Monday, 17 December 2012

அன்னை நான் அழலாமா?


IN AND OUT CHENNAI DEC 16 - 31 இதழில் வெளிவந்த என் கவிதை.  இங்கு உங்களுக்காக மீண்டும் பதிந்துள்ளேன்.

ஏர் கொண்டு உழுதாய்
விதை விதைத்தாய்
களை எடுத்தாய்
கதிர் அறுத்தாய்
போரடித்தாய்
வலிபல பொறுத்தேன்
வையத்து மக்கள்
பசி பிணி போக்கத்தானே,
வாய் வாழ்த்தாவிட்டாலும்
வயிறு வாழ்த்துமே என்று
வாளாதிருந்தேன்.

என்னை வெட்டிக் குழைத்து
மண்பாண்டம் செய்தாய்
பாவம் பிழைக்கத்தானே என்று
பேசாதிருந்தேன்
சோறு சமைக்கத்தானே என்று
சோகத்தை மறைத்திருந்தேன்
அகல் விளக்காக்கி அகமகிழ்ந்தாய்
இருள் நீக்கி ஒளியேற்றத்தானே
என்று அமைதியாய் இருந்தேன்
பலப்பல கனிமங்களை உனக்கு
வாரி வழங்கி உன் வாழ்க்கையை
வளமாக்கினேன்.

ஏரிகளையும், நீர் நிலைகளை தூர்த்தும்
வயல்வெளிகளை அழித்தும்
மாட மாளிகைகளையும்,
கூட கோபுரங்களையும் கட்டி
என் மேல் பாரத்தை ஏற்றினாய்.
என்னை அழகாக்கி
நீயும் மகிழ்கிறாய் என்று
பகல் கனவு கண்டிருந்தேன்.


ஆனால்
என் தோல் சுருங்கும் அளவுக்கு,
என் முகம் வாடும் அளவுக்கு
என் மனம் நோகும் அளவுக்கு
என் உடல் நாறும் அளவுக்கு,
குப்பை, கூளங்களைப் போட்டு,
நீர் வளங்களை சாக்கடையாக்கி
என்னை நிரந்தர
நோயாளி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!
என் கண்ணீரை வற்றாத
ஜீவநதி ஆக்கிவிடுவாய்
போலிருக்கிறதே!

அன்னை நான் அழலாமா?
என்னை நீ அழ விடலாமா?

Tuesday, 11 December 2012

முதல் பரிசு



என் எழுத்துக்குக் கிடைத்த முதல் பரிசு.

‘பண்புடன்’ ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் என் சிறுகதை ‘காவல்’ எனக்கு ”இரண்டாம் பரிசை”ப் பெற்றுக் கொடுத்துள்ளது.

https://groups.google.com/forum/?fromgroups#!topic/panbudan/GOQ1PbHjWbQ

உங்களுக்காக ‘காவல்’ சிறுகதையை மீண்டும் இங்கு பதிகிறேன். 

காவல்

     ”ஆச்சி, என் புள்ளையைப் பாத்தீங்களா ஆச்சி? பன்னண்டு மணிக்கு ஸ்கூல்விட்டா பன்னண்டேகாலுக்கு வீட்டுல இருப்பான். இப்ப மணி ஒண்ணரை ஆச்சு. இன்னும் வீட்டுக்கு வரலயே ஆச்சி”

     ”நான் இங்கயேதாம்மா உக்காந்திருக்கேன்.  காலையில நீ புள்ளையை இஸ்கூலுக்கு கூட்டிப் போறப்போ பாத்தேன்.  புள்ளையை இப்ப பார்க்கலயே.  நீ பதறாதம்மா.  முதல்ல இஸ்கூலுக்குப் போய் பாரு” என்றாள் பெட்டிக்கடை ஆச்சி.

            “சரிங்க ஆச்சி” 

     ’இன்னிக்கு சனிக்கிழமை.  நாளைக்கு ஸ்கூல் வேற லீவு.  ஸ்கூல மூடறதுக்கு முன்னாடி போய் சேரணுமே” என்று புலம்பிக் கொண்டே ஸ்கூல் இருக்கும் திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். 

பள்ளி வாட்ச்மேன் கேட்டைப் பூட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேகமாக ஓடினாள். “வாட்ச்மேன், கேட்டை பூட்டாதீங்க.  என் பையனைக் காணும்.  இன்னும் வீட்டுக்கு வரல” என்று கத்திக்கொண்டே ஓடினாள்.

“எல்லா புள்ளைங்களும் வூட்டுக்குப் போயிட்டாங்களேம்மா”

“இல்ல வாட்ச்மேன் தயவு செஞ்சு உள்ள போய் பாப்போம் வாங்க”  என்று சொல்லிக் கொண்டே கேட்டைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடினாள்.

“நான் தான் சொன்னேனே அம்மா.  பாருங்க ஸ்கூல்ல ஒரு ரூம்புலயும் ஒரு புள்ள கூட இல்ல. வீட்டுக்குப் போய் புள்ள வந்துட்டானான்னு பாருங்க.  நானும் அக்கம்பக்கத்துல தேடறேன்.  கவலைப் படாம போங்கம்மா.  கண்டிப்பா பையன் கிடைச்சுடுவாம்மா”.

மறுபடியும் வீட்டிற்கு வந்து பையன் வராததைக் கண்டு பதறி, பயந்து கணவனுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.

“எல்லா இடத்துலயும் தேடிப் பாத்தியா?”

“பாத்துட்டேங்க.  ஸ்கூலுக்குப் போய் அங்கயும் பாத்துட்டேங்க.  எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. ஏற்கனவே ஒண்ணை பறி கொடுத்துட்டோம்”“சரி, நீ கவலைப் படாத நான் போய் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு வரேன்.   நம்ம பையன் பத்திரமா இருப்பான்”.  மனைவிக்கு ஆறுதல் சொல்லிவிட்டானே தவிர அவனுக்கு கையும் ஓடவில்லை,  காலும் ஓடவில்லை.  மனம் திக், திக்கென்று அடித்துக்கொண்டது.
* * *

     ”என் செல்போன் அடிக்குது அதை எடு”.

     ”என்ன ஏட்டு, என்ன விஷயம்.”

     ”சார் ஒரு மிஸ்ஸிங் கேஸ். ஒரு சின்ன பையனை, எட்டு வயசு இருக்குமாம், காணுமாம் சார்”.

     “சரி நான் இதோ கிளம்பி வரேன்.”

     ”ஏங்க சாப்பாடு”

     ”வந்து சாப்பிடறேன்.  ஒரு எட்டு வயசு பையன காணுமாம்”

     ”ஐயய்யோ!. இந்தாங்க இந்த மோரை குடிச்சுட்டு கிளம்புங்க.”

     ”நான் வரணும்ன்னு காத்திருக்காம, தயவு செஞ்சு நீ சாப்பிட்டுடு”

     ”சரிங்க”.
* * *
     ”நீங்க மார்க்கெட்ல அரிசிக் கடை வெச்சிருக்கீங்க இல்ல.  உங்க பையனதான் காணுமா?  உங்க பெயர் என்ன? கொஞ்சம் விவரமா சொல்லுங்க சார்.  உங்களுக்கு யாராவது விரோதிங்க இருக்காங்களா?”

     ”அப்படியெல்லாம் யாருமே கிடையாது சார்”

     ”பையனை திட்டினீங்களா? அடிச்சீங்களா?”

    
”அப்படி எல்லாம் வழக்கமே இல்லீங்க சார்”.

     ”பையனோட போட்டோ கொண்டு வந்திருக்கீங்களா?

”இல்ல சார்.  நான் கடையில இருந்து நேர வரேன். வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வரேன் சார்.

“ஏட்டு, சாரோட போன் நம்பரை வாங்கிக்கிட்டீங்களா?”

     ”இருக்கு சார்”

     ”சரி நீங்க தைரியமா வீட்டுக்குப் போங்க சார், நல்லதே நடக்கும் கவலைப் படாதீங்க.  ”
* * *
     ”வாங்க ஏட்டு. நாமளும் போய் தேடுவோம்”

     ”சரி சார். சின்ன ஊர்தான சார்.  ஈசியா கண்டு பிடிச்சுடலாம் சார்”

     ”ஏன் ஏட்டு, அரிசிக் கடைக்காரர் வசதியானவரா?  யாராவது குழந்தையை கடத்தி பணம் கிணம் பறிக்கப் பாக்கறாங்களா? சமீபத்துல இங்க அந்த மாதிரி எதுவும் நடக்கல.  ஏன் ஏட்டு, நீங்க இந்த ஸ்டேஷன்ல ரொம்ப வருஷமா இருக்கீங்க இல்ல.  நம்ப ஏரியாவுல அந்த மாதிரி ஏதாவது குழந்தையை கடத்தி இருக்காங்களா?”

     ”சார் அந்த மாதிரி எல்லாம் எதுவும் எனக்குத் தெரிஞ்சு நடந்ததே இல்ல சார்”

     ”அப்ப உங்களுக்குத் தெரியாம எதாவது நடந்திருக்குமா?”

     ”என்ன சார், ஒரு பேச்சுக்குச் சொன்னா..”

     ”பாவம்யா அந்த ஆள். முகமே சரியில்ல.  கடவுளே அந்த குழந்தை கிடைக்கணும்” என்று வாய் விட்டு இன்ஸ்பெக்டர் சொன்னதைக் கேட்டு ஏட்டு “இந்த இன்ஸ்பெக்டர் தேடிக் கண்டு பிடிக்கறதை விட்டுட்டு கடவுள் கிட்ட மனு போடறாரே” என்று நினைத்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்.

     ”வணக்கம் சார், வணக்கம் சார்”

     ”என்ன மேஸ்திரி, என்ன இன்னிக்கு வேலை நடக்கலியா?”

     ”இல்ல ஏட்டு சார், காலேல சித்தாள் ஒருத்தன் செத்து போய்ட்டான் சார். அதான் லீவு விட்டுட்டேன்.”

     ”ஓ. சரி மேஸ்திரி.  அரிசி கடைக்காரர் பையனைக் காணுமாம்.  அதான் தேடிக்கிட்டு போறோம். வாங்க சார் நாம   போகலாம்”.

* * *
     ”என்ன ஏட்டு, நாமளும் எல்லா இடத்துலயும் தேடிப் பார்த்துட்டோம்.   இப்ப அவர் வந்தா என்ன பதில் சொல்றது,   சரி, போன் அடிக்குது, என்னன்னு போய்ப் பாருங்க”.

     ”சார், சார், மேஸ்திரி போன்ல பேசறார் சார்.  அந்த பாதி கட்டின கட்டிடத்துக்கு பின்னாடி ஒரு குழந்தை தூங்கிக்கிட்டிருக்காம்.  வாங்க சார் போய் பார்க்கலாம்”

     மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டு எழுந்து உட்கார்ந்த பையன், இன்ஸ்பெக்டர், ஏட்டு, மேஸ்திரி மூவரையும் பார்த்து மலங்க மலங்க விழித்தான். “

            “சார், சார் எனக்கு தெரியும் சார்.  நான் பாத்துருக்கேன் சார்.  இது நாம தேடற பையன் தான் சார்.”

     அருகில் சென்று அந்தப் பையனைத் தூக்கிக் கொண்டு, “என்ன கண்ணா, ஏன் இங்க வந்து இப்படி தூங்கிட்டிருந்த” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

     ”அதுவா அது வந்து, அங்கிள் அங்க பாருங்க.  என்னோட பையைப் போட்டு மூடி வெச்சிருக்கேன்”

     ”என்ன ஏட்டு, பையன் சம்பந்தமில்லாம பேசறான்.  எதைக் கண்ணு மூடி வெச்சிருக்க?”

     ”அது, வந்து, முன்னாடி தங்கச்சி பாப்பா விழுந்து செத்துப் போச்சு இல்ல.  அப்பறம் போன வாரம் டீவில கூட காமிச்சாங்களே.  HAPPY BIRTHDAY அன்னிக்கு ஒரு பாப்பா விழுந்து செத்துப் போச்சே. அதான் வேற எந்தப் பாப்பாவும் அப்டி விழுந்து செத்துப் போகக் கூடாதுன்னு. என்னோட பைய போட்டு மூடி வெச்சுட்டு இங்கயே உக்காந்துட்டிருந்தேன்.  அம்மா குடுத்த பிஸ்கெட்ட எல்லாம் சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன்”.

     ”சே, ஒரு சின்ன குழந்தைக்கு இருக்கற பொறுப்பு கூட பெரியவங்க நமக்கு இல்ல.  யோவ் மேஸ்திரி, கேட்டியாய்யா? என்னய்யா இது. டீவில காட்டறான், பேப்பர்ல போடறான். எவ்வளவு சொன்னலும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?  ஏதோ உன் நல்ல நேரம்.  எந்த அசம்பாவிதமும் நடக்கல.  இந்த மாதிரி இனிமே நடந்தா நீ கம்பிதான் எண்ண வேண்டி இருக்கும்.  ஜாக்கிரதை”

     ”சார், சார், இனிமே கவனமா இருக்கேன் சார். மன்னிச்சுடுங்க சார்”.

     ”என் பையன் கிடைச்சுட்டானா?  சார் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்”.

     ”கடவுளோட அருள்.  அவருக்கு நன்றி சொல்லுங்க.  ஒரு குழந்தையோட அருமை என்னை மாதிரி குழந்தையே இல்லாத ஆளுக்குதான் சார் தெரியும். எனக்கும் கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆச்சு.

     நீங்க ஏற்கனவே ஒரு குழந்தையை பறிகொடுத்துட்டீங்க போல இருக்கு.  ஜாக்கிரதை சார்”.

     ”அங்கிள், டாட்டா அங்கிள்”.

     “டாட்டா கண்ணு”.








Sunday, 2 December 2012

பார்வை

IN AND OUT CHENNAI FORTNIGHTLY DEC 1 - 15, 2012 இதழில் வெளியான என் சிறுகதை - பார்வை.  இங்கு மீண்டும் உங்களுக்காக பதிகிறேன்.

”விதேஷ், ஒனக்கு எவ்வளவு தடவை படிச்சுப் படிச்சு சொன்னேன், உங்கம்மாவுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் குடுக்காதன்னு.  சொன்னா கேட்டியா? ‘நான் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப மிஸ் பண்ணறேன்.  பல ஆயிரக்கணக்கான மைல் தூரத்தில் இருக்கேன்.  ஸ்கைப்லயாவது உங்க ரெண்டு பேரையும் பார்த்து பேசுவேன்’  அப்டி, இப்டின்னு சொன்ன. போறாத்துக்கு பேஸ்புக், சாட், அது, இதுன்னு உங்கம்மாவுக்கு சொல்லிக்குடுத்துட்டு போயிட்ட. இப்ப என்ன ஆச்சு?  எப்பப்பாரு இண்டர்நெட், பேஸ்புக்.  என்னமோ கதை எழுதறேன், கவிதை எழுதறேன்னு கூத்தடிக்கறா.  என்னமோ இந்த சமுதாயத்தை இவ ஒருத்தியாவே திருத்திடற மாதிரி கட்டுரையா எழுதித் தள்ளிண்டிருக்கா.  எங்க ஆபீஸ்ல எல்லாரும் கிண்டலடிக்கறா.  என்ன சார், மேடம் எப்பவும் ஆன்லயன்லயே இருக்காங்களேன்னு.  எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கல.  இன்னி தேதிக்கு பேப்பர்ல SOCIAL NETWORK களப் பத்தி எவ்வளவோ போடறான்.  உலகத்துல என்னென்னமோ நடக்குது.   சொல்லவே நா கூசறது.  உங்கம்மா நல்லவளா இருக்கலாம்.  ஆனா மத்தவாள்ளாம் நல்லவாளா இருப்பான்னு சொல்ல முடியாது.  எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ? ஒண்ணு மட்டும் சொல்றேன்.  நாளைக்கு அந்த மாதிரி ஏதாவது பிரச்னைன்னு வந்ததுன்னு வெச்சுக்கோ நான் வந்து நிக்கவும் மாட்டேன்.  காப்பாத்தவும் மாட்டேன்.  இப்பவே சொல்லிட்டேன்.  நீயாச்சு, உங்கம்மாவாச்சு.” கோடை மழை போல பட, படவென்று பேசிவிட்டு போனை வைத்தார் விதேஷின் அப்பா.

     ஒன்றுமே புரியவில்லை விதேஷுக்கு.  அப்பா என்ன பேசினார் என்பது புரியவே அவனுக்கு ஐந்து நிமிடம் ஆயிற்று.   “58 வயசுல அம்மாவுக்கு என்ன பிரச்னை வரும்.   அப்பதான் பளபளவென்று தேய்த்து சந்தனம், குங்குமம் வைத்து ஏற்றி வைத்த குத்து விளக்கு போல் பளிச்சென்று இருப்பாள் அம்மா.  அம்மா உடை உடுத்தும் விதத்தில் கூட ஒரு கண்ணியம்தான் தெரியும். எப்போதும் பார்த்தவர்கள் கையெடுத்துக் கும்பிடுவது போல்தான் இருப்பாள்.  அவளைப் பார்த்து தப்பான எண்ணம் கூட யாருக்காவது வருமா?  30 வருட தாம்பத்தியத்துக்குப்பிறகு எப்டி இப்டி எல்லாம் எண்ணத் தோணறது அப்பாவுக்கு. என்ன மனுஷன் இவர்.  என்ன கொடுமை இது?  அவர் குணம் அவ்வளவுதான்னு இந்த விஷயத்துல பேசாம இருக்கக்கூட முடியலயே. அம்மா ஒரு அன்னப்பறவை மாதிரி.  வாழ்க்கையில் எல்லாவற்றையும் அம்மா பாசிடிவாகவே எடுத்துக் கொள்வாள்.  நான் அம்மாவைப் புரிந்து கொண்டது கூட இவர் புரிந்து கொள்ளவில்லையா? என்ன கொடுமை இது!”  ஆத்திரமும், கோபமும் முட்டிக்கொண்டு வந்தது விதேஷுக்கு.

     ’பெரிய குடும்பத்துல மூத்த மாட்டுப்பெண்ணா வாக்கப்பட்டு அப்பா சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி, ஏன் நல்ல கவர்மெண்ட் வேலையைக்கூட விட்டுட்டு வீடே கதின்னு கிடந்தா அம்மா. சித்தப்பா, அத்தைக்கெல்லாம் கல்யாணம் ஆகி, தாத்தா, பாட்டி காலமும் ஆகி, இப்பதான் 2,3 வருஷமா அம்மா கொஞ்சம் ப்ரீயா இருக்கா.  இவ்வளவு வருஷம் கழிச்சு இப்பதான் தனக்காகவும் கொஞ்சம் வாழ்ணும்கற எண்ணம் அம்மாவுக்கு வந்திருக்கு.  அது தப்பா?  
     ரெண்டு மூணு தடவை அப்பாவோட ஆபீஸ்ல நடந்த போட்டிகள்ல கலந்துண்டு அம்மா நிறைய பரிசா வாங்கிக் குமிச்சா.  அதுகூட பொறுக்க முடியாம அதுக்கப்பறம் அம்மாவை தன் ஆபீஸ் பக்கம் அழைச்சுண்டு போறதயே நிறுத்திட்டார் அப்பா.  அம்மா ரொம்ப நன்னா பாடுவா.  ஆனா அப்பா வீட்ல எல்லாரும் அம்மாவோட வாய மூடறதுலதான் குறியா இருந்தா.  அம்மாவுக்கு பல மொழிகள் தெரியும்.  அப்பா வீட்ல யாருக்கும் தமிழைத் தவிர எந்த மொழியும் தெரியாததால, அம்மாவை வேற எந்த நிகழ்ச்சியையும் தொலைக்காட்சியில பாக்க விடமாட்டாங்க.

     அம்மா, கோலம் போட்டா இன்னிக்கெல்லாம் பாத்துண்டிருக்கலாம்.’  சின்ன வயசுல இருந்தே விதேஷ் தன் தாயின் செயல்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ரசித்து, வியந்து வளர்ந்திருக்கான்.   விவரம் தெரிந்த வயதில் தான் விதேஷுக்குப் புரிந்தது, அம்மா தன்னுடைய எத்தனை ஆசைகளையும், ஆற்றல்களையும் ஆழக்குழி தோண்டி அழுந்தப் புதைத்திருக்கிறாள் என்று. ஆனால் என்ன கஷ்டம் வந்தாலும் அதை சிரித்தபடி சமாளிக்கும் அம்மாதான் அவனுக்கு முன் மாதிரி. 
* * *

     வேலைப் பளுவால் இதையெல்லாம் விதேஷ் மறந்திருந்த போது அவன் அம்மாவிடமிருந்து அவனுக்கு போன் வந்தது.  “விதேஷ், அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு.   அப்பாவுக்கு நாலு, அஞ்சு ப்ளாக் இருக்காம்.  கண்டிப்பா ஆபரேஷன்  செய்யணுமாம்.  இன்னும் 10 நாளில் ஆபரேஷன். அது வரைக்கும் மருந்தெல்லாம் குடுத்திருக்கா. உன்னால முடிஞ்சா வா. இல்லைன்னா நான் பார்த்துக்கறேன்”.

     ‘இதுதான் அம்மா. எதையும், எல்லாத்தையும் சமாளிப்பா’.  “இல்லம்மா, ஏற்கனவே நானே அங்க வர ப்ளான் பண்ணி இருந்தேன்.  சர்ப்ரைசா இருக்கட்டும்.  கிளம்பறச்சே சொல்லலாம்ன்னு நினைச்சேன்.  ஆபரேஷனுக்கு முன்னாடி கண்டிப்பா வந்துடுவேன்மா”

             ”சரி விதேஷ்.  நான் மறுபடியும் போன் செய்யறேன்.”
* * *
     ”இன்னும் ஒரு 4, 5 மணி நேரத்தில ஊருக்குப் போய் சேர்ந்துடலாம்.   சே.  என்ன ஒரு மனுஷன் நான்.  அப்பாவோட ப்ளட் க்ரூப் ரொம்ப அபூர்வமானதாச்சே. ஆபரேஷனுக்கு ப்ளட் ஏதாவது ஏற்பாடு பண்ணணுமா என்ன ஏதுன்னு அம்மாகிட்ட கேக்கவே இல்லையே.  ஏர்போர்ட்ல இறங்கினதும் முதல்ல அம்மாக்கு போன் செய்யணும்”.
* * *
     ”டேய் தினேஷ், நீ எங்கடா வந்த”

     ”நேத்து தாண்டா எங்க ஆபீஸ் ப்ரெண்ட்ஸெல்லாம் சொன்னாங்க. ஒரு ஆபரேஷனுக்கு இரத்தம் வேணும்ன்னு.  இங்க வந்து பாத்தா உங்க அப்பாவுக்கு ஆபரேஷன்.  நீயும் இன்னிக்கு வந்துடுவேன்னு அம்மா சொன்னாங்க.   நான் காலையிலயே வந்துட்டேன். நான் ஒரு வாரம் லீவு எடுத்திருக்கேன்.  உன் கூடவே இருக்கேண்டா.  இப்ப என் கூட எங்க ஆபீஸ்ல வேலை செய்யறவங்க எல்லாம் வந்துடுவாங்க.   அப்பாவோட இரத்தம் அபூர்வமா இருந்தாலும் எங்க ஆபீஸ்ல இருக்கற 2,3 பேருக்கு அதே க்ரூப்தான்.  ரொம்ப ஆச்சரியமான விஷயம்.  விதேஷ், இதுல ஒரு ஜோக் என்னன்னா என் நண்பர்கள் எல்லாம் அம்மாவோட பேஸ்புக் நண்பர்களாம்.  இதோ வந்துட்டாங்க.  வா, உனக்கு அறிமுகப் படுத்தறேன்.”

          வேகமாக வந்த திலீப் என்ற பையன் வடநாட்டு பாணியில் அம்மாவின் காலைத் தொட்டு ஒற்றிக் கொண்டான்.   மற்றவர்கள் எல்லாம், அம்மா, அம்மா என்று ஏதோ ரொம்ப காலம் பழகியவர்கள் போல் அம்மாவிடம் பேசினார்கள்.  அத்துடன் அப்பாவையும் அருகில் வந்து, ‘அப்பா, எப்படி இருக்கிறீர்கள்” என்று உரிமையுடன் விசாரித்தார்கள்.   சொல்லி வைத்தது போல் அனைவரும் ‘கவலையே படாதீங்க அம்மா.  நாங்க எல்லாரும் இருக்கோம்’ என்றார்கள்.

     சட்டென்று தலையைத் திருப்பி அப்பாவைப் பார்த்தான் விதேஷ்.  குறு குறுவென்று பார்த்த மகனின் பார்வையின் தீட்சண்யம் தாங்காமல் தந்தை தலை குனிந்தார் விதேஷின் அப்பா.
      

Thursday, 29 November 2012

ஐந்தறிவா, ஆறறிவா?





’புதிய தலைமுறை’ 29 நவம்பர் 2012 இதழில் ‘வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி’ என்ற தலைப்பில் வெளிவந்த என் கட்டுரை.

புதிய தலைமுறை பத்திரிகைக்கு என் மனமார்ந்த நன்றி.
உங்களுக்கு படிக்க சிரமமாக இருக்கும் என்பதால் மீண்டும் கட்டுரையை இங்கு பதிகிறேன்.






ஒரு நாள் காலையில் பரங்கி மலை ரயில் நிலையத்தில் வழக்கம் போல் அலுவலகம் செல்ல மின்சார ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்த போது, எதேச்சையாக நிமிர்ந்து மேலே பார்த்தேன். நடைமேடையின் மேற் கூரையில் உள்ள கம்பங்களுக்கு இடையே அழகான ஒரு கூடு.
காசு வேண்டாம், பணம் வேண்டாம், வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டாம், வங்கிக் கடன் வேண்டாம், செங்கல் வேண்டாம், சிமென்ட் வேண்டாம், மனைவி கிட்ட இருந்து “போயும் போயும் இங்க வந்து வீடு கட்டி இருக்கீங்களே, ரயில் சத்தத்தில தூங்க முடியலையேன்னு” திட்டும் வாங்க வேண்டாம். (வீட்டைக் கட்டினதே அம்மா காக்காதானேன்னு சொல்லறீங்களா, இருக்கலாம்). கொஞ்சம் துடைப்பக் குச்சிகள், தேங்காய் நார், கம்பிகள் இத்யாதி இத்யாதி - அழகான வீடு தயாராகிவிட்டது. வீட்டுக்குள் ரொம்பவும் மெத்த்தென்று இருக்குமோ. அம்மாவோட பழைய பருத்திப் புடைவையில் நம்ப வீட்டுக் குழந்தைகள் படுத்துத் தூங்குமே அந்த மாதிரி. எனக்கு ஆசைதான் கூட்டுக்குள்ள எட்டி பார்க்க. அவ்வளவு உசரத்தில நான் எங்க ஏறி பார்க்கறது. தினமும் காலையிலும், மாலையிலும் கூட்டை கவனித்துக் கொண்டிருந்தேன். சிறிது நாட்களில் நான்கு ரோஸ் நிற அலகுகள் மட்டும் வெளியே தெரிய ஆரம்பித்த்ன. அது என்ன அதிசயம். இந்தக் குஞ்சுகளுக்கு எப்போதுமே அகோரப் பசியாக இருக்குமா என்ன? ஆ, ஆ என்று திறந்த வாய் திறந்த படியே எனக்கு, எனக்கு என்று பறப்பது போல் இருந்தது. ஒருவேளை அம்மா பறந்து பறந்து கொண்டு வந்து ஊட்டும் தீனி போதவில்லையோ!. பின்ன என்ன நாலு வாய் (வயிறு) அல்லவா? அம்மா காக்காவும் நான் பார்க்கும் போதெல்லாம் சளைக்காமல் பறந்து போவதும் எதையோ மூக்கில் கொண்டு வந்து ஊட்டுவதுமாகவே இருந்தது.
சின்ன வயதில் அத்தையும் பாட்டியும் கல்சட்டியில் சாதம் பிசைந்து வைத்துக்கொண்டு நாம எல்லாம் சுற்றி உட்கார்ந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு கையில் வாங்கி சாப்பிடுவோமே அதுதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.
இன்னும் கொஞ்ச நாட்களில் நாலு முழு காக்கைக் குஞ்சுகளும் வெளியில் தெரிய ஆரம்பித்தன. ஆனால் அலகு மட்டும் இன்னும் ரோஸ் நிறத்தில்தான் இருந்தன. அது என்னவோ மந்திரத்திற்குக் கட்டுப் பட்டது போலவோ, அம்மா காக்கையின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட்து போலவோ என்னவோ நான்கு காக்கைக் குஞ்சுகளும் கூட்டிற்குள்ளேயே இருந்தன.
அதில் மூன்று காக்கைக் குஞ்சுகள் அடுத்த சில நாட்களில் கொஞ்சம் கூட்டைவிட்டு வெளியே தத்தித் த்த்தி வந்திருந்தன. ஒன்று மட்டும் கூட்டிற்குள்ளேயே இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் நான்கு குஞ்சுகளும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தித் தத்தி மேற் கூரையில் உள்ள கம்பங்களில் எல்லை மீறாமல், எல்லை தாண்டாமல் உட்கார ஆரம்பித்தன.
அதன் பிறகு இரண்டு நாள் அலுவலக விடுமுறை முடிந்து, அன்று பிளாட்பாரத்துக்கு வந்து, ஆவலாக மேற்கூரையில் காக்கைக் கூட்டைப் பார்த்தேன். அது வெறுமையாக இருந்த்து. அது சற்றே ஏமாற்றமாக இருந்தாலும் மனசுக்குள் இனம் புரியாத சந்தோஷமும் இருக்கவே செய்த்து. காக்கைகளுக்கு இறக்கை முளைத்துப் பறந்து வெளியில் செல்லத் தொடங்கியிருக்க வேண்டும். காக்கைகள் பறக்கும் பக்குவம் வரும்வரை மாய்ந்து மாய்ந்து இரை கொண்டு வந்தளித்த தாய்க்காகத்தின் முகம் நினைவில் வர நெகிழ்ச்சியாக இருந்தது.
யாரப்பா சொன்னது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஐந்தறிவென்று. எனக்கென்னவோ இவைகளுக்கு ஆறுக்கும் மேல் அறிவிருக்கும் என்று தோன்றுகிறது. ஏன்னா பெத்த குழந்தையை குப்பைத் தொட்டியிலும், அரசுத் தொட்டிலிலும், மருத்துவமனை வளாகத்திலும் விட்டுச் செல்லும் ஆறறிவு படைத்த சில பெண்களை விடவும் இந்த்த் தாய்ப்பறவைகள் உயர்ந்தவைதானே!
 

ஈழம் மலரும்

 IN AND OUT CHENNAI NOVEMBER 16 - 30 இதழில் வெளி வந்த என் கவிதை ‘ஈழம் மலரும்.  மீண்டும் இங்கு பதிவு செய்திருக்கிறேன்,  உங்களுக்காக.
ஈழம் மலரும்

மாலையிட்ட மணாளா உன்னை
மறு திங்கள் இழந்திட்டேன்
நெஞ்சில் பாய்ந்த குண்டு 
உன் உயிரைப் பறித்தாலும்
உதட்டுச் சிரிப்பைத்தான்
பறிக்க முடியவில்லையே.
உயிர் பிரியும் நேரத்தில்
என்னதான் நினைத்தாயோ?
என்னைத் தான் நினைத்தாயோ? நம்
மண்ணைத்தான் நினைத்தாயோ?

மங்கை என் முகம் உன் மனதில் பதியும் முன்னே
மண்ணைவிட்டு விண்ணை அடைய
என்னதான் தவறு செய்தாய்?
பொய், புனை சுருட்டு, கொலை, களவு
இல்லை, இல்லை, இல்லவே இல்லை
செய்ததொரு குற்றம் என்ன?
செய்த ஒரே ஒரு குற்றம்தான் என்ன?
மண்ணில் பிறந்ததுதானோ – இந்த
மண்ணில் பிறந்ததுதானோ?

நீ இல்லா உலகை விட்டுச் செல்ல
எனக்கு உரிமையும் இல்லை,
மனமும் இல்லை.
நினைவை சுமந்து நிற்கிறேன் – உன்
நினைவை சுமந்து நிற்கிறேன்.

மறு திங்கள் புரிந்தது
உன் நினைவை மட்டும் சுமக்கவில்லை
என் மணி வயிற்றில் நீ விட்டுச் சென்ற
கருவையும் சுமக்கிறேன் என்று
மகனோ மகளோ எதாக இருந்தாலும்
நம் மண்ணிற்குக் கிடைக்கப் போவது
ஒரு போராளி

ஐயிரண்டு திங்கள் சுமந்து
பெற்றெடுத்த உன் அருமை மகள்,
அன்பு மகள், ஆசை மகள், அழகு மகள்
கை வீசி, தளிர் நடை நடந்து,
மழலை மொழி பேசி,
பூப்பெய்தி உன் வழியில்
களம் சென்று நலம் துறந்து
பகைவர் உயிர் பறித்து
தன்னுயிர் நீத்தாள்.
உன்னுடன் இணைந்தாள்.

அன்று பத்துத் தலை அரக்கனை
அழிக்க ஒரு இராமன் வந்தான்

இன்று ஒத்தைத் தலை அரக்கர்களை
அழிக்க யார் வருவார்?

சுற்றமும், நட்பும் சூழ
குஞ்சும், குளுவானும்,
முதுமக்களும்
வழி மேல் விழி வைத்து
காத்திருக்கிறோம்,
செத்ததுபோக
மத்தவருக்காவது ஒருநாள்
ஈழம் மலரும் என்று –தமிழ்
ஈழம் மலரும் என்று

Tuesday, 6 November 2012

ஆண் பாவம்


“அம்மா, அம்மா நாளைக்கு ஒனக்கு லீவு தான. எங்கயாவது வெளில போலாமாம்மா?” என்று அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்த விமலாவைக்கேட்டான் மகேஷ்.

“என்ன மகேஷ், அம்மா இப்பதான் அலுவலகத்தில இருந்து உள்ள நுழையறாங்க. இப்பவே ஆரம்பிச்சுட்டயா?” என்று எதிர் கேள்வி கேட்டாள் வித்யா.

“போக்கா” என்றான் மகேஷ்.

“சரி சரி இதுக்காக ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க. நாளைக்கு சாயங்காலமா கண்டிப்பா எங்கயாவது போலாம்” என்றாள் விமலா.

“ஆனா ஒண்ணும்மா யார் வீட்டுக்கும் போக வேண்டாம்மா. வேற எங்கயாவது போலாம்மா” என்றாள் வித்யா. “ஆமாமாம் யார் வீட்டுக்கும் வேண்டாம்மா” என்றுஒத்து ஊதினான் மகேஷ் என்னவோ தெரிஞ்சமாதிரி.

”நீங்க ரெண்டு பேரும் வீட்டுப்பாடம் எல்லாம் எழுதி முடியுங்க. நான் போய் ராத்திரி சமையல முடிக்கறேன். நாளைக்கு எங்க போகலாம்ங்கறதை நீங்க ரெண்டு பேருமே முடிவு பண்ணுங்க. சரியா?” என்று சொல்லிவிட்டு புடவையை இழுத்து சொருகிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் விமலா. காலை அவசரத்தில் அப்படியே விட்டுச் சென்ற சமையலறையை நேர் செய்து வேலைக்காரி தேய்த்து பெரிய டப்பில் வைத்து விட்டுச் சென்றிருந்த பாத்திரங்களை எடுத்து அதனதன் இடத்தில் கவிழ்த்தாள்.
அப்படியே மனதில் நாளை செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியலிட்டாள். ”முதல்ல கொஞ்சம் லேட்டா எழுந்திருக்கணும். நாளை சனிக்கிழமை. இவர் மதியத்திற்கு சாப்பாடு கொண்டு போக மாட்டார். அதனால் காலை சிற்றுண்டி மட்டும்தானே. இவரை அலுவலகத்திற்குக் கிளப்பி விட்டுட்டு குழந்தைகளுக்கு எண்ணை தேச்சுவிட்டு, நானும் தேச்சுக்கணும். அப்புறம் குழந்தைகளுக்குப் பிடித்த சமையல் செய்யணும். மிளகாய்ப் பொடி, அரிசி மாவு அரைக்க மிஷினுக்குப் போகணும். ஆ, மறந்துட்டேனே. பசங்களுக்கு கஞ்சி மாவு தயார் பண்ணணும். போன தடவை வாங்கின கேழ்வரகுல ஒரே கல். இந்த தடவை பாத்து வாங்கணும். வனஜா ஏதோ ஒரு பிராண்ட் பேர் சொன்னாளே. ஒரு பாக்கெட்ல கோதுமை, கேழ்வரகு, புட்டரிசி இன்னும் கஞ்சிக்கு தேவையானது எல்லாம் இருக்கும்,சுத்தமா இருக்கும்ன்னு அதைப்பாத்து வாங்கணும். வாங்கி வறுத்து கஞ்சி மாவு அரைக்கணும். கோடை ஆரம்பிச்சாச்சு, பருத்தி சேலைக்கெல்லாம் கஞ்சி போட்டு தேய்க்கக் கொடுக்கணும்” யோசிக்க யோசிக்க விமலாவின் பட்டியல் அனுமார்வால் போல் நீண்டு கொண்டே போனது.

மடமடவென்று ஒரு சாதம், ரசம், கூட்டு வைத்து அப்பளம் பொரித்து இரவு சமையலை முடித்து சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைத்துவிட்டு, அடுப்படியைத் துடைத்து சுத்தம் செய்து, குளித்துமுடித்து விமலா வரவும் ராகவன் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது.

நான்கு பேரும் சாப்பிட்டதும் மகேஷ் தூங்கி விட வித்யா ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். விமலா படுக்கை அறைக்குள் வந்ததும் ராகவன், “விமலா, நாளைக்கு ரெண்டாவது சனிக்கிழமை. லீவு தானே. அம்மாவைப் பாத்துட்டு வரியா?” என்றான். விமலா காதில் விழாதது போல் பாவனை செய்துகொண்டு குழந்தைகள் மாடியிலிருந்து கொண்டுவந்து போட்டிருந்த காய்ந்த துணிகளை மடிக்கத் தொடங்கினாள்.

ராகவன், “விமலா உன்னைத்தான் கேக்கறேன். நாளைக்கு அம்மாவைப் பாத்துட்டு வரியா?” என்றான். வழக்கம் போல் சண்டை ஏதாவது வந்து விடுமோ என்று பயந்து இருவரையும் நிமிர்ந்து பார்த்த வித்யா மறுபடி எழுத ஆரம்பித்தாள்.

விமலா கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டு மெல்லிய குரலில் “இல்லீங்க, நிறைய வேலை இருக்கு. இன்னொரு நாள் போறேன்” என்றாள்.
ராகவன், “உன்னால மாசத்துக்கு ஒரு தடவை கூட மாமியாரைப் பாத்துட்டு வர முடியாதா? இதே உங்கம்மா உள்ளூர்ல இருந்தா போகாம இருப்பியா?” என்றான்.

விமலா, “இங்க பாருங்க எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. இப்ப பேசக்கூட தெம்பு இல்ல. படுத்தா தேவலாம் போல இருக்கு. நாளைக்கு கார்த்தால பேசிக்கலாம். தயவு செய்து கொஞ்சம் புரிஞ்சுக்கங்க” என்றாள், வித்யா எதிரில் பேச வேண்டாமே என்ற அர்த்தத்தில். புரிந்து கொள்பவனாக இருந்தால்தான் தேவலாமே.

மறுபடியும் ராகவன், “எனக்கு பதிலை சொல்லிவிட்டு நீ என்ன வேணா செய் என்றான்”

விமலா “ஏங்க. என்னங்க நியாயம் இது? நமக்கு கல்யாணம் ஆகி 18 வருஷம் ஆகுது. இது வரைக்கும் ஒரே ஒரு வாரம் உங்கம்மா நம்ப வீட்ல வந்து இருந்து நம்ப குழந்தைகளுக்கு ஏதாவது செஞ்சிருக்காங்கன்னு சொல்லுங்க. நம்ப கஷ்டத்துக்கு எப்பவாவது வந்திருக்காங்களா? கேட்டா நீ பாட்டுக்கு பையைத்தூக்கிண்டு வேலைக்குப் போயிடுவ நான் என்ன உன் வீட்டுக்கு காவலான்னு கேக்கறாங்க. ஏதோ இன்னொரு பையன் இருந்து அவங்க வீட்டில இருந்தாலும் பரவாயில்லை. எப்பவும் பொண்ணு வீட்டிலேயே இருக்காங்க. இத்தனைக்கும் உங்க தங்கச்சி வேலைக்குக் கூட போகல. நீங்க என்னடான்னா எதையும் புரிஞ்சுக்காம பேசறீங்க. எனக்கும் மனசுக்குள்ள எவ்வளவோ இருக்குங்க. நாம்ப என்ன திருட்டுக்கல்யாணமா செஞ்சுட்டு வந்தோம். இவங்க பாத்து வெச்சதுதானே. கல்யாணம் ஆகி வந்தநாள்லேந்து அரிசின்னு அள்ளவும் ஆள் இல்ல உமின்னு ஊதவும் ஆள் இல்லங்கற மாதிரி இருக்கோம்” என்றாள்.

ராகவன் “அதெல்லாம் பத்தி நீ பேச வேண்டாம். போக முடியுமா முடியாதா அதை மட்டும் சொல்லு” என்று கோபமாகக் கேட்டான்.

விமலா ”இங்க பாருங்க என் வேலையெல்லாம் முடிச்சுட்டு நேரம் இருந்தா போறேன். என் பக்கத்து நியாயத்தையும் கொஞ்சம் கேளுங்க. போன மாசம் இரண்டாவது சனிக்கிழமை அன்னிக்கு நீங்க எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லே போய்ப்பாருன்னு சொன்னதால ரெண்டு குழந்தைகளையும் இழுத்துண்டு ரெண்டு பஸ் ஏறி இறங்கிப் போனா உங்கம்மா மாப்பிள்ளைக்குப் புடிக்கும்னு வடாம் போட்டிட்டிருந்தாங்க. மாவடு, ஆவக்கா எல்லாம் போட்டிட்டிருந்தாங்க. இதைப் பாத்து எனக்கு பிபி ஏறினதுதான் மிச்சம். குழந்தைங்களுக்கு சாப்பிடக்கூட ஒண்ணும் கொடுக்கல அவங்க. அப்புறம் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப்போனேன் நான். இதைப்பாருங்க, இனிமே உங்க அம்மாவை பாக்கணும்ன்னா நீங்க அழைச்சிட்டுப்போங்க. உங்க கூட வரேன். நான் இனிமே தனியா எல்லாம் போய் அவங்கள் பாக்கறதா இல்ல. நம்ப குழந்தைகளுக்கு வேண்டியதை லீவு நாள்லயாவது நான் செய்து கொடுக்க வேண்டாமா?” என்று சொல்லிவிட்டு மடித்த துணிகளை எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

பதில் பேச முடியாமல் ராகவன் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தான்.
வித்யா அம்மாவின் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டு மெதுவாக, “ஏம்மா அப்பா இப்படி இருக்கார். எப்பப்பாரு உன்னை ஏதாவது சொல்லிண்டிருக்காரே”

விமலா ராகவன் தூங்கி விட்டான் என்று நினைத்துக் கொண்டு “அதுவா. அது ஒண்ணும் இல்ல வித்து. அப்பாவும் பாவம்தான். வெளியில போகும்போது உங்க அத்தை வீட்டுக்குப் போய் பாட்டிய பாத்திருப்பாரு. அவங்க என்னடா ஒம் பொண்டாட்டிக்கு என்னை வந்து பாக்கக்கூட முடியாதா, மரியாதை இல்லயா அப்படி இப்டின்னு ஏதாவது சொல்லி இருப்பாங்க. பாவம் அவர் என்ன பண்ணுவார். அங்க வாங்கி இங்க குடுக்கறார். நீ இதெல்லாம் காதில போட்டுக்காத. இந்த வருஷம் பொதுத் தேர்வில நல்ல மதிப் பெண் எடுக்கணும். அடுத்த வருஷம் நல்ல காலேஜ்ல சேரணும் இல்லயா?” என்றாள்.

விமலாவின் பேச்சில் உள்ள உண்மை ஒரு பக்கம் ராகவனை சுட்டாலும், “நல்ல வேளை மனைவியாவது நம்மைப் புரிந்து கொண்டிருக்கிறாளே” என்ற திருப்தியுடன் தூங்க ஆரம்பித்தான்.

கோடைத் திருவிழா


ராமுவின் கையில் மளிகை சாமான் பட்டியலைத் திணித்த வனஜா, ”நீங்க அலுவலகத்துக்குப் போகற வழியில இத மளிகைக் கடையில குடுத்துட்டு இன்னிக்கே சாமானை கொண்டு வந்து போட்டுடச் சொல்லிடுங்கோ, ஏன்னா மாசி மாசம் முடியறதுக்குள்ளயே வடாம் போட்டு முடிச்சாதான் சரியா இருக்கும்” என்றாள்.

அந்தப் பட்டியலைப் பார்த்த ராமு கிண்டலா, ”என்ன வனஜா, ஜவ்வரிசி 10 கிலோன்னு போட்டிருக்கியே? ஏதாவது மகளிர் சுய உதவிக்குழுவில சேர்ந்து வடாம், வத்தல் போட்டு வியாபாரம் பண்ணப்போறியா?” என்று கேட்டான்.

"நன்னாயிருக்கு. ஒரு வருஷத்துக்குக் காணறா மாதிரி வடாம், வத்தல், ஊறுகாய் எல்லாம் போட்டு வெச்சுக்க வேண்டாமா? உங்க அக்கா, தங்கைகள் நாலு பேருக்கும் குடுக்க வேண்டாமா? மிளகாய், பெருங்காயம்ன்னு ஒண்ணொண்ணா எதுக்குன்னு கேக்காதீங்கோ” என்று நொடித்தாள் வனஜா.

ராமுவுக்குத் தெரிந்து வனஜா ஒவ்வொரு வருடமும் நாத்தனார்களுக்கு சின்ன கவரில் வடாமும், ஸ்பூன் கூட உள்ளே போகாத சின்ன பாட்டிலில் மாவடுவும் போட்டு, “நான் கொஞ்சம்தான் வடாமும், மாவடுவும் போட்டேன். வீட்டுப்பொண்கள் சந்தோஷமா இருந்தாதான் வீட்டுக்கு வந்த பொண்களும் சந்தோஷமா இருப்பான்னு எங்கம்மா சொல்லுவா. ஏதோ பொன் வைக்கற இடத்தில பூ வைக்கிற மாதிரிதான்”னு சொல்லித்தான் கேட்டிருக்கான்.
ஆனா பிறந்த வீட்டுக்கு மட்டும் பெரிய பை நிறைய போட்டுக்கொடுப்பாள். அதற்கு வக்கணையா விளக்கமும் கொடுப்பாள். “எங்கம்மா பாவம். என்னோட ரெண்டு தம்பி பொண்டாட்டிகளும் வேலைக்குப் போயிடறா. அவா குழந்தேள கட்டி மேய்க்கணும். வயசான காலத்துல நாலு வால் குழந்தைகளை சமாளிச்சுண்டு வடாம் எல்லாம் போட முடியுமா? அதனாலதான் எங்கம்மாவுக்குக் கொஞ்சம் கூட கொடுத்தேன்”னு சொல்வாள்.

"அது சரி வனஜா. அது என்ன லெமன் சால்ட்” என்று கேட்டான் ராமு.

"அதுவா நாம என்ன ஹார்ட் ஆப் தி சிடிலயா வீடு கட்டியிருக்கோம்.
ஊர்க்கோடியில வீட்டைக் கட்டிட்டு ஒரு அந்த அவசரத்துக்குக் கூட தேவையானதை வாங்க முடியறதில்ல. போன தடவை இருபது எலுமிச்சம்பழம் வாங்கிப்போட்டு கூட உங்க அக்கா ‘என்ன வனஜா வடாத்துக்கு எலுமிச்சம்பழமே புழிய மாட்டியா’ ன்னு கேட்டா. எலுமிச்சம்பழத்துக்குப் பதிலாதான் லெமன் சால்ட். இது வெல கம்மி. உங்களுக்கு பணத்தை மிச்சம் பண்ணித்தான் குடுத்திருக்கேன்.” என்றாள் வனஜா.

எந்தப் பேச்சையுமே உங்கக்கா, உங்கம்மா என்றுதான் முடிப்பாள் வனஜா. ஒரு நாளைக்கு பத்து தடவையாவது ஊர்க்கோடியில வீட்டைக்கட்டியிருக்கேளேன்னு ராமுவை இடிச்சுக்காட்டுவா. அப்படி வீட்டைக்கட்டினதுக்கு வனஜா சந்தோஷப் படற ஒரே விஷயம் மாமியார் கமலத்தை கூட வெச்சுக்க முடியாததுக்குத்தான். நிரந்தர சர்க்கரை நோயாளியான கமலம் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டி இருந்ததால் கோடம்பாக்கத்தில் இருக்கும் தன் மூத்த பெண் வீட்டிலேயே தங்கி விட்டாள். நல்லவேளையாக கமலம் தன் ஒரே தம்பிக்கே தன் மூத்த பெண்ணைக்கொடுத்திருந்ததால் ராமுவுக்கு அந்த விதத்தில் எந்த பிரச்னையும் இல்லை.

மாமா மிகவும் நல்லவர். ’நீ கவலைப்படாதேடா ராமு, எங்கக்காவை நான் பாத்துக்கறேன்’ என்பார். கமலமும் எதையும் பாராட்ட மாட்டாள். ஆனால் ராமுவுக்குத்தான் ஒரே மகனாக இருந்தும் அம்மாவைத் தன் கூட வைத்துக்கொள்ள முடிவில்லையே என்று வருத்தம். அதையும், வனஜா அழகாக மாமியாரிடம், ’அம்மா நீங்க ரொம்ப குடுத்து வெச்சிருக்கேள். இன்னும் பிறந்தாத்திலேயே இருக்கேளே’ என்பாள்.

இதற்குள் ராமுவின் பெண் வித்யா வந்து, “ஏம்மா, போன வருஷம் போட்ட வடாமே டப்பால நிறைய மிச்சம் இருக்கே. அப்புறம் ஏம்மா திரும்பியும் போடற. அப்பறம் கைவலி, கால் வலின்னு புலம்புவ” என்றாள். அவள் கவலை அவளுக்கு.

வனஜா மொட்டை மாடியில் போய் உட்கார்ந்துகொண்டு ‘வித்யா தண்ணி கொண்டுவா, ஒரு கரண்டி கொண்டுவா, அதைக்கொண்டுவா, இதைக்கொண்டுவா’ன்னு நச்சரிப்பா. போறாத்துக்கு வடாத்தை காக்கா கொத்தாம காவல் வேற இருக்கணும். இவ செய்யற அலம்பல் தாங்காம ராமுவின் பையன் சுரேஷ் நண்பர்களுடன் படிக்கப்போகிறேன் என்று கம்பி நீட்டி விடுவான்.

“மிச்சம் இருந்ததெல்லாம் தூள் வடாம்தான். கொஞ்சூண்டுதான் இருந்துது. கார்த்தால நம்ப கண்ணம்மாவுக்குக் குடுத்துட்டேன். அவளுக்கும்தான் பாவம் யார் வடாம் போட்டுக்குடுக்கப்போறா?” என்றாள் வனஜா.
"கொஞ்சூண்டா. கார்த்தால தோட்டத்துல செடிக்கு தண்ணி ஊத்திண்டிருந்தப்ப இதென்ன வேலைக்காரி கண்ணம்மா கையில இவ்வளவு பெரிய பை. பையில என்னதான் இருக்கும்னு யோசிச்சேனே. வடாம்தானா? அது சரி. இதுக்கு எண்ணெய் வாங்க கண்ணம்மாக்கு நீ குடுக்கற சம்பளம் போதாதே’ன்னு மனசுக்குள்ள நினைத்தான் ராமு. பின்ன வெளியே சொல்ல முடியுமா? இல்ல வனஜாவை கேக்கத்தான் முடியுமா?

ஒரு வாரம் வடாம் போடற வரைக்கும் வீடே அல்லோல கல்லோலப்பட்டுப் போயிடுத்து. தினமும் கார்த்தால ரசம், ராத்திரி மோர் சாதம். கேட்டா எப்பவும் போல ‘நான் என்ன பண்ணறது? ஒண்டியா எல்லா வேலையும் நானே செய்ய வேண்டி இருக்கு. ஒரு ஒருவாரம் பொறுத்துக்க முடியாதா? எப்பவும் தினுசு தினுசா சாப்டுண்டுதானே இருக்கோம்’ன்னு நீட்டி முழக்குவா. தேவையா இதெல்லாம். ராமு வாயே திறக்காம போட்டதை சாப்பிட்டுப் போயிண்டிருந்தான் எப்பவும் போல.

ஒரு வழியா வடாமெல்லாம் போட்டு முடிச்சு பத்துபடி டின்னுல பத்திரப்படுத்தி வெச்சா வனஜா. இன்னிக்காவது நல்ல சாப்பாடு கிடைக்குமா என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் ராமு.

வனஜா யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். “ஆமாமாம். அதெல்லாம் ரொம்ப சுலபம்தான். 10 கிலோ ஜவ்வரிசி வாங்கினேன். வடாம் போட்ட சிரமமே தெரியல. நிமிஷமா போட்டுட்டேன். ஆவக்கா, மாவடு எல்லாம் கூட போட்டுட்டேன். இதெல்லாம் கடையில வாங்கினா கட்டுப்படியாகுமா? அதோட எங்க வீட்டு நாக்கு நீண்ட தேவதைகளுக்கு கடையில வாங்கினா புடிக்காதே. அடுத்த வருஷம் இன்னும் நிறைய போடலாம்ன்னு இருக்கேன்” கணவன் வந்ததைக்கூட கவனிக்காமல் தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்.

"ஆஹா என்னமோ தினமும் இவ பஞ்சபட்ச பரமான்னம் செஞ்சு போட்டு நாங்க வரிஞ்சு கட்டிண்டு சாப்பிடற மாதிரிதான் பேச்செல்லாம்’. இது ராமுவின் எண்ண ஓட்டம்.

"சரி நாழியாயிடுத்து. எங்காத்துக்காரர் வந்துடுவார். அப்புறமா பேசறேன் உமா. நானே போன் பண்ணறேன். உங்கிட்ட மட்டும்தான் பேசி இருக்கேன். இன்னும் ரமா, ராதா, பாமா எல்லார்கிட்டயும் பேசணும். ”

ஆஹா இப்படி இவ பேசிண்டே போனா இந்த மாசம் தொலைபேசிக்கட்டணம் எவ்வளவு வருமோ? என்று நினைக்கும்போதே அடுத்த வருடம் வனஜா நீட்டப்போகும் மளிகை சாமான் பட்டியல் கண் முன்னே வந்து மிரட்ட பொத்தென்று சரிந்து சோபாவில் விழுந்தான் ராமு.