Thursday, 7 June 2012

என் சிறுகதை 'அல்பம்'. அறுசுவை.காமில் வந்தது

ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது பற்றிய சிறுகதை.

http://www.arusuvai.com/tamil/node/14962

இதோ உங்களுக்காக


பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையைத் தேடி சாய்ந்து வசதியாக உட்கார்ந்து கண்களை மூடிய நித்யா, ‘அப்பாடா! வீடு வரதுக்குள்ள முக்கால் மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போட்டுலாம்’ என்று நினைத்தாள். அவள் கண்களை மூடி ஐந்து நிமிடம்கூட ஆகி இருக்காது.
”ஏன் மாமி, உங்க பக்கத்தாத்துப் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிடுத்தா?”
“இன்னும் ஆகலியே. ம். அவாளும் நாலு வருஷமா பாத்துண்டிருக்கா.”
”ஓ, அது சரி நேத்து உங்க தெருவில என்ன சண்டை?”
“அதுவா.............
“ஆரம்பிச்சுட்டாங்கப்பா. இன்னும் எத்தனை பேர் தலையை உருட்டப்போறாங்களோ? கண்ணை மூடிக்கலாம். காதை மூட முடியாதே” என்று மனதிற்குள் அலுத்துக்கொண்டாள் நித்யா.
“ஏன் மாமி, உங்க வீட்டு மாடிலே புதுசா குடி வந்திருக்காளே, அதான் சிகப்பா, ஒல்லியா, அழகா”
“ஓ பத்மாவா! யாரோடையும் ரொம்ப பேச மாட்டேங்கறா. ரெண்டு மூணு தரம் கோவில்ல பாத்தேன். ஒரு சிரிப்போட நிறுத்திட்டா. போஸ்ட்மேன் அவங்களுக்கு வந்த கடிதத்தை எங்க வீட்டுலே போட்டுட்டுப்போயிட்டான். அதை கொண்டு குடுக்கப்போனேன். வீட்டை ரொம்ப சுத்தமா வெச்சிருந்தா. வீடு கிளி கொஞ்சறதுன்னு சொல்லலாம் போயேன். பழைய பால் கவரையெல்லாம் கூட அழகாக அடுக்கி வெச்சிருந்தா. கேட்டேன். பழைய பேப்பர்காரனுக்கு போடுவாளாம்.”
”பத்மா! நம்ப அம்மாவா இருக்குமோ?” இது நித்யா.
”ஐயய்யே! நான் பால் கவரையெல்லாம் அன்னன்னிக்கே தூக்கி எறிஞ்சுடுவேன் மாமி”
”நான் கூடத்தான். இதையும் மிஞ்சற மாதிரி ஒரு விஷயம் சொல்றேன் கேளு. காலி ஸ்வீட் பாக்சையெல்லாம் தேச்சு அலம்பி எடுத்து வெச்சிருந்தா தெரியுமோ?”
“ஐயே அல்பம்”
”இத்தனைக்கும் மாமா பேங்க் மானேஜர். ஒரே பொண்ணுதானாம் அவங்களுக்கு. அந்தப்பொண்ணும் வேலைக்குப்போறாளாம்.”
‘நம்ப வீட்டைப்பத்தித்தான் பேசறாங்களோ? எழுந்து போய் நறுக்குன்னு ரெண்டு கேள்வி கேட்டுடலாமா? ஒருவேளை அவங்க வேற யாரையாவது பத்தி பேசிண்டிருந்தா அசிங்கமாயிடுமே. இதென்ன! ஊர்லே பத்மான்னு வேற யாராவது இருக்கக்கூடாதா, அவங்க கணவர் பேங்க்ல மானேஜரா இருக்கக்கூடாதா, அவங்களுக்கு ஒரே பொண்ணுதான் இருக்கக்கூடாதா?’ இப்படி யோசிக்க, யோசிக்க போரடித்தது நித்யாவுக்கு. எப்படா வீடு வரும் என்றிருந்தது.
* * *
ஒருவழியாக பேருந்தை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்தாள். வீட்டிற்குள் நுழையும்போதே அவள் அம்மா ஏற்றி வைத்திருந்த ஊதுவத்தியின் மணமும், மெல்லிய குரலில் அம்மா பாடும் பாட்டும் நித்யாவிற்கு உற்சாகத்தைத் தந்தது.
அழைப்பு மணி ஒலி கேட்டு கதவைத் திறந்த பத்மா, “வா, வா, என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்ட. கை, கால் அலம்பிண்டு வா, உனக்குப்பிடிச்ச பூரி, சென்னா செஞ்சிருக்கேன்” என்றாள்.
பளிச்சென்றிருந்த சமையலறை மேடையிலேயே ஏறி உட்கார்ந்து கொண்டு அம்மா கொடுத்த பூரியைப் பிய்த்து சென்னாவுடன் சேர்த்து வாயில் போட்ட நித்யாவின் கண்களில் எதிரே இருந்த அலமாரியின் கீழ் தட்டில் ஒரு கவரில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பால் கவர்கள் பட்டன.
“அம்மா, நான் ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே? எதுக்கு இந்த பால் கவரையெல்லாம் சேத்து வெச்சிருக்க? தூக்கிப்போட வேண்டியது தானே” என்றாள் நித்யா.
“அதுவா, நீதானே நித்யா தீபாவளி அன்னிக்கு சொன்ன. பால்கவர், ப்ளாஸ்டிக் கவரையெல்லாம் குப்பைத்தொட்டிலே போட்டுடறா. பட்டாசு வெடிச்சு குப்பைத்தொட்டில விழுந்து புகையா வரது. இந்தப்புகை உடம்புக்குக் கெடுதல்ன்னு. அதோட பழைய பேப்பர்காரன் இதை வாங்கறான்னா பாவம் அவனுக்கு ஒரு அஞ்சோ, பத்தோ லாபம் இருக்கும் இல்லியா?” என்றாள் பத்மா.
“அது சரி. இந்த காலி ஸ்வீட் டப்பாவையெல்லாம் எதுக்குமா தேச்சு அலம்பி பத்திரமா எடுத்து வெச்சிருக்க. தூக்கி எறியக்கூடாதா?” என்று கேட்டாள் நித்யா.
“அதுவா. இன்னிக்கு கார்த்தாலே நீ என்ன செஞ்ச?”
“என்ன செஞ்சேன்?”
“டிபன்பாக்சை வெச்சுட்டுப்போயிட்ட.”
“ஆமாம்மா. சாரிம்மா. ஆனா அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம். “
“இருக்கே. உன் ப்ரெண்ட்சுக்கும் சேர்த்து 10 இட்லியும், கொத்தமல்லி சட்னியும் வெச்சிருந்தேன். என் நாக்கு நீண்ட தேவதையே அதை அப்படியே வெச்சிருந்தா நீ வந்து சாப்பிடவா போற. அயர்ன் துணி குடுக்க வந்த பையன் கிட்ட இட்லி சாப்பிடறயான்னு கேட்டேன். குடுங்கம்மா. எடுத்துட்டுப்போய் நானும் தங்கச்சியும் சாப்பிடறோம்ன்னு அந்தக் குட்டிப்பையன் பொறுப்பா சொன்னான். காலி ஸ்வீட் டப்பால இட்லியும், சட்னியும் போட்டு குடுத்தேன். இதுல குடுத்தா டப்பா திரும்ப வரலயேன்னு கவலைப்பட வேண்டாம். கவர்ல எல்லாம் குடுக்க எனக்கு இஷ்டமில்ல, இப்ப புரியறதா” என்றாள் பத்மா.
எச்சில் கையுடனேயே மேடையில் இருந்து குதித்து இறங்கி வந்து “அம்மான்னா அம்மாதான்” என்று பத்மாவின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள் நித்யா. இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறாள் என்று புரியாமல் விழித்துக்கொண்டே மகளின் முத்தத்தை ரசித்தாள் பத்மா.

3 comments:

 1. //எச்சில் கையுடனேயே மேடையில் இருந்து குதித்து இறங்கி வந்து “அம்மான்னா அம்மாதான்” என்று பத்மாவின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டாள் நித்யா. இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறாள் என்று புரியாமல் விழித்துக்கொண்டே மகளின் முத்தத்தை ரசித்தாள் பத்மா.//

  Touching Lines ! ;)

  மிகவும் ரஸித்துப்படித்தேன்.
  வெகு அழகாக எழுதியுள்ளீர்கள்.
  எந்தப்போருளும் பத்திரப்படுத்தினால் எதற்காவது நிச்சயம் பயன்படத்தான் செய்கிறது என்பதே உண்மை. சொல்லியவிதம் சூப்பர், மேடம்.

  அன்பான வாழ்த்துக்ள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோபால கிருஷ்ணன் சார்.
   இந்தக் கதை எழுதும் போதே என் மகள் என்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை கற்பனையுடன் கலந்து எழுதினேன்.

   Delete
  2. //என் மகள் என்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை //

   ;))))) கேட்கவே சந்தோஷமாக உள்ளது.


   //என் சிறுகதை 'அல்பம்' அறுசுவை.காமில் வந்தது//

   பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

   பிரியமுள்ள கோபு

   Delete