Wednesday, 29 May 2013

HOME SWEET HOME

இல்லம் இனிய இல்லம்.

பகுதி 2.

கல்யாணம் பண்ணிப்பார்
வீட்டைக் கட்டிப்பார்


         பழமொழி எல்லாம் சும்மா இல்லீங்க.   பெரியவங்க எல்லாம் வாழ்ந்து, அனுபவித்து சொன்ன அனுபவ மொழிகள் பழமொழிகள்.


         என்னுடைய சின்ன வயசு காலங்கள்ள எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சொந்த வீடெல்லாம் குதிரைக்கொம்புதான்.  நானும் திருமணம் ஆகிறவரை இருந்தது வாடகை வீடுகளில்தான்.

                                     
         எங்க வீட்டுக்காரர் கொஞ்சம், இல்லை, இல்லை ரொம்ப துறுதுறு.  நினைச்சா அதை உடனே நிறைவேத்திடணும்.   எங்க திருமணம் முடிந்ததும் நாங்க குடியிருக்க ஏற்பாடு செய்த வீட்டை (வாடகை வீடு தான் சொந்த வீடு கூட இல்லை), திருமணத்திற்கு முன்பே அவரே தனியாக வெள்ளையடிச்சு இருந்தார்ன்னா பார்த்துக்கங்களேன்.


    ஒரு நாள் என்னுடைய அலுவலகத்திலிருந்து 4, 5 நண்பர்கள் வீடு கட்ட நிலம் வாங்கப் போகிறோம், வண்டலூரில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், தாம்பரத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம், மண்ணிவாக்கம் என்னும் இடத்தில்.  நீங்களும் வாங்கன்னு சொல்லி என் வீட்டுக்காரரையும் அழைத்துக் கொண்டு போனார்கள் (NOTE THE POINT -  நான் போகவில்லை). போனவங்க முதல்ல ஒரு ஐயர் கையால பணம் கொடுக்கணும்ன்னு சொல்லி ஆயிரம் ரூபாய் முன்பணம் என் வீட்டுக்காரரை கொடுக்கவைத்து விட்டனர்.  உருட்டி பிரட்டி, தேத்தி 26,000 ரூபாய்க்கு 2 கிரவுண்டுக்குக் கொஞ்சம் கம்மி, இடத்தை வாங்கிட்டோம்.

        
                   என்னை ஒரு நாள் அந்த இடத்தைப் பார்க்க என் கணவர் என்னை அழைத்துச் சென்றார். 

     ந்த இடத்தைப் பார்த்ததும் வயிற்றிலிருந்து ஒரு பந்து உருண்டு, தலைசுத்தி எனக்கு மயக்கமே வரும் போல ஆயிற்று.  ஆஹா இந்த இடத்தில் வீடு கட்டி, குடி வந்து, எப்படி வேலைக்குப் போய், பையனை படிக்க வைத்து, மலைப்பா இருந்தது எனக்கு.


         இந்த மாதிரிதான் இருந்தது அந்த இடம்.



      இந்த இடம் வேண்டாம் என்று என் வீட்டுக்காரரிடம் சொன்னேன்.  அப்படீன்னா ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைக்காது, பரவாயில்லையா?என்றார்.  1985 ல ஆயிரம் ரூபாய்ன்னா விட மனசு வருமா?   சரி ஏதோ இடம் வாங்கியாச்சு. அவர் வழிக்கே போவோம்ன்னு பேசாம இருந்துட்டேன்.

         அடுத்து வீடும் கட்ட ஆரம்பிச்சோம்.    அஸ்திவாரம் தோண்டியதும், அந்த மேஸ்திரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் வேலை நின்று விட்டது.  மூன்று மாதம் கழித்து மீண்டும் வேலையைத் தொடங்கினார் அந்த மேஸ்திரி.  ஆனால் அதற்குள் மழை பெய்து அஸ்திவாரம் நல்ல உறுதியா ஆயிடுத்து.   அஸ்திவாரம் போட்டு முடித்ததும் மறுபடியும் அந்த மேஸ்திரியால் வேலையைத் தொடர முடியாத நிலை.  பிறகு வேறொரு மேஸ்திரியைப் பிடித்து மீண்டும் தொடர்ந்தோம். 
                  
                                
தொடரும் இது தொடர்கதை போல தொடரும் 


என் பிறந்த நாளுக்கு எங்கள் அன்பு மகள் சந்தியா ரமணியின் அன்புப் பரிசு.







Tuesday, 28 May 2013

சுற்றுச் சூழல் பாதுகாப்பு

சென்னை வாசிகளே,

சுற்றுச் சூழல் மாசு பட்டுப் போனதில் நம் எல்லோருக்குமே பங்கு இருக்கிறது.  அதற்கு பிராயச்சித்தமாக முடிந்தவர்கள் மரம் நடுவோமே.  மரக்கன்றுகளைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம்.  அதுவே உங்கள் வீடு தேடி வருகிறது.  எப்படி? ஒரே ஒரு குறுஞ்செய்தி போதுமே

மரக்கன்றுகள் வீடு தேடி வர sms to 91 9894062532


இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். மரக்கன்று இரண்டு வாரத்திற்குள் எஸ்.எம்.எஸ் அனுப்பியவரின் வீடு தேடி வரும். அவர்களின் வீடு, அதன் சூழல், போன்றவற்றை ஆராய்ந்து, மரக்கன்றை நட்டு, பின்னர் பராமரிக்கும் முறை பற்றி விளக்குவார்கள், அந்த மரத்திற்கு அவர்களுக்கு விருப்பமான குழந்தையின் பெயரை சூட்டுவார்கள்.  குழந்தைகளின் பெயர்களை மரங்கன்றுகளுக்கு சூட்டுவதன் மூலமாக, அந்த மரக்கன்றை தங்கள் குழந்தையைப் போலவே பராமரிப்பார்கள் என்கிறார்கள் சென்னை 'நாளந்தா' சமுதாய சேவை அமைப்பின் நிர்வாகிகள். அது மட்டுமின்றி, இந்த அமைப்பின் உறுப்பினர்களின் திருமண விழாக்களில், தாம்பூலப்பைகளுக்கு பதிலாக, மரக்கன்றுகளை வழங்கி, இயற்கை குறித்த விழிப்புணர்வு செய்கிறது.

நம் வாழ்வு நம் கையில்


ஒரு முரடன் ஒரு முனிவரிடம், “ஐயா, என் மூடிய கையில் ஒரு பறவை இருக்கிறது.  அது உயிருடன் இருக்கிறதா, இல்லையா? என்று கேட்டான்.


அதற்கு முனிவர், அப்பா, அது உன் கையில் இருக்கிறதுஎன்றார்.

அதற்கு முரடன், “நான் அதைக்கேட்கவில்லை ஐயா, அது உயிருடன் இருக்கிறதா, இல்லையா, அதைச் சொல்லுங்கள்என்றான்.

முனிவர் சிரித்துக்கொண்டே “அது உன் கையில் தான் இருக்கிறதப்பாஎன்று சொல்லிவிட்டு நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.


அந்த முனிவருக்குத் தெரியாதா என்ன, பறவை உயிருடன் இருக்கிறது என்று சொன்னால், ஒரு நொடியில் அந்த முரடன் அதை நசுக்கிக் கொன்று விடுவான்.  இல்லை என்று சொன்னால் இதோ பாருங்கள் என்று பறக்கவிட்டு விடுவான்.   முரடன் வேறு வழியில்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றான்.


முரடனின் உள்ளங்கையில் இருந்த பறவை போல் நம் வாழ்வு நம் கையில்.  மகிழ்ச்சி, துன்பம் எல்லாம் அவரவர் எண்ணத்தைப் போல்.  

நட்புக்கு இனம், மதம், சாதி எதுவும் கிடையாது

தாய்மை

நாங்கள் ஊட்டிக்குச் சென்ற போது, பைக்காரா சென்று விட்டு ஊட்டிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.   வழியில் ஒரு இடத்தில் இறங்கி குரங்குகளுக்கு வேர்க்கடலையும், கேரட்டும் வாங்கிப் போட்டோம்.  கடலை விற்ற பெண்மணியின் மகன் அப்பொழுது அங்கு வந்தவர் எங்களிடம், அதோ அங்கே உட்கார்ந்திருக்கும் குரங்குக்கு போடுங்க.  அது மூணு நாளா செத்த குட்டியை துக்கிக்கிட்டு அலையுது.  நாங்களும் மூணு நாளா அத எப்படியாவது வாங்கி புதைக்கணும்ன்னு நினைக்கிறோம், முடியவே இல்லைஎன்றார்.  நாங்கள் அசந்து விட்டோம்.   பிறகு அந்தக்குரங்கு செத்த குட்டியையும் தூக்கிக் கொண்டு ரோடிற்கு வந்தது.  அதன் முகத்தில் சொல்லொணா துயரம்.  மேலும் அவர் சொன்னது, “அந்தத் தாய்க் குரங்கு, குட்டிக்குரங்கு இறந்த உடன் அதன் வாயில் தன் வாயை வைத்து ஊதியதாம்”.   ஒரு வேளை குட்டிக்கு உயிர் வந்து விடும் என்று ஊதி இருக்குமோ?
அந்தக் குரங்கின் தாய்மை உணர்வைக்கண்டு வியந்துதான் போனோம்.



பணம் இருந்தால் எல்லாத்தையும் வாங்கமுடியுமா??

Friday, 24 May 2013

சொன்னார் ஐயா சிவபெருமான்


விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 3 நிகழ்ச்சியில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது என் பெண் என்னிடம், ‘அம்மா, சிவபெருமானுக்கு தாய், தந்தை கிடையாது, அவர் சுயம்பு, தானாகவே தோன்றியவர் என்று சொல்வாயே, இந்த நேரத்தில் சிவபெருமான் இங்கு வந்தால் என்ன சொல்வார்?” என்று கேட்டாள்.

2 நிமிடத்தில் அதற்கு எழுதிக் கொடுத்ததுதான் கீழே கொடுத்திருக்கும் வரிகள்.  



இவனை மகனாகப் பெற
என்ன தவம் செய்தேன் என்றாள் ஒரு தாய்

இவள் வயிற்றில் மகனாகப் பிறக்க
என்ன புண்ணியம் செய்தேன் என்றான் மகன்.

பிள்ளைகள் அன்னையருக்குத் தந்த
பரிசுப் பொருட்களைக் கண்டு மயங்கவில்லை.
ஊர் கூடிப் பாராட்டிய போதும் அசரவில்லை.

ஆனால்
அன்னையின் கன்னத்தில் பிள்ளையும்
பிள்ளையின் கன்னத்தில் அன்னையும்
மாறி மாறி முத்தமிட்டபோது மட்டும்
மயங்கித்தான் போனேன் - லேசாக
பொறாமையும் கொண்டேன்.

எனக்கொரு தாய் இல்லை என்பது
வருத்தம்தான்
இருந்தாலும் பரவாயில்லை,
இவர்கள் அனைவருமே
என் பிள்ளைகள் தானே”
என்றான் தாயுமானவன்.

Thursday, 23 May 2013

நூலகம்



 இந்தக் கவிதையை தனியார் நூலகம் நடத்தும் திரு சேதுராமன், நங்கநல்லூர், சென்னை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.


சின்னச் சின்னப் பிள்ளைங்களா,
சித்தெறும்புச் செல்லங்களா,
ஓடி வாங்க
உடனே ஓடி வாங்க


வண்ண வண்ணப் புத்தகங்கள்
வரிசையா வெச்சிருக்கேன்
வளமான எதிர்காலத்தை உங்களுக்கு
வாரி வழங்கக் காத்திருக்கேன்

பொது அறிவு
விஞ்ஞானம்
கணக்கு
புவியியல்
சமூகவியல்
சரித்திரம்
இன்னும் பலவகைப் புத்தகங்கள்
எண்ணிலா எண்ணிக்கையில்
அடுக்கி, அடுக்கி வைத்திருக்கிறேன்
எடுத்துப் படிக்க வாங்க

உங்க வீட்டுப் பெரியவங்களுக்காக
சிறுகதை
புதினம்
ஆன்மீகம்
பாட்டு
நாடகம்
இலக்கியம்
வகை வகையாய் புத்தகங்கள்
வாங்கித்தான் வைத்திருக்கேன்.

மகிழ்ச்சி
துயரம்
காதல்
சோகம்
மேலாண்மை
தத்துவம்
எல்லா வகைப் புத்தகங்களும்
வாரிவழங்கக் காத்திருக்கேன்

தேடித் தேடிப் படியுங்கள்
தினம் தினம் படியுங்கள்
நானே உங்கள் வீடு தேடியும் வருகிறேன்.
விரும்பி நீங்க ஏத்துக்கங்க.

சின்னதொரு வேண்டுகோள்
செவி மடுத்துக் கேளுங்க
செல்லரித்துப் போகாமல்
புத்தகங்களைப் படியுங்க
வீடு கொண்டு சென்றாலும்,
வீடு தேடி வந்தாலும்
மறக்காமல் மறுபடியும்
கொண்டு வந்து கொடுத்திடுங்க.

எத்தனையோ பொக்கிஷங்கள்
எல்லா நாட்டிலும் உண்டு.
பொன்னிற்கு நிகரான பொக்கிஷங்கள்
இந்தப் புத்தகங்களும் தானே.




Monday, 20 May 2013

அன்பு, அரவணைப்பு, பாசம் இதெல்லாம் நமக்கு மட்டும் அல்ல. நாம் ஐந்தறிவு என்று சொல்லும் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் கூட உண்டு.

Tuesday, 14 May 2013

ஆபிரஹாம் லிங்கன்


ஆபிரஹாம் லிங்கனின் தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் தனது  உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்க ஜனாதிபதியானார் லிங்கன். அவரை அவமானப்படுத்தும் எண்ணத்துடன் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் ஒருவர் பேசினாராம். ”மிஸ்டர் லிங்கன், உங்களைப் பல பேர் இங்கே பாராட்டிப் பேசினார்கள். அது குறித்து நீங்கள் மகிழ்ந்து விட வேண்டாம். உங்கள் பழைமை, வறுமை குறித்து நான் நினைவூட்ட வேண்டும். உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் இருக்கிறது. ஞாபகம் இருக்கட்டும்” என்று லிங்கனின் தந்தை செருப்புத் தைப்பவர் என்று குத்திக் காட்டினாராம்.

ஆபிரஹாம் லிங்கனோ பதற்றப்படாமல் “நண்பரே, என் தந்தை மறைந்து பல காலம் ஆயிற்று, ஆனால் அவர் தைத்துக் கொடுத்த காலணி இன்னும் உங்களிடம் உழைக்கிறது என்றால் என்ன பொருள்? அவர் எவ்வளவு சிறந்த தொழிலாளி என்பது தெரிகிறது அல்லவா? அப்படி ஒரு சிறந்த தொழிலாளியின் மகனாகப் பிறந்தது குறித்து நான் பெருமை அடைகிறேன்.அது மட்டுமல்ல. இப்போழுதும் உங்கள் செருப்பு கிழிந்து போனால் என்னிடம் கொடுங்கள். நான் அதைச் சரி செய்து தைத்துத் தருவேன். எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும், நாடாளவும் தெரியும். ஒரு முக்கியமான விசயம், இரண்டுமே நன்றாகத் தெரியும்” என்று ஒரு போடு போட்டாராம்.

Monday, 13 May 2013

DIGITAL ART BY MY DAUGHTER

இது என் மகள் சந்தியா ரமணியின் DIGITAL ART

இதற்கு அவளுக்கு MAAC INSTITUTE CHENNAI இடமிருந்து இரண்டாம் பரிசு கிடைத்தது.


RECEIVING THE AWARD FROM 
Mr. PETE DRAPER, 
VISUAL EFFECTS SUPERVISOR, 
NAAN - E FILM


Saturday, 11 May 2013

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

தானே வந்து

தரணியெங்கும்

தாங்க முடியாதென்று

தாயைப் படைத்தான்

தாயுமானவன்

தாயவள் பங்கு

தினந்தோறும் இருந்தாலும்

தனியாக ஒரு நாளாவது

தட்டாமல் கொண்டாடுவோம்

தாயைப் போற்றுவோம்

தாய்மையைப் போற்றுவோம்

தட்டாமல் போற்றுவோம்

தப்பாமல் போற்றுவோம்




Wednesday, 8 May 2013

சொன்னார்கள் / செய்தார்கள்




ஜவஹர்லால் நேரு ‘தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?என்று கேட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன்என்று பதிலளித்தாராம்.

விவேகானந்தர் – ஒரு நூலகம் திறக்கப்படும்போது, ஒரு சிறைச்சாலை மூடப்படும்.

பெட்ரண்ட் ரஸல் என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது?என்று கேட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம்என் பதிலளித்தாராம்.

தந்தை பெரியார் பெண்களிடம், கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’.

நெல்சன் மண்டேலா ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம்.  சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

லெனின் ‘பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்.   

பேரறிஞர் இங்கர்சால் குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது சென்ற இடம் நூலகம்.

சார்லி சாப்ளின் ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் மிகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்.

மகாத்மா காந்தி ‘ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்.

அறிஞர் அண்ணா பம்பாய்க்கு விமானத்தில் போகாமல் காரில் மூன்றுநாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்?என்று கேட்டபோது ‘பத்து புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்ததுஎன்றாராம்.

மார்டின் லூதர் கிங் ‘பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை?என் கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்கள்தான்என்றாராம்.

டாக்டர் அம்பேத்கார் எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது...  ‘நூலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில்என்றாராம்.

பகத்சிங் - தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்.

புத்தகங்களை நேசிப்போம் வாசிப்போம்.  




வீடு தேடி வரும் நூலகம்

 புத்தகங்களுக்காக நூலகத்தைத் தேடி நாம் செல்லும் காலம் போய், புத்தகங்களே நம் வாசல் தேடி வருகிறது.


புத்தகங்களை நேசிப்போம் வாசிப்போம்.


இப்படி நூலகத்திற்குப் போய்  தேடித் தேடி சலித்து, தலை சுற்றி உட்கார வேண்டியது இல்லை.  உங்களுக்குத் தேவையான புத்தகத்தின் தலைப்பை சொன்னால் புத்தகமே உங்கள் வீடு தேடி வந்து விடும். 



இன்றைய குழந்தைகள் தொலைக்காட்சி, வீடியோ கேம், இணைய தளம் என்று தங்கள் விடுமுறையைக் கழிக்கின்றனர்.  இந்தக் குழந்தைகளுக்காகவே ஒரு வீடு தேடி வரும் நூலகத்தை அமைத்திருக்கும் திரு சேதுராமன், மடிப்பாக்கம் அவர்களின் பேட்டி தினமலரில் 05.05.2013 ஞாயிறு அன்று வெளிவந்திருக்கிறது.  உங்களுக்காக இங்கு மீண்டும் திரு சேதுராமன் அவர்களின் பேட்டியை கொடுத்திருக்கிறேன்.  படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே.      



ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்றார் ஹிட்லர். மொழியே சமுதாயத்தின் அடையாளம். மொழியைமேம்படுத்தும் இடம் நூலகம்.


நூலகத்தை அமைப்பது சாதாரணமல்ல. மொழியின் மீதும், சமுதாயத்தின் மீதும் தீராத காதலும், அக்கறையும் கொண்ட மனிதர்களால் தான், நூலகத்தை அமைக்க முடியும். தனி மனிதராய், சமுதாயத்தின் மீது கொண்ட ஆதங்கத்தால், சேதுராமன்,40, மடிப்பாக்கத்தில் "ரீடர்ஸ் கிளப்' என்ற பெயரில் குழந்தைகளுக்காகவே ஒரு நூலகத்தை உருவாக்கியுள்ளார். 
அவரோடு உரையாடியதில் இருந்து..


குழந்தைகளுக்கு என தனியாக ஒரு நூலகம் அமைக்க காரணம்?


நான் கார்ப்பரேட் கம்பெனியில், 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். நிம்மதியான வாழ்க்கை, கை நிறைய சம்பளம், சொகுசான கார் என, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தேன்.


சம்பளம்... சம்பளம்... என பந்தய குதிரை போல் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் குழந்தைகள் படிப்பு பற்றி யோசிக்கும் போது தான், அவர்கள் இணையதளம், வீடியோ கேமில் மூழ்கியிருந்தது தெரிந்தது.குழந்தைகளின் கவனத்தை திருப்ப, புத்தக வாசிப்பை முறைப்படுத்தினோம். ஆரம்பத்தில் புத்தகம் படிப்பது போல், நடித்து வீடியோகேம்விளையாடினர்.


தொடர்ந்து கண்காணித்தால், புத்தக வாசிப்பில் மூழ்கினர். அவர்களின் வயதுக்கேற்ப, தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க கொடுத்தோம்.பின், தினசரி இதழ்கள், வரலாற்று புத்தகங்கள் என, வாசிப்பு பழக்கம் அதிகரித்தது. என் குழந்தைகள் போன்ற சமவயது குழந்தைகளோடு பேசியதில், குழந்தைகளின் உலகம் பற்றி அறிந்தோம். குழந்தைகளுக்கான நூலகம் அமைக்க வேண்டும் என, தோன்றியது.


தற்போது, 10 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கிஉள்ளேன். குழந்தைகள், மாணவர்கள், பெரியோர் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புத்தகங்கள் உள்ளன.


உங்கள் நூலகத்தின் சிறப்பு என்ன?


புத்தக வாசிப்பாளர்களுக்காக, www.readersclub.co.in தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான புத்தகத்தை தேர்ந்தெடுத்து, வாசிப்பாளர்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அனுப்பினால் போதும். அடுத்த இரு நாட்களுக்குள், வீடு தேடி புத்தகம் வரும். அதற்காக, தனி கட்டணம் கிடையாது. வாசித்து முடித்ததும், வீடு தேடி வந்து பெற்று கொள்வர். நூலகத்தை தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை.


இதற்காக, மாத சந்தா, 100 ரூபாய் வரை வாங்கப்பட்டது. தற்போது, புத்தக வாசிப்பு தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கு 60 ரூபாயும், பெரியவர்களுக்கு 75 ரூபாயும் மாத சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரம் ஒரு புத்த கம் என்றமுறையில், புத்தக வாசிப்பை முறைப்படுத்த உள்ளோம்.


புத்தக வாசிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?


புத்தக வாசிப்பு மூலம், சமுதாயத்தின் பிரச்னைகள், சம்பவங்களை அறிந்து கொள்ள முடியும். படிப்பதை காட்டிலும், படித்ததை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய, தனி மனித கடமை உள்ளது.அதை அறிந்து, தனிப்பட்ட வாழ்க்கையோடு, சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில், ஏதாவது செய்ய வேண்டும். இன்றைய இளைய சமுதாயம், புத்தக வாசிப்பில் பெரிதளவு அக்கறை காட்டுவதில்லை. இது, ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல.


மேலும், ஒருவர் படித்த புத்தகங்களை மற்றவர்களுக்கு கொடுத்து படிக்க உதவ வேண்டும். உங்களிடம், ஏதாவது படித்து முடித்த புத்தகங்கள் இருந்தால், என் நூலகத்திற்கு கொடுங்கள். உங்கள் புத்தகங்கள், பலருக்கும் பயன்பட இது ஒரு வாய்ப்பாக அமையட்டும்."ரீடர்ஸ் கிளப்' தொடர்புக்கு: 99621 00032/ 93806 55511