Monday 25 March 2013

பாலியல் பலாத்காரம்



தினமும் காலையில் செய்தித் தாளைப் பிரித்தால், குறைந்தது 2,3  இடங்களிலாவது பாலியல் பலாத்காரம் என்று செய்தி இடம் பெறாமல் இருப்பதில்லை.

இந்த வார்த்தையைக் கேட்டாலோ, படித்தாலோ அடி வயிற்றிலிருந்து கோபம் பீரிட்டுக் கொண்டு வருகிறது.  இவர்களும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் தானே!.  இவர்களுக்கும் அக்கா, தங்கை, மகள் எல்லோரும் இருப்பார்கள் தானே.   சமீபகாலமாக இந்தப் பொல்லாதவர்களின் பார்வை பிஞ்சுக் குழந்தைகளின் மேலும் பட ஆரம்பித்திருக்கிறது.   என்ன கொடுமை இது.

முன்பெல்லாம் ஒரு சின்ன பெண் குழந்தையைப் பார்த்தால், ஆஹா எவ்வளவு அழகாக இருக்கிறது என்றோ, எவ்வளவு அழகாக சிரிக்கிறது, குழந்தைக்கு சுத்திப் போடச் சொல்லணும் என்றெல்லாம் நினைப்பேன்.

ஆனால் இப்பல்லாம் ஒரு சிறிய பெண் குழந்தையைப் பார்த்தால்,  வயிற்றிலிருந்து பந்து போல் ஒரு பீதியும், இறைவா இந்தக் குழந்தை நல்லபடி வளர்ந்து நல்லா இருக்கணுமேங்கற கவலையும்தான் மேலோங்குகிறது, அது எந்தக் குழந்தையா இருந்தாலும், யாரோட குழந்தையா இருந்தாலும்.  கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்காவது ஜாக்கிரதையாக இருக்க சொல்லிக் கொடுக்கலாம்.  ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தருவது.

அதிலும் சில இடங்களில் சில ஆசிரியர்கள், சொல்ல வார்த்தையே இல்லை.  மாதா, பிதா, குரு, தெய்வம் என்று இவர்களை தெய்வத்தை விட உயர்ந்தவர்களாக சொல்லப்பட்டிருப்பது இவர்களுக்குத் தெரியாதா? சிறிய கிராமங்களில் குறைவான பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு பெண் குழந்தைகளை அனுப்பக்கூட பயப்படுகின்றனர்.

நண்பர் திரு T.N. MURALIDHARAN அவர்கள் மூங்கில் காற்றுஎன்ற வலைத் தளத்தில் பெண் குழந்தைகளை எப்படி பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க தயார் படுத்த வேண்டும் என்று அருமையாக சொல்லி இருக்கிறார்.

http://tnmurali.blogspot.com/2013/03/children-sexual-abuse-awareness.html

இந்தப் பதிவைப் படிப்பவர்கள் முடிந்தவரை மற்றவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.

பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை இப்படிப் பழக்குவீர்!

   குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது,  பல காலமாக இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் சமீப காலங்களில்தான் அதிகமாக வெளியே தெரியவருகிறது. இன்னும் பல சம்பவங்கள் வெளியில் சொல்லாமல்  மறைத்து வைக்கப்படுகின்றன. பல சமயங்களில்  குழந்தைகள் இது போன்ற தொல்லைகளுக்கு ஆட்படும்போது  வெளியில் சொல்வதில்லை. காரணம் இதை செய்பவர்கள் மிகவும் தெரிந்தவர்கள் குடும்ப  நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், ஆசிரியர்கள், வடிவங்களில் இருப்பதுதான். சில நேரங்களில்  அதிக நம்பிக்கை வைத்து அடுப்படி வரை அனுமதிக்கும் நபர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கேள்விப் பட்டிருப்போம்.

எங்கேயோ  எப்போதோ நடக்கிறது. நமக்கு அப்படியெல்லாம் நடக்காது  என்று அலட்சியத்துடன் இருந்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனிப்பது மட்டுமல்லாமல்   குழந்தைகளுடன் விளையாட்டாகப் பேசி பள்ளியில், பள்ளிக்கு செல்லும் வழியில், வீட்டில் குழந்தை தனித்திருக்கும் சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடைய அன்றாட நடவடிக்கைகளில் திடீர் மாற்றம் ஏதேனும் தென்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
  நம் சமூகத்தில் ஒருவரை ஒருவர் தொட்டுப் பேசுவது இயல்புதான். என்றாலும்  பெண்குழந்தைகளை சாதாரணமாக தொட்டுப் பேசுவதற்கும் தகாத  எண்ணங்களோடு தொடுவதற்கும் உள்ள வித்தியாசங்களை அம்மா அல்லது பாட்டி போன்ற பெரியவர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். Good Touch எது  Bad Touch எது என்பதை குழந்தைகள் உணர கற்றுக் கொடுக்கவேண்டும் . குழந்தைகள் அதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் பல அசம்பவிதங்களில் இருந்து தப்பிக்க முடியும். அதை உணர்த்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடமையாகும். 

தொடுதலின் வகைகள்:
  1. பாதுகாப்பான தொடுதல்: இந்த வகை தொடுதலில் குழந்தைகள் பாதுகாப்பாக  உணர்வார்கள், தாயின் அணைப்பு, தந்தையின் அரவணைப்பு, தாத்தா பாட்டியின் அன்பான தொடுதல்,தட்டிக் கொடுத்தல், போன்றவை.
  2. பாதுகாப்பற்ற தொடுதல்: தள்ளி விடுதல், எட்டி உதைத்தல், கிள்ளுதல், அடித்தல் , பெரும்பாலும் சக நண்பர்கள், தோழிகளாலும், விளையாட்டின் போதும் நிகழ்வது. இவ்வகைத் தொடுதல் வலியையும் காயத்தையும் ஏற்படுத்தக் கூடியவை, இவையும் தவிர்க்கப் பட வேண்டியவையே!
  3. தேவையற்ற தொடுதல்: இதுதான் ஆபத்தானது. இது பாதுகாப்பானது என்றே குழந்தைகள் நினைக்கக் கூடும். நன்கு தெரிந்த நபராக இருந்தாலும் குழந்தைகளின் உடலில் கண்ட இடங்களை தொடுவது சரியல்ல என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
குழந்தைகளுக்கு  சொல்ல வேண்டியது என்னென்ன? இதோ இந்தப் படங்களைப் பாருங்கள் 

                                                             தொடுதல் விதி 
எந்த உறுப்புகள் உன் உள்ளாடைகளால் மறைக்கப் பட்டுள்ளதோ அவைதான் உன் தனிப்பட்ட உறுப்புகள்.உன் உடல் ஆரோக்கியத்திர்காகத் தவிர வேறு காரணங்களுக்காக அவற்றை வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் தொடுவதோ பார்ப்பதோ அதைப் பற்றிப் பேசுவதோ சரி இல்லை.

             கட்டியணைப்பது 

உன் மனசுக்கு பிடிச்சவங்க உன்னை  கட்டி பிடிச்சிகிட்டாலோ, முத்தம் குடுத்தாலோ உனக்கு சந்தோஷமாகூட இருக்கும்.அப்படி செஞ்சவங்க அதை ரகசியமா வச்சிருக்கச் சொன்னா உடனே அம்மா கிட்டயோ அல்லது நம்பிக்கையான பெரியவங்ககிட்டயோ சொல்லிடனும் 

                                                                          பரிசு 
சிலபேர் சில சமயங்களில் பரிசு காசு இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்கள் சொல்றபடி நடக்க வைப்பாங்க. அப்போது சங்கடமாவும் குழப்பமாவும் இருந்தா அவங்க கொடுக்கறதை வாங்காத. அவங்க சொல்றதையும் செய்யாதே.


 
                     ரகசியம் 
தொடுதல் பற்றிய ரகசியம் நல்லதல்ல. தொடுதல் விதிகளை மீற முயற்சி செய்தாலோ அல்லது உன்ன ரகசியமா வச்சுக்க சொன்னா அதை உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட சொல்லணும் 



வேண்டாம்னு சொல்லணும்:தொடுதல் விதியை யாராவது மீறினால் "வேண்டாம்"னு சொல்லக் கத்துக்கறது ரொம்ப அவசியம். இதை ரொம்ப சத்தம் போட்டு சொல்லணும் 






சொல்லிவிடு
 உன்னை யாராவது தொடும் முறை கவலையோ குழப்பமோ பயமோ ஏற்படுத்தினால் உடனே நீ நம்பற பெரியவங்க கிட்ட அதைப் பத்தி சொல்லிவிடு. உதாரணமா உன்னுடைய அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, டீச்சர் இப்படி யாராவது. நீ முதலில் சொல்றவங்க உதவி செய்யலைன்னா வேற ஒருத்தர்கிட்ட சொல்லு. உனக்கு உதவி கிடைக்கும் வரை சொல்லிக்கிட்டே இரு
                                 
                                                
  உன்மீது தவறு இல்லை
தொடுதல்  விதி மீறி சிலர்உன்னை காயப் படுத்தினால் அது உன் தவறு இல்லை.சில சமயங்களில் உன்னால் "வேண்டாம்"என்று சொல்ல முடியவில்லை என்றாலோ  அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ  ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். காயப்படவேண்டும் என்று நீ விரும்பவில்லை.அதற்கு நீ காரணமும் இல்லை.உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ அப்போது  சொல்லலாம்.

 மேற்கூறிய அனைத்தையும்  குழந்தைகளுக்கு தயங்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது. 

 அரசுபள்ளிகளில்  படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகூட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் அளிக்கப் பட்டது . இந்தப் பிரச்சனை அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், வசதி படைத்தோர் அனைவருக்கும் பொதுவானதே! 

இந்த  தகவல்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவற்றை குழந்தைகளின் கவனத்திற்கு உரிய வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.

இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை அக்கறையுடன் எதிர்பார்க்கிறேன்.
  .

Sunday 24 March 2013

தினகரன் வசந்தம்

                                           

 தினகரன் வசந்தத்தில் என் கருத்து.
 

தாய்மொழியில் பேசுவது
 
தன் கையால் சாப்பிடுவது போல.
 
பிற மொழியில் பேசுவது
 
ஸ்பூனால் சாப்பிடுவது போல....
 
ஏன் சொல்றேன்னா......
 
ஸ்பூனால் சாப்பிடும்போது
 
வயிறும் நிறையாது,
 
மனசும் நிறையாது!

 
~~ஜெயந்தி ரமணி~~

                        

Friday 22 March 2013

லயாக்குட்டி



குண்டுக்கண்ணழகி

காந்தச் சிரிப்பழகி

உள்ளம் கவர் கள்வி

எங்கள் வீட்டு

குட்டி இளவரசி

லயாக்குட்டி

Thursday 21 March 2013

குங்குமம் தோழி பேஸ்புக்



Add caption
                                   குங்குமம் தோழி பேஸ்புக்கில் என் கருத்துக்கள்.

Wednesday 20 March 2013

சிட்டுக் குருவி



குட்டி மூக்கால்

கொத்தித் தின்னும்

சிட்டுக் குருவியே

சின்னக் குருவியே

க்ரீச், க்ரீச் என்று

மனதுக்கிசைந்த

குரல் கொடுக்கும்

உன்னைப் பார்த்து

ரொம்ப நாளாச்சுதே.

உன் இனம்

பல்கிப் பெருகி

உலகை விட்டு

அழியாதிருக்க

நீதான் முயற்சி

எடுக்க வேண்டும்

மரங்களை அழித்து,

காடுகளை ஒழிக்கும்

மனிதனை நம்பாதே.

கண்காணாத தூரத்தில்

மனித வாசம் இல்லாத

தேசமாகப் பார்த்து

உன் இருப்பிடத்தை

மாற்றிக் கொள்

நீடூழி வாழ

கற்றுக் கொள்.

Tuesday 19 March 2013

என் கவிதை / குட்டிக்கதை


போன மச்சான் திரும்பி வந்தான்.

ஏற்கனவே ரெண்டு நாய் இருக்கறது போதாதா? இது வேறயா?  சரியான நாய்ப் பைத்தியம்” 

சின்னக்கொட்டாங்கச்சியில் பாலை ஊற்றி வைத்து, வாலை ஆட்டிக்கொண்டே பாலைக் குடித்துக்கொண்டிருந்த கறுப்பு நாய்க்குட்டியை அக்கம் பக்கத்து வீட்டு அரை டிக்கெட்டுகளுடன் சேர்ந்து ரசித்துக்கொண்டிருந்த சந்தியாவைப்பார்த்து கத்தினாள், அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த ஜெயா. 

அப்படி எல்லாம் சொல்லதம்மா.  பாவம்மா! இந்தக் குளிரில இது எங்கம்மா போகும்? நாளைக்குக் கார்த்தால கண்டிப்பா எங்கயாவது கொண்டு விட்டுடலாம்மா.  அப்பா கூட சரின்னுட்டார்மா, ப்ளீஸ் இன்னிக்கு ராத்திரி மட்டும் இங்க இருக்கட்டும்மா”  என்று கெஞ்சினாள் சந்தியா.

அப்பாக்கும் பொண்ணுக்கும் வேற வேலை இல்லை.  நாளைக்குக் கண்டிப்பா அனுப்பிடணும். சொல்லிட்டேன்என்றாள் ஜெயா.

###


மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.  நாய்க்குட்டியை வீட்டிலிருந்து வெளியேற்றிய பிறகுதான் சமைக்கவே ஆரம்பித்தாள் ஜெயா.

மாலை ஆறு மணி.  “மாமி, மாமி”, என்று அழைக்கும் குரல் கேட்டு வெளியே வந்தாள் ஜெயா.  பக்கத்து வீட்டு குட்டிப்பையன் அரவிந்த். 

“மாமி, நாங்க இன்னிக்கு பீச்சுக்குப் போயிட்டு வந்தோமா.  அப்ப நம்ப பஸ் ஸ்டாண்ட் கிட்டக்க நேத்திக்கு சந்தியா அக்கா கொட்டாங்கச்சில பால் ஊத்தி குடுத்துண்டிருந்தாளே அந்த கறுப்பு நாய்க்குட்டி தனியா கத்திண்டிருந்தது.  நீங்க காணும்ன்னு தேடுவீங்களேன்னு தூக்கிண்டு வந்துட்டேன். இந்தாங்கஎன்று நாய்க்குட்டியை ஜெயாவின் முகத்திற்கெதிரே நீட்டினான்.

###


Sunday 10 March 2013

தொடர் பதிவுகள்

HOME SWEET HOME

இல்லம் இனிய இல்லம்.

பகுதி 1.

இந்தப் பதிவு எனது 50வது பதிவாக அமைந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


முன்னுரை

முதற்கண் எனக்கு இப்படி ஒரு தொடர் பதிவிட வாய்ப்பளித்த
பின்னூட்டப்புயல் CUM சுனாமி CUM அருவி ETC. ETC.



திருச்சி கோபு என்கிற

திரு வை கோபால கிருஷ்ணன்


என்ற வலைப்பதிவின் உரிமையாளர் அவர்களுக்கு என்

நெஞ்சார்ந்த, மனமார்ந்த, 

சிரம் தாழ்ந்த நன்றிகளை

சமர்ப்பித்துக் கொள்கிறேன்.










      http://gopu1949.blogspot.in/2013/02/2.html          
                                   http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html                      

         கோபு சாரின் இந்த மூன்று பதிவுகளையும் படித்த பிறகும், உனக்கு தொடர் பதிவிட தைரியம் இருக்கான்னு என்னையே நான் வடிவேலு மாதிரி கேட்டுக் கொண்டேன்.  சரி புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுண்டா மாதிரி, கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போல் இருக்குன்னு யாரும் சொல்லாத அளவுக்கு சமாளிப்போம் என்று ஆரம்பிக்கிறேன்.




        'வீடு' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை.  முதல் பாதியில் சொன்னது போல் வீடு அமைந்தால், அதுவும் இந்தக்காலத்தில்...  ஆஹா, அருமையாக இருக்குமேஆனால் முக்கால்வாசி நகரங்களில் கிடைப்பதென்னவோ இரண்டாம் பாதியில் சொல்லப்பட்டது போல் புறாக்கூடுகள்தான்.

வீடு

வாசலிலே நிதம் பூத்து

இதமான மணம் பரப்பும்

நித்ய மல்லிக்கொடி,

வீட்டைச் சுற்றி மணம் நிறைந்த

நிறம் மிகுந்த மலர்ச் செடிகள்,

விசாலமான அறைகள்,

வீடு நிறைய மனிதர்கள்,

தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா,

சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று,

கருவண்டு கண்கள் சுழற்றி

நொடிக்கொரு சேட்டை செய்யும்

குஞ்சு குளுவான்கள்,

புது மனிதர் வருகையை

கட்டியம் கூறும்

பைரவர் வாசலிலே,

கொல்லையிலே கல்கண்டுத் தண்ணீருடன்

எப்போதும் வற்றாத கிணறு,

மா, பலா, வாழை மரங்கள்,

தினத் தேவை பூர்த்தி செய்யும்

காய்கறிச் செடிகள்,

இப்படி என் பிறந்த வீடு போலவே

புகுந்த வீடும் இருக்கும்

என்ற கனவுகளுடன்

கை பிடித்த மணாளனுடன்

மகிழுந்திலிருந்து வலது கால் எடுத்து

நிலம் பதித்து புது வீடு

வந்து சேர்ந்தேன்.

ஒன்றல்ல, இரண்டல்ல

எண்ணிலா புறாக்கூண்டுகள்

விருந்தினர் வருகையை

சூசகமாகத் தடுப்பது போல்

ஒற்றைப் படுக்கையறை,

பக்கத்து வீட்டில் இருப்பது

யார் என்று தெரியவே

பல நாட்களாயிற்று.

வாசலில் வந்து பார்த்தாலும்,

சாளரத்தின் வழியே பார்த்தாலும்

கண்ணில் பட்டது சாத்திய கதவுகளே!

காய்கறி வண்டிக்காரன்,

விற்பனையாளன்,

அறிமுகம் இல்லாதவர்

அனைவருமே நிறுத்தப்பட்டனர்

வெளி வாசலிலேயே

பாதுகாப்பான இடம்

தண்ணீர் வசதி

எப்பொழுதும் மின்சாரம்

அன்பான கணவன்

இல்லை என்ற சொல்லுக்கே

இடமில்லாத ஒரு வாழ்க்கை

ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.

அடியே! நீ ஒரு

தங்கக் கூண்டுக்கிளிஎன்று.








        

        இந்த மாதிரி தண்ணிக்குள்ள ஒரு வீடு கட்டிக்கொண்டு வாழ எனக்கும் ஆசை தான்ஆனா இந்த மாதிரி வீட்டில் வாழ முடியாதுவேணும்ன்னா ரெண்டு, மூணு நாள் பிக்னிக் போகலாம். அதுவும் இயற்கை அன்னையின், அன்பும், ஆசியும் ஒத்துழைப்பும் இருந்தால்தான்.

           சரிங்க இப்ப விடை பெற்றுக் கொள்கிறேன். நாங்க (அதாங்க நானும் என் வூட்டுக்காரரும்) வீடு வாங்கிய கதை அடுத்த பகுதியில்.
          


........... தொடரும், தொடரும்,
இது தொடர்கதை போல தொடரும்.