என் எழுத்துக்குக் கிடைத்த முதல் பரிசு.
‘பண்புடன்’ ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் என் சிறுகதை ‘காவல்’ எனக்கு ”இரண்டாம் பரிசை”ப் பெற்றுக் கொடுத்துள்ளது.
https://groups.google.com/forum/?fromgroups#!topic/panbudan/GOQ1PbHjWbQ
உங்களுக்காக ‘காவல்’ சிறுகதையை மீண்டும் இங்கு பதிகிறேன்.
காவல்
”ஆச்சி, என் புள்ளையைப் பாத்தீங்களா ஆச்சி? பன்னண்டு
மணிக்கு ஸ்கூல்விட்டா பன்னண்டேகாலுக்கு வீட்டுல இருப்பான். இப்ப மணி ஒண்ணரை ஆச்சு.
இன்னும் வீட்டுக்கு வரலயே ஆச்சி”
”நான் இங்கயேதாம்மா உக்காந்திருக்கேன். காலையில நீ புள்ளையை இஸ்கூலுக்கு கூட்டிப் போறப்போ
பாத்தேன். புள்ளையை இப்ப பார்க்கலயே. நீ பதறாதம்மா.
முதல்ல இஸ்கூலுக்குப் போய் பாரு” என்றாள்
பெட்டிக்கடை ஆச்சி.
“சரிங்க ஆச்சி”
’இன்னிக்கு சனிக்கிழமை. நாளைக்கு ஸ்கூல் வேற லீவு. ஸ்கூல மூடறதுக்கு முன்னாடி போய் சேரணுமே” என்று புலம்பிக் கொண்டே ஸ்கூல் இருக்கும் திசையை
நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.
பள்ளி வாட்ச்மேன்
கேட்டைப் பூட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேகமாக ஓடினாள். “வாட்ச்மேன், கேட்டை
பூட்டாதீங்க. என் பையனைக் காணும். இன்னும் வீட்டுக்கு வரல” என்று கத்திக்கொண்டே ஓடினாள்.
“எல்லா புள்ளைங்களும்
வூட்டுக்குப் போயிட்டாங்களேம்மா”
“இல்ல வாட்ச்மேன் தயவு
செஞ்சு உள்ள போய் பாப்போம் வாங்க” என்று சொல்லிக் கொண்டே கேட்டைத் தள்ளிக்கொண்டு
உள்ளே ஓடினாள்.
“நான் தான் சொன்னேனே
அம்மா. பாருங்க ஸ்கூல்ல ஒரு ரூம்புலயும்
ஒரு புள்ள கூட இல்ல. வீட்டுக்குப் போய் புள்ள வந்துட்டானான்னு பாருங்க. நானும் அக்கம்பக்கத்துல தேடறேன். கவலைப் படாம போங்கம்மா. கண்டிப்பா பையன் கிடைச்சுடுவாம்மா”.
மறுபடியும் வீட்டிற்கு
வந்து பையன் வராததைக் கண்டு பதறி, பயந்து கணவனுக்குப் போன் செய்து விஷயத்தைச்
சொன்னாள்.
“எல்லா இடத்துலயும்
தேடிப் பாத்தியா?”
“பாத்துட்டேங்க. ஸ்கூலுக்குப் போய் அங்கயும்
பாத்துட்டேங்க. எனக்கு ரொம்ப பயமா
இருக்குங்க. ஏற்கனவே ஒண்ணை பறி கொடுத்துட்டோம்”“சரி, நீ கவலைப் படாத நான்
போய் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு வரேன்.
நம்ம பையன் பத்திரமா இருப்பான்”. மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டானே தவிர அவனுக்கு கையும்
ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனம் திக், திக்கென்று அடித்துக்கொண்டது.
* * *
”என் செல்போன் அடிக்குது அதை எடு”.
”என்ன ஏட்டு, என்ன விஷயம்.”
”சார் ஒரு மிஸ்ஸிங் கேஸ். ஒரு சின்ன பையனை, எட்டு வயசு
இருக்குமாம், காணுமாம் சார்”.
“சரி நான் இதோ கிளம்பி வரேன்.”
”ஏங்க
சாப்பாடு”
”வந்து சாப்பிடறேன்.
ஒரு எட்டு வயசு பையன காணுமாம்”
”ஐயய்யோ!. இந்தாங்க இந்த மோரை குடிச்சுட்டு
கிளம்புங்க.”
”நான் வரணும்ன்னு காத்திருக்காம, தயவு செஞ்சு நீ
சாப்பிட்டுடு”
”சரிங்க”.
* * *
”நீங்க மார்க்கெட்ல அரிசிக் கடை வெச்சிருக்கீங்க
இல்ல. உங்க பையனதான் காணுமா? உங்க பெயர் என்ன? கொஞ்சம் விவரமா சொல்லுங்க சார். உங்களுக்கு யாராவது விரோதிங்க இருக்காங்களா?”
”அப்படியெல்லாம் யாருமே கிடையாது சார்”
”பையனை திட்டினீங்களா? அடிச்சீங்களா?”
”அப்படி எல்லாம் வழக்கமே இல்லீங்க சார்”.
”பையனோட
போட்டோ கொண்டு வந்திருக்கீங்களா?
”இல்ல சார்.
நான் கடையில இருந்து நேர வரேன். வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வரேன் சார்.
“ஏட்டு, சாரோட போன் நம்பரை
வாங்கிக்கிட்டீங்களா?”
”இருக்கு சார்”
”சரி நீங்க தைரியமா வீட்டுக்குப் போங்க சார், நல்லதே
நடக்கும் கவலைப் படாதீங்க. ”
* * *
”வாங்க ஏட்டு. நாமளும் போய் தேடுவோம்”
”சரி சார். சின்ன ஊர்தான சார். ஈசியா கண்டு பிடிச்சுடலாம் சார்”
”ஏன் ஏட்டு, அரிசிக் கடைக்காரர் வசதியானவரா? யாராவது குழந்தையை கடத்தி பணம் கிணம் பறிக்கப்
பாக்கறாங்களா? சமீபத்துல இங்க அந்த மாதிரி எதுவும் நடக்கல. ஏன் ஏட்டு, நீங்க இந்த ஸ்டேஷன்ல ரொம்ப வருஷமா
இருக்கீங்க இல்ல. நம்ப ஏரியாவுல அந்த
மாதிரி ஏதாவது குழந்தையை கடத்தி இருக்காங்களா?”
”சார் அந்த மாதிரி எல்லாம் எதுவும் எனக்குத் தெரிஞ்சு
நடந்ததே இல்ல சார்”
”அப்ப உங்களுக்குத் தெரியாம எதாவது நடந்திருக்குமா?”
”என்ன சார், ஒரு பேச்சுக்குச் சொன்னா..”
”பாவம்யா அந்த ஆள். முகமே சரியில்ல. கடவுளே அந்த குழந்தை கிடைக்கணும்” என்று வாய் விட்டு இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு
ஏட்டு “இந்த இன்ஸ்பெக்டர் தேடிக் கண்டு பிடிக்கறதை விட்டுட்டு கடவுள் கிட்ட மனு
போடறாரே” என்று நினைத்து நமுட்டுச்
சிரிப்பு சிரித்துக் கொண்டார்.
”வணக்கம் சார், வணக்கம்
சார்”
”என்ன
மேஸ்திரி, என்ன இன்னிக்கு வேலை நடக்கலியா?”
”இல்ல ஏட்டு சார், காலேல சித்தாள் ஒருத்தன் செத்து
போய்ட்டான் சார். அதான் லீவு விட்டுட்டேன்.”
”ஓ. சரி மேஸ்திரி.
அரிசி கடைக்காரர் பையனைக் காணுமாம்.
அதான் தேடிக்கிட்டு போறோம். வாங்க சார் நாம போகலாம்”.
* * *
”என்ன ஏட்டு, நாமளும் எல்லா இடத்துலயும் தேடிப்
பார்த்துட்டோம். இப்ப அவர் வந்தா என்ன பதில் சொல்றது, சரி, போன் அடிக்குது, என்னன்னு போய்ப் பாருங்க”.
”சார், சார், மேஸ்திரி போன்ல பேசறார் சார். அந்த பாதி கட்டின கட்டிடத்துக்கு பின்னாடி ஒரு
குழந்தை தூங்கிக்கிட்டிருக்காம். வாங்க
சார் போய் பார்க்கலாம்”
மோட்டார்
சைக்கிள் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்த பையன், இன்ஸ்பெக்டர், ஏட்டு, மேஸ்திரி
மூவரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தான். “
“சார், சார் எனக்கு
தெரியும் சார். நான் பாத்துருக்கேன்
சார். இது நாம தேடற பையன் தான் சார்.”
அருகில்
சென்று அந்தப் பையனைத் தூக்கிக் கொண்டு, “என்ன கண்ணா, ஏன் இங்க வந்து இப்படி
தூங்கிட்டிருந்த” என்று கேட்டார்
இன்ஸ்பெக்டர்.
”அதுவா அது வந்து, அங்கிள் அங்க பாருங்க. என்னோட பையைப் போட்டு மூடி வெச்சிருக்கேன்”
”என்ன ஏட்டு, பையன் சம்பந்தமில்லாம பேசறான். எதைக் கண்ணு மூடி வெச்சிருக்க?”
”அது, வந்து, முன்னாடி தங்கச்சி பாப்பா விழுந்து
செத்துப் போச்சு இல்ல. அப்பறம் போன வாரம்
டீவில கூட காமிச்சாங்களே. HAPPY BIRTHDAY அன்னிக்கு ஒரு பாப்பா
விழுந்து செத்துப் போச்சே. அதான் வேற எந்தப் பாப்பாவும் அப்டி விழுந்து செத்துப்
போகக் கூடாதுன்னு. என்னோட பைய போட்டு மூடி வெச்சுட்டு இங்கயே உக்காந்துட்டிருந்தேன். அம்மா குடுத்த பிஸ்கெட்ட எல்லாம் சாப்பிட்டுட்டு
தூங்கிட்டேன்”.
”சே, ஒரு சின்ன குழந்தைக்கு இருக்கற பொறுப்பு கூட
பெரியவங்க நமக்கு
இல்ல. யோவ் மேஸ்திரி, கேட்டியாய்யா? என்னய்யா
இது. டீவில காட்டறான், பேப்பர்ல போடறான். எவ்வளவு சொன்னலும் நீங்க எல்லாம்
திருந்தவே மாட்டீங்களா? ஏதோ உன் நல்ல
நேரம். எந்த அசம்பாவிதமும் நடக்கல. இந்த மாதிரி இனிமே நடந்தா நீ கம்பிதான் எண்ண
வேண்டி இருக்கும். ஜாக்கிரதை”
”சார், சார், இனிமே கவனமா இருக்கேன் சார். மன்னிச்சுடுங்க
சார்”.
”என் பையன் கிடைச்சுட்டானா? சார் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்”.
”கடவுளோட அருள்.
அவருக்கு நன்றி சொல்லுங்க. ஒரு
குழந்தையோட அருமை என்னை மாதிரி குழந்தையே இல்லாத ஆளுக்குதான் சார் தெரியும்.
எனக்கும் கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆச்சு.
நீங்க
ஏற்கனவே ஒரு குழந்தையை பறிகொடுத்துட்டீங்க போல இருக்கு. ஜாக்கிரதை சார்”.
”அங்கிள், டாட்டா அங்கிள்”.
“டாட்டா
கண்ணு”.