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது என்று யோசிக்க யோசிக்க சலிப்பாகவும் இருந்தது அமுதாவுக்கு.


                                                                                       ***

முதல் இரண்டு வகுப்புகளும் பனிரெண்டாம் வகுப்பு என்பதால் மும்முரமாக பாடம் எடுப்பதில் ஆழ்ந்து விட்ட அமுதா இடைவேளையில் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அது விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. மகளின் கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது ”நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து சிறிது நேரத்திற்குப் பிறகு தொடர்பு கொள்ளவும்” என்று வந்த வாசகத்தைக் கேட்டதும் அமுதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனசு சரியில்லாததால் காலையிலும் சரியாக சாப்பிடவில்லை. வயிறு வேறு என்னையும் கொஞ்சம் கவனியேன் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. இரண்டு வாய் அள்ளிப் போட்டுக்கொண்டு தலைமை ஆசிரியரைப் பார்த்து அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று நினைத்தபோதே பள்ளியின் ஆயா வந்து, “அமுதா அம்மா உங்கள தலைமை ஆசிரியர் ஐயா அவர் அறைக்கு வரச்சொன்னார்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அப்பொழுதே புரிந்து விட்டது அமுதாவிற்கு, கண்டிப்பாக அரை நாள் விடுப்பு எடுக்க முடியாது என்று. கணவரின் கைப்பேசியில் தொடர்பு கொண்டால் “நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்” என்றே குரல் வந்து கொண்டிருந்தது.

தலைமை ஆசிரியர் இட்ட பணிகளை முடித்துவிட்டு அவரிடம் அனுமதி பெற்று அமுதா கிளம்பிய போது மாலை மணி நான்கு ஆகி விட்டது. அப்பொழுதும் தொலைபேசியில் கணவரையும், மகளையும் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே அமுதா ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்திற்குச் சென்றாள். நல்லவேளையாக அவள் செல்லவேண்டிய பேருந்து கிளம்பத் தயாராக இருந்தது. பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி அமர்ந்தாள் அமுதா.
இறைவா தயவு செய்து எங்கள் மகளை எங்களிடமிருந்து பிரித்து விடாதே. உன்னைத்தான் மலை போல் நம்பி இருக்கிறேன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

குழந்தை பாவம் பள்ளி இறுதித் தேர்வில் 1200க்கு 1179 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவதாகவும் மாநிலத்தில் மூன்றாவதாகவும் வந்திருக்கிறாள். அந்த மகிழ்ச்சியைக்கூட நீடிக்கவிடாமல் இப்படி செய்துவிட்டாரே என்று கணவரை நொந்து கொண்டாள். பாவம் அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும். எவ்வளவு சொல்லியும் இந்த நேரத்தில் சொன்னால்தான் அவளால் இந்த விஷயத்தை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லிவிட்டாரே என்று மனதிற்குள் புலம்பினாள் அமுதா.
அமுதா இறங்க வேண்டிய இடம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி வழக்கம் போல் நடந்து செல்லாமல் ஆட்டோவில் ஏறி வீட்டிற்குச் சென்றாள். வீட்டு வாசலில் கணவனின் இரு சக்கர வாகனம் இருப்பதைப் பார்த்ததும் என்ன ஆயிற்றோ என்று மனம் பதைத்து மாடிப் படிகளில் தனக்கு 58 வயது என்பதையும் மறந்து இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறினாள். தன் இதயத் துடிப்பு அதிகமாவதையும் அவள் உணர்ந்தாள். அழைப்பு மணியை அழுத்தினாள். உடனே கதவு திறக்கப்படாததால் படபடவென்று கதவை தட்டினாள். அந்த இரண்டு நிமிட தாமதத்தைக்கூடப் பொறுக்க மாட்டாமல் பதறினாள்.

கதவைத் திறந்த கணவரிடம், “யாழினி எங்கே?” என்று பதற்றமாகக் கேட்டாள். “அம்மா” என்று அழைத்துக்கொண்டு வந்த யாழினி, “அம்மா நான் மொத மொதல்ல போண்டாவும், கேசரியும் செய்திருக்கேன். முகம் கழுவிட்டு வாங்கம்மா. நம்ப மூணு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்” என்று கூப்பிட, மகளைப் பார்த்து திரு திரு என்று விழித்தாள் அமுதா.

மகள் கையில் கொடுத்த தட்டை வாங்கிக் கொண்டு சாப்பிடாமல் கிட்டத்தட்ட அழும் நிலைக்கே போய் விட்டாள் அமுதா. அவள் அருகில் வந்து அமர்ந்த யாழினி, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “அம்மா, அப்பா என்கிட்ட நான் உங்களோட சொந்த மகள் இல்ல அனாதை இல்லத்தில இருந்து தத்து எடுத்து வளர்க்கிற வளர்ப்பு மகள்தான்னு சொன்னதும் ஆடித்தான் போயிட்டேன். கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல. அழுகையும் கோபமும் முட்டிக்கிட்டு வந்துச்சு. ஆனா நீங்க ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துக்கு போனதுக்கப்புறம் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேந்து நடந்ததையெல்லாம் யோசிச்சுப் பாத்தேன். அத்தோட அம்மா, நீங்களும் அப்பாவும் ராத்திரி நான் தூங்கிட்டேன்னு நினைச்சு பேசினதை நான் கேட்டேன். அம்மா உங்களை விட்டு நான் போயிடுவேன்னு எப்படிம்மா நினைச்சீங்க.
அம்மா நம்ப மூணு பேரையும் ஒண்ணா பார்க்கிறவங்க, உங்க மக யார் சாயல், உங்க ரெண்டு பேர் மாதிரியும் இல்லயேன்னு கேக்கும்போதெல்லாம் அப்பா அவ அப்படியே என் அம்மா தான். என் அம்மாவே எனக்கு மகளா வந்து பிறந்திருக்கான்னு சொல்லுவாரே. என்னயும் அம்மான்னு தானே கூப்பிடுவார். ஒரு அனாதைக்கு இவ்வளவு பெரிய கௌரவத்தை கொடுத்திருக்கிற இந்த அப்பாவை விட்டுப் போக எனக்கு எப்படி மனசு வரும்?.
நீங்க மட்டும் என்ன அம்மா. என்னை மருத்துவக்கல்லூரியில சேர்க்கணும்ங்கறதுக்காக இத்தனை வருஷங்களா உங்களுடைய சுகத்தை எல்லாம் குறைச்சுக்கிட்டு குருவி சேர்க்கற மாதிரி பணத்தை சேர்த்து வெச்சிருக்கீங்களே. வங்கியில கூட கடன் வாங்காம என்னை படிக்க வைக்கணும்ன்னு சொல்லுவீங்களே. உங்க ரெண்டு பேரோட உலகமே நான் தானே. இன்னிக்கு நான் இவ்வளவு மதிப்பெண் வாங்கினதுக்கு, நாளைக்கு உங்க எண்ணப்படியே மருத்துவர் ஆகப் போறதுக்கு, எல்லாத்துக்குமே நீங்க தானே காரணம். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்ங்கறதையே ஒரு லட்சியமா நினைக்கிற உங்களை விட்டு எப்படிம்மா........”

”அது வந்தும்மா! யாழினி! நான் வந்து.....”

“சரி விடுங்கம்மா, என்னைப் பொறுத்தவரைக்கும் என்றைக்குமே நீங்கதான் என் அம்மா, அப்பா. நான் போய் காப்பி போட்டுக்கிட்டு வரேன்.” என்று சமையலறைக்குச் சென்றாள் யாழினி.

“அமுதா”

“ஏங்க அது வந்து...”

“நீ என்ன கேக்கப்போறேன்னு புரியுது. காலையில இருந்து நம்ப தெருவில பராமரிப்புக்காக மின்வெட்டு. நம்ப பொண்ணோட கைப்பேசியில மின்னூட்டம் இல்லை. நம்ப பொண்ணு எண்ணை வாங்க கடைக்குப் போன சமயம் பார்த்து நீ வீட்டு தொலைபேசியில கூப்பிட்டிருக்க. என் கைப்பேசியில சிக்னல் கிடைக்கல. அதனால உன்னால என்னையும் தொடர்பு கொள்ள முடியாமல் போயிருந்திருக்கலாம். வெளியூர் போன அதிகாரி திரும்பி வராததால கூட்டமும் ரத்தாயிடுத்து. உன்னை மாதிரியே எனக்கும் மனசு கஷ்டமா இருந்தது. அதனாலதான் உன் பள்ளிக்கூடத்துக்குக்கூட வராம நேர வீட்டுக்கு வந்துட்டேன். இந்த விஷயத்தையெல்லாம் தொலைபேசியில தொடர்புகொண்டு உன் கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்ச போது நீயும் வந்துட்ட. போதுமா? இதுக்கு மேல ஒண்ணும் கேக்காம கேசரியையும், போண்டாவையும் சாப்பிடு,” என்றார் காந்திநாதன்.

காலையில் இருந்து தவித்த தவிப்பிற்கு ஒரு முற்றுப் புள்ளி வரவே நிம்மதிப் பெருமூச்சு விட்ட அமுதா இந்த சின்ன பெண்ணுக்கு இருக்கற முதிர்ச்சி கூட தனக்கு இல்லையே என்று வருந்தினாள்.

12 comments:

  1. நல்ல கதை...

    நாம் இந்தக் கால குழந்தைகளிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க... கதை நல்லா இருக்கு ஜே மாமி.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரியா ராம்

      Delete
  3. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளையும் மிக நன்றாக சித்தரித்து எழுதி இருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள் ஜெயந்தி!

    ranjaninarayanan.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete
    2. #

      வாவ். ரொம்ப அருமையான பதிவு. நேரேயே அருவிக்குச்சென்று பார்த்தது போல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள்

      #சந்திர வம்சம்November 2, 2012 11:50 PM

      முதல் வருகைக்கு மிக்க நன்றி. பிடியுங்க பூங்க்கொத்து![எனது தாமரைமதுரையில்]

      Delete
    3. அழகான அருமையான படைப்பு இந்த சிறுகதை.
      சொல்லிச்செனற விதமும் சிறப்பாகவே உள்ளது.
      பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

      Delete
  4. சந்திர வம்சம்
    பூங்கொத்துக்கு மிக்க நன்றி.
    நான் உங்கள் ப்ளாகில் FOLLOWER ஆகிவிட்டேன். நீங்களும்.............
    நன்றி

    ReplyDelete
  5. கோபால கிருஷ்ணன் சார்
    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
    உங்கள் பாராட்டுக்கள் என் எழுத்துக்களுக்கும் மிக்க ஊக்கம் அளிக்கிறது.
    மிக்க நன்றி சார்

    ReplyDelete
  6. //அம்மா நம்ப மூணு பேரையும் ஒண்ணா பார்க்கிறவங்க, உங்க மக யார் சாயல், உங்க ரெண்டு பேர் மாதிரியும் இல்லயேன்னு கேக்கும்போதெல்லாம் அப்பா அவ அப்படியே என் அம்மா தான். என் அம்மாவே எனக்கு மகளா வந்து பிறந்திருக்கான்னு சொல்லுவாரே. என்னயும் அம்மான்னு தானே கூப்பிடுவார். ஒரு அனாதைக்கு இவ்வளவு பெரிய கௌரவத்தை கொடுத்திருக்கிற இந்த அப்பாவை விட்டுப் போக எனக்கு எப்படி மனசு வரும்?. //

    முத்திரை பதித்த வரிகள். சிறப்பான பாராட்டுக்கள். அன்புடன் VGK

    ReplyDelete
  7. மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் சார்.

    ReplyDelete