Tuesday, 6 November 2012

பிறவிப்பயன்

 
ஏனுங்க, யாராவது கொஞ்சம் தயவு செஞ்சு என் கதையக் கேளுங்களேன். ஒரு 5 நிமிஷம்தான். அதுக்கு மேல நேரம் எடுத்துக்க மாட்டேன். வாங்க அம்மணி, உக்காருங்க. ரொம்ப நன்றிங்க.

நமக்கு சொந்த ஊர் கோயம்புத்தூருங்க. அங்க மில்லுல பொறந்தோமுங்க. அங்க இருந்து சென்னைக்கு வந்து சேந்தோமுங்க. எங்கன்னு கேக்கறீங்களா? அதாங்க தி,நகர் ரங்கநாதன் தெருவில இருக்கே பெரிய அண்ணாச்சி கடை அங்கதானுங்க. அதுக்கப்புறம் என் பயண அனுபவத்தை விவரமா சொல்றேன். கேளுங்க.

***

மில்லுல எங்களையெல்லாம் ஒரு லாரில ஏத்தி அனுப்பி வெச்சாங்களா. ஒரு வழியா சென்னைக்கு வந்து சேந்தோமா.

“அப்பாடா விடுதலை கிடைச்சாச்சு. 10 நாளா எங்க எல்லாரையும் சேர்த்துக்கட்டி, அட்டை பெட்டிக்குள்ள அமுக்கிப்போட்டு, அம்மாடி, இப்பதான் மூச்சு விட முடியுது.

ஆ! தலை சுத்துதே”

“ஏய் விமலா பாத்துடீ. கீழ போட்டுட்டியே. அந்த மேனேஜர் பார்த்தா கத்துவான். சீக்கிரம் எடுத்து அடுக்கி வெச்சுடு.”

“கலா இந்த கலர் ரொம்ப அழகா இருக்கு இல்ல.”

“ம்ம். உன்னோட கல்யாணத்துக்கு வாங்கிக்கோ”

“ம். அதைப்பத்தி நினைக்கிற நிலைமையிலா நாம இப்ப இருக்கோம்”

இப்படி இந்த பொண்ணுங்க பேசறதை தினமும் கேட்டுக்கிட்டிருந்தேனுங்க. பாவங்க இந்த சின்னப் பொண்ணுங்க எல்லாம். சில சமயம் கிக்கிபிக்கின்னு சிரிச்சுப்பேசுங்க. திடீர்ன்னு அப்படியே மாறிடும். ஒண்ணுக்கொண்ணு ஆறுதல் சொல்லிக்கிட்டு என்னமோ வாழ்க்கை நடத்துதுங்க. அவங்க மூடுக்குத் தகுந்த மாதிரி என் மூடும் ஆயிடும்.

இப்படியே அந்தக் கடையிலேயே ஒரு ஆறு மாசம் இருந்தேனுங்க.

***

“ஏம்மா, அந்த ரெண்டு கட்டையும் இப்படி எடுத்து வைம்மா. எனக்கு ஒரு 100 வேணும். எனக்கு தேவையானத நானே பாத்து எடுத்துக்கறேன்” இப்படி கேட்டுக்கிட்டு ஒரு அம்மா வந்தாங்க.

என்னையும் சேர்த்து எடுத்து வெச்சாங்க. என்னை எடுத்து வைக்கும்போது மட்டும் அந்த விமலா பொண்ணு கண்ணுல ஒரு சின்ன ஏக்கம் தெரிஞ்சுது. (இல்ல என்னோட கற்பனையா இது).

ஒருவழியா பில் போட்டு வாங்கி எங்க எல்லாரையும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்தாங்க அந்த அம்மா. அவங்க பொண்ணு கிட்ட பையைக் கொடுத்து ”ஒவ்வொண்ணையும் ஒவ்வொரு கவர்ல போட்டு தனியா ஒரு கட்டப்பைல அடையாளமா எடுத்து வை. கல்யாணத்தன்னிக்கு கேட்டதும் டக்ன்னு எடுத்துக் கொடுக்கணும்”ன்னு சொன்னாங்க.

அந்தப்பொண்ணும் கவர்ல போடும்போது என்னை மட்டும் எடுத்து தனியா வெச்சு ’அம்மா, அம்மா இந்த கலர் ரொம்ப நல்லா இருக்கு. அண்ணன் கல்யாணத்துக்கு தெச்சுக்கறேம்மா’ன்னு கேட்டுச்சு.. (அப்ப கற்பனை இல்லை. இந்தப் பொண்ணுக்கும் என்னை புடிச்சிருக்கு பார்த்தீங்களா?).

அதுக்கு அந்தம்மா, ‘நீ என்ன புடவையா எப்பவும் கட்டிக்கப் போற? ஒனக்கு வாங்கிக் கொடுத்த புடவையிலயே இருந்த ரவிக்கையைத்தான் தெச்சுக்கிட்டயே. அப்புறம் இது எதுக்கு? அப்புறம் இதுக்கு ஏத்தா மாதிரி புடவை கேப்ப. எல்லாத்தையும் ஒழுங்கா எடுத்து வை”ன்னு சொன்னாங்க.

அந்தப் பொண்ணோட முகம் சின்னதா ஆயிடுச்சுங்க. எனக்கு ரொம்ப பாவமா இருந்ததுங்க. சின்னப் பொண்ணுதானங்க ஆசை இருக்காதா? என்ன இந்த அம்மணி சொந்தப் பொண்ணு கிட்டயே இப்படி கோவிச்சுக்கறாங்களே. வரப்போற மருமககிட்ட எப்டி பேசுவாங்களோ?

மறுபடியும் மூச்சு முட்டல். கிட்டத்தட்ட ஒரு மாசம் அந்தக் கட்டப்பைக்குள்ளயே இருந்தோமுங்க..

ஒருநாள் எங்க எல்லாரையும் கார் டிக்கில வெச்சு எடுத்துட்டுப்போனாங்க. இறங்கினா ஒரே சத்தம். மேள சத்தம். குழந்தைங்க விளையாடற சத்தம். பலவிதமான சத்தங்கள். ஓ, திருமண வீட்டுக்கு வந்துட்டோம். ஒரே ஒரு நாள் தாங்க அங்க இருந்தோம். மறுநாள் எங்க எல்லாரையும் பிரிச்சு ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு பையில போட்டாங்க. தேங்காய், வெத்தல, பாக்கு கூடவே பட்சணம் வேற. ம். வாசனை ஜோர்தான். ஒவ்வொரு பையா எடுத்து ஒவ்வொருத்தர் கிட்ட கொடுத்தாங்க.

நான் போய் சேர்ந்தது யார்கிட்ட தெரியுமா? ஒரு ரெட்டை நாடி சரீர அம்மா கிட்ட. அவங்க கூட அவங்க வீட்டுக்குப் போய் சேர்ந்தேன். அவங்க என்னை கையில எடுத்து பார்த்துட்டு “ம் கலர் ரொம்ப நன்னாதான் இருக்கு. ஆனா எனக்குப் போறாதே. அழகா ஒரு பொண்ணைப் பெத்துண்டிருக்கலாம். ம் ரெண்டும் பையனா பெத்துண்டுட்டேனே’ன்னு சொல்லிட்டு என்னை அவங்க துணி அலமாரியில வெச்சுட்டாங்க. (இப்ப எனக்கு கர்வமே வந்துட்டுது. தப்புதாங்க).

நல்ல வேளை இங்க மூச்சு முட்டல. அதுல இன்னும் ஒரு மகிழ்ச்சியான விஷயம் பாருங்க, ராத்திரிதான் தெரிய வந்துது. அந்த அலமாரி இருந்தது அவங்க வீட்டு குளிர் சாதன வசதி செய்யப்பட்ட படுக்கையறையில. ஆஹா! குளு குளுன்னு ரொம்ப ஜாலிதான் போங்க. ஒரு ஆறு மாசம் அங்கதான் குடித்தனம்.

அப்புறம் அந்த அம்மா நவராத்திரி வருதுன்னு அலமாரியில என்னை மாதிரி சேர்த்து வெச்சிருந்த எல்லாரையும் எடுத்து வெளியில வெச்சாங்க. பழையபடி கவருக்குள்ள போயிட்டேன். இப்ப குளிர்சாதன அறையிலே இருந்து எங்களை வேற ஒரு அறையில கொண்டு வெச்சுட்டாங்க. அடுத்து யார் கிட்ட போய் சேர்ந்தேன் தெரியுமா?

அந்த அம்மா அவங்க வீட்டில வேல செய்யற கண்ணம்மாவுக்கு என்னை வெத்தல பாக்கோட வெச்சுக்கொடுத்தாங்க. கண்ணம்மாவோட வீட்டுக்குப்போனேனா, சின்ன குடிசை வீடுங்க. பாவம். அவங்க வீட்ல என்னை பத்திரமா வெச்சுக்க ஒரு பெட்டி கூட இல்லங்க. அவங்க பொண்ணு கிட்ட என்னை குடுத்தாங்க.

அந்தப் பொண்ணு, ‘அம்மா, அம்மா இதை நான் தெச்சுக்கறேம்மா, நல்லா இருக்கும்மா கலர்’ன்னு கெஞ்சிக்கேட்டாங்க. அதுக்கு அந்த கண்ணம்மா, ‘ம். இத்தை குடுத்ததுக்கு அந்தம்மா கட்டி பழசாப்போன பொடவையும் ஜாக்கெட்டும் குடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும். இதுக்கு கூலி குடுக்க நாம எங்க போறது. தெருக்கோடில இருக்கற தையற்காரனே 50 ரூபா கேக்கறான் ஜாக்கெட்டு தெக்க. இன்னா பண்றது. எதுனா பையில போட்டு வை. தீபாவளிக்கு யார் வூட்லனா போனஸ் குடுப்பாங்க இல்ல. அப்ப தெச்சு தரேன்” ன்னு சொன்னாங்க. இப்ப எனக்கு முன்ன மாதிரி கர்வம் இல்லைங்க. பின்ன என்னங்க, பிறவிப்பயன அடையாம இப்படி சுத்திக்கிட்டே இருந்தா? அதோட இந்த ஒலகத்தில ஒவ்வொருத்தரும் படற கஷ்டத்தைப் பாத்தப்புறம் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குங்க.

சரி. என் கதையை விடுங்க. முடிஞ்சா ஒரு 50 ரூபா இந்த கண்ணம்மாக்குக் குடுத்து ஜாக்கெட் தெச்சுக்க உதவுங்களேன்.

எங்க கிளம்பிட்டீங்க. ஏனுங்க அம்மணி. எனக்கு ஒரு பதில சொல்லிப்போட்டுத்தான் போங்களேன்.

எதிர்பார்ப்பு



வா ரமா. வா வா.. சௌக்கியமா இருக்கியா? இப்பதான் உன் பையன் சாவியக் குடுத்துட்டு விளையாடப் போனான். சாப்பிட்டானோ என்னமோ தெரியல.”

எதிர் வீட்டு ரமாவை முகமலர்ந்து வரவேற்றாள் வித்யாவின் பாட்டி விசாலம்.

“நான் நல்லா இருக்கேன் பாட்டி. நீங்க எப்ப வந்தீங்க, எப்படி இருக்கீங்க” என்று கேட்டாள் ரமா.

“ம். என்னமோ இருக்கேன் போ. காடு வா வாங்குது. வீடு போ போங்குது. ஆமாம் நான் வந்து ரெண்டு நாளாச்சு. கண்ணுலயே படலயே நீ. உனக்கு ஏது நேரம். சரி சரி. ஆபீஸ்லேந்து களைச்சுப்போய் வந்திருக்க. இரு. ஒருவாய் காபி போட்டுத்தரேன். குடிச்சுட்டு சாவியை வாங்கிண்டு போகலாம்.”

“பரவாயில்ல பாட்டி. இந்த வயசான காலத்தில எதுக்கு உங்களுக்கு சிரமம். நான் கிளம்பறேன் பாட்டி.” என்றாள் ரமா.

“இரு ரமா. இதுல என்ன சிரமம். உனக்கும் யார் இருக்கா. நீயே போட்டுத்தானே குடிக்கணும். நான் என்ன உனக்குன்னு தனியாவா காபி போடப்போறேன்? உள்ள வித்யா படிச்சுண்டிருக்கா. அவளுக்கு காபி போடப்போறேன். அப்படியே உனக்கும் போட்டுண்டு வரேன். சித்த உக்காரு” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்றாள் விசாலம். பேச்சுக் குரல் கேட்டு வெளியே வந்தாள் வித்யா. இதற்குள் இரண்டு டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து ரமாவிடமும், வித்யாவிடமும் கொடுத்தாள்.

“என்ன வித்யா எப்படி படிச்சிண்டிருக்க” என்று ரமா கேட்க, தலையை ஆட்டினாள் வித்யா. “காபி ஏ ஒன் பாட்டி. என்ன வித்யா காபியைக் குடிக்காம என்ன யோசனை. ம். நீங்கள்ளாம் ரொம்பக் குடுத்து வெச்சிருக்கீங்க. சாவியைக் குடு. நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் ரமா.
* * * 

’கேட் திறந்திருக்கு போலிருக்கே. அத்தையாத்துக்குப் போறேன்னு சொன்னாளே பாட்டி கிளம்பலையோ? ஒரு வேளை வித்யா பள்ளிக்கூடத்தில இருந்து வந்துட்டாளோ? ஸ்பெஷல் க்ளாஸ் இல்லயோ? எப்படியும் அம்மாவோ, அப்பாவோ இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது’ என்று பலவாறு யோசித்துக்கொண்டே வந்த விஜயா கதவைத் தட்டினாள். கதவு தானாகவே திறந்து கொண்டது. யூனிபார்மைக்கூட மாற்றாமல் மேஜையில் தலைவைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள் விஜயாவின் தங்கை வித்யா.
“வித்யா! என்ன இது பட்டப்பகல்ல கதவைத் திறந்து போட்டுண்டு தூங்கற. எழுந்திரு. எழுந்திரு. டிபன் பாக்ஸ் அப்படியே இருக்கு. சாப்பிடவே இல்லையா?” என்று தூங்கிக் கொண்டிருந்த தங்கையைத் தட்டி எழுப்பினாள் விஜயா.

சோம்பல் முறித்தபடி எழுந்து உட்கார்ந்தாள் வித்யா. “என்ன வித்யா டல்லா இருக்க. பாட்டி அத்தையாத்துக்குக் கிளம்பிப் போயிட்டான்னு வருத்தமா?” என்று கேட்டாள் விஜயா.

“ம்க்கும். இருந்தா மட்டும் அப்படியே நம்பள ரொம்ப கவனிச்சுண்டுவாளாக்கும்”.

“பெரியவாளை அப்படி எல்லாம் சொல்லக்கூடாது வித்யா” என்றாள் விஜயா.
வித்யாவுக்கும், விஜயாவுக்கும் எட்டு வயது வித்தியாசம். அவர்கள் சின்னக் குழந்தைகளாக இருந்தபோது பாட்டி இவர்கள் வீட்டிற்கு எப்போதோ ஒரு முறைதான் வருவாள். பெரும்பாலும் தன் பெண் வீட்டிலேயே இருந்து விடுவாள் விசாலம். வித்யா, விஜயா இருவருமே க்ரீச்சில்தான் வளர்ந்தார்கள். அதனால்தானோ என்னவோ இருவருக்குமே பாட்டியிடம் ஒட்டுதலே இல்லை. பாட்டியும் இவர்களைக் கண்டு கொள்ள மாட்டாள். ஆனால் விளையாட ஒரு துணையில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த விஜயாவுக்கோ வித்யாவின் வருகை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அதனாலேயே தங்கை வித்யா அவளுக்கு ரொம்பச் செல்லம். வித்யாவும் எந்த ஒரு விஷயமானாலும் அக்காவிடம்தான் சொல்வாள். ஏன் பாட்டியோ, அப்பாவோ ஏதாவது சொல்லி அதனால் அவள் அம்மா புலம்பினால் கூட விஜயாதான் “அம்மா இதெல்லாம் காதுல போட்டுண்டு உன் உடம்பையும் மனதையும் கெடுத்துக்காதே” என்று உற்ற தோழியைப் போல் ஆறுதல் சொல்வாள்.

‘பாவம் தான் வித்யா. நான் படிக்கும் போதாவது அம்மாவுக்கு சனி, ஞாயிறு ரெண்டு நாள் லீவு இருந்தது. ஆனா இப்ப ஞாயிறு மட்டும்தான் லீவு. பிரமோஷனும் வந்தப்பறம் அம்மாவால் வித்யாவ சரியா கவனிக்க முடியல. லீவும் போட முடியல. வீட்டுக்கும் லேட்டாத்தான் வரா. அப்பா கேக்கவே வேண்டாம். என்னமோ கம்பெனியே இவர் தலையிலதான் ஓடற மாதிரி இழுத்துப்போட்டுண்டு வேலை செய்வார். வீட்டைப் பொறுத்த வரைக்கும் சம்பளக் கவரை அப்படியே அம்மா கிட்ட குடுக்கறதோட தன்னோட கடமை முடிஞ்சுடறதா நினைச்சுண்டிருக்கார். இந்தப் பொண்ணு வித்யாதான் பாவம் வீட்டில தனியா இருக்க வேண்டி இருக்கு.’.

“அக்கா!” விஜயாவின் எண்ண ஓட்டத்தைத் தடை செய்தது வித்யாவின் அழைப்பு. “என்னக்கா, நீ இன்னிக்கு அதிசயமா ஆபீஸ்லேந்து சீக்கிரமா வந்துட்ட” என்று கேட்டாள் வித்யா.

“அதுவா. எங்க பாஸ் யாரையோ பார்க்க ஏர்போர்ட் போறார். போற வழியில தானே உன் வீடு. உன்னை இறக்கி விட்டுட்டுப் போறேன்னு அதிசயமா சொன்னார். அதான் நானும் அதிசயமா சீக்கிரம் வந்துட்டேன்” என்று சொல்லி விட்டுத் தங்கையின் மூக்கைச் செல்லமாகத் திருகினாள் விஜயா.

“அக்கா. நீயாவது வேலையை விட்டுட்டு வீட்டிலயே இருக்கக் கூடாதா?” என்று அழ மாட்டாக்குறையாய் கேட்டாள் வித்யா.

’ஓ, இந்தப் பெண்ணை தனிமைதான் காயப்படுத்தி இருக்கு. காயத்துக்கு மருந்து போடணுமே’.

“வித்தும்மா. முதல்ல நான் ஏதாவது டிபன் பண்ணறேன். நாம ரெண்டு பேரும் அதை சாப்டுட்டு கோவிலுக்குப் போயிட்டு அப்டியே மார்க்கெட்டுக்குப் போயிட்டு வரலாம். கார்த்தாலயே அம்மா ஒரு காயும் இல்லன்னு அப்பளாத்தைப் போட்டு வத்தக்குழம்பு தானே பண்ணினா. அம்மா வரதுக்குள்ள ராத்திரி சமையலையும் முடிச்சு அம்மாவுக்கு ஒரு ஸர்ப்ரைஸ் கொடுக்கலாம்” என்றாள் வித்யா.

* * * 

கோவிலைச் சுற்றி விட்டு வெளிப் பிரகாரத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்தார்கள் விஜயாவும், வித்யாவும்.

வித்யா, “அக்கா எனக்கு ஒரு விஷயம் புரியல. பாட்டி நமக்கு ஒரு நாளும் எதுவும் செஞ்சதில்ல. ஆனா நேத்திக்கு ரமா ஆன்ட்டி வந்த போது என்னமோ எனக்காக காபி போடறதா சொல்லி அவங்களை ரொம்ப உபசாரம் பண்ணினா. அவங்க பையன் சாவி குடுக்க வந்த போது அவன் வேண்டாம், வேண்டாம்ன்னு சொல்லச் சொல்ல அவன் கையில கேக்கையும், பிஸ்கெட்டையும் திணிச்சா. அம்மா என்னடான்னா ரமா ஆன்ட்டியோட மாமியார் நம்பாத்துக்கு வந்தப்போ உங்களுக்கு பி.பி. இருக்கு. உடம்பைப் பார்த்துக்கோங்கன்னு ரொம்ப அக்கறையா சொன்னா. காபி வேண்டாம்ன்னு ஹார்லிக்ஸ் போட்டுக்குடுத்தா. ரமா ஆன்ட்டி நீங்கள்ளாம் குடுத்து வெச்சிருக்கீங்க அப்டீங்கறாங்க. அவங்க மாமியார் என்னடான்னா நம்ப அம்மாவுக்கு நல்ல மருமகள்ன்னு சர்டிபிகேட் குடுக்கறாங்க. ஆனா இந்த மாதிரி அம்மா பாட்டி கிட்டயும், பாட்டி அம்மா கிட்டயும் நடந்துண்டா எவ்வளோ நன்னாயிருக்கும்” மூச்சு விடாமல் படபடவென்று தன் மனதில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தாள் வித்யா.

‘இதென்ன இது. இந்தப் பெண் தேவையில்லாத விஷயங்களைப்போட்டு குழப்பிண்டிருக்கே. குழந்தையும் இல்லாத, குமரியும் இல்லாத இவளுக்கு எப்படி புரிய வைக்கறது?’

“வித்யா, பாட்டி என்னிக்கோ ஒரு நாளைக்கு காபி போட்டுக் குடுத்தாலே ரமா ஆன்டிக்கு சந்தோஷம். அதே மாதிரிதான் அவங்க மாமியாருக்கும். அம்மா ஒரு நாள் உபசாரம் பண்ணினதுலேயே திருப்தியாயிட்டா. ஆனா இவங்க விஷயம் அப்படியில்ல. அம்மா தன்னை தினமும் கவனிக்கணும்ன்னு பாட்டியும், பாட்டி நமக்கு தினமும் ஏதாவது செய்யணும்ன்னு அம்மாவும் எதிர்பார்க்கறா. எல்லா மாட்டுப்பெண்களுக்கும் தன் மாமியாரைத் தவிர மத்த எல்லா மாமியார்களும் நல்லவாளா தெரியறா. அதே மாதிரிதான் மாமியார்களுக்கும்.

இதெல்லாம் இப்ப உனக்குப் புரியாது. தேவையும் இல்ல. வித்யா நீ இப்ப பத்தாவது படிக்கற. இன்னும் ஆறு, ஏழு வருஷங்களுக்கு நீ படிப்பைத் தவிர வேற எந்த விஷயத்திலயும் கவனம் செலுத்தக்கூடாது. என்னாலதான் டிகிரிக்கு மேல படிக்க முடியல. நீயாவது நிறைய படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். அதனால இதையெல்லாம் கவனிக்காம படிப்பை மட்டும் கவனி. எனக்கு நேரம் கிடைக்கறப்ப எல்லாம் நம்ப ரெண்டு பேரும் இந்த மாதிரி எங்கயாவது இந்த மாதிரி வரலாம். ஆனா அது கூட உன் படிப்பை பாதிக்காமதான். சரியா?” என்றாள் விஜயா.

தன் அக்கா சொல்வது எதுவும் தன்னுடைய நல்லதிற்குத்தான் என்ற நம்பிக்கையுடன் தலையாட்டினாள் வித்யா.

தங்கையின் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் விஜயா. இருவரும் கை கோர்த்துக்கொண்டு மார்க்கெட்டுக்குப் புறப்பட்டனர்.


சிறுதுளி பெரு வெள்ளம்





மின் விநியோகம்
சீராக இல்லாத
இந்த நேரத்திலும்,
கடைத் தெருக்களிலும்
திருமணக் கூடங்களிலும்
பொது இடங்களிலும்
சரம், சரமாய்
மின் விளக்குகளை
ஏற்றி வைத்திருப்பதைப்
பார்க்கும்போது
மூக்குக்கு மேல்
கோபம்தான் வருகிறது.

ஆனால்
அலுவலகத்தில்
ஆளில்லாத நேரத்தில்
மின் தூக்கியில்
சுற்றிக்கொண்டிருக்கும்
மின் விசிறியை
நிறுத்தும் போதும்

வீட்டிலும்
அலுவலகத்திலும்
ஆளில்லாத இடங்களில்
சுற்றிக் கொண்டிருக்கும்
மின் விசிறிகளை
நிறுத்தும்போதும்
தேவையில்லாமல்
எரிந்து கொண்டிருக்கும்
மின் விளக்குகளை
அணைக்கும்போதும்

ஒரு அல்ப சந்தோஷம்
ஏற்படுகிறதே!

என்ன இருந்தாலும்
‘சிறு துளி
பெருவெள்ளம்
அல்லவா?

Saturday, 3 November 2012

பிரபலங்களின் வாழ்வில்


பிரபலங்களின் வாழ்வில் மகிழ்ச்சி, நகைச்சுவை, சோகம், ஆச்சரியம், கோபம் போன்ற உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கும்.  இது போன்று நாம் படித்த, கேள்விப்பட்ட, பார்த்த நிகழ்ச்சிகளை இந்தத் தலைப்பில் பகிர்ந்து கொள்கிறேன்.
இது போன்ற நிகழ்ச்சிகள் நமக்கு படிப்பினையாக அமையலாம். ஏன், சில நிகழ்ச்சிகளிலிருந்து நம் பிரச்சினைகளுக்கு விடைகூட கிடைக்கலாம். நமக்கு தன்னம்பிக்கை கிடைக்கலாம்.  



முதல் பதிவாக ஒரு நகைச்சுவைப் பதிவுடன் ஆரம்பிக்கிறேன்.
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனேஇம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள்.
ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ

Tuesday, 23 October 2012

லயா வந்தாச்சு

எங்கள் பேத்தி லயாக்குட்டி நவராத்திரி நன்னாளில் எங்கள் வீடு வந்து சேர்ந்தாள்.   பிறந்து ஒரு மாதம் ஆன அவளின் சிரிப்பில் விளைந்தது இந்தக் கவிதை.



அவளாக சிரிக்கிறாள்
அழகாக சிரிக்கிறாள்
அர்த்தம் புரிந்து சிரிக்கிறாளா?
அதுதான் தெரியவில்லையே!
ஆழி சூழ் உலகத்திற்கு
அவள் வந்து சேர்ந்து
திங்கள் ஒன்றுதான் ஆகிறது
தாய் முகம் புரிந்திருக்குமோ?
தந்தை முகம் தெரிந்திருக்குமோ?
தாத்தா, பாட்டி இவர் தான் என்று
தங்கக்குட்டிதான் அறிந்திருக்குமோ?
அத்தையின் அழகு முகம்
அகமகிழ வைத்திருக்குமோ? 
தாயுமான இறைவன்
தாமரைப்பூ கொண்டுவந்து
காட்டும்போது குஞ்சிரிப்பு
கொவ்வைச் செவ்விதழில்
குழைந்து வருகிறதோ?
யாமறியோம் பராபரமே!

Monday, 15 October 2012

தவிப்பு - ஜெ மாமி

 அறுசுவையில் வெளிவந்த என்னுடைய மற்றொரு கதை.
உங்களுக்காக இங்கு மீண்டும் பகிர்கிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/21416

தவிப்பு - ஜெ மாமி
வழக்கம் போல் பள்ளிக்கூட வாசலில் இறக்கிவிட்ட கணவர் காந்திநாதனிடம், “ஏங்க எவ்வளவு சொல்லியும் கேக்காம இப்படி செய்துட்டீங்களே! ஒரு வெள்ளிக்கிழமை இரவு சொல்லி இருந்தா கூட சனி, ஞாயிறு அவ கூட இருந்து அவள சமாதானப் படுத்தி இருப்பேனே! நாம ரெண்டு பேருமே விடுப்பு எடுக்க முடியாத இந்த நேரத்தில் சொல்லிட்டீங்களே! நீங்க சொன்னதைக் கேட்டதும் நம்ப மகள் யாழினியின் முகம் போன போக்கு, அந்தப் பரிதாபமான முகம், எனக்கு இப்பவும் வயிற்றைப் பிசையுதுங்க..... குழந்தை என்ன செய்வாளோ? ராத்திரி முழுக்க அவ தூங்கவே இல்லைன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி ஒரு நாள் கூட காலையில 9 மணி வரைக்கும் அவ தூங்கி நாம பார்த்ததே இல்லையே. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க!” என்று பொரிந்து கொட்டினாள் அமுதா.

“இங்க பார் அமுதா, எனக்கு நம்ப மக மேல முழு நம்பிக்கை இருக்கு. நாம என்ன அவளை கோழையாவா வளர்த்திருக்கோம். அப்புறம் என்ன பயம். சரி நான் கிளம்பறேன், சாயங்காலம் நீ பேருந்தில வீட்டுக்குப் போயிடு. எனக்கு பள்ளியில் மாலை ஒரு கூட்டம் இருக்கு. நான் வர கொஞ்சம் நேரமாகலாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் காந்திநாதன்.

கணவரின் பேச்சு ஓரளவு சமாதானப் படுத்தினாலும் இவரால் எப்படி இவ்வளவு இயல்பாக இருக்க முடிகிறது என்று யோசிக்க யோசிக்க சலிப்பாகவும் இருந்தது அமுதாவுக்கு.


                                                                                       ***

முதல் இரண்டு வகுப்புகளும் பனிரெண்டாம் வகுப்பு என்பதால் மும்முரமாக பாடம் எடுப்பதில் ஆழ்ந்து விட்ட அமுதா இடைவேளையில் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அது விடாமல் அடித்துக்கொண்டிருந்தது. மகளின் கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது ”நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து சிறிது நேரத்திற்குப் பிறகு தொடர்பு கொள்ளவும்” என்று வந்த வாசகத்தைக் கேட்டதும் அமுதாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனசு சரியில்லாததால் காலையிலும் சரியாக சாப்பிடவில்லை. வயிறு வேறு என்னையும் கொஞ்சம் கவனியேன் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. இரண்டு வாய் அள்ளிப் போட்டுக்கொண்டு தலைமை ஆசிரியரைப் பார்த்து அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று நினைத்தபோதே பள்ளியின் ஆயா வந்து, “அமுதா அம்மா உங்கள தலைமை ஆசிரியர் ஐயா அவர் அறைக்கு வரச்சொன்னார்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அப்பொழுதே புரிந்து விட்டது அமுதாவிற்கு, கண்டிப்பாக அரை நாள் விடுப்பு எடுக்க முடியாது என்று. கணவரின் கைப்பேசியில் தொடர்பு கொண்டால் “நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்” என்றே குரல் வந்து கொண்டிருந்தது.

தலைமை ஆசிரியர் இட்ட பணிகளை முடித்துவிட்டு அவரிடம் அனுமதி பெற்று அமுதா கிளம்பிய போது மாலை மணி நான்கு ஆகி விட்டது. அப்பொழுதும் தொலைபேசியில் கணவரையும், மகளையும் தொடர்பு கொள்ள முடியாமல் போகவே அமுதா ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்திற்குச் சென்றாள். நல்லவேளையாக அவள் செல்லவேண்டிய பேருந்து கிளம்பத் தயாராக இருந்தது. பேருந்தில் ஏறி சன்னலோர இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி அமர்ந்தாள் அமுதா.
இறைவா தயவு செய்து எங்கள் மகளை எங்களிடமிருந்து பிரித்து விடாதே. உன்னைத்தான் மலை போல் நம்பி இருக்கிறேன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

குழந்தை பாவம் பள்ளி இறுதித் தேர்வில் 1200க்கு 1179 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலாவதாகவும் மாநிலத்தில் மூன்றாவதாகவும் வந்திருக்கிறாள். அந்த மகிழ்ச்சியைக்கூட நீடிக்கவிடாமல் இப்படி செய்துவிட்டாரே என்று கணவரை நொந்து கொண்டாள். பாவம் அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும். எவ்வளவு சொல்லியும் இந்த நேரத்தில் சொன்னால்தான் அவளால் இந்த விஷயத்தை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லிவிட்டாரே என்று மனதிற்குள் புலம்பினாள் அமுதா.
அமுதா இறங்க வேண்டிய இடம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கி வழக்கம் போல் நடந்து செல்லாமல் ஆட்டோவில் ஏறி வீட்டிற்குச் சென்றாள். வீட்டு வாசலில் கணவனின் இரு சக்கர வாகனம் இருப்பதைப் பார்த்ததும் என்ன ஆயிற்றோ என்று மனம் பதைத்து மாடிப் படிகளில் தனக்கு 58 வயது என்பதையும் மறந்து இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறினாள். தன் இதயத் துடிப்பு அதிகமாவதையும் அவள் உணர்ந்தாள். அழைப்பு மணியை அழுத்தினாள். உடனே கதவு திறக்கப்படாததால் படபடவென்று கதவை தட்டினாள். அந்த இரண்டு நிமிட தாமதத்தைக்கூடப் பொறுக்க மாட்டாமல் பதறினாள்.

கதவைத் திறந்த கணவரிடம், “யாழினி எங்கே?” என்று பதற்றமாகக் கேட்டாள். “அம்மா” என்று அழைத்துக்கொண்டு வந்த யாழினி, “அம்மா நான் மொத மொதல்ல போண்டாவும், கேசரியும் செய்திருக்கேன். முகம் கழுவிட்டு வாங்கம்மா. நம்ப மூணு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்” என்று கூப்பிட, மகளைப் பார்த்து திரு திரு என்று விழித்தாள் அமுதா.

மகள் கையில் கொடுத்த தட்டை வாங்கிக் கொண்டு சாப்பிடாமல் கிட்டத்தட்ட அழும் நிலைக்கே போய் விட்டாள் அமுதா. அவள் அருகில் வந்து அமர்ந்த யாழினி, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “அம்மா, அப்பா என்கிட்ட நான் உங்களோட சொந்த மகள் இல்ல அனாதை இல்லத்தில இருந்து தத்து எடுத்து வளர்க்கிற வளர்ப்பு மகள்தான்னு சொன்னதும் ஆடித்தான் போயிட்டேன். கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல. அழுகையும் கோபமும் முட்டிக்கிட்டு வந்துச்சு. ஆனா நீங்க ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துக்கு போனதுக்கப்புறம் எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேந்து நடந்ததையெல்லாம் யோசிச்சுப் பாத்தேன். அத்தோட அம்மா, நீங்களும் அப்பாவும் ராத்திரி நான் தூங்கிட்டேன்னு நினைச்சு பேசினதை நான் கேட்டேன். அம்மா உங்களை விட்டு நான் போயிடுவேன்னு எப்படிம்மா நினைச்சீங்க.
அம்மா நம்ப மூணு பேரையும் ஒண்ணா பார்க்கிறவங்க, உங்க மக யார் சாயல், உங்க ரெண்டு பேர் மாதிரியும் இல்லயேன்னு கேக்கும்போதெல்லாம் அப்பா அவ அப்படியே என் அம்மா தான். என் அம்மாவே எனக்கு மகளா வந்து பிறந்திருக்கான்னு சொல்லுவாரே. என்னயும் அம்மான்னு தானே கூப்பிடுவார். ஒரு அனாதைக்கு இவ்வளவு பெரிய கௌரவத்தை கொடுத்திருக்கிற இந்த அப்பாவை விட்டுப் போக எனக்கு எப்படி மனசு வரும்?.
நீங்க மட்டும் என்ன அம்மா. என்னை மருத்துவக்கல்லூரியில சேர்க்கணும்ங்கறதுக்காக இத்தனை வருஷங்களா உங்களுடைய சுகத்தை எல்லாம் குறைச்சுக்கிட்டு குருவி சேர்க்கற மாதிரி பணத்தை சேர்த்து வெச்சிருக்கீங்களே. வங்கியில கூட கடன் வாங்காம என்னை படிக்க வைக்கணும்ன்னு சொல்லுவீங்களே. உங்க ரெண்டு பேரோட உலகமே நான் தானே. இன்னிக்கு நான் இவ்வளவு மதிப்பெண் வாங்கினதுக்கு, நாளைக்கு உங்க எண்ணப்படியே மருத்துவர் ஆகப் போறதுக்கு, எல்லாத்துக்குமே நீங்க தானே காரணம். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்ங்கறதையே ஒரு லட்சியமா நினைக்கிற உங்களை விட்டு எப்படிம்மா........”

”அது வந்தும்மா! யாழினி! நான் வந்து.....”

“சரி விடுங்கம்மா, என்னைப் பொறுத்தவரைக்கும் என்றைக்குமே நீங்கதான் என் அம்மா, அப்பா. நான் போய் காப்பி போட்டுக்கிட்டு வரேன்.” என்று சமையலறைக்குச் சென்றாள் யாழினி.

“அமுதா”

“ஏங்க அது வந்து...”

“நீ என்ன கேக்கப்போறேன்னு புரியுது. காலையில இருந்து நம்ப தெருவில பராமரிப்புக்காக மின்வெட்டு. நம்ப பொண்ணோட கைப்பேசியில மின்னூட்டம் இல்லை. நம்ப பொண்ணு எண்ணை வாங்க கடைக்குப் போன சமயம் பார்த்து நீ வீட்டு தொலைபேசியில கூப்பிட்டிருக்க. என் கைப்பேசியில சிக்னல் கிடைக்கல. அதனால உன்னால என்னையும் தொடர்பு கொள்ள முடியாமல் போயிருந்திருக்கலாம். வெளியூர் போன அதிகாரி திரும்பி வராததால கூட்டமும் ரத்தாயிடுத்து. உன்னை மாதிரியே எனக்கும் மனசு கஷ்டமா இருந்தது. அதனாலதான் உன் பள்ளிக்கூடத்துக்குக்கூட வராம நேர வீட்டுக்கு வந்துட்டேன். இந்த விஷயத்தையெல்லாம் தொலைபேசியில தொடர்புகொண்டு உன் கிட்ட சொல்லலாம்ன்னு நினைச்ச போது நீயும் வந்துட்ட. போதுமா? இதுக்கு மேல ஒண்ணும் கேக்காம கேசரியையும், போண்டாவையும் சாப்பிடு,” என்றார் காந்திநாதன்.

காலையில் இருந்து தவித்த தவிப்பிற்கு ஒரு முற்றுப் புள்ளி வரவே நிம்மதிப் பெருமூச்சு விட்ட அமுதா இந்த சின்ன பெண்ணுக்கு இருக்கற முதிர்ச்சி கூட தனக்கு இல்லையே என்று வருந்தினாள்.
நெட்டில் ஏதோ தேடும் போது ‘மைத்ர முகூர்த்தம்’ என்று பார்க்க நேர்ந்தது.
இந்த நேரத்தில் கடன் வாங்கியவர்கள் அதில் சிறு தொகையை திருப்பி செலுத்தினால் கடன் விரைவில் தீர்ந்து விடும் என்று போட்டிருந்தது.  அப்பொழுது உதயமானதுதான் அறுசுவை.காமில் வெளி வந்த என்னுடைய இந்த  சிறுகதை. உங்களுக்காக இங்கு மறுபடியும் வெளியிடுகிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/19102

‘மைத்ர முகூர்த்தம்’


“ஏங்க, விஜிதா தாங்க பேசறேன். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அப்புறம் மறந்துட்டேன்னா கஷ்டம். ப்ளீஸ்”

“என்ன விஜி பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கு. சரி சரி சொல்லு. இப்பதான் சாப்பிட ஆரம்பிச்சேன். நம்ப ரெண்டு பேரும் முக்கியமான விஷயங்கள பேசிக்கறதே மதிய சாப்பாட்டு நேரத்தில தான. சரியான நேரத்தில தான் கூப்பிட்டிருக்க. நீ சாப்பிட்டுட்டயா?”

“நானும் இப்பதான் சாப்பிட ஆரம்பிச்சேன். அது வந்துங்க. இன்னிக்கு நெட்ல ஒரு விஷயம் பார்த்தேன். மைத்ர முகூர்த்தம்னு ஒரு நேரம் இருக்காம். இந்த நேரம் ஒரு தமிழ் மாசத்தில அதிக பட்சமா மூணு நாள் வருமாம். அந்த மூணு நாள்ல, ஒவ்வொரு நாளும் அதிக பட்சமா ரெண்டு மணி நேரம் வரை இருக்குமாம். இந்த நேரத்தில் நாம்ப வாங்கின கடன்ல அசல்ல ஒரு பங்கை திருப்பி செலுத்தணுமாம். அப்படி செலுத்தினா, கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சீக்கிரம் தீர்ந்துடுமாம்.”

”அதுக்கென்ன விஜி இப்ப”

“அது வந்துங்க, நாளைக்கு 09:45ல இருந்து 11:45 வரைக்கும் அந்த நேரமாம். இப்பவே சொன்னாதான நீங்க வங்கியில இருந்து பணத்தை எடுத்து வெச்சு நாளைக்கு கடன் அட்டை, வீட்டுக்கடன் எல்லாத்துக்கும் கட்ட முடியும். அதனால தாங்க போன் செய்தேன்.”

"அது எப்டி விஜி, இந்த மாதிரி விஷயம் எல்லாம் உன் கண்ணுல மட்டும் படுது. சரி சரி எனக்கு நம்பிக்கை இருக்கோ இல்லயோ உனக்காக கண்டிப்பா செய்யறேன், சரியா”. என்று கைப்பேசி பேச்சை முடித்தான் ராகவன்.

                                                                                ***

ராகவனும், விஜிதாவும் வெவ்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தம்பதிகள். ஆஸ்திக்கொரு ஆண், ஆசைக்கொரு பெண் என்ற பழமொழிக்கேற்ப ஒரு ஆண் குழந்தைக்கும், ஒரு பெண் குழந்தைக்கும் பெற்றோர். அன்பான, அளவான குடும்பம்.

அடிப்படையில் ராகவன் மிகவும் நல்லவன். ஆனால் சற்று செலவாளி. மேலும் கண்ணில் பட்டதை எல்லாம் சட்டென்று வாங்கிவிடும் பழக்கம் உள்ளவன். எதையும் நினைத்தவுடன் செய்ய வேண்டும் என்று நினைப்பவன். திருமணமான புதிதிலேயே தாம்பரத்தின் அருகில் 2 கிரவுண்டு நிலம் வாங்கி சொந்த வீடு கட்டி குடிபோய் விட்டனர். விஜிதா சொல்லச் சொல்ல கேட்காமல் மேன்மேலும் கடன் வாங்கி இரண்டு மாடியும் கட்டிவிட்டான் ராகவன்.
விஜிதா, “ஏங்க ஆனை அசைந்து திங்கும். வீடு அசையாமல் திங்கும்னு பெரியவங்க சொல்வாங்க. நீங்க இப்படி நாம ரெண்டு பேரும் சம்பாதிக்கற பணத்துல பெரும் பகுதியை வீட்டுலயே போடறீங்களே. கொஞ்சமாவது கையில காசு வேண்டாமா? புறநகர்ல இருக்கறதால வாடகையும் ரொம்ப கம்மியாதான் வருது. நம்ப பொண்ணும் பத்தாவது வந்துட்டா. நாம்ப வேற முதல்ல பொண்ண பெத்திருக்கோம். அவ கல்யாணத்துக்கு ஏதாவது சேக்க வேண்டாமா? இப்டி மாடி மேல மாடி கட்டறதுக்கு பதிலா எங்கயாவது ரெண்டு காலி மனை வாங்கி போட்டிருந்தாலும் கல்யாணத்தும் போது வித்துக்கலாம். பையன் ஆறாவதுதான் படிக்கறான்னாலும் அவன் படிப்புக்கும் செலவழிக்க வேண்டாமா? நமக்கு என்ன பூர்வீக சொத்துன்னு எதாவது இருக்கா? எதையுமே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே!”னு சொல்லிச் சொல்லி இப்பதான் ராகவனுக்கு கடனையெல்லாம் அடைச்சுட்டு கையில நாலு காசு வெச்சுக்கணும்ங்கற விஷயமே உறைக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த நேரத்தில தான் விஜிதா மைத்ர முகூர்த்தத்தை பத்தி அவன் காதில் போட்டிருக்கிறாள்.
மறுநாள் காலையில் விஜிதா சொன்ன நேரத்தில் கிரெடிட் கார்டுக்கும், வீட்டுக் கடனுக்கும் பணத்தை செலுத்திவிட்டு வந்தான் ராகவன்.

                                                                               ***
6 மாதம் கழித்து ஒரு நாள் ராகவன் மும்முரமாக அலுவலக வேலையில் ஈடுபட்டிருந்தபோது வரவேற்பு அறையில் அவனை சந்திக்க ஒருவர் வந்து காத்திருப்பதாக செய்தி வந்தது. யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வரவேற்பு அறைக்குச் சென்றான். 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ராகவன் அருகில் வந்ததும் இரு கை கூப்பி “தம்பி நீங்கதான் ராகவனா? உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி” என்றார்.

ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தான் ராகவன். அவர், “தம்பி நான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவன். ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தையெல்லாம் இந்த அலுவலகத்துல வேலை பார்க்கறவங்களுக்கு கடனா கொடுத்திருந்தேன். 4 வருஷம் முடிஞ்சு போச்சுங்க தம்பி. அசல்ல ஒரு பைசா கூட திரும்பி வரல. ஏதோ நீங்க சொன்னீங்களாம். ஒரு குறிப்பிட்ட நேரத்துல கொஞ்சம் அசலை செலுத்தினா சீக்கிரமா கடன் தீர்ந்துடும்னு. ஆறே மாசத்துல எல்லா பணமும் திரும்பி வந்துடுச்சு தம்பி. அடுத்த மாசம் என் பேத்திக்கு திருமணம் நடக்கப் போகுது. அவ குழந்தையா இருக்கும் போதே என்னோட ஒரே மகனும், மருமகளும் ஒரு விபத்துல இறந்துட்டாங்க. நான் தான் என் பேத்திய வளக்கறேன். அவ திருமணத்தை எப்படி சமாளிக்கப்போறேனோன்னு கலங்கி நின்னேன். நீங்க தான் தெய்வம் மாதிரி வந்து உதவி செய்திருக்கீங்க. நீங்க நல்லா இருக்கணும் தம்பி” என்று சொல்லிவிட்டு ராகவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் நன்றி சொல்லி விட்டு இனிப்புகள் அடங்கிய ஒரு பெட்டியை அவன் கையில் கொடுத்து விட்டுச் சென்றார்.

”பரவாயில்லையே! வாங்கின கடன் தான அடையும்னு விஜி சொன்னா. குடுத்த கடனும் வசூலாயிடுத்தா.” என்று ஆச்சரியப்பட்டான் ராகவன். ஒரு வினாடி சுதாரித்து “அட மக்கு ஒருத்தருக்கு வாங்கின கடன்னா இன்னொருத்தருக்கு குடுத்த கடன் தானே. மகிழ்ச்சில இதுகூட எனக்கு புரியலயே” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
அதே போல் ராகவனிடம் அவனது அலுவலத்தில் பணிபுரியும் சிலர் தங்கள் கடன்கள் எல்லாம் அடைந்து விட்டதாகக் கூறி நன்றி தெரிவித்தனர்.
“அது சரி விஜிதா என் கிட்ட சொன்னது எப்படி இவங்களுக்குத் தெரிஞ்சுது. நான் யார் கிட்டயும் சொன்னதா தெரியலயே. ஓ நம்ப ஓட்ட வாய் ராமுதான அன்னிக்கு வங்கிக்கு கூட வந்தான். அவன் கிட்ட மட்டும் தானே நான் இந்த விஷயத்தை சொன்னேன். அவன்தான் எல்லாருக்கும் சொல்லி இருக்கணும். அவன் ஓட்ட வாயா இருக்கறதால நன்மையும் நடந்திருக்கே. ”.

                                                                                  ***

மாலையில் வீட்டிற்குள் நுழைந்த ராகவனிடம் விஜிதா, ”ஏங்க, நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்ங்க” என்றாள்.

ராகவன், “அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல இதப்புடி” என்று 2 புதிய புடவைகள் அடங்கிய பொட்டலத்தையும், இனிப்புகள் அடங்கிய பொட்டலத்தையும் கொடுத்து “விஜி இன்னிக்கு நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்” என்று சொல்லி அலுவலகத்தில் நடந்ததைச் சொல்லிவிட்டு “சரி நீ என்னவோ சொல்லணும்ன்னு சொன்னியே, இப்ப சொல்லு” என்றான்.

“அது ஒண்ணும் இல்லீங்க. உப்பு சப்பு இல்லாத சமாசாரம். இருங்க காபி கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக சமையலறைக்குள் சென்றாள்.

அவள் சொல்ல வந்து சொல்லாம போனது என்னன்னு நான் உங்களுக்கு மட்டும் ரகசியமா சொல்லட்டுமா? அது இதுதான். “ஏங்க. நான் ஒரு தப்பு செஞ்சுட்டேன். அன்னிக்கு மைத்ர முகூர்த்தம்ன்னு சொன்னேனே அது காலை 09:45ல் இருந்து 11:45 இல்லையாம். ராத்திரி 09:45ல் இருந்து 11:45 வரையாம்.”
காபியுடன் முன்னறைக்கு வந்த விஜிதா, அவர்கள் வீட்டு தொலைகாட்சிப் பெட்டியில் ஓடிக்கொண்டிருந்த ”கறை படறதுனால நல்ல விஷயம் நடந்தால் கறை நல்லது தானே… ...” விளம்பரத்தைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.