Monday, 15 October 2012

நெட்டில் ஏதோ தேடும் போது ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பார்க்க நேர்ந்தது.
இந்த நேரத்தில் கடன் வாங்கியவர்கள் அதில் சிறு தொகையை திருப்பி செலுத்தினால் கடன் விரைவில் தீர்ந்து விடும் என்று போட்டிருந்தது.  அப்பொழுது உதயமானதுதான் அறுசுவை.காமில் வெளி வந்த என்னுடைய இந்த  சிறுகதை. உங்களுக்காக இங்கு மறுபடியும் வெளியிடுகிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/19102

‘மைத்ர முகூர்த்தம்’


“ஏங்க, விஜிதா தாங்க பேசறேன். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அப்புறம் மறந்துட்டேன்னா கஷ்டம். ப்ளீஸ்”

“என்ன விஜி பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கு. சரி சரி சொல்லு. இப்பதான் சாப்பிட ஆரம்பிச்சேன். நம்ப ரெண்டு பேரும் முக்கியமான விஷயங்கள பேசிக்கறதே மதிய சாப்பாட்டு நேரத்தில தான. சரியான நேரத்தில தான் கூப்பிட்டிருக்க. நீ சாப்பிட்டுட்டயா?”

“நானும் இப்பதான் சாப்பிட ஆரம்பிச்சேன். அது வந்துங்க. இன்னிக்கு நெட்ல ஒரு விஷயம் பார்த்தேன். மைத்ர முகூர்த்தம்னு ஒரு நேரம் இருக்காம். இந்த நேரம் ஒரு தமிழ் மாசத்தில அதிக பட்சமா மூணு நாள் வருமாம். அந்த மூணு நாள்ல, ஒவ்வொரு நாளும் அதிக பட்சமா ரெண்டு மணி நேரம் வரை இருக்குமாம். இந்த நேரத்தில் நாம்ப வாங்கின கடன்ல அசல்ல ஒரு பங்கை திருப்பி செலுத்தணுமாம். அப்படி செலுத்தினா, கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சீக்கிரம் தீர்ந்துடுமாம்.”

”அதுக்கென்ன விஜி இப்ப”

“அது வந்துங்க, நாளைக்கு 09:45ல இருந்து 11:45 வரைக்கும் அந்த நேரமாம். இப்பவே சொன்னாதான நீங்க வங்கியில இருந்து பணத்தை எடுத்து வெச்சு நாளைக்கு கடன் அட்டை, வீட்டுக்கடன் எல்லாத்துக்கும் கட்ட முடியும். அதனால தாங்க போன் செய்தேன்.”

"அது எப்டி விஜி, இந்த மாதிரி விஷயம் எல்லாம் உன் கண்ணுல மட்டும் படுது. சரி சரி எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லயோ உனக்காக கண்டிப்பா செய்யறேன், சரியா”. என்று கைப்பேசி பேச்சை முடித்தான் ராகவன்.

                                                                                ***

ராகவனும், விஜிதாவும் வெவ்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தம்பதிகள். ஆஸ்திக்கொரு ஆண், ஆசைக்கொரு பெண் என்ற பழமொழிக்கேற்ப ஒரு ஆண் குழந்தைக்கும், ஒரு பெண் குழந்தைக்கும் பெற்றோர். அன்பான, அளவான குடும்பம்.

அடிப்படையில் ராகவன் மிகவும் நல்லவன். ஆனால் சற்று செலவாளி. மேலும் கண்ணில் பட்டதை எல்லாம் சட்டென்று வாங்கிவிடும் பழக்கம் உள்ளவன். எதையும் நினைத்தவுடன் செய்ய வேண்டும் என்று நினைப்பவன். திருமணமான புதிதிலேயே தாம்பரத்தின் அருகில் 2 கிரவுண்டு நிலம் வாங்கி சொந்த வீடு கட்டி குடிபோய் விட்டனர். விஜிதா சொல்லச் சொல்ல கேட்காமல் மேன்மேலும் கடன் வாங்கி இரண்டு மாடியும் கட்டிவிட்டான் ராகவன்.
விஜிதா, “ஏங்க ஆனை அசைந்து திங்கும். வீடு அசையாமல் திங்கும்னு பெரியவங்க சொல்வாங்க. நீங்க இப்படி நாம ரெண்டு பேரும் சம்பாதிக்கற பணத்துல பெரும் பகுதியை வீட்டுலயே போடறீங்களே. கொஞ்சமாவது கையில காசு வேண்டாமா? புறநகர்ல இருக்கறதால வாடகையும் ரொம்ப கம்மியாதான் வருது. நம்ப பொண்ணும் பத்தாவது வந்துட்டா. நாம்ப வேற முதல்ல பொண்ண பெத்திருக்கோம். அவ கல்யாணத்துக்கு ஏதாவது சேக்க வேண்டாமா? இப்டி மாடி மேல மாடி கட்டறதுக்கு பதிலா எங்கயாவது ரெண்டு காலி மனை வாங்கி போட்டிருந்தாலும் கல்யாணத்தும் போது வித்துக்கலாம். பையன் ஆறாவதுதான் படிக்கறான்னாலும் அவன் படிப்புக்கும் செலவழிக்க வேண்டாமா? நமக்கு என்ன பூர்வீக சொத்துன்னு எதாவது இருக்கா? எதையுமே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே!”னு சொல்லிச் சொல்லி இப்பதான் ராகவனுக்கு கடனையெல்லாம் அடைச்சுட்டு கையில நாலு காசு வெச்சுக்கணும்ங்கற விஷயமே உறைக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த நேரத்தில தான் விஜிதா மைத்ர முகூர்த்தத்தை பத்தி அவன் காதில் போட்டிருக்கிறாள்.
மறுநாள் காலையில் விஜிதா சொன்ன நேரத்தில் கிரெடிட் கார்டுக்கும், வீட்டுக் கடனுக்கும் பணத்தை செலுத்திவிட்டு வந்தான் ராகவன்.

                                                                               ***
6 மாதம் கழித்து ஒரு நாள் ராகவன் மும்முரமாக அலுவலக வேலையில் ஈடுபட்டிருந்தபோது வரவேற்பு அறையில் அவனை சந்திக்க ஒருவர் வந்து காத்திருப்பதாக செய்தி வந்தது. யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வரவேற்பு அறைக்குச் சென்றான். 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ராகவன் அருகில் வந்ததும் இரு கை கூப்பி “தம்பி நீங்கதான் ராகவனா? உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி” என்றார்.

ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தான் ராகவன். அவர், “தம்பி நான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன். ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தையெல்லாம் இந்த அலுவலகத்துல வேலை பார்க்கறவங்களுக்கு கடனா கொடுத்திருந்தேன். 4 வருஷம் முடிஞ்சு போச்சுங்க தம்பி. அசல்ல ஒரு பைசா கூட திரும்பி வரல. ஏதோ நீங்க சொன்னீங்களாம். ஒரு குறிப்பிட்ட நேரத்துல கொஞ்சம் அசலை செலுத்தினா சீக்கிரமா கடன் தீர்ந்துடும்னு. ஆறே மாசத்துல எல்லா பணமும் திரும்பி வந்துடுச்சு தம்பி. அடுத்த மாசம் என் பேத்திக்கு திருமணம் நடக்கப் போகுது. அவ குழந்தையா இருக்கும் போதே என்னோட ஒரே மகனும், மருமகளும் ஒரு விபத்துல இறந்துட்டாங்க. நான் தான் என் பேத்திய வளக்கறேன். அவ திருமணத்தை எப்படி சமாளிக்கப்போறேனோன்னு கலங்கி நின்னேன். நீங்க தான் தெய்வம் மாதிரி வந்து உதவி செய்திருக்கீங்க. நீங்க நல்லா இருக்கணும் தம்பி” என்று சொல்லிவிட்டு ராகவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் நன்றி சொல்லி விட்டு இனிப்புகள் அடங்கிய ஒரு பெட்டியை அவன் கையில் கொடுத்து விட்டுச் சென்றார்.

”பரவாயில்லையே! வாங்கின கடன் தான அடையும்னு விஜி சொன்னா. குடுத்த கடனும் வசூலாயிடுத்தா.” என்று ஆச்சரியப்பட்டான் ராகவன். ஒரு வினாடி சுதாரித்து “அட மக்கு ஒருத்தருக்கு வாங்கின கடன்னா இன்னொருத்தருக்கு குடுத்த கடன் தானே. மகிழ்ச்சில இதுகூட எனக்கு புரியலயே” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
அதே போல் ராகவனிடம் அவனது அலுவலத்தில் பணிபுரியும் சிலர் தங்கள் கடன்கள் எல்லாம் அடைந்து விட்டதாகக் கூறி நன்றி தெரிவித்தனர்.
“அது சரி விஜிதா என் கிட்ட சொன்னது எப்படி இவங்களுக்குத் தெரிஞ்சுது. நான் யார் கிட்டயும் சொன்னதா தெரியலயே. ஓ நம்ப ஓட்ட வாய் ராமுதான அன்னிக்கு வங்கிக்கு கூட வந்தான். அவன் கிட்ட மட்டும் தானே நான் இந்த விஷயத்தை சொன்னேன். அவன்தான் எல்லாருக்கும் சொல்லி இருக்கணும். அவன் ஓட்ட வாயா இருக்கறதால நன்மையும் நடந்திருக்கே. ”.

                                                                                  ***

மாலையில் வீட்டிற்குள் நுழைந்த ராகவனிடம் விஜிதா, ”ஏங்க, நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்ங்க” என்றாள்.

ராகவன், “அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல இதப்புடி” என்று 2 புதிய புடவைகள் அடங்கிய பொட்டலத்தையும், இனிப்புகள் அடங்கிய பொட்டலத்தையும் கொடுத்து “விஜி இன்னிக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்று சொல்லி அலுவலகத்தில் நடந்ததைச் சொல்லிவிட்டு “சரி நீ என்னவோ சொல்லணும்ன்னு சொன்னியே, இப்ப சொல்லு” என்றான்.

“அது ஒண்ணும் இல்லீங்க. உப்பு சப்பு இல்லாத சமாசாரம். இருங்க காபி கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக சமையலறைக்குள் சென்றாள்.

அவள் சொல்ல வந்து சொல்லாம போனது என்னன்னு நான் உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்லட்டுமா? அது இதுதான். “ஏங்க. நான் ஒரு தப்பு செஞ்சுட்டேன். அன்னிக்கு மைத்ர முகூர்த்தம்ன்னு சொன்னேனே அது காலை 09:45ல் இருந்து 11:45 இல்லையாம். ராத்திரி 09:45ல் இருந்து 11:45 வரையாம்.”
காபியுடன் முன்னறைக்கு வந்த விஜிதா, அவர்கள் வீட்டு தொலைகாட்சிப் பெட்டியில் ஓடிக்கொண்டிருந்த ”கறை படறதுனால நல்ல விஷயம் நடந்தால் கறை நல்லது தானே… ...” விளம்பரத்தைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

4 comments:

 1. Replies
  1. நன்றி விஜயேந்திரன் சார்

   Delete
  2. //“அட மக்கு ஒருத்தருக்கு வாங்கின கடன்னா இன்னொருத்தருக்கு குடுத்த கடன் தானே. மகிழ்ச்சில இதுகூட எனக்கு புரியலயே” //

   நம்பிக்கையளித்த நல்லதொரு படைப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

   //அவள் சொல்ல வந்து சொல்லாம போனது என்னன்னு நான் உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்லட்டுமா? அது இதுதான். “ஏங்க. நான் ஒரு தப்பு செஞ்சுட்டேன். அன்னிக்கு மைத்ர முகூர்த்தம்ன்னு சொன்னேனே அது காலை 09:45ல் இருந்து 11:45 இல்லையாம். ராத்திரி 09:45ல் இருந்து 11:45 வரையாம்.”//

   இந்த வரிகளை கடைசியாக ஓர் நகைச்சுவைக்காக மட்டுமே தாங்கள் சேர்த்திருந்தாலும், இவை தேவையில்லை என்பதே என் அபிப்ராயம் மேடம்.

   நம்பிக்கையளிக்கும் விஷயத்தை கேலிக்கூத்தாக மாற்றி விடுகின்றன, இந்தக்கடைசி பகுதி.

   மற்றபடி இது மிகச்சிறந்த படைப்பு.
   என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

   அன்புடன்
   VGK

   Delete
 2. மிக்க நன்றி சார். இந்தக் கதையை நகைச்சுவையாகத்தான் எழுதினேன்.

  ReplyDelete