Wednesday, 30 May 2012

மறக்க முடியாத பிறந்த நாள்
இந்த பிறந்த நாள் (29.05.2012) என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத பிறந்த நாள்.  ஏன் என்றால், இதுபோல் இதுவரை எந்த ஒரு வருடமும் கொண்டாடியதில்லை.

             முதலில் என்னுடைய இந்தப் புகைப்படத்தைப் பற்றி சொல்லி விடுகிறேன்.  இந்தப் புகைப்படம் 1983ம் ஆண்டு மயிலையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் எடுத்தது. மாப்பிள்ளை வீட்டுக்குக் கொடுக்கத்தான் எடுத்தது.  அப்புறம், இந்தப் புகைப் படத்தில் நான் கட்டியிருக்கும் இந்தப் புடவை 1982ம் ஆண்டு பிறந்த நாளுக்காக என் சகோதரி திருமதி கீதா ஸ்ரீனிவாசன் எடுத்துக் கொடுத்த புடவை.  இது நல்ல நீல நிறப் புடவைஇதில் உள்ள சின்னச்சின்ன கட்டங்கள் வெள்ளை நிறம்.  பெரிய வட்டங்கள் உள்ளனவே அவை, சிகப்பு, ராமர் நீல நிறம், கிளிப்பச்சை ஆகியவை.   இந்தப் புடவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

     சரி. இந்த வருடப் பிறந்த நாளில் என்ன சிறப்பு?

     இந்த வருடம் நான் பிறந்த தேதியும், என் நட்சத்திரமும் ஒரே நாளில் வந்தது.

            28.05.2012 இரவு சரியாக 1200 மணிக்கு என்னை எழுப்பி வாழ்த்து சொன்னாள் என் மகள்.  அவள் வாழ்த்துதான் முதல் வாழ்த்து.  அடுத்து என் கணவர் வாழ்த்தினார். (முதல் நாளே என் கணவர் 2 புடவைகளைப் பரிசளித்து விட்டார்)

     காலையில் எழுந்ததும் எங்கள் சம்பந்தி வாழ்த்தினார். பிறகு குளித்து கோவிலுக்குச் சென்றால் குருக்கள் மாமா வாழ்த்தினார்.  (இது என்மகளின் ஏற்பாடு என்று பிறகு தான் தெரிய வந்தது).  பிறகு அதிகாலையிலேயே அலுவலகத்திற்குச் சென்று விட்ட என் மருமகள் தொலை பேசியில் வாழ்த்தினாள்.   (மகனும், மருமகளும் 2 நாட்களுக்கு முன்பே ஒரு புடவையை பரிசளித்து விட்டனர்).

     அலுவலகத்துக்குச் செல்ல வீட்டிலிருந்து கிளம்பிய போது என் நாத்தனார் எனக்கு திருமண நாளுக்கு (01.05.2012) பரிசளித்த i-Pod ஐ என் மகள் கொடுத்தாள்.  அதில் ராம் படத்திலிருந்து

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

முதல் பாடலாகப் பதிந்து கொடுத்தாள்.  அத்துடன் அடுத்ததாக எனக்கு மிகவும் பிடித்த, விநாயகர் அகவல்.

          பரங்கிமலை ரயில் நிலையத்திற்குச் சென்ற போது ராகவ் (எங்கள் குடும்ப நண்பர் திரு வெங்கட்ராமனின் மகன்) ஒரு பாக்கெட்டை பூக்காரம்மா மூலமாகக் கொடுத்து வாழ்த்தினார். அந்தப் பொட்டலத்தில் ஒரு முருகர் விக்கிரக கீ செயின், ஒரு பாக்கெட் மதுரை தாழம்பூ குங்குமம், ஒரு முழம் மல்லிப்பூ, ஒரு காட்பரீஸ் சாக்லேட் இருந்தது.

     ப்ளாட்பாரத்தில் நுழைந்த போது என்னுடன் பணி புரியும் ஒரு தோழி ஒரு பாக்கெட்டைக் கொடுத்து வாழ்த்தினாள். அது ஒரு TIMEX WATCH அதுவும் என் மகளின் பரிசு தான். இது எல்லாம் என் மகளின் ஏற்பாடுதான் என்று பிறகு தெரிய வந்தது.

     அலுவலகத்திற்குள் நுழைந்து என் இடத்திற்கு வந்து அமர்ந்ததும் என் தோழி பூங்குழலி ஒரு அழகான படகு வீடு புகைப் படம் பரிசளித்தாள்.  அது பூங்குழலியின் மகன் எடுத்த படம். லாமினேட் செய்து கொடுத்திருந்தார்.  ரொம்ப அழகாக இருந்தது.

     இத்துடன் தொலைபேசியில் என் நாத்தனார், ஓரகத்தி இருவரும் வாழ்த்தினார்கள்.

     முகப் புத்தகத்தில் நுழைந்தால் கிட்டத் தட்ட 100 பேருக்கு மேல் வாழ்த்தி இருக்கிறார்கள்.  வாழ்த்து மழையில் நனைந்து திக்கு முக்காடிப் போனேன். 

      மாலையில் வீட்டுக்குள் வந்ததும் கோவையிலிருந்து அம்மா, அப்பா, தம்பி, தம்பி மனைவி, தம்பி மகன் எல்லாரும் வாழ்த்தினார்கள். 

           இரவு படுக்கப் போகும் முன் என்மகள் ஒரு கவரை என் கையில் கொடுத்தாள்.  அதில் 2 குட்டி விசிறிகளும், 2 குட்டி திண்டுகளும் இருந்தன.  விசிறிகளை பிள்ளையாரின் பின்னும், குட்டி திண்டுகளை குட்டிக் கிருஷ்ணனின் இரண்டு பக்கங்களிலும் வைத்து விட்டேன். 

     இப்படியாக பரிசு மழையிலும், வாழ்த்து மழையிலும் நனைந்து மனநிறைவுடன் தூங்கச் சென்றேன்.

     அத்துடன் அன்று இரவே என் ப்ளாகைத் தொடங்கினேன்.

22 comments:

 1. பிறந்த நாள் வாழ்த்துகள், தங்களுக்கும் வலைப்பூவுக்கும்:)!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

   Delete
 2. உங்கள் வலை பதிவு மிக அருமை..

  அதை ஒரே மூச்சில் படித்து விட்டுதான் வேறு வேலை பார்த்தேன்..

  எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு கொஞ்சமும்,,

  உங்கள் மகளுக்கு அதிகமும்.,,

  ஏன் என்றால் உங்கள் மகள்தான் உங்கள் பிறந்தநாளின் கதாநாயகி..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அரவிந்த். என் மகள் சார்பில் மேலும் ஒரு நன்றி.

   Delete
 3. உங்கள் வலை பதிவு மிக அருமை..

  அதை ஒரே மூச்சில் படித்து விட்டுதான் வேறு வேலை பார்த்தேன்..

  எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு கொஞ்சமும்,,

  உங்கள் மகளுக்கு அதிகமும்.,, ஏன் என்றால் உங்கள் மகள்தான் உங்கள் பிறந்தநாளின் கதாநாயகி..

  ReplyDelete
 4. வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. Please remove Word Verification, you may include Comment Moderation.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரத்தினவேல் ஐயா. நீங்கள் சொன்னது போல் word verification remove செய்து விட்டேன். தங்கள் மேலான யோசனைகள் எப்பொழுதும் தேவை.

   Delete
 6. maami pathivu patikkaiyil mikavum sawthooshamaaka iruwthathu.ithu pool ini varum piRawtha naatkaLai ellaam inithee koNtati makiza vaazththukkaL.

  niraiya ezuthungkaL.ungkaL aakkakngkaLai patikka kaaththirukkiRoom.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸாதிகா. உங்கள் மேலான யோசனைகள் தேவை. சந்தேகம் வரும்பொழுது (அது தான் நிறையைருக்கிறது) உங்களை தொடர்பு கொள்ளுகிறேன்.

   Delete
 7. Chitthi - Looks like a wonderful birthday :) and, Sandheya was very very thoughtful and creative in the gifting part. Andha photo vai patriya ungal varNanai umm Arumai :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பிரியா.

   Delete
 8. வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள் ஜெ.மாமி.தொடர்ந்து எழுதுங்க.மிக மகிழ்ச்சியான பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆசியா
   எனக்கு அறுசுவை தோழிகள் நீங்கள் எல்லாம்தான் முன்மாதிரி.

   Delete
 9. ப்ளாக் ஆரம்பித்தது மகிழ்ச்சி. டெம்ப்ளேட் மிகவும் ஒல்லி. மாற்றி விடுங்கள். என்ன தப்பு செய்து இருந்தாலும் மாற்றி விடலாம். பேர் கூட மாற்றி விடலாம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுமஜ்லா. புதிய ப்ளாகர்களுக்கு உங்கள் ப்ளாக் ரொம்ப உதவியாக இருக்கும். நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

   Delete
 10. இனிமையான மறக்க முடியாத அனுபவங்கள்... நெகிழ்ச்சியில் நெஞ்சம் நழுவுகிறது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி கருணாகரன் சார். இன்றுதான் உங்களின் பதிவைப் பார்த்தேன்.

   Delete
  2. ஆங்கிலப்பிறந்த நாளும், தமிழ் நக்ஷத்திரப்பிறந்த நாளும் ஒரே தினத்தில் வருவது எப்போதாவது பல வருடங்களுக்கு ஒருமுறையே தான் நிகழும். நம் மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

   அதுபோல நாம் பிறந்த கிழமையிலேயே நம் நக்ஷத்திரப்பிறந்த நாளும் சில சமயம் அமைவது உண்டு. இதெல்லாம் அதிசயம் தான்.

   என் பிறந்த நாளைப்பற்றி சற்றே நகைச்சுவை கலந்து “பெயர் காரணம்” என்ற பதிவினில் வெளியிட்டுள்ளேன்.

   அதற்கான இணைப்பு இதோ:
   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

   அன்புடன்
   VGK

   Delete
 11. தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்த்தினை மிகவும் தாமதமாகச் சொல்லியுள்ளேன் என நினைக்க வேண்டாம்.

  அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்கு அட்வான்ஸ் ஆகக் கூறியதாக எடுத்துக்கொள்ளுங்கள்.

  படமும் பகிர்வும் அன்று கிடைத்த வாழ்த்துகளும் பரிசுகளும் அவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள விதமும் அழகோ அழகாக உள்ளன.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
  Replies
  1. கோபாலகிருஷ்ணன் சார், நான் தினம் தினம் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரே மூச்சில் நிறைய பின்னூட்டம் கொடுத்து விட்டீர்கள். வீடு, அலுவலகம் இரண்டு இடத்திலும் பிசியாக இருப்பதால் உடனே பதில் போட முடியவில்லை.

   Delete
  2. //வீடு, அலுவலகம் இரண்டு இடத்திலும் பிசியாக இருப்பதால்//

   இதற்கான காரணம் என்ன தெரியுமா?

   வைகாசி மாதம் பூரம் நக்ஷத்திரத்தில் பிறந்துள்ளதால் தான்.

   ’பூர’ நக்ஷத்திரத்தில் பிறந்துள்ளதால் தான் ’பூரான்’ போல சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்.

   வைகாசி மாதம் நல்ல வெயில் காலம். பூரான்கள் ஓரிடத்தில் நிற்காது. அதில் சடைப்பூரான், செவிப்பூரான் என்று இரண்டு வகைகளும் உண்டு.

   செவிப்பூரான் காதில் புகுந்து விட்டால் போச்சு என்பார்கள்.

   அதுபோல உங்கள் வலைத்தளக் கருத்துக்களைக் படித்து காதில் வாங்கிக் கொள்ளாவிட்டாலும் போச்சு.

   அதனாலேயே பயந்துகொண்டு நான் தங்களின் ஒவ்வொரு பதிவுகளாகப் படித்து கருத்துக்கூறி வருகிறேன். ;)))))

   பிரியமுள்ள
   கோபு

   Delete