லிங்கன்
|
ஜான் எப்.
கென்னடி
|
|
காங்கிரசில் தேர்வானது
|
1846
|
1946
|
அமெரிக்க அதிபரானது
|
1860
|
1960
|
உதவியாளர் பெயர்
|
கென்னடி
|
லிங்கன்
|
சுடப்பட்டது
|
வெள்ளிக்கிழமை
|
வெள்ளிக்கிழமை
|
குண்டு பாய்ந்தது
|
தலையில்
|
தலையில்
|
கொலையாளி பிறந்தது
|
1839
|
1939
|
அடுத்த அதிபர் / பிறந்தது
|
ஆண்ட்ரூ
ஜான்சன் 1808
|
லிண்டன்
ஜான்சன் 1908
|
சுட்ட இடம்
|
ஒரு
தியேட்டருக்குள் சுட்டு சேமிப்புக் கிடங்கில் ஒளிந்து கொண்டான்
|
சேமிப்புக்
கிடங்கில் சுட்டு விட்டு தியேட்டரில் ஒளிந்து கொண்டான்
|
கொலையாளிகள்
இருவருமே விசாரணைக்கு முன்பு கொல்லப்பட்டு விட்டனர்.
|
Friday, 28 September 2012
உலக மகா ஒற்றுமை
Wednesday, 26 September 2012
வசந்தம் சிறுகதை
அறுசுவை.காமில் வந்த என் சிறுகதை
http://www.arusuvai.com/tamil/node/16490
வசந்தம் - ஜெ மாமி
“அப்பா! உங்களுக்குதான் இந்தாங்க பேசுங்க” என்று தொலைபேசியை தந்தையிடம் கொடுத்து விட்டுச் சென்றான் ராகவன்.
“ஹலோ, சேதுராமன் பேசறேன்”
“டேய் சேதுராமா,. நாந்தாண்டா பாலன் பேசறேன். கால்பந்து குழுத் தலைவனா இருந்தேனே. உன்னோட விளம்பரத்தைப் பார்த்துட்டு பேசறேன்”
“சொல்லு, சொல்லு பாலா, எப்படி இருக்க, எங்க இருக்க, உனக்கு எத்தனை
குழந்தைகள், பேரன் பேத்திகள். என்ன செய்யறாங்க? ...................”
***
ஒரு வாரமாக சேதுராமன் வீட்டிலே இதே போல் ஓயாத தொலைபேசி அழைப்புகள். விசாரிப்புகள்.
அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருந்த சேதுராமனுக்கு திடீரென்று ஒரு ஆசை
வந்தது. அவரது மகன்கள் இருவரும் ஏற்பாடு செய்திருந்தபடி திருக்கடையூரில்
தன்னுடைய அறுபதாம் கல்யாணம் முடிந்த கையோடு சென்னையில் தன் வீட்டில்
தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களை அழைத்து ஒரு விருந்து
கொடுக்கவேண்டும் என்று. தன்னுடைய இரண்டு மகன்களையும் கலந்தாலோசித்துவிட்டு
செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்திருந்தார். அவரும் அவர் மனைவி கமலாவும்
ஒரே கல்லூரியில் வேறு படித்திருந்தனர், இரண்டு வருட இடைவெளியில்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு தங்களுடன் கல்லூரியில் படித்தவர்களைச்
சந்திக்க ஆசைப்பட்டு விளம்பரம் கொடுத்திருந்தார். அதன் எதிரொலிதான் இந்தத்
தொலைபேசி அழைப்புகள்.
சேதுராமனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. விளம்பரம் வந்த ஒரே வாரத்தில் 15,
20 பேர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு விட்டனர். அனைவரிடமும் பேசிப்பேசி
பிறகு கணவனும், மனைவியும் தொலை பேசியில் பேசியவற்றை அசை
போட்டுக்கொண்டிருந்தனர்.
அத்துடன் தொலைபேசியில் பேசியதுடன் பாலன் நேரிலும் அவர்கள் வீட்டிற்கு
வந்து பேசி விட்டுச் சென்றதும் சேதுராமனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
***
சேதுராமன் மத்திய அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியில் சேர்ந்து 35
ஆண்டுகள் பணி புரிந்து கணக்கு அதிகாரியாக ஓய்வு பெற்றிருந்தார். திருமணம்
ஆன முதல் வருடத்திலேயே இரட்டைக் குழந்தைகளாக ராகவனும், ரகுராமனும் பிறந்து
விட்டதால் கமலமும் வேலைக்குச் செல்லவில்லை. கூட்டுக்குடும்பமாக
வாழ்ந்ததாலும், தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பும்
இருந்ததாலும் மகன்களை பட்டப்படிப்பு மட்டுமே படிக்க வைக்க முடிந்தது
சேதுராமனால்.
கேட்டரிங் துறை துளிர் விட ஆரம்பித்த நேரத்தில் ராகவன், ரகுராமன்
இருவரும் சேர்ந்து வீட்டில் சிறிய அளவில் பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா
ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் பாட்டியின் பெயரில் “செல்லம்
கேட்டரிங்” என்று ஆரம்பித்து 10 வருடங்களாக கேட்டரிங் துறையில் கொடி
கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். பல பெரிய மனிதர்களின், முக்கியப்
புள்ளிகளின் வீட்டு விழாக்களில் இவர்களது நளபாகம்தான்.
சமையல் துறை என்றாலும் அவர்களுக்கு ஒன்றும் குறைவில்லை. நகரின் மையப்
பகுதியில் ஒரு பெரிய பங்களா, வீட்டு உபயோகத்திற்குத் தனி கார்,
கேட்டரிங்கிற்காக ஒரு மினி வேன், ஒரு ஜீப் என்று எல்லாவற்றையும் சொந்தமாக
வாங்கும் அளவிற்கு உயர்ந்திருந்தார்கள் குறுகிய காலத்திலேயே. ‘தரம்,
நிரந்தரம்’ என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால் மேன் மேலும் சிறப்பாக
வளர்ந்து கொண்டே போனார்கள் பிள்ளைகள் இருவரும். அவர்கள் மனைவியர்
இருவரும் ஒன்று விட்ட அக்கா தங்கைகளாகி விட்டதால் அந்த விதத்திலும்
குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை.
***
இரவு தூங்கச் செல்லும் முன் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்த
மகன்களிடம் சேதுராமன், “ராகவா, ரகுராமா, உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான்
கொஞ்சம் பேசணும்” என்றார்.
“என்னப்பா, திருக்கடையூர்ல, சென்னையில ரெண்டு இடத்துலயும் எல்லா
ஏற்பாடுகளும் செஞ்சுட்டோம்ப்பா. நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம்”
என்றான் ராகவன்.
“அதில்லப்பா” என்றார் சேதுராமன்.
“ஊருக்குப்போயிருக்கற உங்க மாட்டுப்பொண்ணுங்க, குழந்தைங்க எல்லாரும் இந்த வாரக் கடைசிலே வந்துடறாங்கப்பா” என்றான் ரகுராமன்.
”அதெல்லாம் இல்லப்பா. நீங்க ரெண்டும் பேரும் கொஞ்சம் இப்படி வந்து உக்காருங்க” என்றார்.
“என்னப்பா, பீடிகை பலமா இருக்கு’”
கமலாவும் கணவர் என்ன பேசப்போகிறார் என்று முகத்தில் கேள்விக்குறியுடன்
அமர்ந்திருந்தாள். தன்னிடம் எதுவும் கூறவில்லையே என்று யோசித்தாள்.
அப்பாவின் முகத்தில் தெரிந்த கவலை ரேகைகள் பிள்ளைகளுக்கு அச்சத்தைக்
கொடுத்தன.
சேதுராமன் இரண்டு மகன்களையும் இருபுறமும் அமர்த்தி வைத்துக்கொண்டு,
“ரகு, ராகவா நான் உங்க ரெண்டு பேருக்கும் துரோகம் செஞ்சுட்டேனோன்னு
நினைக்கிறேன்.” என்றார்
“என்னப்பா என்ன ஆச்சு உங்களுக்கு. திடீர்ன்னு ஏன் இப்டி சொல்றேள்” என்றான் ரகு.
“அது வந்து, அனேகமா எங்ககூட படிச்சவா எல்லாரோட குழந்தைகளும்
வெளிநாட்டில வேலை செய்யறா. நான் உங்களை வெளியில எங்கயும் அனுப்பாம இங்கயே
இருக்க சொன்னது தப்போன்னு தோணறது. இன்னும் நல்லா படிக்க
வெச்சிருக்கலாமோன்னும் தோணறது. ” என்றார்.
“அட போங்கப்பா, இவ்வளவுதானா? நாங்க என்னமோ ஏதோன்னு பயந்தே போயிட்டோம்.” என்று இருவரும் ஒன்றாகச் சொன்னார்கள்.
பெரியவன் ராகவன், “இதோ பாருங்கப்பா, எங்களுக்கு என்ன குறைச்சல். நாங்க
இன்னிக்கு இவ்வளவு தூரம் முன்னேறி இருக்கோம்ன்னா அதுக்கு நீங்கதான்
காரணம். வீட்டுப் பொறுப்பை நீங்களும் அம்மாவும் முழுக்க பார்த்துக்கறதால
நாங்க நிம்மதியா எங்க தொழில கவனிக்க முடியறது. சிறப்பா செயல்படவும்
முடியறது.
அதோட தாத்தாவும், பாட்டியும் எங்களுக்கு சின்ன வயசில இருந்தே நம்ம
நாட்டைப் பத்தி சொல்லி சொல்லி வளர்த்ததால எங்களுக்கு வெளிநாட்டுக்குப் போய்
வேலை பார்க்க இஷ்டமே இல்லை. வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிச்சா தானா?
பணம் மட்டுமே வாழ்க்கையா அப்பா? அப்படியே பார்த்தாலும் நமக்கு இங்க என்ன
குறைச்சல். உங்க பராமரிப்புல எங்க குழந்தைகளும் எங்கள மாதிரி நல்லபடி
வளர்ந்துண்டிருக்கா. இந்தக் காலத்தில எந்தக் குழந்தைகளுக்கு தாத்தா,
பாட்டி, கொள்ளுத் தாத்தா, கொள்ளுப் பாட்டியோட இருக்கற பாக்கியம்
கிடைச்சிருக்கு.
நீங்க தானே அப்பா சொல்லிக்கொடுத்தீங்க. செய்யும் தொழிலே தெய்வம்ன்னு
அதையும் எங்க செஞ்சா என்னப்பா? வேண்டாத விஷயத்தையெல்லாம் மனசில போட்டு
குழப்பிக்காதீங்க. தினமும் தொலைக்காட்சியிலயும், செய்தித் தாள்களிலேயும்
வெளிநாடு போனவங்களைப் பத்தியும், அவங்க படற கஷ்டங்களைப் பத்தியும் எவ்வளவோ
பார்க்கறோம். படிக்கறோம். இன்னிக்கு நாங்க நிம்மதியா இருக்கோம்.
கிடைச்சதைக் கொண்டு திருப்தி படணும், இப்படி எவ்வளவு நல்ல விஷயங்களை
நீங்கதானே எங்களுக்கு சொல்லி கொடுத்தீங்க. அதுவும் எங்களுக்கு எல்லாமே
சிறந்ததாதானே அப்பா கிடைச்சிருக்கு. நிம்மதியா படுத்து தூங்குங்க அப்பா”
என்று சொல்லிவிட்டு அருகில் வந்து அப்பாவை கட்டிப் பிடித்து விட்டுச்
சென்றான். இளையவன் ரகுராமன் வேகமாக வந்து தன் பங்குக்கு அம்மாவைக் கட்டிப்
பிடித்து முத்தம் கொடுத்து விட்டுச் சென்றான். ‘பார் நம் செல்வங்களை”
என்பது போல் மனைவியைப் பார்த்து ஒரு அர்த்தமுள்ள பார்வையை வீசிவிட்டு
கண்ணில் துளித்த ஆனந்தக் கண்ணீரை மேல் துண்டால் துடைத்துக் கொண்டார்
சேதுராமன். இருந்தாலும் பிள்ளைகளின் பதிலால் அவர் முழுத் திருப்தி
அடையவில்லையோ என்று தோன்றியது கமலாவுக்கு.
***
திருக்கடையூரில் உறவினர் புடை சூழ அறுபதாம் கல்யாணம் சிறப்பாக நடைபெற்று முடிந்து சென்னையில் விழா ஏற்பாடு செய்திருந்த நாள்
விசாலமான மொட்டை மாடியில் அடைத்துப் பந்தல் போட்டிருந்தார்கள்.
வந்திருப்பவர்கள் அனைவரும் சேதுராமன் தம்பதியினரைச் சுற்றி அமர்ந்து
பேசுவதற்கு ஏதுவாக அழகாக ஏற்பாடு செய்திருந்தனர் பிள்ளைகள் இருவரும்.
தம்பதியாகவும், தனியாகவும் வந்திருந்த அனைவரின் முகத்திலும் ஏதோ
காணாததைக் கண்டு விட்டதைப்போல ஒரு மகிழ்ச்சி. அங்கங்கு உட்கார்ந்து
பேசிப் பேசித் தீரவில்லை அவர்களுக்கு. மலரும் நினைவுகளுக்குப் போய்
விட்டனர் அனைவரும்.
ரகுவும், ராகவனும் ஏற்பாடு செய்திருந்த அருமையான விருந்தை ஒரு பிடி
பிடித்துவிட்டுவந்து அமர்ந்து அனைவரும் மறுபடி பேசத் தொடங்கி விட்டனர்.
ஒலி பெருக்கி இல்லாமலே கணீரென்ற குரலில் பேசத் தொடங்கினார் பாலன்.
“நான் உங்க எல்லாரோடையும் சில விஷயங்களை பகிர்ந்துக்கணும்ன்னு ஆசைப்
படறேன்” என்று ஆரம்பித்ததும் அனைவரும் பாலனைப் பார்த்து அமர்ந்து அவர்
பேச்சைக் கேட்கத் தொடங்கினர்.
“இந்த மாதிரி ஒரு விழாவை ஏற்பாடு செய்ததுக்கு முதல்ல சேதுராமனுக்கு நம்ப
எல்லார் சார்பிலயும் நன்றியை சமர்ப்பிச்சுக்கறேன். இன்றைய கால
கட்டத்துல, பெத்தவங்களை முதியோர் இல்லத்தில சேர்க்கற இந்த காலத்தில, நம்ப
நாட்டுக்கே உரிய கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்த இந்த காலத்தில நம்ப
சேதுராமனோட குடும்பத்தைப் பார்த்து நான் ரொம்ப பெருமை படறேன். இன்றைய
நாளிலிருந்து இந்தக் குடும்பம் ஷேமமா இருக்கணும்ங்கறது என்னுடைய தினசரி
பிரார்த்தனையில முதலிடத்தில இருக்கும்.
இங்க வந்திருக்கறவங்கள்ள முக்காவாசி பேரோட குழந்தைகள் வெளிநாட்டில
இருக்காங்க. என்னுடைய குழந்தைகளும்தான். ஏன் இன்னிக்கு இந்தியாவிலேயே
வயதான தம்பதிகள் நிறைய பேர் குழந்தைகள் வெளிநாட்டில இருக்கறதால ‘நீயும்
நானுமடி எதிரும் புதிருமடி’ன்னு இருக்காங்க. இந்த இடத்தில
சொல்லக்கூடாதுதான். இருந்தாலும் சொல்லறேன். என் மனைவி இறந்தபோது கூட என்
மகனும், மகளும் வர முடியல. நான் தான் என் மனைவிக்குக் கொள்ளி வைத்தேன்.
ஆனா நாம எல்லாரும் ரொம்ப பெருமையா என் மகன் அமெரிக்கால இருக்கான், என் மகள்
ஆஸ்திரேலியால இருக்கா, லண்டன்ல இருக்கா அங்க இருக்கா இங்க இருக்கான்னு
பெருமையா சொல்லிக்கறோம். ஆனா உண்மையான பெருமை எது?
நம்ப வாழ்க்கையில எல்லாம் ரெண்டு வருஷத்துக்கோ, மூணு வருஷத்துக்கோ ஒரு
தடவைதான் வசந்தம் வரும், நம்ப பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் நம்ப
வீட்டுக்கு வரும்போது. சில பேருக்கு அதுவும் இல்லை. ஆனா நம்ப சேதுராமன்
வாழ்க்கையில தினமும் வசந்தம் வீசறது. இந்த வசந்தம் அவன் வாழ்க்கையில
என்றுமே தென்றலா வீசணும்ன்னு வாழ்த்தறேன்.”ன்னு சொல்லிட்டு சேதுராமனை வந்து
கட்டி அணைத்துக் கொண்டார்.
ரகுவும், ராகவனும், பாலனின் பேச்சைக்கேட்டு அப்பாவின் முகம் ஆயிரம்
வாட்ஸ் பல்ப் எறிவதைப் போல் பிரகாசமானதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு
விட்டனர்.
***
Thursday, 20 September 2012
பயணக் கட்டுரைகள்
பயணம் செய்வது (அதாங்க ஊர் சுத்தறது - அதைத்தான் அப்படி ஸ்டைலா சொன்னேன்) எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே போல் பயணக் கட்டுரைகளைப் படிப்பதும் ரொம்ப பிடிக்கும். சின்ன வயசில் பரணீதரனின் இமயமலை யாத்திரை பற்றி ஒரு புத்தகம் எங்கள் வீட்டில் இருந்தது. அதை எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. அதே போல் பிலோ இருதயநாத் அவர்களின் எழுத்துக்களையும் படித்திருக்கிறேன்.
இப்ப நானும் பயணக் கட்டுரை எழுத ஆரம்பிச்சுட்டேன்.
என் முதல் பயணக் கட்டுரையைப் படிச்சுதான் பாருங்களேன்.
இப்ப நானும் பயணக் கட்டுரை எழுத ஆரம்பிச்சுட்டேன்.
என் முதல் பயணக் கட்டுரையைப் படிச்சுதான் பாருங்களேன்.
$ $ $
என் மகன் காரில் கொஞ்சம் LONG RUN போக வேண்டும் என்று சொன்னதால் பொங்கலன்று அதாவது (15.01.2011)
அன்று தென்னாங்கூர் செல்ல முடிவு செய்தோம்.
காலையில் சீக்கிரமே எழுந்து பொங்கல் வைத்து, பூஜை முடித்து, பொங்கல், கூட்டு, சாதம், தயிர் சாதம், வடாம்
எல்லாவற்றையும் டப்பர்வேர் டப்பாக்களில் எடுத்துக்கொண்டு காலை 9 மணிக்கு மேல் கிளம்பி
பூந்தமல்லி சாலை வழியே, காஞ்சிபுரம் சென்று, அங்கிருந்து வந்தவாசி செல்லும்
சாலையில் சென்றோம். சாலையின் வலது
பக்கத்தில் பார்த்துக்கொண்டு வந்தால் ஒரிசாவில் உள்ள பூரி ஜகந்நாதர் கோவில்
கோபுரம் போல் கோபுரம் தெரியும் என்று சொல்லி இருந்தார்கள். 1210 மணிக்கு
தென்னாங்கூர் போய் சேர்ந்தோம். முதல்நாள்
தொலை பேசியில் கேட்டபோது 12 மணிக்கே கோவிலை மூடி விடுவதாகச் சொல்லி இருந்தார்கள். நல்ல வேளை, எங்கள் அதிர்ஷ்டமோ இல்லை விசேஷ
தினம் என்பதாலோ கோவில் திறந்திருந்தது. மேலும் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி
கோவிலுக்குச் சென்றுவிட்டு நிறைய பேருந்துகளில் பக்தர்கள் வந்திருந்தனர்.
ஆங்கிலத்தில் SPIC AND SPAN என்று சொல்வார்களே அது போல் இருந்தது கோவில்.
சுத்தமோ சுத்தம். அன்று சனிக்கிழமை என்பதால் பாண்டுரங்கனுக்கும் ருக்மிணிக்கும்,
வெங்கடாசலபதி, பத்மாவதி தாயாராக அலங்காரம் செய்திருந்தார்கள். சன்னிதியில் வெகு தூரத்தில் நின்றால் கூட பாண்டுரங்கன்,
ருக்மிணியின் கம்பீரமான சிலைகள் தெரிகின்றன.
கண்ணனின் லீலைகள் எல்லாவற்றையும் வெளிப் பிரகார சுற்றுச் சுவர்களிலும்,
கூரையிலும் ஓவியங்களாக வரைந்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஓவியமும் கண்ணுக்கு விருந்தாக
இருந்தது. மேலும் ஒவ்வொரு நாளும் செய்யும்
அலங்காரங்களைப் புகைப் படங்களாக எடுத்து மாட்டி இருந்தார்கள்.
சற்று அருகே சென்றதும் ”ஆரத்தி பார்க்க
விரும்புபவர்கள் ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். உச்சி கால தீபாராதனை பார்த்து விட்டு செல்லலாம்” என்று அர்ச்சகர் சொன்னார். மற்ற கோவில்களைப் போல் இல்லாமல் எல்லோரையும்
சமமாக நடத்தியது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அனைவரும் சம்மணமிட்டு அமர்ந்தோம். தீபாராதனை முடிந்ததும் அர்ச்சகர் “அனைவரும்
சந்நிதியின் வாசலில் துளசி, சந்தனம் பிரசாதங்கள் வாங்கிக் கொள்ளுங்கள், தயவு
செய்து வரிசையில் நின்று வாங்குங்கள்.” என்று
வினயமாகச் சொன்னார். வெளியே வந்ததும்,
துளசி, சந்தனத்துடன் ஒரு கவளம் சுடச்சுட சாம்பார் சாதம். ஆஹா என்ன சுவை. அது என்னமோ கோவிலில் கொடுக்கும் பிரசாதத்துக்கு
ஒரு தனி சுவை வந்து விடுகிறது. ஒருவேளை
அந்தப் பரந்தாமன் தன் பங்குக்கு தன்னுடைய அருளையும், அன்பையும் அதில்
கலந்திருப்பானோ? அதில் என்ன சந்தேகம். இது MIND VOICE.
தென்னாங்கூர் கோவிலைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே
சொடுக்குங்கள்.
தென்னாங்கூரிலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் பம்ப்
செட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.
அங்கேயே காரை நிறுத்தி விட்டு மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டோம்.
வழியில் எவ்வளவு கிராமங்கள். வீட்டு
வாசல்களில் அழகழகான பெரிய, பெரிய கோலங்கள். வண்ண, வண்ணக் கோலங்கள்.
கிராமத்திற்குச் சென்று பொங்கல் கொண்டாடிய
EFFECT கொஞ்சம் வந்து விட்டது.
இப்படி சின்னச் சின்ன கிராமங்களைக் கடந்து போகும்போது நான்
நினைப்பதுண்டு. அந்த மாதிரி இடங்களில்
பிறந்து, வளர்ந்து அங்கேயே வாக்கப்பட்டு
வாழ்க்கை நடத்தும்படியான சூழ்நிலை இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று.
ஆனால் ஒன்று மட்டும் சங்கடப்படுத்தியது.
வழியில் ஒரே பைக்கில் 4 பேர், அதுவும் பெரியவர்கள் சர்வ சாதாரணமாகப் பயணிப்பதைப்
பார்த்தோம். அவரவர் உயிர் பற்றிய அக்கறை
அவர்களுக்கே இல்லாவிட்டால் என்ன செய்வது?
மேல் மருவத்தூர் வழியாக வண்டலூர் வந்து மிருகக் காட்சி சாலைக்குச் செல்லலாம்
(இது மருமகளின் விருப்பம். இது வரை பார்த்ததில்லையாம்)
என்று பார்த்தால் அங்கு பயங்கர கூட்டம்.
அதனால் அப்படியே காரைத் திருப்பி கேளம்பாக்கம் வழியாக கோவளம் கடற்கரைக்குச்
சென்றோம். அம்மாடி ஒரே பட்டை, பட்டையாக
மீன்களுக்கு மசாலா ஆடை அணிவித்து வரிசையாக வைத்து இருந்தார்கள். நல்லவேளை, நாங்கள் திரும்பி வரும் வரை
மீன்களைப் பொரிக்க ஆரம்பிக்கவில்லை.
தப்பித்தோம். மீன் வாடை வராத இடமாகத் தேடிச் சென்றோம்.
கடற்கரைக்குச் சென்று விட்டு அலையில் நிற்காமலா? நம்ப ஊரில் தானே இப்படி அலை அடிக்கிறது. என்னைப்
பொறுத்தவரை தெவிட்டாத விஷயங்களில் கடல் அலையும் ஒன்று. காலையில் கோவிலுக்குச்
செல்வதால் மூவரும் பட்டுப் புடவை உடுத்தி இருந்தோம். அலையைப் பார்த்ததும் பட்டுப் புடவையாவது
ஒன்றாவது. சுமார் ஒரு மணி நேரம் அலையில்
நின்றிருந்தோம். எங்கள் வீட்டில் என்
கணவர் மட்டும் அலை பக்கமே வர மாட்டார்.
நாங்கள் எல்லாம் அலையை விட்டு வெளியே வர மாட்டோம்.
மீண்டும், மீண்டும் பார்க்கத்தூண்டும் பாண்டுரங்கனின் தரிசனம், மகனின் கார்
ஓட்டும் நேர்த்தி, அலையில் நின்ற மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்து நிரம்பிய நிறைவான மனதுடன்
இரவு வீடு வந்து சேர்ந்தோம்.
Wednesday, 19 September 2012
குட்டிக் கதைகள்
அட்சய திருதி
அட்சய திருதி அன்று விடியற்காலை எழுந்து தினசரி கடமைகளை முடித்துவிட்டு, தன் வீட்டிற்கு சமைக்கும்போது கூடவே 15 பேர்களுக்கும் சேர்த்து தன் கையாலேயே சாம்பார் சாதம், தயிர் சாதம் தயாரித்து, அத்துடன் தண்ணீர் பாக்கெட், ஊறுகாய், சிப்ஸ் எல்லாவற்றையும் 15 உறைகளில் போட்டு எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் பிச்சை எடுப்போர் மற்றும் செருப்புகளை பார்த்துக்கொள்ளும் கிழவி கண்ணம்மா, எல்லோருக்கும் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் வீடு திரும்பினாள் வனிதா
***
”பாட்டி, என்ன இன்னிக்கு இவ்ளோ சாப்பாடு கொண்டு வந்திருக்கீங்க, ஏ அப்பா வித விதமா இருக்கே” என்று கேட்டான் கண்ணம்மாவின் பேரன்.
***
”பாட்டி, என்ன இன்னிக்கு இவ்ளோ சாப்பாடு கொண்டு வந்திருக்கீங்க, ஏ அப்பா வித விதமா இருக்கே” என்று கேட்டான் கண்ணம்மாவின் பேரன்.
“அதுவா இன்னிக்கு என்னமோ விசேஷமாம். நிறைய பேருங்க சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தாங்க. ம். இதுக்கு பதிலா காசோ, இல்ல வெச்சு நாளைக்கு சாப்பிடற மாதிரி ரொட்டி, பிஸ்கெட் கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்”.
“அதனால என்ன பாட்டி.. நமக்கு போக மீதியை அக்கம் பக்கத்து குடிசையிலே இருக்கறவங்களுக்கு குடுத்துடலாமே” என்றான் பேரன்.
திருப்தி
”என்ன வித்யா. இந்த தீபாவளிக்கு பட்டுப்புடைவையா?”
“ம்க்கும். அதை ஏன் கேக்கற? எங்க வீட்டுக்காரர் இந்த முறை கண்டிப்பா அவரோட ரெண்டு தங்கைக்கும் தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுக்கணும்ன்னு சொல்லிட்டார். அதனால சில்க் கோட்டாதான் வாங்கிண்டேன். ரெண்டு சாதா காட்டன் புடைவையும் எடுத்துண்டேன்.”
இது அலுவலகத்திலிருந்து ரயிலில் வீடு வந்து கொண்டிருந்த இரண்டு தோழிகளுக்கு இடையே நடந்த பேச்சு.
அப்பொழுது ஒரு பெண் அழுக்குத்துணி உடுத்தி குளித்துத் தோய்த்து பலநாட்கள் ஆனது போல் இருந்தவள் லாலலா என்று பாடிக்கொண்டே ஏறினாள். ”பார்த்து நில்லம்மா.. வெளியிலே விழுந்துடப்போற” என்றாள் வித்யா. அந்தப்பெண் “ஏம்மா ஒரு கணக்கு சொல்லு. வீட்டில 5 பொம்பளைங்க இருக்கோம். 5 பேருக்கும் தீபாவளிக்கு வளையல் வாங்கலாம்ன்னு இருக்கேன். ஒரு சோடி 5 ரூபான்னா 5 எவ்வளோ?” என்றாள். வித்யா “25 ரூபாய் என்றாள்”. ”அம்மாடியோ அவ்ளோவா?” என்றாள் அந்தப்பெண்.
2000 ரூபாய்க்கு தனக்கு துணிமணி வாங்கிகொண்ட வித்யாவுக்கு யாரோ மண்டையில ணங்கென்று கொட்டியதுபோல் இருந்தது.
வைராக்கியம்
இரவு மணி ஏழு
”அப்பா, அம்மா வேலைக்குப்போயிட்டு வந்ததுலே இருந்து அழுதுகிட்டிருக்காங்க” வீட்டிற்குள் நுழைந்த ரமேஷிடம் இரண்டு குழந்தைகளும் கோரஸாக சொன்னார்கள்.
“விமலா, என்ன ஆச்சு? ஆபிசில் ஏதாவது தகராறா? நீ இப்படி அழுதுகிட்டிருக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. சொல்லும்மா” என்றார் ரமேஷ்.
“விமலா, என்ன ஆச்சு? ஆபிசில் ஏதாவது தகராறா? நீ இப்படி அழுதுகிட்டிருக்கறது எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு. சொல்லும்மா” என்றார் ரமேஷ்.
விமலா, “அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. பேருந்தில் வரும்போது ஒரு பெண்மணி 15 வயது மதிக்கத்தக்க மகனை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அந்தப்பையனுக்கு மனநிலை சரியில்லை. அரை மணி நேரம் பேருந்தில் அவர்களுடன் வந்தது மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுத்து. அவங்க ரெண்டு பேர் முகத்தையும் மறக்க முடியலை. ஒரே அழுகையா வருதுங்க. கடவுள் நமக்கு எல்லாம் கொடுத்திருக்கார். நல்ல நிலையில் இருக்கோம். அப்பக்கூட இதையெல்லாம் நம்ப உணரலையே. சாரிங்க. நானும் உங்க கிட்ட அப்பப்ப சண்டை போட்டுடறேன்“
“நீ சொல்றது ரொம்ப சரி விமலா. கடவுளுக்கு ஒவ்வொரு கணமும் நன்றி சொல்ற நிலையில தான் நாம்ப இருக்கோம். நீ இப்ப எதுவும் சமைக்க வேண்டாம். வா நாலு பேரும் வெளியில போய் சாப்பிட்டுட்டு வந்துடலாம். நாளையிலேயிருந்து பார் நான் எப்படி நடந்துக்கறேன்னு“
காலை எட்டு மணி
”நேத்து இங்க வெச்ச என்னோட ஆபீஸ் பைல் எங்க, இந்த வீட்டிலே ஒண்ணு கூட ஒழுங்கா இருக்காது..” உச்சஸ்தாயியில் கத்தத்தொடங்கினான் ரமேஷ்
“ஏங்க நான் என்ன வீட்டிலேயா உக்காந்துண்டிருக்கேன். உங்க பொருளை நீங்கதான் ஒழுங்கா எடுத்து வெச்சுக்கணும்..” விமலா
புண்ணியம்
அறுபதாம் கல்யாணம் முடிந்து பணி ஓய்வும் பெற்ற ராமநாதன் மனைவி விஜயாவிடம் “விஜயா, இதுநாள் வரை நம் குடும்பம், நம் பிள்ளைகள் என்று இருந்து விட்டோம். “குடும்ப விளக்கில்” பாரதிதாசன் சொன்னதுபோல் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும். நாளையிலிருந்து நானே காலையில் போய் பால் வாங்கி வருகிறேன். பூ வாங்குவதையும் நிறுத்திவிடு. தினமும் மாலையில் சந்தைக்குப்போய் கறிகாய், பூ எல்லாம் வாங்கி வந்து விடுகிறேன். சந்தையில் மலிவாக இருக்கும் அல்லவா? கொஞ்சம் சிக்கனமாக இருப்போம். என் நண்பன் ஒரு அமைப்பை ஆரம்பித்திருக்கிறான். ஏழைக்குழந்தைகளுக்கு உதவ. அதற்கு மாதா மாதம் பணம் அனுப்புவோம். போற வழிக்கு புண்ணியம் சேர்ப்போம்” என்று சொன்னார்.
* * *
மறுநாள் மதியம் பூக்காரி பொன்னாம்மா மாடி ஏறி வந்தாள். “இன்னாம்மா! வெள்ளிக்கெழமையும் அதுவுமா பூ வாணான்னுட்டியாமே. பால் கூட போடவேணாம்ன்னுட்டியாமே. நான் பெத்தது ஒண்ணு. அதுவும் தறுதல. மருமக இன்னடான்னா மூணு பொட்டப்புள்ளங்களை பெத்து கொடுத்துட்டு கண்ணை மூடிட்டா. நாலு வூட்டுக்கு பால் கவர் போட்டு, பூ வித்து, வூட்டு வேலை செஞ்சுதானமா அதுங்களுக்கு கஞ்சி ஊத்தறேன். படிக்க வெக்கறேன்.” என்றாள்.
மறுநாள் மதியம் பூக்காரி பொன்னாம்மா மாடி ஏறி வந்தாள். “இன்னாம்மா! வெள்ளிக்கெழமையும் அதுவுமா பூ வாணான்னுட்டியாமே. பால் கூட போடவேணாம்ன்னுட்டியாமே. நான் பெத்தது ஒண்ணு. அதுவும் தறுதல. மருமக இன்னடான்னா மூணு பொட்டப்புள்ளங்களை பெத்து கொடுத்துட்டு கண்ணை மூடிட்டா. நாலு வூட்டுக்கு பால் கவர் போட்டு, பூ வித்து, வூட்டு வேலை செஞ்சுதானமா அதுங்களுக்கு கஞ்சி ஊத்தறேன். படிக்க வெக்கறேன்.” என்றாள்.
”இல்ல பொன்னம்மா. நான் ஒருநாளைக்கு வேண்டாம்ன்னு சொல்ல நினைச்சதை தப்பா சொல்லிட்டேன். நாளையிலே இருந்து பாலும் போடு, பூவும் கொண்டு வந்து கொடு. இரு நல்ல வெய்யில் நேரம்.. மோர் தரேன். குடிச்சுட்டுப்போ” என்று சொல்லிவிட்டு ஈசி சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த கணவனை அர்த்த புஷ்டியுடன் பார்த்தாள்.
அம்மா
இதுவும் அறுசுவையில் வெளிவந்த என் சிறுகதை
அம்மா
“மணி ஓடாதேடா” என்று கத்திக்கொண்டே நாய்க்குட்டியின் பின்னால் ஓடி வந்த சங்கரி அப்பாவின் குரல் கேட்டு நின்றாள். “அம்மா, இந்த அழைப்பிதழை பாரம்மா. எப்படி இருக்குன்னு சொல்லு’ என்று அச்சகத்திலிருந்து அப்பொழுதுதான் வந்திருந்த அவளது ‘மஞ்சள் நீராட்டு விழா’ அழைப்பிதழை நீட்டினார் சங்கரியின் தந்தை ராமசாமி. வாங்கிய வேகத்தில் அழைப்பிதழை திருப்பிக்கொடுத்துவிட்டு, “ம் நல்லா இருக்குங்கப்பா” என்று சொல்லிவிட்டு மூச்சு வாங்க மணியைத் தேடி தோட்டத்திற்கு ஓடினாள் சங்கரி.
* * *
நகரத்து நாகரீகம் இன்னும் முழுமையாக எட்டாத நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத ஊர் சின்னூர். ராமசாமி அந்த ஊரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மிகவும் நேர்மையானவர், நாணயமானவர் என்பதால் ஊரில் இருந்த முக்கிய புள்ளிகள், பெரிய மனிதர்கள் அனைவரும் அவரது நிரந்தர வாடிக்கையாளர்கள். மேலும், எந்த தீய பழக்கமும் இல்லாதவர் என்பதால், ஊர் மக்களின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார். ராமசாமி தன் குல தெய்வம் சங்கரி அம்மனின் பெயரை மகளுக்கு வைத்திருந்ததால் மகளைக்கூட பெயர் சொல்லி அழைக்காமல் ‘அம்மா’ என்றுதான் அழைப்பார்.
சங்கரியைப் பெற்று கணவனின் கையில் கொடுத்துவிட்டு நிரந்தரமாக இந்த உலகை விட்டுச் சென்று விட்டாள் அவர் மனைவி உமா. வேறு திருமணம் செய்து கொள்ளவும் அவருக்கு விருப்பமில்லை. ராமசாமி, உமா இருவருமே அவரவர் பெற்றோருக்கு ஒரே வாரிசு என்பதால் சங்கரிக்கு மாமா, அத்தை, பெரியம்மா, பெரியப்பா, சித்தி, சித்தப்பா என்று எந்த உறவும் இருக்க வாய்ப்பில்லாமல் போயிற்று. ஏன், இரண்டு பக்கத்து பாட்டி, தாத்தாக்களின் காலமும் ஆகிவிட்டிருந்தபடியால் அந்த சொந்தங்களும் இல்லை.
ராமசாமியின் தாத்தா அந்தக்காலத்தில் கட்டிய பெரிய வீடு அவர்களுக்கு அதிகம்தான் என்றாலும் பரம்பரை சொத்து என்பதால் அங்கேயே வசித்தார். வீட்டை ஒட்டிப் பெரிய தோட்டம். அவர் வீட்டில் எதற்கும் பஞ்சமில்லை. ஆனால் ஆண்டு அனுபவிக்கத்தான் ஒரு மகராசி இல்லை. வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வம் சங்கரி அம்மனுக்கு பூஜை செய்ய சொந்த ஊருக்கு மகளை அழைத்துக்கொண்டு செல்வார் ராமசாமி. மற்றபடி தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்.
சங்கரிக்குத் தெரிந்ததெல்லாம் அழகான அவர்கள் வீட்டுத்தோட்டம், அவளது பள்ளிக்கூடம், சமையற்காரப் பெண்மணி கண்ணாத்தா, மற்றும் அவளது செல்லப்பிராணிகளான கன்றுக்குட்டி, நாய்க்குட்டி இதெல்லாம்தான்.
அறியாத வயதிலேயே திருமணமாகி, வாழ்க்கை என்றால் என்னவென்று உணரும் முன்பே விதவையாகிவிட்டவள் கண்ணாத்தா. ராமசாமிக்கு தூரத்துச் சொந்தம். அக்காள் முறை. ஆனால் அவரது தோற்றத்தை வைத்து சங்கரி அழைப்பது என்னவோ பாட்டி என்றுதான். ராமசாமியின் திருமணத்திற்கு முன்பே அவர்கள் வீட்டில் தஞ்சமடைந்தவள். சமையலறையே அவளது உலகம். சங்கரியைக் கண்ணாத்தாதான் வளர்த்தாள்.
என்ன வேலை இருந்தாலும் மகளைத் தினமும் காலையில் வண்டியில் பள்ளிக்குக் கொண்டு விடுவதையும், மாலையில் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வருவதையும் ராமசாமி வழக்கமாகக் கொண்டிருந்ததால் பள்ளியிலும் சங்கரிக்கு நெருங்கிய தோழி என்று யாரும் இல்லை. அதுபோல், தினமும் இரவு சிறிது நேரமாவது மகளுடன் உட்கார்ந்து பேசி விட்டுத்தான் படுக்கப்போவார். கடைக்கு சரக்கு வாங்கப்போகும் போதெல்லாம் மகளுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொண்டு வந்து தருவார்.
சங்கரிக்குப் பிடிக்காத நாட்கள் பள்ளி விடுமுறை நாட்கள். அதையும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகள், நாய்க்குட்டி, கன்றுக்குட்டி இவற்றுடன் கழித்து விடுவாள். தோட்டத்துச் செடிகளில் உள்ள பூக்களை ரசிப்பாள், அவற்றுடன் பேசக்கூட செய்வாள்.
* * *
சொந்தம் என்று யாரும் இல்லாததால் மகளுக்கு மாமன் செய்ய வேண்டிய சீரிலிருந்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வாங்கினார். மேளம் முதல் மாலை வரை விழாவிற்குத் தேவையான ஒவ்வொன்றையும் அவரே ஏற்பாடு செய்திருந்தார். விழாவன்று ஐயனார் கோவிலில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார்.
மஞ்சள் நீராட்டு விழாவன்று கண்ணாத்தா சங்கரியை எழுப்பி தலை குளிக்க வைத்தாள். வீட்டிற்குள் யார், யாரோ புது வரவுகளைப்பார்த்து மிரண்டுதான் போயிருந்தாள் சங்கரி. வாசலை அடைத்துப் பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். வாசல் பக்கம் வந்த சங்கரி அங்கு உட்கார்ந்திருந்த புதியவர்களைப் பார்த்துத் திரும்ப வீட்டிற்குள் சென்றாள். அப்பாவும் அவள் கண்ணில் படவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் விழித்தாள். சமையலறைக்குச் சென்றாள். அங்கே வேலையாட்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த கண்ணாத்தா சங்கரியைப் பார்த்ததும், “கண்ணு உன் அறையிலே போய் இருந்துக்கம்மா. சாயங்காலம் உனக்கு நலங்கு வெப்பாங்க. இப்ப போய் ஓய்வு எடுத்துக்கம்மா” என்றாள். கண்ணாத்தாவின் குரல் கேட்டு அங்கிருந்த வேலைக்காரர்களின் பார்வை சங்கரியின் மேல் விழுந்ததும் சங்கடத்துடன் நகர்ந்தாள். அது வரை பட்டாம்பூச்சிபோல் சுற்றித்திரிந்து கொண்டிருந்த சங்கரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. திடீரென்று தான் தனிமை படுத்தப்பட்டது போல் உணர்ந்தாள். அன்று ஒரு நாள் மட்டும் தோட்டத்துப்பக்கம் போக வேண்டாம் என்று வேறு சொல்லியிருந்தாள் கண்ணாத்தா. தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த மணி வேறு தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தது. சொந்த வீடே அன்னியமானது போல் தோன்றியது சங்கரிக்கு.
மாலையில் விழாவிற்கு வந்திருந்த பெண்கள் சங்கரியை அலங்கரித்து அழைத்து வந்து பந்தலில் போடப்பட்டிருந்த பெரிய நாற்காலியில் உட்கார வைத்தனர். பட்டுப்புடவை, நகைகள், மாலை எல்லாம் சேர்ந்து சங்கரிக்கு சோர்வையே உண்டாக்கியது.
வந்திருந்தவர்களில் வயதான பெண்மணி சடங்கைத் தொடங்கி வைத்தார். ஒவ்வொருவராக சங்கரிக்கு சந்தனம் பூசி, குங்குமம் இட்டனர். சங்கரிக்குக் கூச்சமாக இருந்தது. யார் யாரோ வந்து அவள் கையில் பரிசுப்பொருட்களையும், மொய்ப்பணத்தையும் கொடுத்தனர். சங்கரிக்கு எப்படா இதெல்லாம் முடியும் என்றிருந்தது. ஒருவழியாக ஆலம் சுற்றி முடிந்ததும் வந்திருந்தவர்களெல்லாம் விருந்துண்ணச் சென்றனர். விருந்து நடந்த இடத்திலிருந்து “வாங்க, வாங்க இங்க உட்காருங்க, திருப்தியா சாப்பிடுங்க. கேட்டு வாங்கி சாப்பிடுங்க” என்று அவள் அப்பா உபசரிப்பது கேட்டது. மெதுவாக சமையலறைப் பக்கம் சென்றாள். கண்ணாத்தா சங்கரியைப் பார்த்து கண்கலங்கி, ”கண்ணு அப்படியே உங்கம்மா கல்யாணம் ஆகி வந்த போது இருந்த மாதிரியே இருக்க. ம். அந்த மவராசிக்குத்தான் குடுத்து வெக்கல” என்று சொல்லிவிட்டு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். சங்கரியின் வாடிய முகத்தைப் பார்த்து, “ஐயோ! நான் ஒருத்தி.. என்னென்னவோ புலம்பிக்கிட்டு. வா. கண்ணு சாப்புடு” என்று இலையைப்போட்டு பரிமாறி பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட வைத்தாள்..
ஒரு வழியாக வந்தவர்கள் எல்லாம் விடை பெற்றுச் சென்றபின் கணக்கு வழக்கெல்லாம் பார்த்துவிட்டு மகளின் ‘மஞ்சள் நீராட்டு விழா’ இனிதே நடைபெற்ற மகிழ்ச்சியில் ராமசாமி ஊஞ்சலிலேயே படுத்துக்கொண்டு குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.
சாப்பிட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு வந்த சங்கரி, அப்பா குறட்டை விட்டுத் தூங்குவதைப் பார்த்ததும் மறுபடி கண்ணாத்தாவைத் தேடிச் சென்றாள். பாவம், வேலை அதிகமானதால் களைப்புற்றிருந்த கண்ணாத்தாவும் தூங்கி விட்டிருந்தாள்.
தன் அறைக்குச் சென்று கதவைத் தாழ் போட்டுக்கொண்ட சங்கரி அன்றுதான் முதன் முதலாகத் தன் தாயின் பிரிவை உணர்ந்தவள் போல் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.
ஆன்மீகம்
விநாயகர் சதுர்த்தி
ஐந்து கரத்தனை யானை
முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
ஐந்து கைகளையும், யானை
முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப்
புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில்
வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
மதம்
இன்று உலகம் முழுவதும் மதச் சண்டை தலை விரித்தாடுகிறது. இது பற்றிய என் கருத்தே அறுசுவை.காமில் வெளிவந்த என்னுடைய இந்த சிறுகதை.
http://www.arusuvai.com/tamil/node/14856
அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த ராகவன் ”எங்க உங்கம்மா” என்று மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்த வித்யாவிடம் கேட்டான். “சலீம் அண்ணா வீட்டுக்குப் போயிருக்காங்க” என்று பயந்து கொண்டே சொன்னாள் வித்யா.
“அவனை அண்ணான்னு சொல்லாதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். உங்கம்மாவுக்குத்தான் அறிவே கிடையாது. உனக்குமா? சொந்த அண்ணனை பாலுன்னு பேர் சொல்லி கூப்பிடற. எவனோ உனக்கு அண்ணனா?” என்று கோபமாகக் கத்தினான் ராகவன்.
உள்ளே படுத்துக்கொண்டிருந்த பாலு, அப்பா வந்து ஏதாவது கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தான். அவன் பயந்தது போலவே ராகவன், பாலு படுத்துக்கொண்டிருந்த அறைக்குள் வந்து எட்டிப்பார்த்து விட்டுச் சென்றான்.
”ஓடா உழைச்சு, களைச்சு வீட்டுக்கு வர புருஷனுக்கு ஒரு வாய் காபி குடுக்கக்கூட ஆள் இல்லை” என்று முணுமுணுத்துக்கொண்டே தொலைக்காட்சிப்பெட்டியின் முன் உட்கார்ந்தான் ராகவன்.
”அப்பா காபி இந்தாங்க” என்று பயந்து கொண்டே கொடுத்த வித்யாவிடம் “என்ன உங்கம்மா பிளாஸ்க்ல போட்டு வெச்சுட்டுப் போயிட்டாளா? எல்லாம் என் தலையெழுத்து” என்று சொல்லிக்கொண்டே காபி கோப்பையை வாங்கிக்கொண்டான் ராகவன்.
வாசல் கேட் திறக்கும் ஓசை கேட்டது. “நான் வரேன் ஆன்ட்டி” சலீமின் அக்கா ஜமீலாவின் குரல். ஸ்கூட்டியில் லலிதாவை வீடு வரை கொண்டு விட்டுச் செல்கிறாள் ஜமீலா.
இங்கொன்றும், அங்கொன்றுமாக சிதறிக் கிடந்த ராகவனின் காலணிகளைப் பார்த்த லலிதா, ’ஐயையோ! என்னிக்கும் இல்லாத அதிசயமா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டார் போல இருக்கே. வீடு வேற அமைதியா இருக்கே. என்ன பூகம்பம் வெடிக்கப்போகிறதோ’ என்று பயந்து கொண்டே உள்ளே நுழைந்தாள்.
ஏதாவது ஒரு காரணத்துக்காக வீட்டில் இருப்பவர்களை வறுத்து எடுப்பது ராகவனுக்கு வாடிக்கைதான். ஒருநாள் மதிய சாப்பாட்டில் முடி இருந்தது என்று கத்துவான். இதை ஏன் அங்க வெச்ச, அதை ஏன் எடுத்த என்று வீட்டில் எப்போதும் ஒரே ரகளைதான். ஏதோ ஒரு உப்பு சப்பில்லாத காரணத்துக்காக கத்துவது அவன் வழக்கம். உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்பான். அவன் மிரட்டுகிற மிரட்டலில் ஒழுங்காய் செய்யும் வேலைகளைக்கூட தப்பும் தவறுமாய் செய்து விடுவார்கள். சில நேரங்களில் அவன் எதற்குக் கத்துகிறான், ஏன் தன்னைத் திட்டுகிறான் என்பது கூடப்புரியாமல் விழிப்பாள் லலிதா.
மேலும் ராகவனுக்கு மற்ற மதத்தவர்களைக் கண்டால் அறவே பிடிக்காது. லலிதாவும் எத்தனையோ முறை நயமாகச் சொல்லிப்பார்த்து விட்டாள். “ஏங்க நாமெல்லாம் சாதாரண மனுஷங்க. நமக்கு எதுக்குங்க மதமெல்லாம். நாம என்ன பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கவா போறோம். மனுஷன, மனஷனாப் பாருங்க. நல்ல நண்பர்களா இருக்கறதிலே என்ன தவறு” என்று. ஆனால் ராகவன் மனம் மாறுவதாக இல்லை.
உள்ளே நுழைந்த லலிதாவைப் பார்த்த ராகவன் “என்ன அறிவில்ல ஒனக்கு. எத்தனை தடவை சொல்லறது? ஏன் ரம்ஜானுக்கு செஞ்சு, மீந்த ஓசி ஸ்வீட் ஏதாவது கிடைக்கும்னு அவங்க வீட்டுக்குப் போனியா? எனக்குப்பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் போன?” வழக்கம்போல் விஷம் தோய்ந்த அம்புகளாக வந்து விழுந்தன வார்த்தைகள். மேலும் சலீம் வீட்டுக்காரர்களையும் சொல்ல நாகூசும் வார்த்தைகளால் ஏசினான். எப்போதும் வாய் மூடி மௌனியாக இருக்கும் லலிதாவால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை. தன்னை, பெற்ற பெண்ணைப்போல் அன்புடன் நடத்தும் நல்ல மனிதர்களை அவன் ஏசுவதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
”ஏங்க உங்க மதவெறிக்கு ஒரு அளவே இல்லையா? நம்ப பையன் வலது கை உடைஞ்சு பள்ளிக்கூடம் போய் இன்னியோட 15 நாளாச்சு. இந்த 15 நாளும் அந்தப் பையன் சலீம் நம்ப வீட்டுக்கு வந்து என்ன பாடம் நடந்ததுன்னு பாலுவுக்கு சொல்லிக் கொடுத்து, நோட்ஸ் எழுதிக் குடுத்து – இத்தனைக்கும் அவங்களுக்கு ரம்ஜான் நோன்பு. நோன்பு இருக்கற அந்தக் குழந்தை இந்த நேரத்தில் கூட தினமும் நம்ப வீட்டுக்கு வந்துட்டுப்போறான். தேர்வுக்குள்ள நம்ப பாலுவுக்கு கை சரியாகணும்னு அவங்க வீட்ல ஒவ்வொரு தொழுகையிலேயும் வேண்டிக்கறாங்களாம். எங்கோ யாரோ தப்பு செய்தா அதுக்கு ஏங்க ஒட்டு மொத்தமா எல்லாரையும் வெறுக்கறீங்க?
போன வருஷம் கஷ்டப்படறான்னு பத்தாயிரம் ரூபா கொடுத்து உதவினீங்களே உங்க நண்பர் முருகன். அவர் பையன் ரமேஷ் கூட நம்ப பாலுவோட வகுப்பிலதான் படிக்கிறான். அவங்க வீட்ல யாரும் ஒருநாள் கூட நம்ப பையனை வந்து எட்டிக்கூட பார்க்கல. நான் அவங்களை தப்பா சொல்லல. உங்க மதத்தைச் சேர்ந்தவங்க யாராவது தப்பு செய்தா என்ன செய்வீங்க? வீட்டை விட்டு தள்ளி வெச்சுடுவீங்களா? இல்ல ஊரை விட்டே தள்ளி வெச்சுடுவீங்களா?”
இத்தனை நாளாக மனதில் தேக்கி வைத்திருந்த கோபம் மடை திறந்த வெள்ளமாக வெளியே வந்து விட்டதோ? இப்படிப் பேசுவது நம்ப அம்மாதானா என்று ஆச்சரியத்துடன் ஆவென்று வாய் பிளந்து கொண்டு பார்த்தனர் பாலுவும், வித்யாவும். உண்மை சுடவே பதில் சொல்ல முடியாமல் வாய் மூடித் தலை குனிந்து அமர்ந்து கொண்டிருந்தான் ராகவன்.
இரண்டே இரண்டு அடி சிவப்பு............
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது நான் எழுதி அதீதம்.காமில் வெளி வந்த சிறுகதை இது.
http://archive.atheetham.com/story/irandeirandu
இதோ உங்களுக்காக.
அலாரம் டைம்பீசின் தலையில் தட்டிவிட்டு ஐந்து நிமிட செல்லக் குட்டித்தூக்கம் போட்டு விட்டு எழுந்து
தினக்காலண்டரின் தாளைக் கிழித்த வாசவி, ”ஐயையோ! இன்னிக்கு தேதி இருபத்தொன்பது இன்னும் பத்து நாள்தான் காஸ் வரும். மறுபடியும்
டேங்கர் லாரி ஸ்டிரைக்ன்னு நேத்து டீவி நியூஸ்ல சொன்னாங்களே!. எப்ப ஸ்டிரைக் முடிந்து எப்ப காஸ் வந்து.... போன
தடவை டேங்கர் லாரி ஸ்டிரைக்ல தப்பிச்சுட்டேன்.
இந்த தடவை மாட்டிடுவேனோ? நல்ல வேளை இப்ப தொலைபேசியிலேயே காஸ் புக் செய்து,
தொலைபேசியிலேயே எப்ப வரும்ன்னு தகவலும் தெரிஞ்சுக்க முடியுது. முன்னமாதிரி காஸ் ஏஜன்சிக்கு அலைய வேண்டியது
இல்ல. ரெண்டு அடி இருந்துண்டு இந்த காஸ்
சிலிண்டர் நம்மை என்ன பாடு படுத்துது? சே! உலகத்துல ஒவ்வொருத்தருக்கும் கவலைப்பட எத்தனையோ
விஷயங்கள் இருக்கு. ஆனா எனக்கு மட்டும்
இப்படி அல்பத்தனமா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவலை, காஸ் வரல, குழாய்ல தண்ணி வரல,
வேலைக்காரி வரல, இந்த மாதிரி கவலைகளை பட்டியல் போட்டா அம்மாடி அது பாட்டுக்கு
அனுமார் வால் மாதிரி நீளும். எல்லா
பெண்களுமே இப்படித்தான் என்னை மாதிரி சின்னச் சின்ன விஷயங்களுக்கு கவலை பட்டுண்டு
இருப்பாங்களோ?” என்று தன்னைத்தானே
கேட்டுக் கொண்டாள் வாசவி. ”அதுசரி, இதுக்கெல்லாம் கவலைப் படாம
இருக்க முடியுமா? ஒன்பது மணிக்குள்ள சமைச்சு, ஆறு பேருக்கு சாப்பாடு கட்டி, மத்த
எல்லா வேலைகளையும் முடிச்சு, ஆபீசுக்குக் கிளம்ப வேண்டாமா?” என்று தனக்குத்
தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
வாசவிக்கு எப்பொழுதுமே நம்மால் சமூகத்துக்கு எதுவும் செய்ய முடியவில்லையே
என்று வருத்தம் இருந்து வந்தது.
சில சமயம் வாசவி, “காலையில் எழுந்ததும்
கண் விழித்தால் நான் கை தொழும் தேவதை குக்கர்” என்று பாடி சிரித்துக் கொள்வாள்.
ஒரு வழியாக எல்லா வேலைகளையும்
முடித்துவிட்டு அரக்கப் பரக்க கிளம்பி ரயிலைப் பிடித்து அலுவலகம் வந்து சேர்ந்தாள்
வாசவி. எவ்வளவு வேலை இருந்தாலும் அலுவலகத்துக்கு சரியான
நேரத்துக்கு வருவதைக் கொள்கையாகவே வைத்திருந்தாள் அவள்.
அலுவலகத்தில் நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்த
வாசவி ’யார் இது! காலையிலேயே
ஓவ்வொருவரிடமும் ஏதோ சொல்லிக் கொண்டு வருவது” சற்று அருகில்
வந்ததும், ‘ஓ, ராணி! இன்று புதன்கிழமையா? அதான் ராணி பச்சைப்
புடைவையில் வந்திருக்கிறாள். கண்ணை
உறுத்தாத எளிமையான அலங்காரம். கஞ்சி
போட்டு அயர்ன் செய்த பச்சை நிற காட்டன் புடவை.
எப்படித்தான் அந்தந்தக் கிழமைக்கு ஏற்ற நிறத்தில் புடவை கட்டுகிறாளோ? இன்ன
கிழமைக்கு இன்ன கலர்ன்னே ராணி சொல்லித்தானே தெரியும். காது, கழுத்து, கை
எல்லாவற்றிலும் பச்சை நிற அணிகலன்கள் வேறு.
இவளுக்கு மட்டும் இதுக்கெல்லாம் எப்படி நேரம் இருக்கோ தெரியலை?” என்று மனதுக்குள் யோசித்த வாசவி தன்னை ஒரு முறை குனிந்து பார்த்துக்கொண்டாள். அப்படி
ஒன்றும் மோசமில்லை. ஆனால் ராணியைப் போல்
பளிச்சென்று இல்லை.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ராணியும்,
வாசவியும் ஒரே நேரத்தில் தான் அந்த அரசு அலுவலகத்தில் வேலைக்குச்
சேர்ந்தார்கள். ரொம்ப வருடங்கள் ஒரே பிரிவில் பணி புரிந்து விட்டு
இரண்டு வருடங்களாகத்தான் வேறு வேறு பிரிவுகளில் பணி புரிகிறார்கள். இருவரும் நல்ல தோழிகள்.
வாசவியின் அருகில் வந்த ராணி, “ஏய் வாஸ்,
என்ன அப்படிப் பார்க்கற?”
“வழக்கம்போலதான். ஆச்சரியமா இருக்குடீ ராணி. உன்னால மட்டும்
எப்டி இப்டி இருக்க முடியுது? ஆபீசில எந்த விழா நடந்தாலும் பங்கெடுத்துக்கற. பங்கெடுத்துக்கறதென்ன எல்லா ஏற்பாடுகளுமே நீதான் செய்யற. எல்லா இடத்துலயும் எங்க சார்புல நீ தான் பேசற. எல்லா நிகழ்ச்சியிலயும் கலந்துக்கற. என்னை பாரு.
கார்த்தாலேந்து மனசுல டாங்கர் லாரி ஸ்ட்ரைக் ஆச்சே. காஸ் எப்போ வருமோன்னு கவலை பட்டுண்டு
இருக்கேன். நீ என்னடான்னா ஹாய்யா ஒவ்வொரு
சீட்டா போய் என்னத்தை பத்தி பேசிட்டு வர”
'அடுத்த வாரம் நம்ப ஆபீசில சர்வ தேச மகளிர் தின நிகழ்ச்சிகள்
நடத்தப்போறோம் அதைப் பத்திதான் பேசிட்டு வரேன்” என்றாள் ராணி.
“ராணி, சொன்னா சிரிக்கக்கூடாது. இன்னிக்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள், அரசு
அதிகாரிகள் அப்புறம் எண்ணை நிறுவன அதிகாரிகள் எல்லாரும் சேர்ந்து பேச்சு வார்த்தை
நடத்தப் போறாங்களாம். அது வெற்றிகரமா,
சுமுகமா முடியணும்ன்னு வேண்டிண்டு வந்தேண்டீ”
ஹஹஹஹஹா என்று கண்ணில் நீர் வர சிரித்தாள்
ராணி.
”சிரிக்கக் கூடாதுன்னு சொன்னேன் இல்ல”
“கேலி பண்ணி சிரிக்கலப்பா. ரசிச்சு சிரிச்சேன்” என்றாள் ராணி.
“எனக்கு உன்னை பார்த்தா ஆச்சரியமா
இருக்குடீ ராணி. எப்பவும் ஏதோ ஒண்ணு
செஞ்சுட்டிருக்க. என்னைப்பாரு ஒரு பவுடர் போடக் கூட நேரம் இல்லை.
எப்டி வந்திருக்கேன் பாரு”
"அடி தோழி
பூவுக்கு எதற்கடி
முகப் பூச்சு,
உன் உழைப்பால் வந்த
வியர்வைத் துளியும்
அதிகாலைப் பனித்துளி போல்
அழகாய் மின்னுதடி” என்றாள் ராணி.
இயற்கையாகவே நல்ல நிறமான வாசவி தோழியின்
கவிதை கேட்டு வெட்கத்தில் முகம் சிவந்து 'ஆரம்பிச்சுட்டியா?” என்றாள். தோழிகள் இருவரும் கலகலவென்று சிரித்தனர்.
“வாஸ், உன் அழகுக்கும், நிறத்துக்கும்
எதுக்குடீ அலங்காரம். எனக்குக் கூடத்தான் உன்னைப் பார்த்தா ஆச்சரியமா
இருக்கு. வீட்ல இருக்கற எல்லாருக்கும்
சமைச்சு, எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு ஒருநாள் தவறாம டாண்ணு பத்து மணிக்கு
சீட்ல இருக்க. அலுவலகத்துலயும் உன்னை பிடிக்காதவங்களே யாரும் கிடையாது. வீட்டில மட்டும் என்ன! கூட்டுக் குடும்ப அமைப்பே சிதைந்து போன இந்த
நாள்ல மகன், மருமகள்கள், பேரன் பேத்தின்னு எல்லாரையும் அரவணைச்சுட்டு போற.
என்னப் பாரு. ரெண்டு
பையனும் வெளிநாட்டுல. நானும் அவரும்தான்
வீட்டுல. ரெண்டு பேருக்கு சமைச்சுட்டு வர
முடியல. சமையல் என்ன சமையல். முக்காவாசி நாளும் டிபன் தான். நீ க்ரேட் டீ.
நானும் உன்ன எத்தனை வருஷமா பார்த்துண்டு இருக்கேன். மகளிர் தினத்துக்காக
நடந்த போட்டிகள்ல எல்லாம் பரிசா வாங்கி குமிச்சிருக்க. அதுசரி.
நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கிட்டிருந்தா அவ்ளோதான். விழாவுக்கு பிரபல
பெண்கள் பத்திரிகையாளரும் சமூக சேவகியுமான தேவகி கந்தப்பன்தான் சீப் கெஸ்ட். அவங்க ஒரு அஷ்டாவதானி. அவங்க கால் பதிக்காத துறையே இல்லன்னு கூட
சொல்லலாம். பரிசெல்லாம் அவங்கதான் குடுக்கப்
போறாங்க. சரி நான் வரேன் நிறைய வேலை இருக்கு.
மறக்காம உன்னுடைய பரிசுகளை எல்லாம் அள்ளிண்டு போக வந்துடு” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் ராணி.
***
விழாவன்று பரிசுகளை வழங்கி விட்டுப்
பேசிய தேவகி கந்தப்பன், “பொதுவா என்னை எல்லாரும் கேட்கும், ஏன் இன்னிக்குக் கூட
இந்த அலுவலகத்துத் தோழிகள் கேட்ட கேள்வி ,
‘உங்களால எப்படி எல்லா துறையிலும்
பரிமளிக்க முடியுதுன்னு’ அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதுக்குன்னு சொன்ன காலம்
எப்பவோ மலையேறிப் போயிடுத்து. அதிகம் படிக்காத பெண்கள் கூட இன்னிக்கு சிறந்த
தொழிலதிபர்களா ஆகி இருக்காங்க. உங்க கிட்ட கூட எவ்வளவோ திறமைகள் இருக்கு. பொது
வாழ்வில ஈடுபட்டாதான் திறமை இருக்குன்னு இல்ல.
அவங்கவங்க வீட்டை நல்லபடியா கவனிக்கறதே ஒரு பெரிய விஷயம். அதுவே நாம நம்ப
சமூகத்துக்கு செய்யற நல்ல காரியம். ஏன்
இப்பகூட உங்கள்ள ஒரு தோழி பரிசுகளை வாங்கிக் குவிச்சிருக்காங்க. அவங்க பரிசு
வாங்கும் போது எழுந்த கைதட்டல்ல இருந்தே அவங்க உங்க மனசுல எவ்வளவு இடம்
பிடிச்சிருக்காங்கன்னு தெரியுது. அவங்க
புகைப்படத்தை அடுத்த மாத இதழ்ல அட்டைப் படமா போட்டு உங்க அலுவலக பெண்கள் அமைப்பை
பற்றி ஒரு கட்டுரையும் போடலாம்ன்னு இருக்கேன்” என்று சொன்ன போது ராணி வாசவியைப் பார்த்து சிரித்துக்
கொண்டே கண்ணடித்தாள்.
வாசவி தன்னையே அறிய வைத்த தோழிக்கு புன்னகையுடன்
நன்றி கலந்த பார்வையை காணிக்கையாக்கினாள்.
மாற்றம்
IN AND OUT CHENNAI SEPTEMBER 16 - 30, 2012 இதழில் வெளிவந்த என் சிறுகதை மாற்றம் இதோ உங்களுக்காக
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” இதுதான் இந்த சிறுகதைக்குக் கரு.
-oOo-
“என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” இதுதான் இந்த சிறுகதைக்குக் கரு.
-oOo-
“பவானி, நாளைக்கு ரமேசு வாரானாம் இப்பதான் போன் போட்டு சொன்னான். நான் சந்தைக்குப் போயிட்டு வரேன். உரம் வாங்கணும். அப்படியே நல்ல வெடக்கோழியா
வாங்கிட்டு வரேன். தம்பிக்கு கோழிக் கொழம்புன்னா உசிர் இல்ல”
“ஏங்க, ரமேசு வாரானா. லீவுக்கு வரமாட்டேன். மேல்படிப்புக்கு தயார் செய்யணும்ன்னு சொன்னானே”
“அது என்னமோ நாளைக்கு நேர வந்து
சொல்றேன்னு சொல்லிட்டான். நான் ஒரு பத்து
நிமிஷத்துல கிளம்பறேன். இப்பவே
கிளம்பினாதான் சீக்கிரம் திரும்பி வர முடியும்.
வேற ஏதாவது வாங்கிட்டு வரணும்ன்னா சொல்லு.
அப்புறம் அது இல்ல, இது இல்லன்னு சொல்லாத”
* * *
”ஏம்மா பவானி. என் பேரன் வாரானா?”
“ஆமாம் அத்தை, ரமேசு நாளைக்கு வாரானாம்.”
“அது என்ன ரமேசு. அவனுக்கு அழகா ‘சின்ராசு’ன்னு அவங்க தாத்தன் பேர வெச்சிருக்கு. அப்புறம் என்னா ரமேசு. அவர் உசுரோட இருந்தாலாவது பேரச் சொல்லிக்
கூப்பிட சங்கடமா இருக்கும். அந்த மனுசன்
தான் போய் சேந்துட்டாரே”.
“அப்பத்தா, அண்ணனுக்கு ஸ்கூல்ல அதான
பேர். அதான் அம்மா அப்டி சொல்றாங்க”
“ஸ்கூல்ல எப்டி வேணா கூப்டட்டும். வீட்ல சின்ராசுன்னுதான் சொல்லணும். ஏடி கற்பகம், உங்கண்ணனுக்கு இன்னும் எத்தனை
வருசம் படிப்பு இருக்கு?”.
“அதுவா அப்பத்தா. அண்ணன் இப்ப +2 பரீட்சை எழுதி இருக்கு. அப்புறம் காலேஜ் நாலு வருஷம். அதுக்கும் அப்புறம் அண்ணன் மேல் படிப்பு படிச்சா
அது ஒரு ரெண்டு வருஷம். ஆனா படிப்பெல்லாம்
முடிஞ்சதும் அண்ணனுக்கு இந்தியாவில வேலை கிடைக்குமோ இல்ல வெளி நாட்டுல கிடைக்குமோ தெரியாது”.
“ஆங்.
அப்படீன்னா என் பேரன் இன்னும் ஆறு வருசத்துக்கு லீவுக்கு லீவுதான் இங்க
வருவானா? பவானி, ராமசாமியை நல்ல சுறாமீனா
வாங்கிட்டு வரச் சொல்லு. நாளைக்கு நீ
சோறாக்கு. கோழிக்குழம்பும், சுறாபுட்டும்
நான் செய்யறேன். சின்ராசுக்கு அவன்
தாத்தனாட்டம் கோழிக்குழம்பும், சுறாபுட்டும் உசுர். சட்டிக் குழம்பையும் மிச்சம் வெக்காம
தின்னுப்புடுவான். ஆள்தான் தாத்தன்
மாதிரின்னா திங்கறதுலயும் அப்படியே அவரேதான்.
போன தடவை லீவுக்கு வந்த போது அந்த ஐயர் வீட்டு புள்ளைய கூட்டிட்டு வந்ததால
நம்ம வீட்டு புள்ளைக்கு முட்டை கூட செய்து கொடுக்க முடியல”
“ஐயோ அப்பத்தா. அந்த அண்ணன் ஐயர்
இல்ல. ஆனா சைவம்”.
“அது என்னமோ. எனக்கு தெரிஞ்சு கவுச்சி சாப்பிடாதவங்க எல்லாம்
ஐயமாருங்கதான். ஏடீ கற்பகம் உங்கப்பன
சின்ராசுக்கு போன் போட்டு அந்த மாதிரி யாரையும் அழைச்சுக்கிட்டு வர வேண்டாம்ன்னு
சொல்லச் சொல்லு”
“என்ன அப்பத்தா. அப்டியெல்லாம் சொல்றது
நல்லா இருக்குமா? ஏன் அப்பத்தா. நானும் படிக்க வெளியூருக்குப் போயிட்டு லீவுல
வந்தா எனக்கும் இப்டியெல்லாம் செஞ்சு தருவீங்கள?”
“உனக்கா. இப்பவே செய்து தரேன். ஏன்னா உன்னை யாரு கண்ணு வெளியூருக்கு அனுப்பப்
போறாங்க. பன்னண்டாப்பு முடிச்சதும்
கல்யாணம்தான்”
“அப்பத்தா…………” ‘அண்ணன் வந்ததும் அண்ணன்கிட்ட சொல்லி மேல் படிப்புக்கு வழி செய்துக்கணும்.’
“என்ன கண்ணு முணுமுணுக்கற”
“ஒண்ணும் இல்ல அப்பத்தா. நாளைக்கு சுறாபுட்டை ஒரு வெட்டு வெட்டணும்ன்னு
சொல்லிக்கிட்டேன். சரி அப்பத்தா, நான்
போய் படிக்கிறேன்”.
* * *
மகன் வாங்கி வந்த கோழிகளைத் தூக்கிப்
பார்த்து திருப்தியடைந்த சங்கரி அம்மாள் கோழிகளை மூங்கில் கூடைக்குள் வைத்து
மூடினாள். சுறா மீனை கல்
உப்பு சேர்த்து பக்குவமாக மூடி வைத்துவிட்டு ஒரு குட்டிப் பகல் தூக்கம் போடச்
சென்றாள்.
* * *
”ஏங்க, சின்ராசு இன்னும் நாலு வருஷம் படிக்கணுமாமே. அதுக்கு மேலயும் ரெண்டு வருஷம் மேல் படிப்பு இருக்காமே. நம்ம கற்பகம் சொல்லிச்சு. ஏங்க, தம்பி படிப்புக்கு ரொம்ப செலவாகுமோ? என்ன
செய்யப் போறீங்க?”
“என்ன செய்ய பவானி. நம்ம புள்ள சின்ன
வயசுல இருந்தே இஞ்சினீயரு ஆகணும்ன்னு ஆசைப்பட்டான். புள்ள நல்ல மார்க வாங்கினா செலவு
கம்மியாகுமாம். இல்லன்னா என்ன செய்ய.
காடு, கழனி எதையாவது வித்துத்தான் சமாளிக்கணும்”.
“என்ன? காடு கழனி எதாவது விக்கணுமா? ஏங்க, இதெல்லாம் தலைமுறை தலைமுறையா வந்த
சொத்து. இதை பெருக்காட்டாலும் அழிக்காம இருக்கணும்ன்னு நீங்க தானங்க
சொல்லுவீங்க. அத்தை ஒத்துக்குவாங்களா?
அதோட நமக்கு ஒரு பொண்ணும் இருக்குங்க.
அதுக்கும் ஒரு நல்லது, கெட்டது செய்யணுங்க. அதை மறந்துடாதீங்க.”
“மரம் வெச்சவன் தண்ணி ஊத்தாமலா போயிடுவான்.
இந்தா இந்த குத்தகை பணத்தை பத்திரமா பீரோவில எடுத்து வை. சின்ராசு ஏதோ க்ளாஸ் சேரணும்ன்னு
சொல்லியிருந்தானே. அதுக்கு குடுத்துட்டு
மீதி இருந்தா என்ன செய்யலாம்ன்னு யோசிக்கலாம்”.
* * *
காலையில் வெள்ளி முளைக்கும் முன்பே
எழுந்து குளித்து சமையலறைக்குள் நுழைந்தாள் சங்கரி அம்மாள். இரண்டு வருடங்களாக சமையலறை பக்கம் எட்டிக்
கூடப் பார்க்காத மாமியார் கருக்கலிலேயே எழுந்து வந்ததைப் பார்த்த பவானிக்கு
ஆச்சரியம். பேரப் பிள்ளைகளுக்கு
செய்வதென்றால் இந்தப் பாட்டிகளுக்கு எங்கிருந்துதான் இப்படி சுறுசுறுப்பு வருமோ என்று மலைத்து
நின்ற பவானியை அதை எடு, இதை எடு, மசாலா அரைத்துக்கொடு என்று பக்கத்திலேயே இருந்து
வேலை வாங்கி, தன் கையாலேயே கோழிக் குழம்பும், சுறா புட்டும் தயார் செய்து,
பேத்தியைக் கூப்பிட்டு ருசி பார்க்கச் சொல்லி, அவள் “சூப்பர் அப்பத்தா” என்று சொன்னதைக்
கேட்டு மகிழ்ந்து, வாசல் திண்ணையில் அமர்ந்து பேரனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்
காத்திருந்தாள் சங்கரி அம்மாள்.
ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை திண்ணையை
விட்டு இறங்கி உள்ளே வந்து, “ஏம்மா பவானி, சின்ராசு எத்தனை மணிக்கு வாரானாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தாள். பவானியும் சலிக்காமல், “உங்க மகன் காலையிலேயே
கிளம்பி பஸ் ஸ்டாண்டுக்கு போயிட்டார் அத்தை.
இதோ வந்துடுவாங்க” என்று சொல்லிக்
கொண்டிருந்தாள்.
“அப்பத்தா, அம்மா, அண்ணன் வந்தாச்சு” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தாள்
கற்பகம்.
“சின்ராசு” என்று கூப்பிட்டுக்கொண்டே ஓட்டமும் நடையுமாக வாசலுக்கு வந்த
சங்கரி அம்மாள் பேரன் தன்னுடன் நண்பர்கள் யாரையும் அழைத்து வராதது கண்டு நிம்மதிப்
பெருமூச்சு விட்டாள். “என்ன கண்ணு, துரும்பா எளைச்சுட்ட” என்றாள்.
“இல்ல அப்பத்தா. உங்க கண்ணுக்கு அப்படி தெரியுது. நான் நல்லா எடைகூடித்தான் இருக்கேன் அப்பத்தா”.
”அண்ணே, அண்ணே, அப்பத்தா ஒனக்காக காலையிலயே எழுந்து கோழிக்குழம்பும், சுறா
புட்டும் செய்து வெச்சிருக்காங்க:
“அப்பத்தா காலையில ஹாஸ்டல்ல டிபன்
கட்டிக்கொடுத்தாங்க. சாப்பிட்டுட்டேன்.
மதியம் சாப்பிடறேன். அப்பா, எனக்கு
உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். அம்மா,
அப்பத்தா நீங்களும் இருங்க”
“இப்பதான தம்பி வந்திருக்க. கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கப்பா. அப்புறமா பேசிக்கலாம்”.
“பரவாயில்லப்பா. இந்தாங்கப்பா”
“ஏது தம்பி இவ்வளவு பணம்”
“அப்பா, எங்க ஹாஸ்டல்ல ஒரு தோட்டமும்,
ஒரு கோழிப் பண்ணையும் இருக்கு. நாலு
மாடுங்க கூட இருக்குப்பா. இதையெல்லாம்
பராமரிக்கற பொறுப்பை எனக்கும், என் கூட படிச்ச இன்னும் நாலு பேருக்கும்
குடுத்திருந்தாங்க. தோட்டத்துல நல்ல
விளைச்சல். ஹாஸ்டலுக்கு உபயோகப்படுத்தினது
போக மீதி கறிகாயெல்லாம் கூட்டுறவு சங்கத்துக்கு வித்துடுவாங்க. அதுல கிடைச்ச லாபத்துல என்னோட பங்கு தாம்பா
இது.
அப்பா, இன்னும் ஒரு விஷயம். நான் இஞ்சினீயரிங் படிக்கப் போறதில்ல. கோயம்புத்தூர்ல இருக்கற விவசாயக் கல்லூரியில
சேர்ந்து படிக்கப் போறேன். அதுலயே மேல்
படிப்பும் படிச்சு நம்ப நிலத்துல புதிய முறையில விவசாயம் செய்யப் போறேன். அதுக்கு எனக்கு உங்களோட அனுமதி வேணும்ப்பா”
“.......................................”
“அப்பா, என்னப்பா ஒண்ணுமே பேச
மாட்டேங்கறீங்க”.
“ஒண்ணும் இல்ல தம்பி. நீ சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியாயிட்டேன்.
உனக்கு உண்மையில இஞ்சினீயரிங் படிக்க ஆசை இருந்தா தாராளமா படிப்பா. அப்பா கிட்ட அவ்வளவு பணம் இருக்குமான்னு
சந்தேகத்துலதான இஞ்சினீயரிங் வேண்டாம்ன்னு சொல்லற. அதெல்லாம் பத்தி கவலைப்படாம நீ படி. நான் உன்னை
எப்படியும் படிக்க வெக்கறேன்.”
”அப்படி எல்லாம் இல்லப்பா. உண்மையாவே எனக்கு இஞ்சினீயரிங் படிக்க இஷ்டம்
இல்லப்பா. இந்த ரெண்டு வருஷத்துல ஹாஸ்டல்
தோட்டத்துல வேலை செய்ததுல எனக்கு விவசாயம்தாம்பா பிடிச்சிருக்கு.”
“உன் இஷ்டம் எதுவோ அப்படியே செய்யப்பா. இருந்தாலும்
பின்னாடி இஞ்சினீயரிங் படிக்கலையேன்னு நீ வருத்தப்படக்கூடாதுப்பா.”
“கண்டிப்பா வருத்தப்பட மாட்டேன்
அப்பா. இது நானே எடுத்த முடிவு தாம்பா”.
”அப்பத்தா. நான் ஒண்ணு சொன்னா நீங்க கோவிக்கக்கூடாது.
பண்ணையில இருக்கற கோழி, மாடெல்லாம் எங்க 5
பேரைத் தவிர யார் வந்து தீனி போட்டாலும் சாப்பிடாதுங்க. ஒரு நாள் எங்கள்ள யாராவது இல்லாட்டாலும் ஏங்கிப்
போயிடுங்க. இப்ப கூட எங்க ஜூனியர்ஸ் 5
பேரை 2, 3 மாசமா அதுங்க கூட பழக வெச்சுட்டுதான் வந்திருக்கோம். இந்த கோழி, மாடுங்களோட ரெண்டு வருஷம் பழகினதுல
எனக்கு இதுங்கள கொன்னு சாப்பிட விருப்பம் இல்ல அப்பத்தா. தயவு செய்து என்ன கட்டாயப் படுத்தாதீங்க”
தான் சமைத்து வைத்ததை சாப்பிடாவிட்டாலும்
பேரன் தன் அருகில்தான் இருப்பான். படித்து
முடித்ததும் வெளிநாடெல்லாம் போக மாட்டான் என்ற மகிழ்ச்சியில் சங்கரி அம்மாள்
வேகமாக தலையாட்டினாள்.
Subscribe to:
Posts (Atom)