Wednesday, 13 February 2013

அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)


பெற்றோரின் ஆதரவால் படித்து, மேல் படிப்பிற்கு கடன் வாங்கிக் கொடுக்கப்பட்டு வெளிநாட்டில் படித்து அங்கேயே ஆறு இலக்க சம்பளத்தில் வேலை பார்க்கும் இளைஞர்களுக்காக அல்ல இந்தப் பதிவு.

ஒரு வேளை கஞ்சிக்குக் கூட மாடாய் உழைத்து, ஏதோ நம் குழந்தைகளுக்காவது நல்ல வாழ்க்கை கிடைக்காதா என்ற ஏக்கத்திலும், முதல் பிள்ளை வெளிநாடு சென்றால் மற்ற பிள்ளைகளை, பெண்களை கரையேற்ற மாட்டாமோ என்ற ஏக்கத்திலும்,  அம்மா, அப்பாதான் கஷ்டப்பட்டார்கள் நாமாவது வெளிநாடு சென்று குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வர வேண்டாமா என்ற நல்லெண்ணத்திலும், கொஞ்சம் நஞ்சம் கைவசம் இருக்கும் வீடு, வாசல், நிலம், நீச்சு, நகை, நட்டு எல்லாவற்றையும் அடகு வைத்து அல்லது விற்று  ஏஜண்ட் என்கிற ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிற சில கயவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் எண்ணற்ற அப்பாவி இளைஞர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இந்த பதிவினை சமர்ப்பணம் செய்கிறேன்.


 நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ.. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்..

“
திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்” கொடுத்தேன். ‘வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்’ என ஏஜெண்டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன்.

அவரும் ‘என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தருவோம்.’என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. 

மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. ‘இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..’ என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். ‘உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.’ என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு.

‘
எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டிவந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..’ என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள்.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து ‘மேய்ச்சுட்டு வா..’ என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார்.

மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து ‘போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்’ என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன்.

அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன்.
“
எதுக்கு அடிச்சீங்க-?’ என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ‘ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்’ என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது. 

என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன்.
ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது.

அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.

மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களேங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. ‘எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே’ எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன். 

என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் ‘வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்’ என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது.

இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன். 

இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். ‘என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..’ என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம். 

வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம். 
டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது. 

நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்” எனப் பீடிகையோடு தொடர்ந்தார்..


“
தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்..” என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன். 

நன்றி . . .
கபிலன்
&
வேல்முருகன் குட்டி

Monday, 21 January 2013

வீடு

IN AND OUT CHENNAI JAN 16-31 ல் வெளி வந்த என் கவிதை ‘வீடு’.  உங்களுக்காக மீண்டும் இங்கு பதிகிறேன்


வீடு
வாசலிலே நிதம் பூத்து
இதமான மணம் பரப்பும்
நித்ய மல்லிக்கொடி,
வீட்டைச் சுற்றி மணம் நிறைந்த
நிறம் மிகுந்த மலர்ச் செடிகள்,
விசாலமான அறைகள்,
வீடு நிறைய மனிதர்கள்,
தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா,
சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என்று,
கருவண்டு கண்கள் சுழற்றி
நொடிக்கொரு சேட்டை செய்யும்
குஞ்சு குளுவான்கள்,
புது மனிதர் வருகையை
கட்டியம் கூறும்
பைரவர் வாசலிலே,
கொல்லையிலே கல்கண்டுத் தண்ணீருடன்
எப்போதும் வற்றாத கிணறு,
மா, பலா, வாழை மரங்கள்,
தினத் தேவை பூர்த்தி செய்யும்
காய்கறிச் செடிகள்,
இப்படி என் பிறந்த வீடு போலவே
புகுந்த வீடும் இருக்கும்
என்ற கனவுகளுடன்
கை பிடித்த மணாளனுடன்
மகிழுந்திலிருந்து வலது கால் எடுத்து
நிலம் பதித்து புது வீடு
வந்து சேர்ந்தேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல
எண்ணிலா புறாக்கூண்டுகள்
விருந்தினர் வருகையை
சூசகமாகத் தடுப்பது போல்  
ஒற்றைப் படுக்கையறை,
பக்கத்து வீட்டில் இருப்பது
யார் என்று தெரியவே
பல நாட்களாயிற்று.
வாசலில் வந்து பார்த்தாலும்,
சாளரத்தின் வழியே பார்த்தாலும்
கண்ணில் பட்டது சாத்திய கதவுகளே!
காய்கறி வண்டிக்காரன்,
விற்பனையாளன்,
அறிமுகம் இல்லாதவர்
அனைவருமே நிறுத்தப்பட்டனர்
வெளி வாசலிலேயே
பாதுகாப்பான இடம்
தண்ணீர் வசதி
எப்பொழுதும் மின்சாரம்
அன்பான கணவன்
இல்லை என்ற சொல்லுக்கே
இடமில்லாத ஒரு வாழ்க்கை
ஆனால் என் உள் மனம் மட்டும் சொல்கிறது.
‘அடியே! நீ ஒரு
தங்கக் கூண்டுக்கிளி’ என்று.

Saturday, 12 January 2013

குல தெய்வம்


என்னடா இவ, குலதெய்வம்ன்னு தலைப்பை போட்டுட்டு  TYPEWRITER படத்தை போட்டு இருக்காளேன்னு யோசிக்கிறீங்களா?  முழுக்க படியுங்க.  படிச்சுட்டு சொல்லுங்க.


24.12.2012 அன்னிக்கு கார்த்தால 0715 மணிக்கு வைகுண்ட ஏகாதசியாச்சேன்னு நன்மங்கலம் நீல வர்ணப் பெருமாளை தரிசனம் பண்ண நன்மங்கலம் ரோட்டில் திரும்பி ஒரு பத்தடிதான் நடந்திருப்பேன்.  இளையராஜா / ஏ ஆர் ரஹ்மானின் இன்னிசை மாதிரி என் காதுல டைப் அடிக்கற ஓசை கேட்டுது.  நிமிர்ந்து பார்த்தா ‘VINOD TECHNICAL INSTITUTE’.  ஆஹா, இந்த இன்னிசையைக் கேட்டு எவ்வளவு நாள், ஏன் வருஷமே ஆச்சு.  ஆமாம் இப்ப COMPUTERல தான டைப் அடிக்கறோம். சத்தமே கேக்காதே, FEATHER TOUCH.  




செய்தித்தாள்களில் 2011ஆம் ஆண்டு வந்த இந்த செய்தியைப் படித்தபோது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

கம்ப்யூட்டருக்கு வழிகொடுத்து விடைபெற்றது டைப்ரைட்டர்
மும்பை : உலகின் கடைசி டைப்ரைட்டிங் நிறுவனமான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ், மும்பையில் உள்ள தனது உற்பத்தி யூனிட்டை மூடியுள்ளது. உலகம் முழுவதும் ஒருகாலத்தில், அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட டைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் வருகையால் கணிசமாக குறைந்தது. மேற்கத்திய நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன்பே, தட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நி‌லையில், சமீபகாலமாக, டைப்ரைட்டிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தட்டச்சு பயன்பாடு குறைந்து, கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனங்கள் பல மூடப்பட்டன. ஆனாலும், கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் நிறுவனம், டைப்ரைட்டிங் மிசின்களை தயாரித்து வந்தது. உலகின் கடைசி டைப்ரைட்டிங் தயாரிப்பு நிறுவனமாக இருந்த ‌கோத்ரெஜ் அண்ட் போய்ஸ் நிறுவனம், அதனை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுகுறித்து, இதன் உயர் அதிகாரி மிலிந்த் துக்லே கூறியதாவது, கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகரித்து விட்டதால், இதன் பயன்பாடு குறைந்து விட்டது. பயன்பாடு குறைந்ததால், தங்களுக்கு வரும் ஆர்டர்களும் முற்றிலும் இல்லாமல் போனது. தற்போது, தங்களிடம் 200 டைப்ரைட்டிங் மெசின்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இவையும் அரபுமொழி டைப்ரைட்டிங் மெசின்களே ஆகும் என்றும், இதனையடுத்து வேறவழியின்றி உற்பத்தி யூனிட்டை மூடிவிட்டதாக அவர் தெரிவித்தார்.




கோத்ரெஜ் கம்பெனியின் டைப்ரைட்டர் பிரிவு 1955ல் (நான் அவதரித்த ஆண்டாக்கும்) தொடங்கப்பட்டது இந்தியாவின் சுதந்திரத்துக்கும் தொழில்மயத்துக்கும் டைப்ரைட்டர் ஓர் அடையாளம் என்று பிரதமர் நேரு புகழாரம் சூட்டினார்.



ஆனால் சத்திரத்துத் திண்ணையில் படுத்திருந்த நாயை விரட்டி விட்டு மனிதன் ஆக்ரமித்துக் கொள்வது போல் டைப்ரைட்டரை விரட்டி விட்டு அலுவலகம், வீடு, தொழிற்சாலைகள் என்று எல்லா இடங்களையும் கம்ப்யூட்டர் ஆக்கிரமித்துக் கொண்டது.  போர்ட்டபிள் டைப்ரைட்டர்களின் இடத்தை லேப்டாப் பிடிங்கிக் கொண்டது. 


பிரதமர் நேரு சொன்ன அடையாளத்தை அடையாளமே இல்லாமல் அழிக்கத் தொடங்கியது கம்ப்யூட்டர்.







நாங்க படிச்ச காலத்துல எல்லாம் SSLC முடிச்சதும், ஏன் பத்தாவது முடிஞ்ச லீவுலயே TYPEWRITING CLASS சேர்த்துடுவாங்க.  விருப்பம் இருந்தால் அப்படியே சுருக்கெழுத்தும்.  எத்தனையோ குடும்பங்கள்ள விளக்கேத்தி வெச்சிருக்கு இந்த TYPEWRITING & SHORTHAND இரண்டும்.



நான் GOVERNMENT POLYTECHNIC FOR WOMENல் (தற்போதைய பெயர் DHARMAMBAL POLYTECHNIC) மூன்று வருட DIPLOMA IN COMMERCIAL PRACTICE COURSE 1970 – 1973 படித்தேன்.  அதில் B.COM SUBJECTS மற்றும் ENGLISH TYPEWRITING, SHORTHAND HIGHER.  


அதே நேரத்தில் என் COUSIN கோவையில் இதே COURSE  இரண்டு ஆண்டுகள் படித்து கோவை SUGARCANE BREEDING INSTITUTE ல் பணியில் சேர்ந்திருந்தார்.  அதனால்தான் என் அம்மா நீயும் இதே DIPLOMA படி, கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள்.  முதல் வருடம் காலேஜ் போகவில்லையே என்று வருத்தம் கொஞ்சம் இருந்தது.  இரண்டாம் வருடம் வருத்தத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.  



3 வருட படிப்பை வெற்றிகரமாக முடித்து வெளியே வந்த உடனே நல்ல அரசாங்க வேலை.  ஆயிற்று 39 வருடங்கள் 3 மாதங்கள் பணியாற்றிவிட்டாகிவிட்டது.  இன்னும் பாக்கி இருப்பது 1 வருடம் 5 மாதம்.

இதே குலதெய்வம் தான் சமூக அந்தஸ்தைக் கொடுத்தது, பலரின் பாராட்டையும் பெற்று கொடுத்தது. 



இப்பதானே கம்ப்யூட்டர் ஜாலம் எல்லாம்.

டைப்ரைட்டரில் ஒரு W, அதுக்கு மேல ஒரு &,  அந்த & மேல ஒரு /, ஒரு SOLDIER மாதிரி வரும். 

அப்புறம் ஒரு தேர் மாதிரி டிசைன் செய்தது.   சின்னச் சின்ன விஷயங்கள்.  எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அந்தக் காலத்துல என் அப்பா ஒரு கடிதத்தை சிவலிங்கம் மாதிரி அடித்திருப்பார். 


 ஆனா ஒண்ணுங்க. இந்த செய்தியையும் கேளுங்க.
ரொம்ப அலட்டிக்காத கம்ப்யூட்டரே.

”மிசோரம் மாநிலத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுவதால், அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களுக்கு விடை கொடுக்கப்பட்டு, டைப்ரைட்டிங் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.”



யார் கண்டது, மீண்டும் பழைய டைப்ரைட்டர்களுக்கு பூரண கும்ப வரவேற்பு கிடைத்தாலும் கிடைக்கலாம். 



என்னை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்ற ‘VINOD TECHNICAL INSTITUTE’க்கு நன்றி.
 இப்ப சொல்லுங்க, எனக்கு, என் குடும்பத்துக்கு, ஏன் எத்தனையோ குடும்பங்களுக்கு இந்த TYPEWRITER (அதோட மவுசு குறைந்தாலும்) குலதெய்வம் தானே.