Friday, 11 January 2013

அனுமன் ஜெயந்தி

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். இந்த ஆண்டு இன்று அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 



ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.  

வெற்றிலை மாலை ஏன்?

அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை.
ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

செந்தூரம் ஏன்


ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற போது சீதை நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததை பார்த்து இது குறித்து சீதையை வினவ ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும் போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினார்.

நெற்றியில் சிறியதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால் ராமன் எவ்வளவு வெற்றி வாகை கூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூர் அணிந்து கொண்டதாகவும், இதுவே அனுமனுக்கு செந்தூரம் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு.

வழிபாடு

ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம். `ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்' என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம்.

வெண்ணெய் சாத்துவது ஏன்?      
         
ராம ராவண யுத்தம் நடந்தபோது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான். அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். 

அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை. அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.

உளுந்து வடை ஏன்?       
    
நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் தசைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம்.

சனியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க

இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான் `ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார்.

``கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்'' என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல் சனிபகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்'' என்றார் அனுமன்.

அதன் பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.


 

மாருதியை வணங்கி மகத்தான வாழ்வு பெறுங்கள்.


Tuesday, 1 January 2013

தட்டு

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் என் முதல் பதிவு
IN AND OUT CHENNAI JAN 1 - 15, 2013 
இதழில் வெளி வந்த என் சிறுகதை
உங்களுக்காக இங்கு மீண்டும் வெளியிட்டுள்ளேன்.


தட்டு

“ஏங்க, எழுந்திருங்க, எழுந்திருங்க”

“என்னப்பா இது, மணி அஞ்சு தான் ஆகுது.  ஆபீஸ் போற நாள்லயே ஏழு மணிக்குதான் எழுப்புவ.  இன்னிக்கு சனிக்கிழமை.  இப்பவே எழுப்பற”.

“அது சரி. விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னானாம்.”

”நான் அப்படி ஒண்ணும் சொல்லலியே”

“சரி ஜோக்கெல்லாம் போதும். சீக்கிரம் கிளம்புங்க.  ”

”எங்க கிளம்பணும்”

“என்னங்க இது.  நேத்தே சொன்னேன் இல்ல. நிஷாவை ஸ்கூல்ல சேக்கறதுக்கு அப்ளிகேஷன் வாங்கப்போணும்ன்னு”

“காலையில அஞ்சு மணிக்கா”

“அவங்கவங்க ராத்திரியே போய் ஸ்கூல் வாசல்ல படுத்துட்டிருக்காங்க.  எங்க ஆபீஸ் ராஜன், அதான் இங்க ‘ஜே’ ப்ளாக்ல குடி இருக்காரே அவர் கிட்ட நைசா ஒரு இடம் போட்டு வெக்க சொல்லி இருக்கேன்.  சீக்கிரம் கிளம்புங்க”

“இப்ப எந்த ஸ்கூல் திறந்திருக்கும்.  பத்து மணிக்கு மேல போறேனே”.

“எழுந்து பல் தேயுங்க.  காபி போட்டு தரேன்.  நீங்க குளிக்கக் கூட வேண்டாம். சீக்கிரம், சீக்கிரம்”.

‘குளிக்க வேண்டாம். ம் .எனக்கு சலுகை தராங்களாம்.’

“என்ன முணுமுணுக்கறீங்க.”

”ஒண்ணும் இல்ல. ஸ்கூல் எங்க இருக்குன்னு கேட்டேன்.  இது என்ன. என்ன இருக்கு இந்தப் பையில”

“ம். பொண்ணு பிறந்த தேதி என்னன்னு கேட்டா, திருவிழாவுல காணாமப் போன சின்ன புள்ள மாதிரி முழிப்பீங்க இல்ல.  அதான் எல்லா விவரமும் வெச்சிருக்கேன்.”

“வேற ஏதாவது ஸ்கூல்ல சேக்கலாமே”

“இங்க பாருங்க, என் கோவத்தைக் கிளறாதீங்க.  என் கூட வேலை செய்யறவங்கள்ள நம்ப ஏரியால இருக்கற எல்லாரும் இந்த ஸ்கூல்லதான் சேக்கறாங்க.  ரொம்ப நல்ல ஸ்கூல்”

“அதான பார்த்தேன்”.

“ஒண்ணும் பாக்க வேண்டாம். கிளம்புங்க”

* * *

’என்னடா இது, மணி எட்டாகப் போகுது. வயிறு லேசா பசிக்க ஆரம்பிக்குதே’.

“ஏன் ராஜன், எத்தனை மணிக்கு அப்ளிகேஷன் கொடுப்பாங்க”

“0930 மணிக்கு குடுக்க ஆரம்பிப்பாங்களாம், என்ன சார், பசிக்குதா, டீ, கீ ஏதாவது சாப்பிடணும்ன்னா போயிட்டு வாங்க.  நான் இடத்தைப் பாத்துக்கறேன்.”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா.”

பையில என்னதான் வெச்சிருக்கா. வெயிட்டா இருக்கே.  பிஸ்கெட் பாக்கெட், 2 வாழைப்பழம், தண்ணி.. அடிப்பாவி, நேரம் ஆகும்ன்னு தெரிஞ்சுதான் இதெல்லாம் பையில போட்டு அனுப்பி இருக்காளா?
“ராஜன், பிஸ்கெட் சாப்பிடறீங்களா?”

“எங்க வீட்ல கூட குடுத்து அனுப்பி இருக்காங்க சார்”

“ஏன் ராஜன், இந்த ஸ்கூல் என்ன அவ்வளவு ஒசத்தி”

“அதெல்லாம் தெரியாது. எங்க வீட்ல இங்கதான் சேக்கணும்ன்னு சொல்லிட்டாங்க”.

மனதுக்குள் “வீட்டுக்கு வீடு இப்டித்தானா”.
* * *

”மணி 11 ஆயிடுத்து.  நான் வரேன் ராஜன், ஒரே ப்ளாட்ல இருக்கோம்ன்னுதான்  பேரு.  இன்னிக்குதான் நாம இவ்வளவு நேரம் பேசி இருக்கோம்”

“சரி வரேன் சார்”
* * *
”இந்தா நல்லா குடுத்தாங்க அப்ளிகேஷன்.  6 மணி நேரம் காக்க வெச்சு.  ஒரு அப்ளிகேஷன் 500 ரூபா.  நான் காலேஜுக்குக் கூட அப்ளிகேஷனுக்கு இவ்ளோ செலவு பண்ணினது இல்ல.   நீ என்ன படிச்சிருக்க, ஒன் பொண்டாட்டி என்ன படிச்சிருக்கா, லொட்டு, லொசுக்குன்னு நூறு கேள்வி கேட்டுட்டு குடுக்கறான் அப்ளிகேஷன்”

”சும்மா ஏதாவது சொல்லிண்டே இருக்காதீங்க.  இந்த ஸ்கூல்ல நம்பள மாதிரி, ரெண்டு பேரும் வேலைக்குப் போகறவங்களுக்காக தனி கவுன்டரே ஓபன் பண்ணி இருக்காங்களாம்.  இங்க சேத்தா +2 வரைக்கும் கவலையே இல்லயாம்.  ஏன் இவங்களுக்கு காலேஜ் வேற இருக்காம்.   மேல் படிப்பு முடிஞ்சதும் வேலையும் வாங்கிக் குடுத்துடுவாங்களாம்”

“அப்படியே கல்யாணமும் பண்ணி வெச்சு, பிரசவமும் பாத்துடுவாங்களாமா?”

“ஜோக்கு.  இதுக்கு நான் சிரிக்கணுமாக்கும்.  இங்க பாருங்க.  இன்னிக்கு நாள் நல்லா இருக்கு.  உக்காந்து அப்ளிகேஷன பூர்த்தி செய்யுங்க.  புதன் கிழமையும் நாள் நல்லா இருக்கு.  அன்னிக்கு பணம் கட்டிடலாம்”

”அது எவ்வளோ? ஒரு லட்சமா?”

“ஒரு 40,000 ரெடியா வெச்சுக்கோங்க”

“அம்மாடி, என்ன கூலா சொல்லிட்டுப்போறா எல் கே ஜிக்கு நாப்பதாயிரமா?”

* * *
”ஐயா”

“என்ன கண்ணம்மா”

“ஐயா, அம்மா கிட்ட சொன்னேன். உங்கள கேக்கணும்ன்னு சொன்னாங்க.  ராணியை ஸ்கூல்ல சேத்துட்டேன்.  அவங்களே புத்தகம், நோட்டு எல்லாம் குடுத்துடுவாங்களாம்.  யூனிபார்மும் ஒரு செட் தராங்களாம்.  எனக்கு ஒரு 200 ரூபா கடனா குடுத்தீங்கன்னா இன்னும் ஒரு செட் யூனிபார்ம் வாங்கிடுவேன்.  மாசம் 50 ரூபாயா பிடிச்சுக்குங்க ஐயா”

“200 ரூபா தரேன் கண்ணம்மா.  ஆனா திருப்பி எல்லாம் தர வேண்டாம்.   அப்படியே நிஷாவுக்கு வாங்கும் போது ராணிக்கு பை, தண்ணி பாட்டில் எல்லாம் வாங்கிக் குடுத்துடறேன்..  என்ன ராணி நல்லா படிக்கணும் சரியா”

அம்மாவின் புடவைத்தலைப்புக்குள் வெட்கத்துடன் நுழைந்து கொண்டாள் ராணி.
* * *

”ஏங்க, இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிடலாம்.  ஸ்கூல்ல அப்ளிகேஷனை குடுத்துட்டு பணத்தை கட்டிட்டுப் போயிடலாம்”

“கண்ணம்மா.  வீட்டையும், நிஷாவையும் பத்திரமா பாத்துக்கங்க.  இட்லி,  சாப்பாடு எல்லாம் ராணிக்கும், உங்களுக்கும் சேத்து வெச்சிருக்கேன். நாங்க கிளம்பறோம்”

“சரிங்கம்மா”

“அம்மா, எனக்கு இட்லி வேண்டாம். எப்பப்பாரு இட்லி, புடிக்கவே இல்ல. வேற எதாவது பண்ணி வெக்கக்கூடாதா?”

இது ஏதடா வேதாளம் முருங்கை மரம் ஏறுதே என்று “நிஷாக்குட்டி, சாயங்காலம் அப்பா ஆபீஸ்லேந்து வந்ததும் உன்ன வெளியே அழைச்சுட்டுப் போய் என்ன வேணுமோ வாங்கித்தரேன், சரியா?”
”போங்கப்பா”

“ஏங்க நீங்க வாங்க மணியாச்சு.  கிளம்பலாம்”
* * *
”நிஷாக்குட்டி, யூனிபார்ம், பை, எல்லாம் நல்லா இருக்கா? நாளையில இருந்து ஸ்கூலுக்குப் போகணும்.”

“அப்பா, நாளைக்கு ஒரு நாள் நீங்களும், அம்மாவும் ஸ்கூலுக்குக் கொண்டு விட்டுடுங்கப்பா.  மறுநாள்லேந்து ஸ்கூல் பஸ்ல போயிடறேன்.”

“ஆமாம் செல்லம். நாளைக்கு நானும், அம்மாவும்தான் அழைச்சிட்டுப் போகப் போறோம்”.

“அப்பா, அப்டியே அம்மாகிட்ட சொல்லுப்பா.  சும்மா, சும்மா இட்லி, தோசை.  வேற ஏதாவது செய்யச் சொல்லுப்பா”

“சரிம்மா, அப்புறம் உன் ப்ரெண்டு ராணிக்கு பை, தண்ணி பாட்டில் எல்லாம் புடிச்சுதாமா?”

“ரொம்பப் புடிச்சிருக்காம்ப்பா”

”நிஷா, தூங்கலாம் வா, நாளையில இருந்து ஸ்கூலுக்குப் போகணும் இல்ல””

“அம்மா, நாளைக்கு லஞ்சுக்கு என்ன தரப்போற”

“நாளைக்கு லஞ்ச் எல்லாம் இல்ல.  அரைநாள் தானாம் ஸ்கூல்.  அம்மா லீவு போட்டிருக்கேன்.  உன்னோடயே இருக்கேன் என்ன?”

”அப்ப முழு நாள் ஸ்கூலுக்கு லஞ்சுக்கு என்ன தருவ”

“அத அப்புறம் பார்த்துக்கலாம்”

“அப்டின்னா நாளைக்கு ஸ்கூல்லேந்து வந்ததும் எனக்கு பூரி, கிழங்கு பண்ணித் தரணும், சரியா?”

”சரி”

“அம்மா, ராணிக்கும் குடுக்கணும் என்ன”

“குடுக்கலாம், குடுக்கலாம், இப்ப வந்து படு”

* * *

”நிஷாக்குட்டி, உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?.  இன்னிக்கு பஸ்ல போனியே, ப்ரெண்ட்செல்லாம் புடிச்சுட்டியா?”

“அப்பா, ஸ்கூல் எல்லாம் நல்லாதான்ப்பா இருக்கு.  ஆனா”

“ஆனா என்ன சொல்லும்மா”       
                    
“அம்மா முறைச்சு பாக்கறாப்பா”

“நீ சும்மா சொல்லு செல்லம்”

“அது வந்துப்பா.  என் ஸ்கூல் நல்லாதான் இருக்கு.  ஆனா ராணி ஸ்கூல்தாம்ப்பா பெஸ்ட்”

“ஏண்டா செல்லம்”

“அவங்க ஸ்கூலுக்கு வெறும் தட்டு மட்டும் எடுத்துட்டுப் போனாப் போதுமாம்பா.  லஞ்சுக்கு சூடா சாப்பாடு போடுவாங்களாம்”.

மனைவி முறைப்பதையும் லட்சியம் செய்யாமல் கண்ணில் நீர் வர விழுந்து விழுந்து சிரித்தான் நிஷாவின் அப்பா.  அப்பா ஏன் இப்படி சிரிக்கிறார் என்று புரியாமல் விழித்தாள் நிஷாக்குட்டி.

&/ &/ &/





Sunday, 30 December 2012

புத்தாண்டு பிறக்குது



புத்தாண்டு பிறக்குது
புத்தாண்டு பிறக்குது
முத்தான கோரிக்கைகள்
முன்னே வைக்கின்றேன்
முடிந்தால் நிறைவேற்றிடு
முழு முதற் கடவுளே – முடிந்தால்
முழுவதும் நிறைவேற்றிவிடு

மொழிச்சண்டை,
இனச்சண்டை,
மதச்சண்டை,
ஜாதிச்சண்டை,
அண்டை, அயல் நாட்டுச் சண்டை
எல்லா சண்டைகளையும்
அறவே ஒழித்திடு.

கொலை, களவு, கற்பழிப்பு,
நரபலி, தீண்டாமை,
நம்பிக்கைத் துரோகம், தீவிரவாதம்
நச்சென்று நசுக்கி
நலம் கெட்டுப்போகவை.

நீ கொடுத்த இன்னுயிரை
தானே அழிக்கும்
தரங்கெட்ட செயலை
தப்பாமல் மாற்றிடு.

பிறர் பொருள்,
பிறர் மனை கவரும்
பேராசையை
கட்டாயம் விரட்டி விடு.

பிச்சையில்லா பாரதம்
நிச்சயம் உருவாக்கிடு

உழைப்பின் உயர்வு,
உயிரின் விலை,
பாரம்பரியம்,
நல்ல பழக்க வழக்கங்கள்
புரியாதவர்களுக்குப்
புரிய வைத்திடு.

முட்டாள் மனிதனை
மூளைச் சலவை செய்தாவது
முடிந்தவரை நிறைவேற்றிடு.


Saturday, 29 December 2012

இயற்கையின் நியதி




சாலையோரத்தில் ஒரு காகம்

எலியைத் துரத்தும் போதும்,

சுவற்றுப் பல்லி விட்டில் பூச்சியைப்

பிடித்து விழுங்கும் போதும்

தேசிய புவியியல் தொலைக்காட்சியில்

மானை புலி துரத்துவதையும்,

வரிக்குதிரையை சிங்கம் விரட்டிப்

பிடிப்பதையும்,

மலைப்பாம்பு முழுதாய் ஒரு ஆட்டைப்

பிடித்து விழுங்குவதையும்,

மீன்களைப் பறவைகள் கொத்திச்

செல்வதையும் பார்க்கும் போதும்,

கண்ணெதிரே ஓர் உயிர் அடங்கி

உடலை விட்டுப் பிரியும் போது, 

இது உணவு சுழற்சி

இதுதான் இயற்கையின் நியதி என்று

அறிவு ஏற்றுக் கொண்டாலும்,

உணர்வு ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே

மனம் பதை பதைக்கிறதே.


Friday, 21 December 2012

மலர்ப்படுக்கை





வாழ்க்கை ஒன்றும்
முழு மலர்ப் படுக்கை அல்ல

முள் குத்தாமல்

பார்த்துக் கொள்வதும்

குத்தினால் பொறுத்துக்கொள்வதும்
நம் கையில் தான்

Monday, 17 December 2012

மாயன் காலண்டராவது மச்சான் காலண்டராவது


மாயன் காலண்டராவது
மச்சான் காலண்டராவது

22-12-2012 அன்று காலை
வழக்கம் போல்
அலாரம் அடித்த்தும்
அதன் தலையில் தட்டி
பத்து நிமிடம்
செல்லத்தூக்கம் போட்டு எழுந்து
                         
வாசல் தெளித்து
மார்கழி மாதம் என்பதால்
தம்மாத்தூண்டு கோலம் போடாமல்
கொஞ்சம் பெரிய கோலம் போட்டு

பரபரவென காபி போட்டு, சமைத்து,
ஆபீசுக்கு மணியாச்சு, மணியாச்சு
என்று பாட்டு பாடி

ரயில் நிலைய
படி ஏறி வரும் போதே
ஒரு ரயிலை விட்டு விட்டு,
’நான் விட்ட ரயில்
காலியாகப் போச்சே’ என்று புலம்பி
அடுத்த ரயில் வர நேரமாக
ரயில்வேயைத் திட்டி

எக்மோரில் ஆள் சேர்த்து
ஆட்டோ பிடித்து
அலுவலகம் சென்று

‘ஹலோ, குட்மார்னிங்’ என்று
தொலைபேசியில் பதிலளித்து

நடுவில் வீட்டிலிருந்து,
’வாரம் ஒரு நாள்
எதுலயாவது உப்பு போட மறந்துடுவயே,
இன்னிக்கு ரசத்துல உப்பு இல்ல,’
என்று திட்டு வாங்கி

மாலை பழையபடி
ஆட்டோ, ரயில், ஆட்டோ
என்று வீடு வந்து சேர்ந்து

மீண்டும் சமையலறையில்
நுழைந்து வேலை முடித்து,
சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டே சாப்பிட்டு

நடுவில் என் ஸ்டேட்டஸுக்கு
யார், யார் லைக், கமெண்ட்
போட்டிருக்காங்கன்னு பார்த்து

நல்ல நண்பர்களின்
நல்ல கருத்துக்களுக்கு
லைக்கும், கமெண்டும் போட்டு

படுக்கப்போகும்போது
பேத்தி எங்கள் படுக்கையறையில்
வந்து கை, கால் உதறி விளையாடி,
ஆ, ஊ என்று பேசி, கண் உருட்டி,
விட்டத்தைப் பார்த்து               
வண்ணத் தொலைக்காட்சி
பார்ப்பது போல் ரசிப்பதை
ரசித்து

பனிரெண்டு மணிக்கு மேல்
மறுநாள் எழ அலாரம் வைத்துவிட்டு
தூங்கச் செல்வேன்.

மாயன் காலண்டராவது
மச்சான் காலண்டராவது
யார் ஜம்பமும்
இங்கு பலிக்காது..