Monday 21 January 2013

வீடு

IN AND OUT CHENNAI JAN 16-31 ல் வெளி வந்த என் கவிதை ‘வீடு’.  உங்களுக்காக மீண்டும் இங்கு பதிகிறேன்


வீடு
வாசலிலே நிதம் பூத்து
இதமான மணம் பரப்பும்
நித்ய மல்லிக்கொடி,
வீட்டைச் சுற்றி மணம் நிறைந்த
நிறம் மிகுந்த மலர்ச் செடிகள்,
விசாலமான அறைகள்,
வீடு நிறைய மனிதர்கள்,
தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா,
சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று,
கருவண்டு கண்கள் சுழற்றி
நொடிக்கொரு சேட்டை செய்யும்
குஞ்சு குளுவான்கள்,
புது மனிதர் வருகையை
கட்டியம் கூறும்
பைரவர் வாசலிலே,
கொல்லையிலே கல்கண்டுத் தண்ணீருடன்
எப்போதும் வற்றாத கிணறு,
மா, பலா, வாழை மரங்கள்,
தினத் தேவை பூர்த்தி செய்யும்
காய்கறிச் செடிகள்,
இப்படி என் பிறந்த வீடு போலவே
புகுந்த வீடும் இருக்கும்
என்ற கனவுகளுடன்
கை பிடித்த மணாளனுடன்
மகிழுந்திலிருந்து வலது கால் எடுத்து
நிலம் பதித்து புது வீடு
வந்து சேர்ந்தேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல
எண்ணிலா புறாக்கூண்டுகள்
விருந்தினர் வருகையை
சூசகமாகத் தடுப்பது போல்  
ஒற்றைப் படுக்கையறை,
பக்கத்து வீட்டில் இருப்பது
யார் என்று தெரியவே
பல நாட்களாயிற்று.
வாசலில் வந்து பார்த்தாலும்,
சாளரத்தின் வழியே பார்த்தாலும்
கண்ணில் பட்டது சாத்திய கதவுகளே!
காய்கறி வண்டிக்காரன்,
விற்பனையாளன்,
அறிமுகம் இல்லாதவர்
அனைவருமே நிறுத்தப்பட்டனர்
வெளி வாசலிலேயே
பாதுகாப்பான இடம்
தண்ணீர் வசதி
எப்பொழுதும் மின்சாரம்
அன்பான கணவன்
இல்லை என்ற சொல்லுக்கே
இடமில்லாத ஒரு வாழ்க்கை
ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
அடியே! நீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளிஎன்று.

Saturday 12 January 2013

குல தெய்வம்


என்னடா இவ, குலதெய்வம்ன்னு தலைப்பை போட்டுட்டு  TYPEWRITER படத்தை போட்டு இருக்காளேன்னு யோசிக்கிறீங்களா?  முழுக்க படியுங்க.  படிச்சுட்டு சொல்லுங்க.


24.12.2012 அன்னிக்கு கார்த்தால 0715 மணிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சேன்னு நன்மங்கலம் நீல வர்ணப் பெருமாளை தரிசனம் பண்ண நன்மங்கலம் ரோட்டில் திரும்பி ஒரு பத்தடிதான் நடந்திருப்பேன்.  இளையராஜா / ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை மாதிரி என் காதுல டைப் அடிக்கற ஓசை கேட்டுது.  நிமிர்ந்து பார்த்தா ‘VINOD TECHNICAL INSTITUTE’.  ஆஹா, இந்த இன்னிசையைக் கேட்டு எவ்வளவு நாள், ஏன் வருஷமே ஆச்சு.  ஆமாம் இப்ப COMPUTERல தான டைப் அடிக்கறோம். சத்தமே கேக்காதே, FEATHER TOUCH.  




செய்தித்தாள்களில் 2011ஆம் ஆண்டு வந்த இந்த செய்தியைப் படித்தபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர்
மும்பை : உலகின் கடைசி டைப்ரைட்டிங் நிறுவனமான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ், மும்பையில் உள்ள தனது உற்பத்தி யூனிட்டை மூடியுள்ளது. உலகம் முழுவதும் ஒருகாலத்தில், அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் வருகையால் கணிசமாக குறைந்தது. மேற்கத்திய நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன்பே, தட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நி‌லையில், சமீபகாலமாக, டைப்ரைட்டிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தட்டச்சு பயன்பாடு குறைந்து, கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டன. ஆனாலும், கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம், டைப்ரைட்டிங் மிசின்களை தயாரித்து வந்தது. உலகின் கடைசி டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ‌கோத்ரெஜ் அண்ட் போய்ஸ் நிறுவனம், அதனை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுகுறித்து, இதன் உயர் அதிகாரி மிலிந்த் துக்லே கூறியதாவது, கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், இதன் பயன்பாடு குறைந்து விட்டது. பயன்பாடு குறைந்ததால், தங்களுக்கு வரும் ஆர்டர்களும் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போது, தங்களிடம் 200 டைப்ரைட்டிங் மெசின்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இவையும் அரபுமொழி டைப்ரைட்டிங் மெசின்களே ஆகும் என்றும், இதனையடுத்து வேறவழியின்றி உற்பத்தி யூனிட்டை மூடிவிட்டதாக அவர் தெரிவித்தார்.




கோத்ரெஜ் கம்பெனியின் டைப்ரைட்டர் பிரிவு 1955ல் (நான் அவதரித்த ஆண்டாக்கும்) தொடங்கப்பட்டது இந்தியாவின் சுதந்திரத்துக்கும் தொழில்மயத்துக்கும் டைப்ரைட்டர் ஓர் அடையாளம் என்று பிரதமர் நேரு புகழாரம் சூட்டினார்.



ஆனால் சத்திரத்துத் திண்ணையில் படுத்திருந்த நாயை விரட்டி விட்டு மனிதன் ஆக்ரமித்துக் கொள்வது போல் டைப்ரைட்டரை விரட்டி விட்டு அலுவலகம், வீடு, தொழிற்சாலைகள் என்று எல்லா இடங்களையும் கம்ப்யூட்டர் ஆக்கிரமித்துக் கொண்டது.  போர்ட்டபிள் டைப்ரைட்டர்களின் இடத்தை லேப்டாப் பிடிங்கிக் கொண்டது. 


பிரதமர் நேரு சொன்ன அடையாளத்தை அடையாளமே இல்லாமல் அழிக்கத் தொடங்கியது கம்ப்யூட்டர்.







நாங்க படிச்ச காலத்துல எல்லாம் SSLC முடிச்சதும், ஏன் பத்தாவது முடிஞ்ச லீவுலயே TYPEWRITING CLASS சேர்த்துடுவாங்க.  விருப்பம் இருந்தால் அப்படியே சுருக்கெழுத்தும்.  எத்தனையோ குடும்பங்கள்ள விளக்கேத்தி வெச்சிருக்கு இந்த TYPEWRITING & SHORTHAND இரண்டும்.



நான் GOVERNMENT POLYTECHNIC FOR WOMENல் (தற்போதைய பெயர் DHARMAMBAL POLYTECHNIC) மூன்று வருட DIPLOMA IN COMMERCIAL PRACTICE COURSE 1970 – 1973 படித்தேன்.  அதில் B.COM SUBJECTS மற்றும் ENGLISH TYPEWRITING, SHORTHAND HIGHER.  


அதே நேரத்தில் என் COUSIN கோவையில் இதே COURSE  இரண்டு ஆண்டுகள் படித்து கோவை SUGARCANE BREEDING INSTITUTE ல் பணியில் சேர்ந்திருந்தார்.  அதனால்தான் என் அம்மா நீயும் இதே DIPLOMA படி, கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.  முதல் வருடம் காலேஜ் போகவில்லையே என்று வருத்தம் கொஞ்சம் இருந்தது.  இரண்டாம் வருடம் வருத்தத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.  



3 வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த உடனே நல்ல அரசாங்க வேலை.  ஆயிற்று 39 வருடங்கள் 3 மாதங்கள் பணியாற்றிவிட்டாகிவிட்டது.  இன்னும் பாக்கி இருப்பது 1 வருடம் 5 மாதம்.

இதே குலதெய்வம் தான் சமூக அந்தஸ்தைக் கொடுத்தது, பலரின் பாராட்டையும் பெற்று கொடுத்தது. 



இப்பதானே கம்ப்யூட்டர் ஜாலம் எல்லாம்.

டைப்ரைட்டரில் ஒரு W, அதுக்கு மேல ஒரு &,  அந்த & மேல ஒரு /, ஒரு SOLDIER மாதிரி வரும். 

அப்புறம் ஒரு தேர் மாதிரி டிசைன் செய்தது.   சின்னச் சின்ன விஷயங்கள்.  எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அந்தக் காலத்துல என் அப்பா ஒரு கடிதத்தை சிவலிங்கம் மாதிரி அடித்திருப்பார். 


 ஆனா ஒண்ணுங்க. இந்த செய்தியையும் கேளுங்க.
ரொம்ப அலட்டிக்காத கம்ப்யூட்டரே.

மிசோரம் மாநிலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுவதால், அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு, டைப்ரைட்டிங் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.



யார் கண்டது, மீண்டும் பழைய டைப்ரைட்டர்களுக்கு பூரண கும்ப வரவேற்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். 



என்னை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற ‘VINOD TECHNICAL INSTITUTE’க்கு நன்றி.
 இப்ப சொல்லுங்க, எனக்கு, என் குடும்பத்துக்கு, ஏன் எத்தனையோ குடும்பங்களுக்கு இந்த TYPEWRITER (அதோட மவுசு குறைந்தாலும்) குலதெய்வம் தானே.

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

வலைத்தோழர், தோழியர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.






Friday 11 January 2013

அனுமன் ஜெயந்தி

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். ந்த ஆண்டு இன்று அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 



ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.  

வெற்றிலை மாலை ஏன்?

அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை.
ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

செந்தூரம் ஏன்


ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற போது சீதை நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததை பார்த்து இது குறித்து சீதையை வினவ ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும் போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினார்.

நெற்றியில் சிறியதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால் ராமன் எவ்வளவு வெற்றி வாகை கூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூர் அணிந்து கொண்டதாகவும், இதுவே அனுமனுக்கு செந்தூரம் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு.

வழிபாடு

ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம். `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம்.

வெண்ணெய் சாத்துவது ஏன்?      
         
ராம ராவண யுத்தம் நடந்தபோது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான். அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். 

அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை. அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.

உளுந்து வடை ஏன்?       
    
நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் தசைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம்.

சனியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க

இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான் `ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார்.

``கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்'' என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல் சனிபகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்'' என்றார் அனுமன்.

அதன் பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.


 

மாருதியை வணங்கி மகத்தான வாழ்வு பெறுங்கள்.