Wednesday, 19 September 2012

உறவு


பெற்ற தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறோம்.  அதற்கும் ஒரு படி மேலே போய் நடுத்தெருவில் விட்டுச் செல்லும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.  நீங்கள் தினசரிகளில் படித்திருப்பீர்கள்.  அதன் விளைவுதான் இந்தக் கதை

IN AND OUT CHENNAI JUNE 01 - 15, 2012 இதழில் வெளி வந்த என் சிறுகதை இதோ உங்களுக்காக


“உமா,  ரொம்ப வருஷமா சொல்லிண்டிருந்தயே, மதுரைக்குப் போகணும்ன்னு.  இங்க பார். என் கூட எம் பி ஏ படிச்ச துரையோட பொண்ணுக்கு அடுத்த மாசம் மதுரையில கல்யாணமாம்.  அழைப்பிதழோட தனியா கடிதமும் எழுதி அனுப்பி இருக்கான்.  போன மாசம் இங்கேந்து மதுரைக்குப் போயிருந்தபோது மீனாட்சி அம்மன் கோவில்ல பார்த்தேன்னு எங்க ஆபீஸ் குமார் சொன்னானே அதே துரையோட பொண்ணுக்கு தான் கல்யாணம்.  நீ துரையை பார்த்திருக்க வாய்ப்பில்ல.   ஏன், குமாரைத் தவிர என் கூடப் படிச்ச நண்பர்கள் யாரையுமே நீ பார்த்திருக்க வாய்ப்பில்ல.  சென்னையில ஹாஸ்டல்ல தங்கி படிச்சோம்.  படிப்பு முடிஞ்சதும் அவங்கவங்க ஊருக்குப் போயிட்டோம்.  அப்பறம் எல்லாரும் வேலை, குடும்பம்ன்னு ஒவ்வொரு மூலைக்குப் போயிட்டோம். அத்தோட திடீர்ன்னு நிச்சயம் ஆனதால யாரையும் நம்ப கல்யாணத்துக்கும் கூப்பிட முடியல.   துரை பாவம், சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்து யார் யார் தயவிலோ படித்து, நல்ல நிலைக்கு வந்திருக்கான்.  அப்புறம் உமா, இங்க அகமதாபாத்ல எங்க கூட படிச்ச ஒரு 6, 7 நண்பர்கள் இருக்காங்கன்னு இப்பதான் குமாருக்குத் தெரிஞ்சுதாம். அவங்க எல்லாருக்கும்கூட துரை பத்திரிகை அனுப்பி இருக்கானாம். அவங்க எல்லாரும் மதுரைக்கு வரேன்னும் சொல்லிட்டாங்களாம். குமாரே எல்லாருக்கும் ஒண்ணா டிக்கெட் எடுத்துடறேன்னு சொல்லிட்டான்.  நம்ப ரெண்டு பேருக்கும் சேர்த்து எடுக்க சொல்லிடட்டுமா? பழைய நண்பர்கள் எல்லாரையும் சந்திக்கற வாய்ப்பு கிடைக்கும்.  அப்படியே கொடைக்கானல், பழநி எல்லாம் போகலாம்ன்னு சொன்னான் குமார்.  வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கற உனக்கும் ஒரு மாறுதலா இருக்கும். நீ என்ன சொல்ற உமா? என்றான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த சோமு என்கிற சோம சேகர்.

சரிங்க. நமக்கும் டிக்கெட் எடுக்கச் சொல்லிடுங்க.  முடிஞ்சா அப்படியே ஒருநாள் நம்ப குல தெய்வக் கோவிலுக்கும் போயிட்டு வந்துடலாங்க. நாம்ப அங்க போய் ரொம்ப வருஷம் ஆயிருக்கும் இல்லயா? ம். இப்ப  நான் போய் உங்களுக்கு காபி கொண்டு வரேன் என்று சொல்லிவிட்டுப் போகும் உமாவைப் பார்த்து பெருமூச்சு விட்டான் சோமு.  ‘ம். கல்யாணத்தின் போது எப்படி இருந்தவ இப்ப இப்படி ஆயிட்டா.  என்ன நிறம். என்ன அழகு.  கல்யாணத்துக்கு வந்தவங்க  எல்லாம் பெயர் பொருத்தம், ஜோடிப் பொருத்தம் எல்லாம் எப்படி இவ்வளவு கச்சிதமா அமைஞ்சிருக்குன்னு ஆச்சரியப்பட்டாங்களே.   ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கூட நன்னாதானே இருந்தா.  அமெரிக்காவுக்குப் போன கௌதம் இப்படி செய்வான்னு யார் கண்டா?  உனக்கு மட்டும் எப்படிடா எல்லாம்  அவ்வளவு அழகா, கச்சிதமா, சரியா வெச்சதை எடுத்தாப்பல நடக்கறதுன்னு எல்லாரும் சொல்வாங்களே, யார் கண்ணு பட்டுதோ, இல்லை ஒருவேளை எல்லாம் நன்னா இருக்குன்னு கர்வப்பட்டுட்டேனோ? அதுக்கு கிடைச்ச அடியோ? என்றெல்லாம் பலவாறு யோசித்தான் சோமு. 

தவமிருந்து பெத்து, ஏழு வயசில பூணல் போட்டு ஒரே பிள்ளைன்னு பார்த்துப் பார்த்து வளர்த்து, சேமிப்பை எல்லாம் செலவழிச்சு படிக்க வெச்சு, வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டு, இங்கு ஆயிரம் கனவுகளை மனசுல தேக்கி வைத்துக் காத்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களுக்குத் தெரியாமல் உடன் பணி புரியும் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு குழந்தையையும் பெற்றுக் கொண்டு பிறகு பெற்றோருக்குத் தெரிவிப்பது என்றால் எந்தப் பெற்றோருக்குத்தான் தாங்கும். அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றுக் கொண்டு அங்கேயே தங்கி விட்டான் கௌதம்.  சோமுவாவது அலுவலகத்துக்குச் சென்று விடுகிறான்.  ஆனால் உமா.  நத்தை தன் உடலை கூட்டுக்குள் சுருட்டிக் கொள்வது போல் நாலு சுவர்களுக்குள்ளேயே இருந்து உள்ளுக்குள்ளேயே முடங்கி அழுது கொண்டிருக்கிறாள்.  என்ன செய்ய. எல்லாம் அவரவர் விதிப் பயன்.

***

மதுரை செல்லும் நாளும் வந்தது.     அவரவர் மூட்டை, முடிச்சுகளுடன் ரயில் நிலையம் வந்து சேர்ந்தனர்.   அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு கிட்டத்தட்ட 48, 50 மணி நேர பயணம்.  நல்லவேளை, குமார் குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளில் டிக்கெட் புக் செய்திருந்தான்.   இல்லாவிட்டால் இந்த கோடை காலத்தில் கிட்டத்தட்ட ரெண்டு நாள் பயணம்ன்னா என்ன ஆகறது. மாலை 340க்கு ரயில் கிளம்பியது.   இரவுக்குள்ளேயே எல்லா குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி அவரவர் கொண்டு வந்த சாப்பாட்டு வகையறாக்களைப் பகிர்ந்து உண்டு ஐக்கியமாகி விட்டனர்.   ஒரு வழியாக, உண்டு, உறங்கி, சீட்டு விளையாடி, நண்பர்கள் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டு, அரட்டை அடித்து இரண்டு நாட்களை  ரயிலில் கழித்துக் களைத்து மூன்றாம் நாள் மாலை நான்கு மணிக்கு மதுரை வந்து சேர்ந்தனர்.  சோமுவுக்கு உமாவின் முகம் சற்றுத் தெளிந்து இருப்பதாகத் தோன்றியது. 

ரயிலடிக்கு வந்து, ரொம்ப வருடங்கள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் அனைவரையும் வரவேற்று அவர்கள் தங்க ஏற்பாடாகி இருந்த இடத்திற்கு ஒரு வேனில் அழைத்துச் சென்றான் துரை.  “எல்லாரும் ஒரு மணி நேரத்தில் தயாராக இருங்க. மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போக ஏற்பாடு செய்திருக்கேன்.  இந்த வேன் உங்களுக்காகவே தனியா ஏற்பாடு செய்திருக்கேன்.  இன்னும் திருமணத்துக்கு ரெண்டு நாள் இருக்கு. அதுவரைக்கும் நீங்க எல்லாரும் ஊரை சுத்திப்பாருங்க.   நீங்க எல்லாரும் ஊருக்குத் திரும்பற வரைக்கும் இந்த வேன் உங்களுக்காக மட்டுமே.  அத்தோட இவன் ராமு, என்னுடைய தூரத்து உறவு.  இவன் உங்களுக்கு ஊரை சுத்திக் காமிக்கறதோட, உங்களை மறுபடி ரயில் ஏத்தி விடறவரை உங்க கூடவே இருப்பான்.  எனக்கும் உங்க கூட வர ஆசைதான்.  நான் உங்க கூட வராததுக்கு மன்னிச்சுக்கணும்என்றான் துரை.   

“அதனால என்ன துரை.  கல்யாண வேலைகளுக்கு நடுவுல எங்களுக்காக நீ இவ்வளவு ஏற்பாடு செய்து வெச்சிருக்கியே.  அதுக்கு ரொம்ப நன்றிப்பா.  நீ கல்யாண வேலை எல்லாம் கவனி.  நாங்களும் ஏதாவது உதவி செய்யணும்ன்னா சொல்லு.என்றான் சோமு.  

“ம்ஹூம். எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு.  நீங்க எல்லாரும் நல்லா ஊரை சுத்திப்பாத்துட்டு திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்துடுங்கஎன்று சொல்லிவிட்டுச் சென்றான் துரை.
***   

அலுக்க, சலிக்க ஊர் சுற்றிவிட்டு சந்தோஷமாக திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர் நண்பர்கள் அனைவரும் குடும்ப சகிதமாக.   வாசலிலேயே அவர்களை வரவேற்ற துரை, “உங்க எல்லாருக்கும் ரெண்டாவது மாடில தனித்தனியா ரூம் போட்டிருக்கேன். லிப்டும் இருக்கு.  டிபனை சாப்டுட்டு எல்லாரும் மாடிக்குப் போகலாம்.  அதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒருத்தரை அறிமுகப் படுத்தப் போறேன்.என்று சொல்லிவிட்டு, “இவர்தான் என் அப்பா விஸ்வநாதன்.  எனக்கு ஏது அப்பான்னு யோசிக்கறீங்களா?  இவர் நான் தத்து எடுத்துக்கிட்ட அப்பா.  அரசுப்  பணியில இருந்து ஓய்வு பெற்றவர். இவர் என் அப்பாவானது ஒரு பெரிய கதை.  நேரம் கிடைச்சா சொல்லறேன்.என்று சொன்னான்.  இதற்குள் துரையின் மகள் வந்து “தாத்தா, நீங்க வாங்கிக் கொடுத்த நெக்லசை போட்டுக்கிட்டிருக்கேன்.  என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.என்றாள்.  உன் அப்பா, அம்மா குணத்துக்கு நீ ரொம்ப நல்லா இருப்பம்மாஎன்றார் விஸ்வநாதன்.  தன் மனைவியையும், மகளையும்  அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான் துரை.  இதற்குள் மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கவே, தன் மனைவி மற்றும் விஸ்வநாதனை அழைத்துக்கொண்டு அவர்களை  வரவேற்கச் சென்றான் துரை.

***

இரண்டு நாட்கள் திருமணம் நல்ல முறையில் நடந்து முடிந்து அனைவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர்.   மறு நாள் காலை சத்திரத்தை காலி செய்து விட்டுக் கிளம்ப வேண்டும்.  விஸ்வநாதன் ஒவ்வொரு அறையாக ஏதாவது பாத்திரம், பண்டங்கள் விட்டுப்போயிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வந்தவர், சோமுவும் உமாவும் இருந்த அறைக்கு வந்தார். வாசலிலேயே தயங்கி நின்றார்.  பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவர் போல் உள்ளே சென்றார். “வாங்கப்பா, என்றான் சோமு”. 
“சோமு நானே உன் கிட்ட தனியா பேசணும்ன்னு நினைச்சுண்டிருந்தேன்.  இப்ப நல்ல சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.   சோமு, நீ என்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துல விட்டுட்டு கொஞ்ச நேரத்துல வந்துடறேன்னு சொல்லிட்டுப் போனதும் அங்கயே ரொம்ப நாழி காத்துண்டிருந்தேன்.    அப்புறம் பயத்தோடயும், கலக்கத்தோடயும் அன்றைய இரவை அங்கேயே கழிச்சேன்.  கார்த்தால எழுந்து முதல்ல பேப்பர் வாங்கி பார்த்தேன்.  ஒரு வேளை ஏதாவது விபத்து நடந்து ஒனக்கு ஏதாவது ஆகி இருக்குமோன்னு.  ஏன், ஒரு ரெண்டு நாள் ஜி. ஹெச், ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கெல்லாம்கூட  போய் தேடிப்பார்த்தேன். மார்ச்சுவரிக்குக் கூட போய் பார்த்தேன். உன் அலுவலகத்துக்குப்போய் உன்னோட பேரை கெடுக்க நான் விரும்பல.  என்னை அடையாளம் காட்டிக்காம போனில் தொடர்பு கொண்ட போது உனக்கு வடக்கே மாத்தலாயிடுத்துன்னும், நீ குடும்பத்தோட கிளம்பிப் போயிட்டன்னும்  தெரிஞ்சுண்டேன். கொஞ்சம் லேசா உண்மை புரிய ஆரம்பிச்சுது.  ரொம்ப ஒடிஞ்சு போயிட்டேன்.  தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூட தோணித்து.  அந்த மாதிரி யோசிச்சுண்டே வரும்போதுதான் துரையோட மனைவியும், மகளும், இல்ல இல்ல என்னோட மருமகளும், பேத்தியும் வந்த ஆட்டோ விபத்துக்குள்ளாகி குழந்தைக்கு தலையில நல்ல அடி.   என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சு நின்னவங்களை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போய், வெளியூர் போயிருந்த என் மகன் துரை வர வரைக்கும் அவங்க கூடவே இருந்தேன்.  என் பையில என்னோட பேங்க் பாஸ் புக் இருந்ததால அவங்களுக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்ய முடிஞ்சுது.  நல்ல வேளையா என்னுடைய ரத்தமும், அந்தக் குழந்தையோட ரத்தமும் ஒரே பிரிவா இருந்ததால ரத்தமும் கொடுத்தேன்.   துரை வந்ததும் நன்றி சொன்னான், என்னைப்பத்தி கேட்டான்.  எனக்கு உறவுன்னு யாரும் கிடையாது.  மனைவி இறந்துட்டா, குழந்தைகள் கிடையாதுன்னு சொன்னேன்.  அவன் உடனே என்னை அப்பாவா தத்து எடுத்துண்டுட்டான்.  அவங்க கூடயே என்னையும் அழைச்சுண்டு வந்துட்டான்.   ஆனா சோமு, இன்னி வரைக்கும் அவன் என்னோட பென்ஷன்லேந்து ஒரு பைசா கூட வாங்கிண்டது இல்ல.  என்னை சொந்த அப்பாவா நினைச்சுண்டிருக்கான்.  என்னால முடிஞ்ச சரீர ஒத்தாசைகளை அவங்களுக்கு செஞ்சுண்டிருக்கேன்.  துரையும், என் மருமகளும் என்னை தெய்வமா மதிக்கறாங்க. அசைவம் சாப்பிட்டுண்டு இருந்த அவங்க எனக்காக முழு சைவமா மாறிட்டாங்க. இந்த அருமையான சொந்தத்தை நான் இழக்க விரும்பல.   அதே மாதிரி அவன் உன் மேலயும் நல்ல மதிப்பு வெச்சிருக்கான். அதையும் நான் கெடுக்க விருமபல.  நீ என்னை தாராளமா துரையோட மத்த நண்பர்கள் மாதிரி அப்பான்னு கூப்பிடலாம்.  அவ்வளவுதான்.  எனக்கு உங்க ரெண்டு பேர் மேலயும் கோவமோ, வருத்தமோ கொஞ்சம் கூட கிடையாது.  உங்க கிட்ட ஒரே ஒரு வேண்டுகோள் தான்.  நான் உன் தந்தைன்னோ, நீ என்னோட மகன்னோ தயவு செய்து யாருக்கும், முக்கியமா துரைக்குத் தெரிய வேண்டாம்.என்று சொல்லிவிட்டு மனதிலிருந்த நெடுநாள் பாரம் குறையவே கம்பீரமாக நடந்து சென்றார்.  மன பாரத்தைக் குறைக்க வந்த சோமுவும், உமாவும் மேலும் பாரத்தை ஏற்றிக் கொண்டு தலை குனிந்து நின்றனர்.

விபத்து



போன வாரம் எங்கள் தெருவில் (மேடவாக்கம் பிரதான சாலை) ஒரே நாளில் 3 விபத்து, இறந்தவர்கள் மூன்றோ நான்கோ சரியாகத் தெரியவில்லை.   ஒரு நொடியில் உயிர் விடும் மாந்தர்களே சாலை விதிகளை மதியுங்கள். 
IN AND OUT CHENNAI JUNE 16 - 30, 2012 இதழில் வெளி வந்த என் கவிதை
சாலை விதிகளை மதியான்
தாயின் தவிப்பை மதியான்
தந்தையின் சுமையை மதியான்
தாரத்தின் கண்ணீரை மதியான்
பெற்ற பிள்ளைகளின் பாசத்தை மதியான்
இன்னுயிராம் தன்னுயிரையும் மதியான்
பல்லுயிரையும் மதியான்
எவரையும், எதையும், எப்பொழுதும்
மதியாதவனை மதித்து
அழைத்துச் சென்றான்
எருமை வாகனன்.

Tuesday, 18 September 2012

என் கவிதைக் கிறுக்கல்கள்


இந்த என் கவிதை முகப்புத்தகத்தில் (FACEBOOK) 100க்கும் மேல் லைக், மற்றும் 20க்கு மேல் SHARE செய்யப்பட்டது. 

உன் பாட்டன்
தினம் குடித்து 
தினம் குடித்து
என் தாயின் பொட்டழித்து
பூவெடுத்தான்
வண்ணச் சேலை ஒழித்து
வெள்ளைச் சேலை பரிசளித்தான்

உன் தந்தை
டாஸ்மாகைத் 
தலைநகராக்கி
நல்லாட்சி(!) செய்து
பாத்திரம், பண்டம்,
வீடு, நிலம், நீச்சு
எல்லாம் விற்று என்னை
நடுத்தெரு நாயகியாக்கி
நல்லதொரு நாளில்
பரலோகம் போய்ச் சேர்ந்தான்

ஊரெல்லாம்
குடிகாரக் கும்பல்
பல்கிப் பெருகி
பற்பல பெண்டிரின்
வாழ்வை
கேள்விக் குறியாக்கிக்
கொண்டிருக்கின்றன

தவமிருந்து நான் பெற்ற
என் மகனே
இப்போதே சொல்லிவிடு
நல்லதொரு குடிமகனாய்
நாட்டுக்கும் வீட்டுக்கும்
நலம் சேர்ப்பாயா? இல்லை
பாட்டன் வழி, தந்தை வழி நடந்து
பெண்மையை சீரழிப்பாயா?

”ஆதலினால் தோழியரே”





www.arusuvai.com     இணைய தளத்தில் வெளிவந்த என் சிறுகதை.  என் மகனுக்குப் பெண் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மற்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், கொஞ்சம் கற்பனை எல்லாம் கலந்ததுதான் இந்தக் கதை.  

”ஆதலினால் தோழியரே”


 முகம் தெரியாத தோழியருக்கு அறிமுகம் இல்லாத தோழியின் கடிதம்.
Short story
ஓ! யார் இவள், முன்பின் தெரியாத எனக்கு ஏன் கடிதம் எழுதியிருக்கிறாள் என்றுதானே யோசிக்கிறீர்கள். உங்களுக்கு நான் அறிமுகமாகி இருக்காவிட்டாலும் உங்கள் குடும்பத்திற்கு ஒரு 10, 12 வருடங்களுக்கு முன்பே அறிமுகமாகி இருப்பேன். ‘மணமகன் தேவை’ விளம்பரம் மூலமாக. உங்கள் மாமா, சித்தப்பா, ஒன்று விட்ட அண்ணா என்று யாருக்காவது வரன் தேடிக்கொண்டிருந்தபோது உங்கள் கண்களில் நான் பட்டிருக்கலாம்.
ம். போன ஞாயிற்றுக்கிழமை கூட ‘இந்து’ நாளிதழில் விளம்பரம் வந்திருந்ததே. அதற்கென்ன என்கிறீர்களா?
12 வருடங்களுக்கு முன்பு வந்த விளம்பரம்
"24 வயது, சிவந்த நிறமுடைய, அழகிய, பி.ஈ படித்த இளம்பெண்ணிற்கு, பி.ஈ / எம்.எஸ் / எம்.பி.ஏ படித்து, வெளிநாட்டில் வேலை பார்க்கும் மணமகன் தேவை“
இது சென்ற ஞாயிற்றுக்கிழமை வந்த விளம்பரம்..
”36 வயது, பி.ஈ படித்து, நல்ல வேலையில் உள்ள, சொந்த வீடு, கார் உள்ள பெண்ணிற்கு வரன் தேவை. குழந்தை இல்லாத, மனைவியை இழந்தவராக இருந்தாலும் பரவாயில்லை”
காலம் எப்படி மாறி விட்டது பார்த்தீர்களா? சரி. இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாள் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இந்தக் கடிதத்தை படிக்கப் படிக்கப் புரியும்.
நான் அப்பா, அம்மாவிற்கு ஒரே பெண், அதுவும் அப்பா செல்லம். எனக்கு வரன் பார்க்க ஆரம்பித்தபோது, பாரின் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று, வந்த வரன்கள் அனைத்தையும் அது சரியில்லை, இது சரியில்லை என்று ஆயிரம் குற்றம் சொல்லி ஒதுக்கியவள் நான்.
அம்மாதான் அடித்துக்கொள்வாள். உன் ஜாதகத்துக்கு பாரின் போகும் வாய்ப்பே இல்லையாம். அதோட உனக்கு ரெண்டில் சனி. கண்டிப்பா உனக்கு லேட் மாரேஜ்தான் என்றாள். அப்பாவுடன் சேர்ந்து அம்மாவுக்கு ‘ஜோதிட ரத்னா’ என்று பட்டம் கொடுத்து கைதட்டி சிரித்தேன். இளமைத்திமிரும், பணத்திமிரும் சேர்ந்து, வந்த நல்ல வரன்களையெல்லாம் தட்டிக்கழித்தேன். ஒவ்வொரு வரன் பார்க்கும் போதும் அம்மா ஐந்துக்கு மூன்று பழுதில்லைன்னு ஒத்துக்கோடி என்பாள். அம்மாவுக்கு இப்போது ‘பழமொழி திலகம்’ பட்டம் கொடுத்தேன். அப்பா வேறு என் கட்சி என்பதால் அம்மாவின் பேச்சு காதில் நுழைந்ததில்லை.
அம்மா, “பக்கத்துத் தெரு ஜானகி மாமியை இருபது வருஷமா பாத்துண்டிருக்கோம். மாமி பையன் பாலா ஜாதகம் உனக்கு பொருந்தியிருக்கு” ன்னு சொன்னதும், “நான் பி.ஈ, அவன் பி.காம். அவனை எப்படி கல்யாணம் பண்ணிக்கறது. என்னைக் கேக்காம ஏன் என்னோட ஜாதகத்தை அவங்களுக்குக் கொடுத்தே” ன்னு சண்டை போட்டேன். அம்மாவும் விடாம “அவன் எம்.பி.ஏ படிச்சிருக்காண்டி. நல்ல வேலை. மாமியும் நல்ல மாதிரி. குடும்பமே நல்ல குடும்பம். நீ போய் அங்க சம்பாதிச்சு குடுக்க வேண்டாம். பாலா சொந்தமா கார் கூட வாங்கிட்டான்” என்றாள்.
”எம்.பி.ஏன்னாலும் அதுக்கு முன்னாடி பிகாம் தானே படிச்சிருக்கான். அம்மா நான் உன்னோட பாஷையிலேயே தெளிவா சொல்லிடறேன். குண்டுச்சட்டில குதிரை ஓட்ட எனக்கு இஷ்டமில்ல. எனக்கு பி.ஈ. படிச்ச பாரின் மாப்பிள்ளைதான் வேணும்”னு அழுத்தம் திருத்தமா சொன்னேன்.
அம்மா மட்டும் பாலாவுக்குக் கல்யாணம் ஆகற வரைக்கும் நல்ல வரனை கோட்டை விட்டுட்டோமேன்னு புலம்பிண்டிருந்தா. இப்ப பாலாவோட பையனும், பொண்ணும் பள்ளிக்கூடம்கூட போக ஆரம்பிச்சுட்டா.
வயது 29 ஐ நெருங்கியபோது அப்பாவுக்கும், எனக்கும் யதார்த்தம் கொஞ்ச, கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. அதற்குள் அநேகமாக ஓரிருவரைத் தவிர என் தோழிகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தவறு செய்துவிட்டோமோ என்று உள்ளுக்குள்ளேயே மருக ஆரம்பித்துவிட்டார் அப்பா. நானும் அம்மா சொன்னதைக் கேட்டிருக்கலாமோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆச்சு 2 வருஷத்துக்கு முன்னாடி இதே கவலையில் ஸ்ட்ரோக் வந்து ஒரு வருஷம் படுத்த படுக்கையாய் இருந்து அப்பாவும் போய் சேர்ந்துட்டார். அம்மாதான் இன்னும் விடாமல் கோவில் கோவிலாக சுற்றிக்கொண்டிருக்கிறாள். இன்று ஞாயிற்றுக் கிழமை. இதோ இன்னும் அரை மணி நேரத்தில் ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றக் கிளம்பிவிடுவாள். அம்மாவின் பையில் என் ஜாதக நகல் எப்போதும் இருக்கும். முன்பாக இருந்தால் ‘என்ன சுண்டல் போல் விநியோக்கிக்கவா?’ என்று கேட்டிருப்பேன். ஆனா இப்ப அம்மாவைப் பார்க்கும் போது பாவமா இருக்கு. அவளுக்காக என் கட்டளைகளை எல்லாம் தளர்த்திக்கொண்டேன். என்ன பிரயோசனம். சின்ன வயதில் வந்த வரன்களை நான் தட்டிக்கழித்தேன். இன்று என்னைத் தட்டிக்கழிக்கிறார்கள்.
ஆதலினால் தோழியரே, என்னைப்போல் எங்கிருந்தோ ஒரு ராஜகுமாரன் வருவான் என்று கோட்டை கட்டாமல், தேவையில்லாத கட்டளைகளைப் போட்டு உங்கள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்ளாமல், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு தோழி.

Monday, 17 September 2012

என் முதல் விருது ‘இனிய இல்லத்திலிருந்து’

http://en-iniyaillam.blogspot.in

 ’என் இனிய இல்லம்’ ப்ளாக்கில் திருமதி பாயிஷா காதர் நடத்திய  'PARTI SNACKS EVENT'ல் எனக்கு வழங்கிய PARTICIPATION AWARD

நன்றி பாயிஷா

Friday, 14 September 2012

பட்டாணி சுண்டல்


பட்டாணி சுண்டல்
காய்ந்த பட்டாணி - 1 கப்
வெங்காயம் - பெரியது 2
கடலை மாவு - 1/2 கப்
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய் (1), காய்ந்த மிளகாய் - (2), பெருங்காயம் சிறிது, கறிவேப்பிலை, எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
பட்டாணியை குக்கரில் சிறிது உப்பு போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
கடலை மாவை சிறிது மஞ்சள் பொடி, உப்பு, 1/2 டீஸ்பூன் சாம்பார் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வறுத்து கரைத்த கடலை மாவு கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்.
ஒட்டாமல் சுருண்டு வந்ததும் இறக்கி வைத்து வெந்த பட்டாணியை சேர்த்துக் கிளறி அலங்கரித்து, பச்சை கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வெஜ் சீஸ் ரோல்


வெஜ் சீஸ் ரோல்
உருளைக் கிழங்கு - 2
காரட் - 1
வெங்காயம் - பெரியது 1
குடைமிளகாய் - சிறியது 1
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 3 பல்
சீஸ் துருவியது - 1/2 கப்
பச்சைக் கொத்தமல்லி - சிறிது
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு
எண்ணை - பொரிக்க

உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், குடைமிளகாய் போட்டு சிறிது வதக்கி பிறகு துருவிய காரட் சேர்த்து வதக்கவும்.
மசித்த உருளை, வதக்கிய காய்கறி, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
சிறிது சீஸ் துருவலை எடுத்து பிசைந்த மாவிற்குள் வைத்து விரும்பிய வடிவத்தில்  தயார் செய்து ப்ரெட் க்ரம்சில் புரட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.

வெஜ் சீஸ் ரோல் தயார்.

இது என் மகள் சந்தியா ரமணியின் தயாரிப்பு.